மருத்துவம்: ஜாதிக்காய், கடிப்பகை மிளகு

மார்ச் 16-31 2019

ஜாதிக்காய்

ஒட்டுமொத்த உலகையும் கவர்ந்த ஒரு மருந்துப் பொருள் எது என்றால், அது ஜாதிக்காய்தான். உணவுகளின்மீது ஜாதிக்காய்ப் பொடியைத் தூவிச் சாப்பிடுவது அக்காலத்தில் உயர்ந்த அந்தஸ்தாகக் கருதப்பட்டது.

ஜாதிக்காயில் இருக்கும் ‘மிரிஸ்டிசின்’ எனும் பொருள், அதன் பிரத்யேக சுவை மற்றும் பல்வேறு மருத்துவக் குணங்களுக்குக் காரணமாகிறது. ரத்தப் புற்றுநோய்க்கான மருத்துவ ஆய்வில் ஜாதிக்காய் இடம் பிடித்திருக்கிறது. சருமத்தின் நெகிழ்வுத் தன்மையைத் தக்கவைக்க ‘எலாஸ்டின்’ புரதம் காரணமாகிறது. அந்தப் புரதத்தைச் சிதைக்கும் காரணிகளைத் தடுத்து, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கும் மருத்துவக் கூறுகள் ஜாதிக்காயில் இருக்கின்றன.

தகித்துக் கொண்டிருக்கும் மனதை சாந்தப்படுத்த ஜாதிக்காய் உதவும் என்கின்றன ஆய்வுகள். ஆண்களின் வீரியத்தை அதிகரிக்கும் மருந்தாகப் பல்வேறு நாட்டு பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுகிறது. வைரஸ் காரணமாக ஏற்படும் வயிற்றுப்போக்கை நிறுத்தும் திறனும் ஜாதிக்காய்க்கு உள்ளது. திராட்சை ரசத்துடன் பனைவெல்லம் சேர்த்து, ஜாதிக்காய்த் தூளைச் சேர்த்துச் சாப்பிட ருசி மட்டுமல்ல, ஆரோக்கியமும் கிடைக்கும். வாந்தி உணர்வை நிறுத்த, ஜாதிக்காயை நெல்லிக்காய்ச் சாற்றுடன் சேர்த்துப் பருகலாம். பொடித்த ஜாதிக்காயைச் சிட்டிகை அளவு எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் முழுமையான உறக்கம் வர வாய்ப்பு அதிகம்.

இதன் பொடியை முட்டை மற்றும் தேனுடன் குழைத்துச் சாப்பிட்டால், விந்து முந்தும் பிரச்சினை குணமாகும். சரியான அளவு உட்கொண்டால், சாகசங்கள் செய்ய உற்சாகமூட்டும் பொருளாகவே செயல்படும். மேலும், சோர்வை அகற்றி, சுறுசுறுப்பை அளிக்கும்.

பாதாம், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, ஏலம் மற்றும் குங்குமப்பூ உதவியுடன் செய்யப்படும் ‘பாதாம்கந்த்’ எனப்படும் இனிப்பு வகை, ஹைதராபாத் ஸ்பெஷல்.

விந்தணு எண்ணிக்கை குறைதல், கழிச்சல், இருமல், இரைப்பு, வயிற்றுவலி, தலைவலி போன்ற அறிகுறிகளுக்கு ஜாதிக்காய் அற்புதமான மருந்து என்பதை ஜாதிக்காய்க்குச் சொந்தமான ‘தாது நட்டம் பேதி… ஓதுசுவாசங் காசம்…’ எனும் சித்த மருத்துவப் பாடல் மூலம் தெரிந்துகொள்ளலாம். மண்மூட்டி, வாய்பு அகற்றி, உரமாக்கி எனப் பன்முகத் தன்மை கொண்டது ஜாதிக்காய்.

கடிப்பகை மிளகு

மிளகு உடலில் உள்ள விஷங்களை முறிக்கும் தன்மை கொண்டதால், ‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு அருந்தலாம்’ என்ற முதுமொழி உருவானது. பொதுவாகவே உணவு வகைகளில் அதிகம் மிளகு சேர்த்துக் கொள்வதால், சளி போன்ற கப நோய்கள் உண்டாகாது. சிறுவர் சிறுமிகளுக்கு தொண்டை கரகரப்பு இருப்பின், உடனடியாக சிறிது மிளகுத் தூளை எடுத்து உருக்கிய நெய்யில் கலந்து சாப்பிடக் கொடுங்கள், கரகரப்பு கடுப்பாகி ஓடிவிடும். வெற்றிலையில் இரண்டு மிளகு வைத்து, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து மென்று சாப்பிட அறிவுறத்தினால், தொண்டைக்கட்டு, இருமல், ஜலதோஷம் மாயமாய் மறையும். பாலில் கலப்படம் இல்லா மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் தூவிக் கொடுக்க நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும். மழை மற்றும் குளிர் காலங்களில் நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் சிறந்த தற்காப்பு மருந்து இது. அவ்வப்போது மிளகு ரசத்தை தயாரித்துக் கொடுக்கலாம்.

பூரான் போன்ற நச்சுப்பூச்சிகள் கடித்தவுடன் மிளகு சாப்பிட்டால் அந்த நஞ்சு முறியும். அதனால் மிளகிற்கு ‘கடிப்பகை’ என்றே பெயர். உடல் எடையைக் குறைக்க நல்ல மிளகு மிகச் சிறந்த மருந்தாகும். உணவில் இருந்து சத்துக்களைப் பரித்தெடுக்க உதவுவதும் இதுதான். இதன் வெளிப்புறத் தோலில் கொழுப்புகளை அகற்றுகின்ற நியுட்டிரியன்கள் உள்ளன. பச்சை நல்ல மிளகு சாப்பிடுவது உடல் பகுதியில் உள்ள விஷத்தை வெளியேற்றும். நல்ல மிளகு சாப்பிட்டதும் நன்றாக வியர்ப்பதின் வாயிலாக விஷத்தன்மை வெளியேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *