சென்ற இதழ் தொடர்ச்சி…
நூல் : கருஞ்சட்டைப் பெண்கள்
ஆசிரியர் : ஓவியா
வெளியீடு : கருஞ்சட்டைப் பதிப்பகம், சென்னை-87.
விலை: 130. பக்கங்கள்: 176
ஆளுமையின் அடையாளம்
அன்னை மணியம்மையார்!
பெரியாருக்குத் தொண்டு செய்வதை அவர் முழுமையாக விரும்பி ஏற்றுக்கொண்டு விடுகிறார். பயணங்களில் உடன் பயணிக்கிறார். ஒரே ரயிலில் பயணம் செய்தால்கூட வேறு வேறு பெட்டிகளில் இருக்கும் தருணத்தில், ஒவ்வொரு நிறுத்தத்திலும் மணியம்மையார் அவர்கள் இறங்கி பெரியாரின் பெட்டிக்கு வந்து அவரது உடல்நலனைப் பார்த்துவிட்டுச் செல்கிறார். இவ்வாறு பெரியாரை கவனிப்பதில், அவரது உடல்நலனைப் பேணுவதில் தன்னை ஏற்கெனவே ஈடுபடுத்திக் கொண்டவர் மணியம்மையார். பெரியார் அவர்கள் கூறியதுபோல, மணியம்மையார் கவனிப்பு தொடங்குவதற்கும் அந்தத் திருமணத்திற்கும் தொடர்பில்லை. அதற்கு முன்பாகவே பெரியாரை கவனித்துக் கொள்வதை தனது பணியாக மணியம்மையார் ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வந்தார்.
ஏனென்றால், பெரியார் தனி மனிதராகப் பார்க்கப்படவில்லை. மிக நீண்ட காலம் அடிமைச் சூழ்நிலையில் இருந்த ஒரு சமுகத்தில், இருளில் இருந்த ஒரு சமுகத்திற்கு கிடைத்த விடிவெள்ளியாகப் பார்க்கப்பட்டவர் அவர். தனது அய்ம்பது வயதுகளில் நாகம்மையாரை இழந்த பெரியார், தனது அறுபத்தொன்பது வயதுவரை தன்னைத் தானே பராமரித்துக் கொண்டவர்தான்.
ஆண்களிடம் பொதுவாகக் காணப்படும் ஒரு குறை என்னவென்றால் சுய பராமரிப்பு என்றால் அவர்களுக்கு என்னவென்றே தெரியாது. இந்தத் தலைமுறை ஆண்களிடம் இது சிறிது மாறியிருக்கிறது என்றபோதும் கடந்த தலைமுறை ஆண்களிடம் சுய பராமரிப்பு என்பதே சிறிதும் கிடையாது. துணை இல்லாமல் வாழ்வதென்பது பெண்ணைவிட ஆணுக்கு மிகக் கடினமானது. தனக்குத் தேவையானதைத் தானே செய்து தானே தன்னை பராமத்துக் கொள்ளும் கட்டமைப்பு ஆண்களுக்கு இந்தச் சமுகத்தில் இல்லை. அத்தகைய சூழலில் உடல் உபாதைகளால் துன்பப்பட்ட பெரியாரை கவனித்துக் கொள்வது தமிழ்ச் சமுகத்திற்குச் செய்யும் சேவையாகக் கருதப்பட்டது. பெறுவதற்கு அரிய பேறாக, அரிதாகத் தோன்றிய மாமணியாக இந்தச் சமுகத்திற்குக் கிடைத்தவர் பெரியார். இந்தச் சமுகத்தை நேசிக்கும் ஒரு வடிவமாகவும், சமுகத்திற்குத் தொண்டு செய்வதன் ஒரு வடிவமாகவும் பெரியாருக்குத் தொண்டு செய்வதை மணியம்மையார் ஏற்றுக்கொண்டார். இந்த எண்ணத்தின் வளர்ச்சிப் போக்காகப் பெரியாரை தன்னுடைய குழந்தையாக பாவிக்கக் கற்றுக் கொண்டதாக மணியம்மையார் கூறுகிறார்.
அன்னையான மணியம்மையார்:
திருமணத்திற்குப் பின் தன்னுடைய நேரடியான இயக்கப் பங்களிப்பைக் குறைத்துக் கொண்டு பெரியாரைப் பார்த்துக் கொள்வதை தன்னுடைய முதன்மைப் பணியாக ஏற்றுக் கொண்டார். அதில் அவர் எவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வோடும், உண்மையாகவும் இருந்திருக்கிறார் என்பது மிகவும் வியப்புக்குரிய விசயம். இப்போதெல்லாம் பெற்ற தாய் தகப்பனைக் கூட குறிப்பிட்ட ஒரு வயதிற்கு மேல் சகித்துக்கொள்ள முடியாத மனிதர்களைப் பார்க்கிறோம். ஏதாவது ஒரு தருணத்தில் அவர்களிடம் நம் கோபத்தைக் காட்டும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. ஆனால், அப்படி எந்தத் தயக்கமும் இன்றி பெரியாரைப் பார்த்துக் கொள்வதற்காகவே, மிகவும் அர்ப்பணிப்போடு, தன் வாழ்க்கையை ஒப்படைத்துக் கொண்டவர்தான் அன்னை மணியம்மையார். அய்யாவைப் பேணிப் பாதுகாக்கும் இந்தப் பணியை அவர்கள் தேர்ந்தெடுத்தற்-கு, அவர்களுடைய இயக்கப் பற்றைத் தவிர, கொள்கைப் பற்றைத் தவிர வேறு எதை நாம் காரணமாகப் பார்க்க முடியும்? வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
ஓர் எழுத்தாளராக, போராளியாகப் பொது வாழ்க்கைக்கு வந்த மணியம்மையார், தன்னுடைய எழுத்தாற்றல், நிர்வாகத் திறன் உள்ளிட்டவற்றை ஓரளவுக்கு ஒதுக்கிவைத்து விட்டுப் பெரியாரை கவனிப்பதை தனது முழு நேரப் பணியாக மாற்றி கொள்ளத் தயாராக இருந்தார். அவ்விதமாகத் தன்னைப் பெருமளவு மாற்றியும் கொண்டார்.
‘பெரியார் தொண்டுக்கு முழுக்க முழுக்க என்னை ஆளாக்கி, அவர் நலத்தை கண் எனப் பாதுகாக்க, ஒரு தாயாக என்னை பாவித்துக் கொண்டு, அவரை ஒரு சிறு குழந்தையாகவே என் மனதில் இருத்தி, அக்குழந்தைக்கு ஊறு நேரா வண்ணம் பாதுகாப்பதிலேயே மகிழ்ச்சி கொண்டேன்’ எனச் சொன்னவர் மணியம்மையார்.
அந்தத் தருணத்திலேதான் திருச்சியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்ல நிர்வகிப்பும், அவர்களுக்காகக் கல்வி முயற்சியும் தொடங்குகின்றன. இதில் பெரியாரின் பங்களிப்பும் மிகுதியாக உள்ளபோதும் அதன் தொடர் பராமரிப்பில் அதிக அக்கறை செலுத்தினார் மணியம்மையார். அதன் பராமரிப்பையும் பொறுப்பையும் அவர் கவனித்துக் கொண்டார். மருத்துவமனைகளில் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளை எடுத்து வந்து இல்லத்தில் சேர்த்து அந்தக் குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வந்தார்கள். அந்தக் குழந்தைகளின் தாயாகவும் மணியம்மையார் தன்னை பாவித்துக் கொள்கிறார். ‘அன்னை’ என்னும் பதத்துக்கு முழுமையாகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு தொண்டைச் செய்தவர் அன்னை மணியம்மையார்.
இந்திரா காந்திக்குப் பின்னால்கூட நேரு அவரைச் செதுக்கிய சிற்பியாக இருந்தார். ஜெயலலிதாவுக்கு மேடையாகவே எம்.ஜி.ஆர்தான் இருந்தார். ஆனால், ஓர் ஆணின் ஊக்கத்தோடும் ஒத்துழைப்போடும் பெண்கள் பொது வாழ்க்கைக்கு வந்த அந்தக் காலத்தில், தனது தனித்த முடிவால் திராவிடர் கழகத்திற்கு வந்தவர் அன்னை மணியம்மையார்.
நாகம்மையார் மறைவின்போது பெரியார் எழுதிய இரங்கல் மடல் இலக்கியத் தன்மை வாய்ந்ததாக இருப்பதாகப் பரவலாக சிலாகிக்கப்படுவது உண்டு. பெரியார் இறந்தபோது மணியம்மையார் எழுதிய மடலும் அதே சிறப்புக்குரியது.
அரசியல் அதிகாரத்தைக் கோரும் பொது வாழ்க்கை அல்லது தான தர்ம ஸ்தாபனம் என்னும் பொது வாழ்க்கை என, பொது வாழ்க்கையில் இரு வகைகள் உண்டு. தர்மம் செய்வதன் நோக்கமே சொர்க்கத்துக்குச் செல்ல வேண்டும் என்பதுதான். அத்கைய இறைப்பற்றுக் கொண்ட தொண்டு நிறுவனமாகவும் திராவிடர்கழகம் இல்லை. அரசியல் வழியாக அதிகாரத்திற்குச் செல்லுமி இயக்கமாகவும் திராவிடர் கழகம் இல்லை. அரசியல்ரீதியான தொண்டு செய்யும் தனித்துவமான இயக்கம் திராவிடர் கழகம். அத்தகைய ஒரு தொண்டைத் தானாக ஏற்றுக்கொண்ட சிறப்புக்குரியவர் அன்னை மணியம்மையார். தன்னுடைய வாழ்க்கையை தீர்மானிப்பவர்களால் மட்டுமே தலைவர்கள் ஆக முடியும். அந்த வகையில் தலைமைப் பண்பின் சிறந்த எடுத்துக்காட்டு மணியம்மையார்.
இறைப் பற்றுக் கொண்ட தொண்டை ஏற்றுக் கொண்டவர்கள் என்று கணக்கிட்டாலே இலக்கிய ஏடுகளில் வரும் மணிமேகலை, செவிலியர் பணியைத் தனது வாழ்நாள் தொண்டாக ஏற்றுச் செய்த ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல், அன்னை தெரசா உள்ளிட்டச் சிலரை மட்டுமே நாம் நினைவுகூர முடியும். உலகளாவிய நிதியோடும் மத நிறுவனத்தோடும் தன்னைப் பிணைத்துக் கொண்ட சேவைக் கட்மைப்பில் வந்தவர் அன்னை தெரசா. ஆனால், கடவுளை மறுக்கின்ற, நாத்திகத்தைப் பிரச்சாரம் செய்யும் ஓர் இயக்கம் தொண்டு செய்வதைத் தன்னுடைய இயக்கச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக வைத்துள்ளது. அந்த ஆதரவற்ற இல்லக் குழந்தைகள் அனைவருக்கும் தன்னைத் தாயாக வரித்துக் கொண்டவர் அன்னை மணியம்மையார். திராவிடர் கழகத்திற்கு உள்ள இந்தத் ‘தொண்டு முகம்’ வெளியே பரப்பப்படாத ஒரு செய்தியாகவே உள்ளது.
ஜாதி மதத்தை மட்டுமல்ல, அடிப்படைக் குடும்ப அமைப்பையும் மறுக்கும் இயக்கம் திராவிடர் கழகம். யார் ஒருவர் குடும்பத்தை மறுக்கிறார்களோ, அவர்கள் ஜாதி மதத்தைப் பெரும்பாலும் ஒதுக்கி விடுவார்கள். அன்னை தெரசா போன்ற சில விதிவிலக்கான மனிதர்களைத் தவிர. இவை அனைத்தையும் துறந்து இயக்கத்துக்கு வந்தவர் மணியம்மையார். அன் காரணமாகவே மணியம்மையார் பெரியாரின் கண்களுக்குத் தனித்துவமாகத் தெரிந்திருக்கலாம். அவரின் நம்பிக்கைக்குரிய நபராக பார்க்கப்பட்டிருக்கலாம். இயக்கம் என்னும் நிறுவனம் நம்பிக்கையான நபர்களின் கைகளுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினார் பெரியார். தனக்கு நம்புவதற்கு யாருமில்லை எனப் பெரியார் சொன்ன தருணங்களும் உண்டு. அத்தகைய சூழலில்தான் தன்னை இயக்கத்திற்கென்றே முழுமையாக ஒப்புக் கொடுத்த மணியம்மையாரை பெரியார் திருமணம் செய்துகொண்டார்.
குடும்ப வாழ்க்கையின் ஊடே இயக்கப் பணிகள் என்பது வேறு; முழுமையாக இயக்கப் பணிகளுக்காகவே வாழ்வை அர்ப்பணிப்பது வேறு. இரண்டாவது வகையில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டார் அன்னை மணியம்மையார். மணியம்மையாரைத் திருமணம் செய்துகொள்வதைச் சொத்துகளுக்கு வாரிசாக்குவதற்கான ஏற்பாடு என்றே பெரியார் தெரிவிக்கிறார்.
சுமார் 65 வயதில் இருந்தே பெரியாருக்கு உடல்ரீதியான உபாதைகள் தொடங்கிவிட்டன. அவர் உடல்நலனைப் பேணுவதில் தன்னை முழுமூச்சாக அர்ப்பணித்துக் கொண்டார் மணியம்மையார். 95 வயது வரை பெரியாரைக் காப்பாற்றித் தந்தார் அவர். ஆனால், மணியம்மையார் அவர்களை 60 வயது வரைகூட நாம் காப்பாற்ற முடியாதது பெரும் சோகத்திற்குரியது. இதற்குக் காரணம், ஒரு பெண் தன்னைப் பார்த்துக் கொள்வதற்கு என்று இந்தச் சமுதாயத்தில் ஒரு திருமணத்தைச் செய்ய முடியாது. பெரியாரின் அறிவிப்பிற்கே இந்தச் சமுகத்தில் அன்றைக்குப் பல்வேறு விமர்சனங்கள் வந்தன. அந்த வாய்ப்புப் பெண்ணுக்கு இல்லை.
தன்னைப் பலிகொடுத்துச் செய்த ஏற்பாடு:
இடையில் ஒருமுறை மணியம்மையார் அவர்களுக்கு உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, பெரியார் பதறிப்போனார். இதுகுறித்து பின்னர் ஒருமுறை மணியம்மையார் கேட்டபோது அவர் சொன்னார்,
“என்னை ஏமாத்திருவியோன்னு பயந்துட்டேன், என்னை நான் பாத்துப்பேன். ஆனால், நான் இவ்வளவு கஷ்டப்பட்டுச் செய்த ஏற்பாடு தோத்துவிடுமோன்னு பதறிட்டேன். எனக்குப் பிறகு நீ இந்த அமைப்பைப் பார்த்துக் கொள்வாய் என்றுதானே இந்த ஏற்பாடு செய்தேன். ஆனால் உன் உடம்பைக் கவனிக்காமல் இருக்கிறாயே’’
பெரியார் மணியம்மையார் திருமணம் குறித்துத் திருமணத்தின்போது பெரியார் கொடுத்த விளக்கத்தைவிட, மணியம்மையாரிடம் அவர் சொன்ன விசயத்தை உற்று நோக்கினாலே அந்தத் திருமணத்தின் உண்மைக் காரணத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
பெரியார் பயந்ததற்கு நியாயம் உண்டு. மணியம்மையாரைத் திருமணம் செய்வது குறித்துப் பெரியார் இவ்வாறு பதிவு செய்கிறார். ‘நான் என்னைப் பலிகொடுத்து இந்த நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்கு ஒரு வேலை செய்யப் போகிறேன்’. இன்றுவரைகூட அந்தத் திருமணம் குறித்து ஏதோவொரு அவதூறு வந்துகொண்டேதான் உள்ளது. அதை அவரும் உணர்ந்தே அவ்வாறு சொல்லியிருக்கிறார்.
இயக்கத்தில் பிளவு:
இயக்கத்தில் பிளவு என்பது திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கிவிட்து. மாற்றுக் கருத்துகளும், மாற்றுச் சிந்தனைகளும் ஏற்கெனவே இருந்த நிலையில், அறிஞர் அண்ணா தலைமையில் பிரிந்து சென்றவர்கள் பிளவுக்கு ஒரு காரணமாக பெரியார் மணியம்மையார் திருமணத்தை முன்வைத்தபோதும், மணியம்மையாரின் பெயர் பயன்படுத்தப்பட்டபோதும், அதனால் மிகப் பெரும் பாதிப்புக்கும் அவமானத்திற்கும் தூற்றலுக்கும் ஆளானார் மணியம்மையார்.
அந்தத் திருமணத்தைக் காரணம் காட்டி, இயக்கத்திலிருந்து பிரிந்துசென்று தி.மு.க. தொடங்கப்பட்ட பின்னர் மிக வீரியமான போராட்டங்கள் பலவற்றை திராவிடர் கழகம் முன்னெடுத்தது. இரண்டாம் கட்ட மொழிப் போர் நடைபெற்றது. மிக முக்கியமாகச் ஜாதி ஒழிப்புப் போர். அதில் மணியம்மையார் அவர்களின் பங்கு அளப்பரியது.
ஜாதி ஒழிப்புப் போர்:
1957இல் ஜாதி ஒழிப்புப் போர் பற்றி பெரியார் அறிவிக்கும்போது, ‘இந்த அரசியல் சட்டம் ஜாதியைப் பாதுகாக்கிறது. மரபு என்னும் பெயரில் பாதுகாக்கிறது. அதை எதிர்ப்போம்’ என்று கூறி மிகப் பெரும் போராட்டத்தை அறிவிக்கிறார். சட்டத்தை எரித்தால் என்ன தண்டனை என்பது அப்போது சட்டத்தில் இடம் பெறவில்லை. அதற்காகப் பெரியார் 6 மாத காலம் அவகாசம் தருகிறார். என்ன தண்டனை கொடுத்தாலும் சட்டத்தை எரிக்கப் போவதாக அறிவிக்கிறார். மிக நீண்ட பரப்புரை நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் 3000 பேர் கைது செய்யப்ப பட்டார்கள். மிகப் பலர் சிறையில் இருந்து வெளிவந்த சில நாட்களிலேயே உயிரிழந்தார்கள். பெண்கள் குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டார்கள். சிறையிலேயே மணல்மேடு வெள்ளைச்சாமி, பட்டுக்கோட்டை ராமசாமி உள்ளிட்ட மூன்று தோழர்கள் உயிரிழந்தார்கள். மணல்மேடு வெள்ளைச்சாமியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் சிறைக்குள்ளேயே புதைத்து விடுகிறார்கள். ஒரு திருப்பூர் குமரனின் மரணமும், ஒரு தில்லையாடி வள்ளியம்மையின் உயிர்த் தியாகமும் இங்கு வரலாறாகியுள்ள நிலையில், இத்தனை தோழர்களின் உயிர்த் தியாகமும் வரலாற்றில் எங்கும் பதிவாகவில்லை.
மொழிப் போராட்டத் தியாகிகளை நினைவுகூர்ந்த அளவிற்குக் கூட ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை யாரும் நினைவுகூரவில்லை. 385 நாட்கள் வரை 3000 பேரும் சிறையில் இருந்தது சாதாரண நிகழ்வு அன்று. விடுதலையான பிறகும் கூடப் பல குடும்பங்களால் பழைய நிலைக்குத் திரும்ப முடியவில்லை. இதுபோன்ற மகத்தான தியாகம் நிரம்பிய போராட்டம்தான் ஜாதி ஒழிப்புப் போர்.
ஜாதி ஒழிப்பு குறித்து இன்று அதிகம் பேசப்பட்டாலும், ஜாதி ஒழிப்புப் போர் பற்றி ஏன் பேசப்படுவதில்லை? அந்த நினைவுகள் ஏன் புதுப்பிக்கப்படுவதில்லை? ஏன் மீண்டும் பதிவு செய்யப்படுவதில்லை? அப்போது பெரியார் சிறையில் இருக்கிறார். மணியம்மையார் மிகுந்த காத்திரமான தலைவர். சிறையில் மாண்டுபோன இருவரின் உடலைத் தர சிறை அதிகாரி மறுக்கிறார். அப்போது களத்தில் இறங்கிய மணியம்மையார் முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்துக் கோரிக்கைகளை முன்வைத்ததோடு மட்டுமல்லாமல், உடலை வாங்காமல் ஓய மாட்டோம் எனப் போராட்டம் நடத்தி உடலைப் பெற்றார்கள். உடல்களை காவிரி நதிக்கரையோரம் செல்லும் வரை ஊருக்குள்தான் ஊர்வலம் செல்வோம் என மணியம்மையார் முன்னெடுக்கிறார்கள். அரசு அனுமதி மறுக்கிறது. அரசை மீறி ஊருக்குள் ஊர்வலத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் மணியம்¬மாயார்.
திருச்சியின் முக்கிய வீதிகள் வழியாக, அரசாங்கத்தின் கெடுபிடிகளை மீறி இரண்டு தியாககிகளின் உடல்களையும் எடுத்துச் சென்று எரியூட்டினார் மணியம்மையார். ஆக்ரோசமான காத்திரமான தலைவராக மட்டுமல்ல, அந்த உத்வேகத்தைத் தொண்டர்களிடமும் கடத்திய எழுச்சிமிக்கத் தலைவராகச் செயல்பட்டவர் அன்னை மணியம்மையார்.
இந்திய வரலாற்றிலேயே ஜாதி ஒழிப்பிற்காக அன்று நடைபெற்றது போன்ற போர் இதுவரை நடந்ததில்லை. கீழ் வெண்மணி உள்ளிட்ட ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிரான எந்தப் போராட்டத்தையும் அதற்கு ஒப்பிட முடியாது. அத்தகைய போராட்டங்கள் மிகுந்த மரியாதைக்குரியவை. ஆனால், அவை ஜாதி ஒழிப்பு என்னும் கலவரங்கள் வகைப்படுபவை. ஆனால், ஜாதி ஒழிப்பு என்னும் முழக்கத்தை மையப்படுத்தியவை அல்ல. ஜாதி ஒழிப்பு என்பதை இலக்காக வைத்து இந்தியாவிலேயே ஓர் இயக்கம் போராடியிருக்கிறது என்றால் அது திராவிடர் கழகம் மட்டுமே. ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் வேறு எங்கும் கிளர்ச்சிகள் நடைபெற்றது இல்லை. அந்தப் போராட்டத்தில் தஞ்சையில் நடைபெற்ற மாநாட்டில் மணியம்மையார் தலைமை உரையாற்றுகிறார்.
இவை அனைத்தும் காமராஜரின் ஆட்சியிலே நடைபெறுகிறது. பெரியாரைத் தனது தலைவராகவும் குருவாகவும் காமராஜர் சொன்னபோதும்கூட, ஜாதி ஒழிப்புப் போரை ஒடுக்கவே செய்தார். பெரியாரை முற்று முழுதாக எல்லாக் காலத்திலும் ஆதரித்தவர்கள் யாரும் இல்லை. மற்ற அனைவரும் ஒரு பகுதிதான். பெரியார்தான் நமக்கு முழுமை.
கழகக் கொடி பற்றி அம்மா:
திராவிடர் கழகத்தின் கொடியைப் பற்றி மணியம்மையார் கூறுவது சிறப்புக்குரியது. அந்தக் காலத்தில் பல இடங்களில் கொடி விளக்கக் கூட்டங்கள் நடைபெற்றன. திராவிடர் கழகத்தின் கொடியில் உள்ள கருப்பு நிறமும் அதற்கு நடுவில் சிகப்பு வட்டம் இருப்பது குறித்தும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. இருள் சூழ்ந்த சமுகத்தின் நடுவில் ஒளிக்கீற்றாக திராவிடர் கழகம் இருப்பதாகவும், நாளடைவில் அந்தச் சிகப்பு விரிவடைய வேண்டும் என்பதாகவும் விளக்கங்கள் தரப்பட்டன.
மணியம்மையார் கொடி விளக்கம் தரும்போது முதலில் கொடி என்றால் என்ன என்று தொடங்குவார். ஒரு விசயத்தைப் பற்றிப் பேசும்போது அதன் மூலத்தைப் பற்றிப் பேசும் பெரியாரின் பாணி இது. கற்பு என்பதைப் பற்றிப் பேசும்போது அதன் அர்த்தம் என்ன, அது எப்போது தொடங்குவது. அது தமிழ்ச் சொல்லா உள்ளிட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்த உரையாக பெரியாரின் உரை இருக்கும். எளிமையாகவும் மிக்க ஆழம் பொருந்தியதாகவும் பெரியாரின் பேச்சுகள் இருக்கும். அதேபோல ஆழமானப் பொருள் கொண்ட ஆய்வு ரீதியான பேச்சுகளையே மணியம்மையாரும் பேசினார். கொடி குறித்துப் பேசும்போது, “அதன் வரலாறு, அது எதற்காகப் பயன்படுத்தப்பட்டது. நாடுகள், கட்சிகள் ஏன் கொடி வைத்திருக்கிறார்கள்’’ உள்ளிட்டவற்றைப் பேசிய மணியம்மையார், காங்கிரஸ் பற்றியும் தேசியக் கொடி பற்றியும் பேசுகிறார்.
‘காங்கிரஸ் கொடி என்பது இந்த நாட்டின் பலதரப்பட்ட மக்களைக் குறிப்பிட்டு ஒன்றுபடுத்தியச் சின்னமாக இருந்து வருகிறது. சிவப்பு நிறம் இந்துக்களையும், பச்சை நிறம் முஸ்லிம்களையும், வெள்ளை நிறம் கிறித்தவர்கள் மற்றும் இதர சிறுபான்மையினரையும் காட்டும் குறியாக இருந்து வருகிறது. சமீபகாலமாக இந்துக்களைக் காட்டும் சிவப்பு நிறத்தை மஞ்சள் (காவி) நிறமாகக் காங்கிரஸ் மாற்றிக் கொண்டது.
வரிசைக்கிரமத்தல் போவதாக வெள்ளையையும், பச்சையையும் அதற்குக் கீழாகச் சிகப்பையும் வைத்துக் கொண்டிருந்த காங்கிரஸ், முஸ்லீம் தகராறு ஏற்பட்ட உடனே மஞ்சளை (காவியை)க் கொடியின் மேலாகவும், வெள்ளையை அதற்கு அடுத்ததாகவும், முஸ்லீமைக் குறிக்கும் பச்சை நிறத்தைக் கீழாகவும் வைத்து விட்டார்கள். ஆரம்பத்தில் வெள்ளையை மேலே வைத்து, பச்சையை நடுவில் வைத்து, சிகப்பைக் கீழே வைத்ததற்கான கருத்து, கிறித்தவர் மற்றும் முஸ்லீம் சமுதாய மைனாரிட்டி வகுப்பினரை இந்துக்கள் மரியாதை செய்வதாகவும், தாங்கிக் கொள்வதாகவும் காட்டிக்கொள்ள வைத்த அறிகுறி. பிறகு அதை மாற்றியதன் கருத்து கிறிஸ்தவர் முஸ்லீம் மைனாரிட்டி வகுப்பார் மீது தங்கள் ஆதிக்கம் செலுத்தும் கருத்தே ஆகும்’. இவ்வாறு மணியம்மையார் பேசியிருக்கிறார். மிக ஆழமான அரசியல் பிரச்சினைகளை எடுத்துப் பேசக்கூடிய தலைவராகத்தான் மணியம்மையார் தொடக்கத்தில் இருந்தே இருந்தார் என்பதற்கான எடுத்துக்காட்டு இது.
அவரின் எழுத்துகள் பலவற்றிலும் மத எதிர்ப்புகள் நிரம்பியுள்ளன. புராணங்களை விலாவரியாக விமர்சித்து அவை அறிவுக்குப் பொருத்தமா என்னும் வியாக்கியானம் செய்யும் திராவிடர் கழகத்தின் பாணி அவரின் எழுத்துகளில் இருப்பதைப் பார்க்கலாம். பெரியார் இருந்த காலகட்டங்களிலேயே அவர் சிறைக்குச் சென்ற தருணங்களில், போராட்டங்களிலும் கிளர்ச்சிகளிலும் மணியம்மையாரின் இயக்கப் பணிகள் தலைமைப் பண்பாக மிகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளாக இருந்துள்ளன.
திருமணத்திற்கு முன்பாகவே இருமுறை சிறை சென்ற மணியம்மையார், திருமணத்திற்குப் பின் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, பிராமணாள் பெயர் எதிர்ப்புப் போராட்டங்களில் பலமுறை சிறை கண்டார். பிராமணாள் பெயர் எதிர்ப்புச் சமீபத்தில் மீண்டும் விவாதத்துக்குள்ளானது. நாயக்கர் கடை, ரெட்டியார் கடை, தேவர் கடை என்று இருப்பது போல பிராமணாள் கஃபேவும் ஜாதிப் பெயர்தானே. மற்ற கடைகள் இருக்கும்போது பிராமணாள் பெயர் மட்டும் ஏன் இருக்கக் கூடாது எனப் பலர் கேட்கிறார்கள். மற்ற பெயர்கள் ஒரு குறிப்பிட்டச் சாதியைக் குறிக்கும் பெயர்ச் சொற்கள். ஆனால், பிராமணாள் என்னும் பெயர் அவர்களைத் தவிர மற்ற மக்களைச் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்தும் சொல். அய்யர் கடை என்று வைத்துக்கொள், ஆனால், பிராமணாள் என்பதைக் கடுமையாக எதிர்க்கிறோம். பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயர் போடக் கூடாது என்று திராவிடர் கழகம் இயற்றிய தீர்மானத்தை மக்கள் இன்றுவரை கடைப்பிடித்து வருகிறார்கள். இந்தியாவிலேயே பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயர் போடாத ஒரே மாநிலமாகத் தமிழகம் இன்று வரை திகழ்ந்து வருவது திராவிடர் கழகத்தின் தொடர் போராட்டங்களால் சாத்தியமான சாதனை.
நாகம்மையார் மறைவின்போது பெரியார் எழுதிய இரங்கல் மடல் இலக்கியத் தன்மை வாய்ந்ததாக இருப்பதாகப் பரவலாக சிலாகிக்கப்படுவது உண்டு. பெரியார் இறந்தபோது மணியம்மையார் எழுதிய மடலும் அதே சிறப்புக்குரியது.
(குறிப்பு : இரங்கல் மடல் அடுத்த
பக்கத்தில் தொடரும்…)