Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பொன்.மாணிக்கவேல் ஒரு மயக்க பிஸ்கட்

கே:       இந்துக் கோயில்களை இந்துக்-களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிலர் கூறுவது சரியா? ஊடகங்கள் ஏதோ உரிமை மீட்புப் போராட்டம் போல் அதைக் காட்டும் நோக்கம் என்ன?

                – உ.கனிமொழி, இராமலிங்கபுரம், சென்னை-71

ப:           முழுக்க முழுக்க தவறு; பார்ப்பனக் கொள்கை, அர்ச்சகர், பூஜாரிகள், மடங்கள், மடாதிபதி போர்வையில் காவிச் சுரண்டல் காலிகள் வசம் வடநாட்டில் நிகழும் சர்வகொள்கைக்கு வழியில்லையே என்பதால் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற பார்பனியத்திற்கு விரிக்கும் சூதுவலை.

                அதற்கு கோயில் சிலை திருட்டு என்ற தேனைத் தடவி, பொன். மாணிக்கவேல் போன்ற காவிகளின் முகமூடியைப் பயன்படுத்தி, இந்து அறநிலையத் துறையைச் சேர்ந்த பார்ப்பனரல்லாத தமிழர் சூத்திர, -பஞ்சமப் -பெண்கள் பதவிகளை வேட்டையாடித் தொல்லை தருகின்றனர் ஊடகங்களின் உதவியோடு.

                நீதிக்கட்சி பனகல் அரசர் கொண்டு வந்து ஒன்றரை ஆண்டு கடும் எதிர்ப்புக்கு இடையில் நிறை-வேற்றினார் பனகல் அரசர் என்ற முதல்வர்.

காங்கிரஸ் தலைவராக இருந்தபோதே இதனைப் பாராட்டி வரவேற்றார் தந்தை பெரியார்;  கடுமையாக எதிர்த்ததவர் பார்ப்பன சத்தியமூர்த்தி அய்யர். புரிகிறதா இப்போது ஏன், எந்த உள்நோக்கத்-தோடு பார்ப்பனர் எதிர்க்கின்றனர் என்று.

                கொலைகள், கொள்ளைகள் நடக்கின்றன என்பதால் காவல்-துறையை கலைக்கச் சொல்வதை-விட, திருத்த வேண்டும் என்பது-தானே சரியானதாக இருக்கும்.

கே:       ஈழத் தமிழர்களுக்காக எத்தனையோ இழப்புகளை ஏற்றவரும் ஈழத் தமிழர்களுக்காக ஏராளமாய் செய்தவருமான கலைஞரை, அவர்களுக்கு எதிரியாய் காட்டுகின்றவர்களின் நோக்கம் என்ன?

                – க.கருணாமூர்த்தி, கடலூர்

ப:           தமிழ்நாட்டில் நாம் உயிரைக் கொடுத்து ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக பதவியை -_ ஆட்சியை இழந்தது திராவிடர் இயக்கம். கலைஞரின் அரும்பெரும் தியாகம் எல்லாம் மறந்துவிட, இங்குள்ள ஈழத்தமிழர் உணர்வாளர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு காவடி தூக்க நாகபுரி சென்று ஹிந்துத்துவா மடியில் அமர்ந்துள்ளனர். சிவசேனைக்கு இங்கே நடைபாவாடை விரிக்கின்றரே! அதற்கு என்ன பதில்?

கே:       திறமையானவர் என்றும், நேர்மை-யானவர் என்றும் காட்டப்படும் பொன்.மாணிக்கவேலின் கீழ் பணியாற்றும் காவலர்கள், விருப்பு வெறுப்புடன் அவர் நடந்து-கொள்வதாக வெளிப்படையாக குற்றம் சாட்டுவது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

                – தமிழ்மைந்தன், சைதாப்பேட்டை

ப:           பசுத்தோல் போர்த்தப்பட்ட பார்ப்பனர் ஆர்.எஸ்.எஸ்.க்குப் பயன்படுகின்றனர். பொன்.மாணிக்கவேல் பொன் பிஸ்கட் அல்ல; மயக்க பிஸ்கட்!

கே:       21.9.1975 அன்று, தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில், தமிழக முதல்வர் கலைஞர் சிலை திறக்கப்-பட்டதற்கும், 16.12.2018 திருமதி சோனியா காந்தி அவர்களால் ‘அண்ணா  அறிவாலயத்தில்’ கலைஞர் சிலை திறக்கப்பட்டதற்கும் உள்ள வேறுபாடு என்ன?

                – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப:           இரண்டும் வெவ்வேறு காலகட்டம், சூழல். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் சிலை, அண்ணா அறிவாலயத்தில் கலைஞர், அண்ணா சிலைகள் என்றும் இவர்கள் இருக்கிறார்கள் என்பதன் விளக்கம். பொதுத்தொண்டின் அடையாளம்.

அண்ணா சாலையில் அய்யா கட்டளையிட்டபடி கலைஞர் சிலையை மீண்டும் நிறுவுவோம். இரண்டும் இரண்டுவித வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. தி.மு.க. தலைவர் தளபதியின் செயல் திறனுக்கு இது ஒரு வரலாற்றுபூர்வச் சான்று!

கே:       வேலையில்லாத் திண்டாட்டம் பாடத்திட்ட குறைபாட்டாலா? அரசின் கொள்கைக் குறை-பாட்டாலா? வேலையின்மை தீர தீர்வு என்ன?

                – சர்வேஸ், கல்பாக்கம்

ப:           அரசின் கொள்கை _ திட்டக் குறைபாடுகள். ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று புளுகியதன் மோசடி.

                தீர்வு: எல்லா பகுதியிலும் அரசு நிறுவனம், சிறுதொழில், குறுந்தொழில் தொடங்க நிதி உதவி. திட்டக் கமிஷனை மீண்டும் புதுப்பித்து – திட்டமிட்ட தொழில் மயமாக்குதல் _ அதற்கென அறிவு _ அறிவியலுக்குப் பஞ்சமில்லை நாட்டில்.

கே:       கவுசல்யா_சக்தி இருவரின் திருமணம் ஆணவக் கொலைகாராருக்கும், சமுதாயத்திற்கும் உணர்த்தும் பாடம் என்ன?            

– இன்பா, மதுரை

ப:           ஜாதி ஒழிப்பை, மறுமணத்தை, பெண்ணுரிமையை (ஆரியக்) கூலிப் படைகளால் ஒழிக்க முடியாது என்பதே பாடம்.

கே:       பி.ஜே.பி.யின் முதன்மை மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தின் தோல்வி, ஆர்.எஸ்.எஸ்.சின் மதவாத்திற்கு கிடைத்த மரண அடியாகவும் தோல்வியாகவும் கருதலாமா?

                – மகிழ்னன், சென்னை-28

ப:           ஹிந்த்துவ நாடுகள் (Hindi Heart Land) தான் _ ஆர்.எஸ்.எஸ். _ பா.ஜ.க.வின் கோட்டை அது கலகலத்துவிட்டது. மரண அடி அல்ல. குற்றுயிரும் குலைஉயிருமாக உள்ளது. மீண்டும் பொதுத்தேர்தலில் எழாதபடி புதிய காங்கிரஸ் கூட்டணி, ஆட்சிகள் கவனமாக செயல்படல் அவசியம்.

கே:       மத்திய பி.ஜே.பி. ஆட்சியின் விவசாயிகளின் விரோதப் போக்கு, கார்ப்பரேட்களின் நலனுக்கான ஆட்சி, தமிழர் விரோதப் போக்கு, பொருளாதாரச் சீர்குலைவு, தமிழ் நாட்டை பாலை நிலமாக்கும் முயற்சி, சனாதனக் கொள்கைகளைக் கோலோச்சச் செய்யும் முயற்சி இவற்றிற்கெல்லாம் தாங்கள் கூறும் தீர்வு என்ன?

                – விநாயகம், தாம்பரம்

ப:           ஒரே வைத்தியம் _ மோடி தலைமை-யிலான ஆர்.எஸ்.எஸ். _ பி.ஜே.பி. பாசிச ஆட்சியை பதவியை விட்டு ஓடும்படி ‘ஒரு விரல் புரட்சி’ மூலம் செய்தல்.

கே:       அண்மைக் காலத்தில் சீரடி சாயிபாபா கோயில் தமிழ்நாட்டின் ஊர்கள்தோறும் உருவாக்கப்-படுகிறதே! கழகத்தின் எதிர்வினைத் திட்டங்கள் செயல்-படுத்தப்படுமா?

– சி.க.புவிஅரசன், எண்ணூர்

ப:           மூடத்தனம் வியாபாரம் செழிக்கும் வகையில், நமது இனத்தவர்கள் புத்தியை இழந்து பக்திபோதையை நாடுகிறார்களே!