சிரகம்
“சுவாயம்புவ மனுவின் மகனான பிரியவிரதன் மாலினி என்பவளை மணம் புரிந்து இல்லற வாழ்க்கையை தர்மநெறி தவறாமல் கடைப்பிடித்து வந்தான். திருமணமாகிப் பல ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு மகப்பேறு இல்லாமல் வருந்தினார்கள். பிறகு, காசிப முனிவரின் அறிவுரைக்கேற்ப அவரைக் கொண்டே புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்தான். அந்த யாகத்தின் அவிசைத் தன் பத்தினியான மாலினையை அருந்தச் செய்தான். அதன் விளைவாக அவளும் கர்ப்பவதியாகி, பொன்போல் ஒளிரும் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். பிறந்த அக்குழந்தை கண்களைத் திறந்து, தன் தாயைப் பார்த்துவிட்டு உடனே இறந்துவிட்டது. அதைப் பார்த்த மாலினி மயக்கமுற்று விழுந்தாள். உற்றார் உறவினர்கள் கலங்கினார். அந்தக் குழந்தையின் உடலைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று எரிக்க முற்பட்ட பிரியவிரதன், துக்கம் தாங்காமல் ஓவென்று அழுதான். பிறகு, மகன்மீது கொண்ட பாசம் தாங்காது தன் உயிரையும் அங்கேயே மாய்த்துக்கொள்ள முயன்றான்.
அப்போது, ஆகாயத்தில் ஒரு விமானம் தோன்றியது. அதில் ஒர் அதியற்புதமான தேவி ஒருத்தி பிரகாசித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் பிரியவிரதன் தன்னை அறியாமலே தன் கைகளைக் கூப்பி வணங்கி, “தேவி, தாங்கள் யார்?’’ என்று வினவினான். “மன்னனே! நான் பிரம்மாவின் மானஸ புதல்வி, தேவர்களின் சேனாதிபதியாக ஒரு சமயம் தேவாசுரப் போராட்டத்தில் ஈடுபட்டதால் என்னைத் தேவசேனை என்று வழங்குவார்கள். நான் சிவபுத்திரராகிய முருகப் பெருமானின் பிராண நாயகி. பிரகிருதி தேவியின் ஆறாவது அமிசத்தில் பிறந்ததால் என்னை சஷ்டி தேவி என்று வழங்குவர்.’’ என்று கூறினாள். பின் அவள், இறந்து கிடந்த குழந்தையை எடுத்து உயிர்ப்பித்தாள். அதைப் பார்த்த பிரியவிரதன் பெருமகிழ்வு கொண்டான்.
விரதம் இருந்தால் குழந்தை பிறக்குமா?
ஆனால், சஷ்டி தேவி அக்குழந்தையைத் தன் கைகளில் எடுத்துக்கொண்டு மறைந்துவிட்டாள். மீண்டும் மகன் மீது கொண்ட பாசத்தால் துக்கப்பட்ட பிரியவிரதன் சஷ்டி தேவியைத் துதித்தான். அதன் பயனாக சஷ்டி தேவி அவன் முன்னர் மீண்டும் தரிசனம் தந்து, அவனது குழந்தையை அவனிடம் கொடுத்தது. பின்பு, “என்னை வழிபட்டதால் உனக்கு இந்தக் குழந்தையைத் தருகிறேன். இனிப் பூவுலகில் என்னை அனைவரையும் வழிபடச் செய். இந்தக் குழந்தை பிற்காலத்தில் பெரும் புகழைப் பெற்று சுவ்விரதன் என்னும் நாமத்துடன் வாழ்வான்’’ என்று கூறிவிட்டு அவள் மறைந்தாள். ஆகவே, சஷ்டி தேவியானவள் பக்தர்களுக்கு மகப்பேற்றை அளித்து அதற்கு நீண்ட ஆயுளையும் அளிப்பாள். ஒவ்வொரு சுக்லபக்ஷ சஷ்டியிலும் அவளை பூஜித்தால் எல்லாச் செல்வங்களும் உண்டாகும்’’ என்று இந்து மதம் கூறுகிறது. (தேவி பாகவதம்)
இந்து மதம் மேற்கண்ட புராணக் கதையில் மூன்று கருத்துக்களை தெரிவிக்கிறது. ஒன்று, இறந்து சுடுகாட்டில் எரிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டக் குழந்தைக்கு மீண்டும் உயிர் வந்தது. மற்றொன்று, ‘சஷ்டியில் விரதம்’ இருந்தால் குழந்தை பிறக்கும். மூன்று, புத்தி காமேஷ்டி யாகம் செய்தால் குழந்தை பிறக்கும் என்பவை.
யாகம் செய்தால், விரதம் இருந்தால் குழந்தை பிறக்கும் என்பது அறிவியல் கருத்தா? மூடநம்பிக்கையா? என்றால் நிச்சயம் மூடநம்பிக்கையாகும்.
இதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும், நிரூபணம் உண்டா? என்றால் அறவே இல்லை.
ஆக, அறிவியலுக்கு நேர்எதிரான இக்கருத்துக்களைக் கூறும் இந்து மதம். அறிவியலுக்கு அடிப்படை என்பது அப்பட்டமான பொய் அல்லவா? இந்த அறிவியல் உலகிலும் இப்படிப்பட்ட கருத்துகளைப் பரப்புவது அயோக்கியத்தனம் அல்லவா?
மேலும், இறந்த எதுவும் மீண்டும் எக்காரணம் கொண்டும் பிழைக்காது; பிழைக்க முடியாது. அதுதான் அறிவியல் உண்மை. ஆனால், இறந்த குழந்தைக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டது அறிவியலுக்கு எதிரான கருத்தல்லவா? இப்படிக் கூறும் இந்து மதம் மூட மதம் அல்லவா?
முன்னொரு காலத்தில், கோசல நாட்டில் தேவதத்தன் என்னும் ‘பிராமணன்’ இருந்தான். அவன் தனக்கு மக்கட்பேறு வாய்க்காமையால், புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்ய தமசா நதிக்கரையில் ஒரு யாக சாலையை அமைத்தான். முனிவர் பெருமக்களை அழைத்து யாகத்தைத் தொடங்கினான். சாத்திர விதிப்படி யாகம் நடந்து கொண்டிருந்தது. கோபிலர் என்னும் முனிவர் சாம வேத கானத்தைச் செய்துகொண்டிருந்தார். மூக்கடைப்பினால் அவரது உச்சரிப்பு சரியாக இல்லை. அதனால் அவன், தன் யாகத்துக்கு ஏதாவது கேடு நேரிட்டுவிடுமோ எனப் பயங்கொண்டான். “முனிவரே! உம்மால் இந்த யாகத்துக்குக் கேடு ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகிறேன்’’ என்று கடுமையாகச் சொன்னான். அதனால் கோபில முனிவருக்குக் கடுங்கோபம் ஏற்பட்டது. என்னை மூடன் என அழைத்த உனக்கு மகாமூடனும் ஊமையுமான மகன் பிறக்கக் கடவன்!’’ என்று சபித்துவிட்டார்.
அடியேனது தவற்றை மன்னித்துச் சாபவிமோசனத்தைத் தெரிவியுங்கள்’’ என்று தேவதத்தன் வேண்டினான். கோபில முனிவரும் கருணை கொண்டு, “கவலைப்படாதே, தேவதத்தா! உனக்கு மூடமகன் பிறந்தாலும் காலப்போக்கில் அவன் ஜெகன்மாதாவான தேவியின் அருள் பெற்று பேரறிஞனாவான்’’ என்று கூறினார். உதத்யனின் மூடத்தனத்தைக் கண்டு சுற்றுப்புறத்திலுள்ளோர் அவனை எள்ளி நகையாடினர். சாபப்படி அவனுக்குப் பிறந்த மகன் ஊமையாகவும், மூடனாகவும் இருந்தான்.
ஆனால், அவன் தெய்வபக்தி மிகுந்தவனாய்த் தூய்மையான வாழ்க்கை நடத்தி வந்தான். அவன் நேர்மையைப் பாராட்டினர்; அவனுக்குச் சத்தியவிரதன் என்னு பெயரைச் சூட்டினர். அவன் காலையில் எழுந்ததும் குளித்துவிட்டுத் தேவியைத் தொழுவான். பின்னர் காய்கனிகளைப் பறித்து உண்பான். இப்படி அவன் காட்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தான். ஒரு நாள், வேடன் ஒருவனின் அம்புகளுக்கு இலக்காகி, உடல் முழுவதும் இரத்தம் சொட்டச் சொட்ட ஒரு பன்றி ஓடிவந்தது. சத்தியவிரதன் மனமுருகினான். என்ன செய்வது என்று அறியாதும் கூச்சலிட முடியாமலும் ‘ஹ்ரு ஹ்ரு’ எனும் ஒலியை அவன் எழுப்பினான். ‘ஹ்ரு ஹ்ரு’ என்பது ஸ்ரீவித்யா பீஜாக்ஷர மந்திரமாகும். தன்னையறியாமலே அதை அவன் உச்சரித்துவிட்டான். அதனால், அப்பன்றிக்கும் சற்றுத் தெம்பு ஏற்பட்டு அருகிலிருந்த புதரில் மறைந்தது. அதைத் தேடிவந்த வேடன் அவனிடம் “பன்றி வந்ததைப் பார்த்தாயா?’’ என்று கேட்டான்.
வேடனுக்கு உண்மையைத் தெரிவித்தால் அந்தப் பன்றியின் உயிர் நீங்கிவிடும்; அப்படித் தெரிவிக்காவிட்டால் தான் கடைபிடித்துவரும் சத்திய விரதத்துக்-குக் கேடு ஏற்படும். என்ன செய்வது என்று அறியாது சத்தியவிரதன் மீண்டும் ‘ஹ்ரு ஹ்ரு’ என உறுமினான். அத்துடன் அவன் மீதிருந்த முனிவர் சாபம் விலகியது. வேடனும் அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டான்.
ஸ்ரீவித்யா பீஜ மந்திரத்தை சத்திய விரதன் உரைத்ததைக் கேட்டு தேவி அவன் முன்னே தோன்றினாள். அவனுக்கு எல்லா வித்தைகளையும் உபதேசித்தாள். அதனால் அவன் பெரும் புலவனாகவும் எல்லாச் சாத்திரங்கள், வேதங்கள், வேதாந்தங்களை அறிந்த அறிஞனாகவும் புகழ் பெற்றான்’’ என்கிறது இந்து மதம். (தேவி பாகவதம்)
“ஹ்ரு ஹ்ரு’’ என்று உச்சரித்தால் அம்படிபட்ட பன்றி நலம் என்றும், அப்படி உச்சரித்தால் ஸ்ரீவித்யா தோன்றி அருளுவாள் என்றால், இன்றைக்கு ஊமைகள் அப்படி உச்சரித்தால் ஊனம் நீங்கி பேசுவார்களா? இது அறிவியலுக்கு உகந்த கருத்தா? அறிவியல் கருத்து என்றால் அது நிரூபிக்கப்பட வேண்டும். இந்து மதம் கூறும் இந்தக் கருத்து நிரூபிக்க முடியாத மூடக் கருத்தல்லவா? இப்படி மூடக் கருத்தைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
(சொடுக்குவோம்…)