எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (32): அண்ணல் அம்பேத்கரை ஏற்றிப் போற்றி பெரியார் எழுதியவை!

மார்ச் 16-31 2019

நேயன்

உங்கள் மாகாணத் தலைவராக தோழர்கள் வீரையன், சிவராஜ் போன்றவர்களையும் இந்தியத் தலைவராக அம்பேத்கர் போன்றவர்களையும் நம்புங்கள். எனக்கும், அவர்கட்கும் உங்கள் முன்னேற்ற விஷயத்தில் சில அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் இன்றைய நிலையில் அவர்களே மேலானவர்கள்.                    

(குடிஅரசு 10.2.1935)

தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாகிய டாக்டர் அம்பேத்கர், ராவ்பகதூர் சிவராஜ் போன்றவர்கள் எல்லோரும் நாங்கள் இந்து மதஸ்தர்கள் அல்லவென்றும் நாங்கள் இந்துக்கள் அல்லவென்றும் தங்கள் சமூகத்தார் இந்து மதத்திலிருந்து விலக வண்டும் என்றும் 15 வருடத்திற்கு முன்பிருந்தே சொல்லி வருகிறார்கள்.          

(குடிஅரசு 13.1.1945)

தோழர் அம்பேத்கர் இம் மாகாண தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். அவர் இன்று போர்க்களத்தில் நிற்கும் தளபதியாக விளங்குகிறார். அரசியல் எதிரி எது சொன்னாலும் அதைப் பொருட்படுத்தாது, தம் கருமமே கண்ணாகச் செய்கையில் இறங்கிவிட்ட அவரைக் கண்டு, காங்கிரஸ் மட்டுமல்ல… பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே தலையைச் சொறிந்து கொண்டிருக்கிறது என்பதில் ஆச்சரியமென்ன?

(விடுதலை 27.7.1946)

ஜின்னாவும் டாக்டர் அம்பேத்கரும் காங்கிரஸ் ஓர் இந்து ஸ்தாபனம் என்று சொல்லுவதில் என்ன குற்றம் காண முடியும்? டாக்டர் அம்பேத்கர், நான் இந்துவல்ல, என்னைத் தலைவனாக ஒப்புக்கொண்டு இருக்கும் மக்கள் இந்துவல்ல. எனக்கு எந்த மதத்தையும் தழுவ உரிமையுண்டு என்று சொன்னால் காங்கிரஸ்காரன் ஏன் அதை மறுக்க வேண்டும்? அதுவும் அம்பேத்கரையும் அவரது சமூகத்தாரையும் பறையர், சக்கிலி, பஞ்சமன் என்று கருதிக்கொண்டு தன்னையும் சூத்திரன் என்பதைச் சம்மதித்துக்கொண்டு இருக்கும் ஒரு காங்கிரஸ்காரன் ஏன் மறுக்க வேண்டும்?

(விடுதலை 23.11.1946)

அம்பேத்கர், உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால், அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை மாத்திரமல்ல, அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல, நீண்ட நாளாகவே நாஸ்திகர். உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ, அவர்களெல்லோரும் நாஸ்திகர்கள்தான். நாஸ்திகராக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக்கூடிய மனிதராக ஆகமுடிகிறது. அவர்கள்தான் தாங்கள் படிப்பதைத் திறமையாகப் பயன்படுத்துகிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர் ஒரு பெரிய அறிஞர். அதன் காரணமாகவே அவர் ஒரு நாஸ்திகர். அவர் தனது சொந்த அறிவை உபயோகித்துதான் கண்டதைத் தைரியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நம் நாட்டில் அறிஞர் கூட்டம் என்பவரெல்லாரும் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். அவர் இதுபோலல்லாமல் தைரியமாக எடுத்துச் சொல்லிவந்தார்.

(விடுதலை 7.12.1956)

இப்பொழுது அதிசயமாக உலகம் பூராவும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்த மதத்தில் சேர்ந்தது. இப்பொழுது பேருக்குத்தான் அவர் புத்த மதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர, அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர்தான்.                                                             

(விடுதலை 7.12.1956)

அம்பேத்கர் மக்களுக்கு வழிகாட்டுபவர். சாதி, மத குறைபாடுகளை மனதில் பட்டதைத் தைரியமாக எடுத்துக்கூறி வந்தார். சுயநலம் இல்லாமல் பாடுபட்டவர். இந்தியா முழுவதும் விளம்பரம் பெற்றவர். அவர் தம்முடைய மக்களுக்குப் பவுத்த மதத்திற்குப் போகும்படி வழிகாட்டியிருக்கிறார். இங்கும் பலபேர் மாறக்கூடிய நிலை ஏற்படும். தன் சமுதாயத்திற்குப் படிப்பு, உத்தியோகம் முதலிய காரியங்களில் முயற்சி செய்து பல வசதிகளைச் செய்திருக்கிறார். உத்தியோகத்தில் 100க்கு 15 என்று வாங்கிக் கொடுத்தார். அவர் உள்ளபடியே ஒரு பெரிய தலைவர். அவருக்குப் பிறகு அவரைப் போன்ற ஒரு தலைவர் தோன்ற முடியாது. அவர் சமதர்ம காலத்திற்கு முன் ஏற்பாடு செய்யப்பட்ட தலைவர். அம்பேத்கருக்குப் பிறகு அவரைப் போன்ற தலைவர் ஏற்பட முடியாது.

(விடுதலை 7.12.1956)

டாக்டர் அம்பேத்கர் புத்தமதத்தில் சேர்ந்து எவை எவைகளை நம்பவில்லை என்று சொன்னாரோ, எவை எவைகளையும் செய்யமாட்டேன் என்று சொன்னாரோ, அவைகளையெல்லாம் நாம் இப்போதே நம்புவதில்லை.

(விடுதலை 28.12.1956)

இந்த ஜாதி முறையைக் கண்டித்ததவர்கள் இரண்டொருவர். அவர்களில் புத்தர் ஒருவர். அவருடைய கொள்கையை இந்த நாட்டைவிட்டே ஒழித்துவிட்டார்கள். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் புத்தர்கள் என்பவர்கள் அந்தக் கொள்கை தோன்றிய நாட்டில் வாழ்கிறார்கள். புத்தக் கொள்கயில் மக்களைச் சேர்த்தார் அம்பேத்கர். உடனே, அரசாங்கம் புத்தக் கொள்கையில் சேர்ந்தவர்களுக்குச் சலுகையில்லை, வேலைக்கு இடம் ஒதுக்கி வைக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். அந்தக் கொள்கைக்குப் போனவன் இரண்டொருவன் இப்பொழுது திரும்பி வரப் பார்க்கிறான். புத்தக் கொள்கையில் மக்களைச் சேர்த்த அம்பேத்கரைக் கொன்றுபோட்டு ஒழித்துவிட்டார்கள். அவர் எப்படிச் செத்தார் என்பதற்கு இன்றைய தினம் வரை தகவல் ஏதும் இல்லையே! ஏதோ இரவு பத்துமணிவரை படித்துக் கொண்டிருந்தார். படுக்கைக்குப் போனார். பொழுது விடிய படுக்கையில் பிணமாகக் கிடந்தார் என்பதைத் தவிர, எப்படிச் செத்தார் என்று யாரும் சொல்லவில்லையே? இந்து மதத்திற்கு விரோதமாக (பகையாக) இருந்த அவரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதுதானே இவர்களுடைய எண்ணம்? அதன்படி அவரைக் கொன்று போட்டு விட்டார்களே! இதைப்பற்றிக் கேட்கக்கூட இன்று நாதி இல்லையே!  

(விடுதலை 4.11.1957, 8.9.1961, 4.5.1963)

அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல, நீண்ட நாளாகவே நாஸ்திகர். உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ, அவர்களெல்லோரும் நாஸ்திகர்கள்தான். நாஸ்திகராக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக்கூடிய மனிதராக ஆகமுடிகிறது.

மதம் ஒழியாதவரை, கடவுள் ஒழியாதவரை சாதியும் ஒழியாது என்றார் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.            

(விடுதலை 20.11.1958)

அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டவர். அதற்காக உயிர் வாழ்ந்து தொண்டாற்றியவர் மற்றும் பலர் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டார்கள் என்றால் அவர்கள் எல்லாரும் அதன் பெயரால் வயிற்றை வளர்த்தவர்களே ஆவர்.

(விடுதலை, 6.3.1961)

அம்பேத்கரின் தொண்டு என்ன, எப்படிப்பட்டது என்றால், இந்தியாவிலேயே சிறந்த மனுதர்மத்தைத் தீயிட்டுக் கொளுத்திக் காட்டியவர். நான் வாயால் கொளுத்த வேண்டும் என்றேன். அம்பேத்கர் எரித்தே காட்டினார்.

(விடுதலை 6.3.1961)

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படத்தை நீங்கள் திறந்து வைக்கும்படி பணித்துள்ளீர்கள். இது எனக்கு மிகவும் பிடித்தமான சங்கதியாகும். டாக்டர் அம்பேத்கர் நாட்டில் ஒரு பெரிய மாறுதலை உண்டாக்கும் வண்ணம் மேல்ஜாதியார் கொடுமையை எல்லாம் எடுத்து விளக்குபவர். காந்தியையும் காங்கிரஸையும் ஜாதி ஒழிப்புக்கு இடையூறாக இருப்பது கண்டு கண்டித்துப் பேசியவர் ஆவார். காந்தியார் எந்த விதத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தலைவர் என்று சொல்லிக்கொள்ள அருகதை அற்றவர் என்று கூறியவர். இந்து மதக் கொள்கையைக் கண்டு அதை நம்மால் ஒழிக்க முடியாவிட்டாலும் அந்த மதத்திற்கே முழுக்குப் போட்டுவிட்டு 3 லட்சம் மக்களுடன் புத்த மதத்தில் சேருவது என்று முடிவு பண்ணிக்கொண்டு சேர்ந்தவர். இன்றுவரை உயிருடன் இருந்திருந்தால், அவர் இன்னும் பல இலட்சம் மக்களைப் புத்த மார்க்கத்தில் சேரும்படி செய்து இருப்பார்.

(விடுதலை 4.5.1963) 

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *