10.03.2019 ஞாயிறு அன்று இந்தியத் தேர்தல் கமிஷன் மாலை 5 மணிக்கு புதுடெல்லியில் 2019 மே மாதத்தில் 5 ஆண்டு முடியும் ஆட்சிக்குப் பதிலாக மேலும் 5 ஆண்டுகால ஜனநாயகக் குடியரசினை உருவாக்கும் நாடாளுமன்றத் தேர்தலையும் சில மாநில சட்டமன்றத் தேர்தல்களையும் 7 கட்டங்களாக நடத்திட அறிவிப்புத் தந்துள்ளது.
2019 ஏப்ரல் 11 துவங்கி அந்த 7 கட்டத் தேர்தல்கள் மே 19 முடிவடையவிருக்கிறது. காஷ்மீர் சட்டசபை கலைக்கப்பட்டு 15 மாதங்களுக்கு மேல் கவர்னர் ஆட்சி, குடியரசுத் தலைவர் ஆட்சி தொடரும் நிலையில், அங்கு மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவில்லை என்பது அங்குள்ள முக்கிய கட்சி முன்னாள் முதல்வர்களின் ஆதங்கம்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் 21 இடங்கள் காலியாகவே — இடைதேர்தல் இன்றியே தொடரும் அவலம் காரணமாக, மக்கள் தங்களது சட்டமன்றப் பிரதிநிதிகள் இல்லாமலே இருப்பது சரியல்ல; நாங்கள் யாரிடம் முறையிடுவது தங்கள் குறைகளை என்று தொடர்ந்து கேட்டு வந்தார்கள்.
அதனால், 18 சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்கூட விடுபட்ட மூன்று தொகுதிகளில் வழக்கு இருப்பதால் மூன்று சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அது சரியல்ல என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
வழக்கு நடப்பது முந்தைய நிலைக்காக; புதிதாகத் தேர்தல் நடைபெறுவது சட்டப்படி தவறாகாது என்பது சரியான நிலைப்பாடு ஏனோ இப்படி ஒரு விசித்திரம்!
இந்தத் தேர்தல் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அனைத்து முடிவுகளும் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மே 23 அன்று அறிவிக்கப்படவிருக்கிறது. இத்தேர்தலில் யார் வரவேண்டும் என்பதைவிட யார் மீண்டும் வரக்கூடாது என்பதே முக்கியம்.
2014இல் தேர்தல் வாக்குறுதிகளை வாரி வாரி வீசிய ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சார்பில் நிறுத்தப்பட்ட நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றையும் காற்றில் பறக்கவிட்டார்.
ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம், கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கில் பதினைந்து இலட்ச ரூபாய் போடுவோம் என்பது போன்ற வாக்குறுதிகளை பற்றிக் கேட்டால் ‘விளையாட்டுக்குச் சொன்னார்’ என்று அவரது நிதி அமைச்சர் கூறுவது எவ்வளவு அபத்தம்?
சமுகநீதிக்குக் குழிதோண்ட நாளொன்றுக்கு ரூ.2,300 கூலி பெறுபவர் ஏழையா? உயர்ஜாதிக்காரர்கள் பயன் பெறுவதற்காகவே இப்படி ஒரு “மோடி வித்தை” காரணம் மத்திய பிரதேசம், இராஜஸ்தான், சத்திஷ்கர் மாநிலத் தேர்தல்களில் ஆட்சி இழப்பு – அவர்களது பா.ஜ.க கோட்டைகள் சரிந்ததின் விளைவு!
விவசாயிகள் தற்கொலைகள், ஆயிரக்கணக்கில் நாடு முழுவதும்! ஜி.எஸ்.டி என்ற மதிப்புக் கூட்டுவரி, பணமதிப்பிழப்பினால் மூடப்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் அவர்களது வேலையில் இருந்தவரின் வேலை இழந்து வீதியில் நிற்கும் நிலை.
தமிழ்நாட்டு ‘கஜா’ புயலுக்கு ஓர் ஆறுதல் கூறக் கூட வராத பிரதமர். ‘நீட்’ தேர்வு மசோதாக்கள் காணாமல் போனதாகவே இருப்பதைக் கண்டுகொள்ளாத டில்லிக்கு அடிமையாக உள்ள அமைச்சர், அவர்களின் தலைவி லேடியைப் புறக்கணித்து புதிய தலைவர் போல மோடியை ‘டாடி’ என்று வெட்கமில்லாமல் கூறிக்கொள்ளும் அவலம்.
செம்மொழி நிறுவனம் பார்ப்பன நச்சுப் பாம்புகளின் ‘புற்றாக’ மாற்றப்பட்ட அவலம்! இப்படிப் பலப் பல எனவே, தமிழ்நாட்டில் கொள்கையற்ற ஆளுங்கட்சிகள் கூட்டணியை தோற்கடித்து கொள்கைக் கூட்டணி, மக்கள் உரிமைப் பாதுக்காப்புக் கூட்டணியாம் தி.மு.க தலைமையில் உள்ள கூட்டணி மற்றும் அனைத்திந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்ட கூட்டணிகள் வெற்றிபெற செய்து மக்கள் நாயகம் காப்பாற்றப்படுதல் அவசரம் அவசியம்!
கி.வீரமணி
ஆசிரியர்,