திருச்சி கருஞ்சட்டை மாநாட்டுத் தீர்மானங்கள்!

ஜனவரி 1-15 2019

வீரவணக்கத் தீர்மானங்கள்:

*    தாய்மொழி, இன, நாட்டுரிமை களுக்காகப் போராடி உயிர்நீத்த ஈகியர்களுக்கும், 1938–1965 மொழிப் போராட்டங்களில் உயிரீந்த நடராசன், தாளமுத்து, அரங்கநாதன், சிவகங்கை இராசேந்திரன் உள்ளிட்ட எண்ணற்ற மொழிப் போராளியர்களுக்கும், சாதி ஒழிப்புப் போராட்டக் களங்களில் இதுநாள்வரை உயிர்நீத்த கீழ்வெண்மணியின் 44 தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட் டத்தில் உயிர்நீத்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி உள்ளிட்ட ஈகியர்களுக்கும், பார்ப்பனிய மற்றும் மத வெறிகளுக்கு எதிராக மக்கள் நேயத்தோடுப் போராடி உயிர்நீத்த ஈகியர்களுக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வீரவணக்கம் செலுத்துகிறது.

*    தமிழ்நாட்டிற்கு வெளியே பார்ப்பனிய மற்றும் மத வெறிகளுக்கு எதிராகப் போராடி அம் மதவெறியர்களாலே படுகொலை செய்யப்பட்டு உயிர்நீத்த தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் உள்ளிட்ட எழுத்தாளர்கள், அறிஞர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான போராளியர்கள், வெகுமக்கள் என அனைவருக்கும் இம் மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.

* தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகத் தம் இன்னுயிர் ஈந்த எண்ணற்ற போராளியர்களுக்கும், ஈகம் செய்திருக்கிற தமிழீழ மக்களுக்கும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உயிர்நீத்த தமிழ்நாட்டுத் தமிழர்கள் அப்துல்ரகூப், முத்துக்குமார், செங்கொடி உள்ளிட்ட ஈகியர் அனைவருக்கும் இம் மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.

தமிழர் நலன்

*    தமிழ்நாட்டில் 28 ஆண்டுகளாகச் சிறையில் அடைப்பட்டுக் கிடக்கிற பேரறிவாளன், நளினி, இராபர்ட் பயாசு, சாந்தன், முருகன், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் தமிழக அரசின் ஒப்புதலோடு விடுதலை செய்ய வேண்டும். நீண்டநாள் சிறையில் வாடும் இஸ்லாமியர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.

*    இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப் படுகொலைகளுக்கு அனைத்துத் தேச அளவில் சுதந்திரமான உசாவல் (விசாரணை) தேவை என்பதை இம் மாநாடு வலியுறுத்துவதோடு, தமிழீழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 தமிழ், தமிழ்நாடு, தமிழர் உரிமை தீர்மானங்கள்

*    தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தேசிய இன அடையாள உரிமையின்கீழ்த் தங்களைத் தமிழர்கள் என்றே பதிந்து கொள்வதற்கான வகையில் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.

*        ஆளுநர் என்போர் மாநிலங்களுக்குத் தேவையில்லை.

*     வன்முறைகளைத் தூண்டிப் பல படுகொலைகளையும் நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் தமிழ்நாட்டில் இயங்கத் தமிழக அரசு தடை செய்திட வேண்டும்.

*     தமிழ்ப் பெயரில்லாத இந்திய, தமிழக அரசுகளின் திட்டப் பெயர்கள், கோயில்கள் மற்றும் நிறுவனப் பெயர்கள் அனைத்தையும் தமிழிலேயே அமைத்திட வேண்டும்.

*   தமிழ்நாட்டில் இயங்கும் தொல்லியல் ஆய்வுத்துறை என்பது தமிழக அரசின் முழுக் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும்.

*      தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள் அனைத்திலும் தமிழில் மட்டுமே வழிபாடு இருக்க வேண்டும்: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராதல் வேண்டும்.

*    பொதுப்பட ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrence List) இருக்கிற கல்வித் துறையை மாநிலங்களின் பட்டியலுக்கு உடனே கொண்டு வரவேண்டும். கல்விக்கான எந்த வகை இந்தியத் தேர்வுகளையும், ‘நீட்’ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும், தமிழ்நாட்டிலும் பிற அனைத்து மொழித் தேசங்களிலும் தடை செய்ய வேண்டும்.  தொடக்கக்கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை அனைத்துக் கல்விகளும் தமிழ்நாட்டில் தமிழ்மொழி வழிக்கல்வியாகவே இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளை மொழிப்பாடமாக மட்டுமே பயிலலாம் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

*      தமிழ்நாட்டின் ஆற்று நீர்ப்பாசனப் பரப்புகளுக்குத் தடையாகிற வகையில் கருநாடகா, கேரளா, ஆந்திரா அரசுகள் மேகதாது அணை, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை, பாலாற்றில் புதிய அணை என அணைகள் ஏதும் கட்டக் கூடாது. இந்திய அரசின் அணைகள் பாதுகாப்புச் சட்ட முன்வரைவைத் தமிழகம் எதிர்க்க வேண்டும்.

*     தமிழ்நாட்டு நிலங்களை, சுற்றுச் சூழலை நாசப்படுத்தகிற மீத்தேன், அய்ட்ரோ கார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் மற்றும் அணுமின் நிலையங்களைத் தமிழக அரசு அமைச்சரவை ஒப்புதலோடு சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றிச் சட்டமியற்றிக் கொள்கிற வகையில் முழுமையான முயற்சியில் தடுத்து நிறுத்திட வேண்டும்.

*   சென்னை உயர்நீதிமன்றத்தைத் ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என மாற்றுவதோடு, தமிழ்நாட்டிற்கான உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டிலேயே அமைந்திட வேண்டுமான வகையில் அமைப்பை ஏற்படுத்தவும், தமிழ்நாடு உயர்நீதிமன்றம், தமிழ்நாடு உச்ச நீதிமன்றங்களில் தமிழே வழக்காடு மொழியாகிறபடியான அமைப்பு முறையைத் தமிழக அரசும், மக்களும், கட்சிகளும், இயக்கங்களும் முன்னின்று போராடி மாற்றவும் வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்துகிறது.

*        தமிழ்நாட்டு வணிகர்களை நசுக்கும் வகையில் தமிழ்நாட்டிற்குள் நுழைந்திருக்கிற, நுழைய இருக்கிற வெளிநாட்டு, மற்றும் ரிலையன்சு போன்ற இந்தியப் பெரு முதலாளிகளின் வணிக நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இயங்க வழிவிடக்கூடாது.

*         தமிழ்நாட்டின் மின்சார வாரியத்தைத் தனியார் மயம்மாக்கக் கூடாது.

*        அண்மையில் ஏற்பட்ட கஜா புயலுக்கும், ஏற்கெனவே ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களுக்கும் அடிப்படைத் தேவைக்கான இழப்பீட்டைக்கூட இந்திய அரசு தமிழ்நாட்டிற்குக் கொடுக்காமல் வஞ்சித்து வருவதை இம் மாநாடு கண்டிக்கிறது. தமிழ் நாட்டரசு கேட்டுக் கொண்ட வகையில் உடனடியாக 15 ஆயிரம் கோடி உருவாவை இந்திய அரசு அளித்திட வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறது.

*  நெடுஞ்சாலைகள் அனைத்திலும் வண்டிகள் வாங்கும்போதே சாலை வரிகள் கட்டப்பட்டிருக்கும் நிலையில் சாலை, சுங்க வரிகள் என வரிகள் பிடுங்கும் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

*       வேளாண் தொழில் மிகவும் நசுக்கப்பட்டு வரும் சூழலில், வேளாண் இடுபொருள்களுக்கு விலைகளைக் குறைக்க அரிசி, கரும்பு உள்ளிட்ட விளைச்சல் பொருள்களுக்கு இந்திய அரசு விலை உறுதிப்பாடு (நிர்ணயம்) செய்யாமல் மேலாண்மைக் குழுக்களே விலை உறுதிப்பாடு (நிர்ணயம்) செய்யும்படியாக இருக்க வேண்டும் என்றும் இம் மாநாடு கட்டாயப்படுத்துகிறது.

சமூகப் புரட்சி தீர்மானங்கள்

*       ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்திட தனிச்சட்டம் இயற்றிட வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குத் தனிச் சிறப்புத் திட்டத்தின் வழி கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்றும், அவர்கள் சாதி சமயமற்றவர்கள் என்று பதிந்து கொள்கிற வகையில் அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

*    அறிவியல் பெரிய அளவில் முன்னேறியிருக்கிற இக் காலத்தில் மலக்குழிக்குள் இறங்குவதும், கையால் மலம் அள்ளுவதுமான பணிகளில் மனிதர்களே ஈடுபடும் நிலைக்கு மாற்று வழிமுறைகளைக் கண்டறிந்து உடனடியாக நடை முறைப்படுத்த வேண்டும். தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்த வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்துகிறது.

*     தமிழக வெகுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிற வகையில் தமிழிய உணர்வு சார்ந்த சாதி, சமய மறுப்புணர்வைத் தெளிவுபடுத்துகிற வகையிலான விழாக்களையும், நிகழ்வுகளையும், மூடநம்பிக்கை எதிர்ப்புப் பேரணிகளையும் தமிழகமெங்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் இயக்கங்கள் ஒருங்கிணைந்தோ தனித்தோ முன்னெடுக்க வேண்டும் என இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது.

*  பெரியார், அம்பேத்கர், திருவள்ளுவர், வள்ளலார், அயோத்திதாசப் பண்டிதர், மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர், பாவேந்தர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டவர்களின் பிறந்தநாள் நிகழ்வுகளைச் சிறப்பாக நடத்திட வேண்டும். ஆரியப் பார்ப்பனியத்திற்கு எதிராய்ப் பெரியார் முன்னெடுத்து நடத்திய திருக்குறள் மாநாடுகளையும், சாதி ஒழிப்பு மாநாடுகளையும் இப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்து தொடர்ந்து ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்திட வேண்டுமென இம் மாநாடு அனைத்து அமைப்புகளையும் கேட்டுக் கொள்கிறது.

*    பெரியார் தம் இறுதிச் சொற்பொழிவிலே குறிப்பிட்டுக் கேட்டுக் கொண்டபடி, ‘நம் நாடு தமிழ்நாடு’ என்கிற கொள்கை முடிவில், நம் மீதான சாதி இழிவுகளையும், அரசியல் அதிகாரத்தையும் செய்து வரும் அனைத்து அந்நிய ஆதிக்கர்களையும் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றிடும் வகையில் ‘நம் நாடு தமிழ்நாடு’ என்கிற கொள்கை நோக்கோடு திட்டமிட்ட நீண்ட காலப் பணித் திட்டத்தை இக் கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டுமென இம் மாநாடு பெரியாரிய உணர்வு கொண்ட அனைத்து இயக்கங்களையும் கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *