மடல்,பெட்டிச் செய்தி : வாசகர் மடல்

மார்ச் 1-15 2019

உண்மை பிப்ரவரி 1-15, 2019 இதழ் படித்தேன். உயர்ஜாதியினரான ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு இரண்டே நாட்களில் மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றி, அவசர அவசரமாக குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்று, மத்திய கெசட்டிலும் வெளியிட்டுவிட்டார்கள். ஆனால், நீட் தேர்வு சட்டத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் கிணற்றில்போட்ட கல்லாகக் கிடக்கிறது.கவர் ஸ்டோரியாக, ‘கஜா புயலுக்கு நிவாரணம் இல்லை. கும்பமேளாவிற்கு 7,100 கோடி பணம். புதிய தகவலுடன் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.

“அற்பர்கள் ஆடுவார்கள் – ஆர்ப்பரிப்பார்கள், உயர்ந்தோர் அடக்கத்தின் அடையாளமாய் இருப்பர்’’ என்பதை அண்ணாவின் எளிமை சிறந்த  உதாரணம் மூலம் அவர் நினைவு நாளில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. ஒரு நாள் சேலத்தில் உள்ள தன் நண்பர் வீட்டில் மதிய உணவு உண்ண அமர்ந்ததும், இலையில் அப்பளமும், முட்டையும் வைத்தார்கள். மின் விசிறி சுற்றியதும் அப்பளம் படபடத்தது, முட்டை ஆடாமல் இருந்தது.

அதைப் பார்த்து அண்ணா, “நாலணா முட்டை அமைதியாய் உள்ளது. காலணா அப்பளம் எப்படி ஆட்டம் போடுகிறது பார்’’ என்றார். இன்றைக்கும் பொருந்தக்கூடியது.

24.12.1985 இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது அய்யாவின் அடிச்சுவட்டில் வரலாற்று பதிவாக மிளிர்ந்தது.

அது என்ன காதலர் தினம்?

மூன்றாம் நூற்றாண்டில் ரோமாபுரியை ஆண்ட இரண்டாம் கிளாடியஸ் என்ற மன்னன் இளைஞர்களின் திருமண வாழ்க்கைக்குத் தடை விதித்தான். இல்லறத்தில் இருப்பவர்களைவிட மணமாகாத இளைஞர்களே சிறந்த போர் வீரர்களாக உள்ளனர் என முடிவெடுத்து இப்படி ஒரு தடை விதித்தானாம். அத்தகைய தடைக் காலத்தில் ‘வாலண்டைன்’ என்ற பாதிரியார், இளைஞர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு தடையை மீறி கமுக்கமாகப் பலருக்குத் திருமணம் செய்து வைத்தாராம். இச்செய்தி மன்னனுக்குத் தெரிந்து அவருக்கு மரண தண்டனை விதித்து நிறைவேற்றப்பட்டது. அவர் மறைந்த அந்த நாளே ‘வாலண்டைன் டே!’ பதின் பருவ தோழர்களுக்கு காதலின் அடித்தளத்தை புரியவைக்கும் காதல் என்பது குற்றச் செயலா? கட்டுரை அருமை.

– க.பழநிசாமி,

தெ.புதுப்பட்டி – 624 705

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *