Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : மதக் கலவரத் தடுப்புச் சட்டம் இயற்றி ஒருவனுக்கு அரசு தண்டனை வழங்கி அழகு பார்ப்பதைவிட, அதே அரசு நாட்டின் மதப் பிரச்சினைக்கு மூலகாரணமான இந்தியக் கடவுள்களையும், ஜாதியக் கட்டமைப்பு வாழ்வு முறையையும் ஆண்ட அரசுகள் ஒழிக்க முயற்சித்திருந்தால் இப்படி ஒரு சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் இன்று வந்திருக்கக் கூடுமா?

த. சுரேஷ், நாகர்கோவில்

பதில்: வாக்கு வாங்கும் ஜனநாயகத்தில் அவ்வளவு துணிச்சல் உள்ள ஒரு கமால்பாஷா ஆட்சியோ, துணிவு நிறைந்த சுயநலமற்ற சர்வாதிகார ஆட்சியோ செய்ய வேண்டிய வேலை என்று பயந்து ஒதுங்கிவிட்டதால் இந்நிலை!

கேள்வி : பத்மநாபசாமி கோயில் பொக்கிஷங்கள் பொதுச்சொத்து அல்ல என்று கூறும் முதல்வர் உம்மன்சாண்டி, அதற்கு 5 அடுக்குப் பாதுகாப்புப் பணி, 100 ரகசிய கண்காணிப்புக் காமிராக்கள், போலீசாரின் எண்ணிக்கையை 800 ஆக உயர்த்துவதற்கெல்லாம், யார் சொத்திலிருந்து செலவு செய்யப் போகிறாராம்?
ஜே.அய்.ஏ. காந்தி, எரும்பி

பதில்: நல்ல கேள்வி. மேலே சொன்ன பதில் இதற்கும் பொருந்துமே! கோயில் கணக்கிலிருந்து செலவு செய்ய வைக்க வேண்டும்.

கேள்வி : வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது என்று தெரிந்திருந்தும், சிலர் பலவீனமான அந்த ஆயுதத்தைக் கையில் எடுப்பது ஏன்?
நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில்: உணர்ச்சிகள் முன் அறிவு தோற்பது இயல்பே!

கேள்வி : உள்ளாட்சித் தேர்தலில் கட்சி அடிப்படையில் வாக்களிக்கலாமா அல்லது தனி மனிதர் அடிப்படையில் வாக்களிக்கலாமா? – ப. கயல்விழி, காயல்பட்டினம்

பதில்: தனி மனிதர்களுக்கு வாக்களிப்பது – கட்சி அடிப்படையில் போட்டிகள் வந்த பிறகு, பயன்தராது. அந்த மனிதரும் யாராவது ஒரு பக்கம் சாய்ந்து விடுவாரே! எனவே கட்சி அடிப்படையில்தான் வாக்களிப்பது தவிர்க்க இயலாது!

கேள்வி : சமூக நல்லிணக்கத்துக்காக என்று சொல்லி நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருந்ததன் நோக்கம் என்ன? – வெங்கட. இராசா, ம.பொடையூர்

பதில்: மோடிக்கு முஸ்லிம் ஒருவர் வந்து குல்லாய் வைத்ததை ஏற்றுக்கொள்ள மறுத்தாரே, அதுதான் சமூக நல்லிணக்கத்திற்கு அடையாளமா? கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்கு மதி எங்கே? என்ற பழமொழிதான் நமக்கு நினைவுக்கு வருகிறது!

கேள்வி : ஜாதிச் சண்டை, தீண்டாமை நீங்கினால் இந்து சமுதாயத்துக்கு எதுவும் வராது என்று இராம.கோபாலன் கூறியுள்ளாரே. அது இரண்டும்தானே இந்து மதத்தை வளர்க்கிறது? – ந. பொற்கோ, ஆற்காடு

பதில்: முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் வேலை. அந்த இரண்டும் இல்லை என்றால் இராம.கோபாலய்யரின் இந்து மதமே இருக்காது! அதனால் இந்து முன்னணியுமே இருக்காதே! சரியான கருத்துள்ளவர்கள் கருத்து.

கேள்வி : மேல்நாட்டார் புவியீர்ப்பு சக்தி, மின்சார சக்தி, நீராவி சக்தி, அணுசக்தி, அணுமின் சக்தி, சூரிய சக்தி இப்படி பல சக்திகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தும் வேளையில் நமது நாட்டவர் மந்திரசக்தி என்ற ஒன்றைப் பற்றிச் சொல்லுகிறார்களே! அதனால் ஏதாவது பயன் உண்டா? -இ. கிருபாகரன், சோளிங்கர்

பதில்: மக்களை முட்டாளாகவே வைத்திருந்தால்தானே சுரண்டிக் கொழுக்க முடியும் என்பதால் இந்த அட்டைகள் இப்படிச் செய்கின்றன.

கேள்வி : குடிஅரசு தொகுப்புகள் (களஞ்சியம்) 1944 வரை தொகுக்கப்பட்டுள்ளன. அய்யாவின் இறுதிக் காலம்வரை உள்ள கருத்துரைகளைத் தொடர்ந்து வெளியிடுவீர்களா?
கு. பழநி, புதுவண்ணை

பதில்: களஞ்சியப்பணிகள் தொடரும் – குடிஅரசு தொகுதிகள் இன்னும் 3 தான் வெளிவர வேண்டியுள்ளது. அதன்பின் பெரியார் களஞ்சியம் முன்புபோல தலைப்புகள் வாரியாக, கடைசி வரை தந்தை பெரியார் ஆற்றிய உரைகள், எழுத்துகள் வெளியிடும் பணி தொடர்பணியாகவே தொடரும்.

கேள்வி : சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை என்று கூறுவதன் அர்த்தம் என்ன? சாண் பெண் பிள்ளை என்றால்?
தி. இரமணன், காஞ்சி

பதில்: அது ஒரு ஆணாதிக்க அடையாளம். அர்த்தமற்ற அகங்காரம் – தவிர்க்கப்பட வேண்டும்.

கேள்வி : நான், எனது என்ற தமிழக முதல்வரின்  பேச்சு எதைக் காட்டுகிறது?
க.ராசகுரு, ஏரல்

பதில்: அவரைப் புரிந்துகொள்ள உதவுகிறது.