அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (39) : மனிதனுக்கும் எருமைக்கும் பிள்ளை பிறக்குமா?

மார்ச் 1-15 2019

சிகரம்

“தனு என்பவன் அரக்க மன்னனாவான். அவனுக்கு ரம்பன், கரம்பன் என்னும் இரண்டு புதல்வர்கள் இருந்தனர். அவ்விருவரும் பராக்கிரமமுள்ள மக்களைப் பெறுவதற்காகக் கடுந்தவம் புரிந்தனர். கரம்பன், பஞ்சநதம் எனும் நதியில் மூழ்கித் தவம் புரிந்தான். அந்நதிக் கரையைச் சுற்றிலும் அக்கினியை எழுப்பி, எவரும் நுழையாதவாறு பாதுகாப்புச் செய்துகொண்டான். அதன் நடுவில் இருந்துகொண்டு ரம்பன் தவம் புரிந்தான். இந்திரன் அவர்கள் தவத்தைக் கெடுக்க, முதலை உருக்கொண்டு அந்நதியில் இறங்கினான். கரம்பனின் தலையைப் பிடுங்கி அவனைக் கொன்றான். அதனை அறிந்த ரம்பன், தன் தலையைத் தானே வெட்டி, தன்னைச் சுற்றி எரிகின்ற அக்கினியில் ஓமம் செய்துவிட முடிவு செய்தான். உடனே அவன் தன் வாளை எடுத்து வெட்ட முயன்றான். அப்போது அக்கினிதேவன் அவன் முன்னே தோன்றி, அவனைத் தடுத்து, “ஆத்மஹத்தியாகிய தற்கொலை பெரும்பாவமாகும். அதைச் செய்ய எப்படி உன் மனம் துணிந்தது? உனக்கு வேண்டிய வரமென்ன?’’ என்று கேட்டார்.

ரம்பன் அக்கினி தேவனை வணங்கி, “தேவ தேவா! சுரர், அசுரர், மானிடர் எவராலும் வெல்லவியலாத அதிவீர பராக்கிரமசாலியான மகன் எனக்கு வாய்க்க வேண்டும்!’’ என்று வரம் கேட்டான். அக்கினி தேவன் அப்படியே வரம் கொடுத்து மறைந்தான்.

தான் பெற்ற வரத்தினால் மகிழ்ந்த ரம்பன்,  மனத்திற்கினிய காட்டின் வழியே சென்று கொண்டிருந்தான். எந்த அழகியுடன் கூடி அந்த தவபுத்திரனைப் பெறுவோம் என்று எண்ணியவாறு அவன் சென்று கொண்டிருந்தான். அப்போது அவ்வழியே ஓர் இளம் பெண்ணெருமையைக் கண்டான். விதிவசத்தால் அதனைப் பார்த்தவுடன் அவனுக்குக் கடுமையான மோகம் உண்டாகியது. தானும் எருமை வடிவம் கொண்டு, அந்தப் பெண் எருமையுடன் கூடி மகிழ்ந்தான். பின்னர் அந்தப் பெண் எருமையையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, தனது இருப்பிடமாகிய பாதாள உலகத்துக்குச் சென்றான். அந்தப் பெண் எருமையையே தன் ஆசை நாயகியாக்கிக் கொண்டு அதனுடன் எக்காலமும் கூடியிருந்து மகிழ்ந்து கொண்டிருந்தான்.

ஒரு சமயம், வேறோர் ஆண் எருமை அந்தப் பெண் எருமையைப் பார்த்துக் கடும் மோகம் கொண்டு அதனைத் துரத்தியது. அதைக் கண்ட ரம்பன், நடுவே நின்று தடுத்து, அந்த ஆண் எருமையை அடித்து ஓட்டினான். ஆனால், மதங்கொண்ட அந்த எருமை, அவன்மீது பாய்ந்து, தனது கொம்புகளால் அவனது நெஞ்சைப் பிளந்து கொன்றது. பின்னர் அது மறுபடியும் அப்பெண் எருமையை விடாது துரத்தியது. தன் கணவன் ரம்பன் இறந்ததை அறிந்த அந்தப் பெண்ணெருமை தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தது. பின்பு அது, அந்த ஆண் எருமைக்கு இணங்காது, பாதாள லோகத்தை விட்டு, தான் முதலில் இருந்த கானகத்துக்கு ஓடியது. ஆனால், ஆண் எருமை அதனை விடாது துரத்தி வந்தது. அந்தப் பெண் எருமையின் துன்பத்தைக் கண்ட அங்குள்ள யக்ஷர்கள், அம்பெய்து அந்த ஆண் எருமையைக் கொன்றார்கள்.

பிறகு, அந்தப் பெண் எருமை, மடிந்துவிட்ட தன் நாயகன் ரம்பன் விழுந்து கிடக்குமிடம் சென்று கதற ஆரம்பித்தது. பாதாள லோகத்திலிருந்த அரக்கர்கள், சிதை மூட்டி, ரம்பன் உடலை எரிப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். அப்போது அந்தப் பெண் எருமையும் தன் கணவனுடன் உடன்கட்டை ஏறி இறந்தது. அது சிதையிலிருக்கும்போது அதன் கர்ப்பத்திலிருந்து இடிமுழக்கம் போன்ற பலத்த குரலுடன் ஓர் அரக்கன் வெளிப்பட்டான். அவன் எருமையின் தலையையும், வாலையும் கொண்டிருந்தான். மற்ற உறுப்புகள் ராட்சசர்களுக்குரியனவாக இருந்தன. அதனால் அவனுக்கு மகிஷன் எனும் பெயர் ஏற்பட்டது.’’ (தேவி பாகவதம்)

மனிதனுக்கும் எருமைக்கும் பிள்ளை பிறக்குமா? இது அறிவியல் உண்மைக்கு எதிரான மூடக்கருத்தல்லவா? அது மட்டுமல்ல பெண் எருமை தன் இணையான ஆண் எருமை இறந்து, அதன் உடல் எரியூட்டப்பட்டபோது, இந்த பெண் எருமை அந்த நெருப்பில் வீழ, அதன் கர்ப்பத்திலிருந்து அரக்கன் பிறந்தான் என்பது எவ்வளவு பெரிய மூடக் கருத்து. தீயில் கருகிய உடலில் எப்படி கரு உயிர் வாழும்? அப்படியே உயிருடன் இருந்தாலும் கரு முழுமையான வளர்ச்சியடையாமல் எப்படி வெளிவரும்? அதுவும் வயிற்றை பிளந்துகொண்டு எப்படி வரும்? எல்லாம் அறிவியல் உண்மைக்கு எதிரானவை அல்லவா?

சாபத்தால் ஒருவன் உருவம் அற்றவனாவானா?

“இக்ஷூவாகு குலத்து மன்னவன் நிமி என்பவன். அவன் தேவியின் அருளைப் பெறுவதற்காகப் பெரியதொரு யாகம் செய்ய விரும்பினான். அதற்குப் பிறகு, ஆங்கிரேசர், வாமதேவர், வசிஷ்டர், புலஸ்தியர், ரிசீகர், புலஹர் ஆகிய தவமுனிவர்களை வரவழைத்து, யாகத்தைச் சிறப்பாக நடத்திக் கொடுக்கும்படி வேண்டினான். ஆனால், அவன் குலகுருவான வசிஷ்டரோ, “மன்னா! நான் ஏற்கெனவே தேவேந்திரன், தேவியைக் குறித்து நடத்தவிருக்கும் யாகத்தை மேற்கொள்வதாக வாக்குக் கொடுத்துவிட்டேன். அதை முடித்தவுடன் உன் யாகத்தைத் தொடங்கலாம்!’’ என்று தெரிவித்துவிட்டுத் தேவலோகம் போய்விட்டார்.

தான் நடத்தவிருக்கும் யாகத்துக்கும் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டதால் நிமி, வசிஷ்டருக்குப் பதிலாக கௌதமர் என்னும் முனி பெருமகனைக் கொண்டு அந்த யாகத்தைச் சிறப்பாகச் செய்யலானான். தன் குலகுருவான வசிஷ்டர் தன்னை வஞ்சித்துவிட்டதாகவே அவன் மனத்துக்குள் கருவிக் கொண்டிருந்தான். தேவேந்திரன் நடத்திய யாகத்தை முடித்துவிட்டுத் திரும்பிய வசிஷ்டர், நிமி செய்யும் யாகத்தில் கலந்துகொள்ள விரும்பி அவனைப் பார்க்க அவனது அரண்மனைக்குச் சென்றார். அதை அறிந்த நிமி, தான் தூங்குவதாகத் தட்டிக் கழித்து அவரைப் பார்க்க மறுத்தான். அதையறிந்த வசிஷ்டருக்கு ஆத்திரம் கொந்தளித்தது. “குலகுருவான என்னை அவமதித்த உன் உடல் விழக்கடவது. உடலற்றவனாய்த் திரியக் கடவாய்!’’ என்று சபித்துவிட்டார்.

பாதாள லோகத்திலிருந்த அரக்கர்கள், சிதை மூட்டி, ரம்பன் உடலை எரிப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். அப்போது அந்தப் பெண் எருமையும் தன் கணவனுடன் உடன்கட்டை ஏறி இறந்தது. அது சிதையிலிருக்கும்போது அதன் கர்ப்பத்திலிருந்து இடிமுழக்கம் போன்ற பலத்த குரலுடன் ஓர் அரக்கன் வெளிப்பட்டான்.

நிமிக்கு நேர்ந்த கதியைப் பார்த்த ஏனைய முனிவர்கள், அவன் உடலைப் பாதுகாத்து வைத்துவிட்டு யாகத்தை நிறைவேற்றினார்கள். தேவர்கள் ஆங்குத் தோன்றி நிமியின் வடிவமற்ற தன்மையைப் பார்த்து, “உனக்கு வேண்டியதைக் கேள்! உனக்குத் தற்போது உடல் வேண்டும் என்று நாங்கள் அறிகிறோம். உனக்கு வேண்டியது மானிட உடலா, தேவ உடலா?’’ என்று கேட்டனர். அதற்கு நிமி, “என்றும் எனக்குக் காற்று உருவே வேண்டும்’’ என்று வேண்டினான். அதற்கு அவர்கள் தேவியின் நவாக்ஷர மந்திரத்தை உபதேசித்து, அவளின் அருளைப் பெறுமாறு கூறினர்.நிமியின் வழிபாட்டுக்கு மனமிரங்கிய தேவி, “நீ உயிரினங்கள் அனைத்தின் கண்களிலும் வசிப்பாயாக! தேவர்களைத் தவிர மனிதர்களும் மிருகங்களும் கண்ணிமை கொட்டும் தன்மையை அடைவர்’’ என அருளி மறைந்தாள். பின்னர் முனிவர்கள் அவனது உடலை எடுத்து எரித்துவிட்டனர். அவ்வாறு எரிக்கும்போது ஒரு மைந்தன் பிறந்தான்.”

சாபம் விட்டால் ஒருவன் உருவமற்றவனாக முடியுமா? இது அறிவியலுக்கு ஏற்றக் கருத்தா? கண் இமைப்பதற்கு இந்த வரம்தான் காரணமா? இதுதான் அறிவியல் கருத்தா? கண் இமை விழியைப் பாதுகாக்க அனிச்சைச் செயலாக இமைக்கிறது. அதுதானே அறிவியல். ஆனால், அறிவியலுக்கு எதிராக மூடக் கருத்தைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?

சாபத்தால் ஒருவன் பறவையாவானா?

அரிச்சந்திரன் என்னும் சூரிய வமிசத்து மன்னனைப் பல துக்கங்களுக்கு ஆளாக்கினார். விசுவாமித்திர முனிவர், அவரிடம் வசிஷ்டர், “என் சிஷ்யனான அரிச்சந்திரனைப் படாத பாடு படுத்திய நீ அதர்மவாதி; அகம்பாவம் பிடித்தவன். கொக்கை எப்படி நீர்வாழ் பிராணிகள் நம்பி ஏமாந்தனவோ, அதைப்போல, உன்னை நம்பி அவன் ஏமாந்தான். எனவே, நீ கொக்காக மாறக் கடவாய்!’’ என்று சபித்துவிட்டார். அதற்கு விசுவாமித்திரரும், “உனக்கு எந்த விதத்திலும் நான் சளைத்தவனில்லை. ஆதலால் நான் இடும் சாபத்துக்கும் நீ ஆளாக வேண்டும். நான் கொக்காகத் திரியும் காலத்தில் நீ ஆடிப்பறவையாகக் கடவாய்!’’ என்று சபித்துவிட்டார்.

இருவரும் கொக்காகவும் ஆடிப் பறவையாகவும் மாறி, ஒருவரையொருவர் அடிக்கடி தாக்கிக் கொண்டு யுத்தம் செய்தபடி வாழ்ந்தனர். பின்னர், பிரம்மா முதலான தேவர்கள் தலையிட்டு, அவர்கள் சாபங்களை நீக்கி தத்தமது இயல்பான வடிவங்களைப் பெற்று, நண்பர்களாய் வாழும்படி செய்தனர்’’ என்று இந்து மதம் (தேவிபாகவதம்) கூறுகிறது. சாபம் என்பது வெறும் வார்த்தைகள். வார்த்தைகளுக்கு ஒருவனை பறவையாக்கும் சக்தி உண்டு என்று கூறுவது மூடக் கருத்து அல்லவா? இப்படிப்பட்ட முட்டாள்தனமான மூடக் கருத்துகளைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

(சொடுக்குவோம்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *