– சோம. இளங்கோவன்
உயிர் வாழ உணவு மிகவும் தேவை. உணவின்றி உயிர் வாழ முடியாது !
அந்த உணவே உயிருக்குக் கேடு விளைவிக்கும் என்றால் என்ன செய்வது ?
காற்றில்லாமல் வாழ முடியாது, அந்த மூச்சே நச்சுக் காற்றாகி விட்டால் என்ன ஆகும் ?
அமெரிக்கவிலே உணவைப் பொறுத்தவரை மெக்டோனால்ட் ஹேம்பர்கர் ஒரு முக்கிய அங்கம். அவசர உணவின் ஆரம்பமே மெக்டோனால்ட் ஹேம்பர்கரில் 1955இல் தொடங்கியது.
மக்களுக்குச் சுவையாக இருக்க வேண்டும் என்பது ஒன்றே குறிக்கோளாக இருந்தது. கொழுப்பைப் பற்றியோ, உப்பு அதன் விளைவுகள் பற்றியோ மக்கள் அறியாத காலம். மாட்டிறைச்சியிலான வறுத்த வடைத் துண்டுதான் ஹேம்பர்கர்.
அதனுடன் பன்றிக் கொழுப்பு கலந்த எண்ணெயில் வறுக்கப்பட்ட துண்டு செய்த உருளைக் கிழங்கின் பெயர் “பிரெஞ்சு ஃபிரைஸ்”. இந்த ஹேம்பர்கரும், ஃபிரைசும் சாப்பிடாத அமெரிக்கர்கள் வெகுக் குறைவே ! இது வந்த 55 ஆண்டுகளில் என்ன நடந்தது ?
இது வருவதற்கு முன்னிருந்த நோய், நோய்க்காக அமெரிக்கர்கள் செய்த செலவிற்கும், இது வந்த 55 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க நோய்கள், அமெரிக்கர்கள் நோய்களுக்காகச் செய்யும் செலவிற்கும் மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு ! ஆம் ! ரத்த அழுத்தம், அதனால் விளையும் இதய நோய், கை கால் விளங்காத பக்க வாத நோய்கள் பல மடங்கு மிகுந்து விட்டது. அதற்கான செலவு இன்று அமெரிக்கா பணக்கார நாட்டுப் பட்டியலிலிருந்து இறங்குமளவுக்கு வந்து விட்டது. மற்ற காரணங்கள் இருந்தாலும் ஆராய்ச்சியாளர்கள் உணவுப் பழக்கத்தின் தாக்குதலைப் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கும் அச்சப்படும் அளவிற்கும் முடிவுகள் உள்ளன என்கிறார்கள். இதிலே மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் கருப்பின மக்கள். கொழுப்பும், உப்பும் அவர்கள் உணவிலே எப்போதுமே மிகுதி. இதை எப்படி மாற்றுவது? இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதில் ஓப்ராவின் பெரு முயற்சி மிகவும் பாராட்டப்பட்டுள்ளது. உணவுகள் பற்றி மக்களுக்குப்புரியும் படியும், அவர்கள் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளிலும், படிக்கும், பார்க்கும் வழியிலும் சொன்னால்தானே ஏறும். இதைச் சரியாகச் சாதித்துக் காட்டி வருபவர் ஓப்ரா ! ஏட்டுச் சுரைக்காயாகவோ, மருத்துவர்கள் சொல்வது போலவோ சொன்னால் அதை எத்தனை பேர் கேட்டு நடக்கப் போகின்றார்கள்?
சொல்லும் விதத்தை மாற்றினார் ஓப்ரா. மிகவும் திறமையான உணவு தயாரிப்பவர்கள், உணவு விற்பவர்கள், உணவு படைப்பவர்கள் இவர்களை நல்ல உணவுகளை மக்கள் விரும்பும்படி எப்படிச் செய்வது, எவ்வாறெல்லாம் சுவைபடத் தயாரிக்கலாம் என்று அழகாகவும், எளிமையாகவும் மிகவும் கவர்ச்சியான முறையிலும் காண்பிக்கச் சொல்லுவார், எழுதச் சொல்லுவார். கேழ்வரகு நல்லது என்று நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால் கேழ்வரகு என்று சொன்னதுமே நம்மில் பலர் முகம் சுழிக்கின்றோமே, அது ஏன்? கேழ்வரகு என்று சொன்னவுடனே நமக்கு நினைவுக்கு வருவது கேழ்வரகுக் கூழும், கஞ்சியுந்தானே! அதையே கேழ்வரகு இடியாப்பமாகவும், புட்டாகவும் மற்ற வகைகளில் நன்றாகச் செய்தால் குழந்தைகளும் விரும்பி உண்பார்களே! அதைத்தான் ஓப்ரா செய்து காட்டினார்.
25 நல்ல உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை மக்கள் விரும்பி உண்ணும் வகையில் எப்படித் தயாரிக்கலாம் என்பதைப் பலர் போட்டி போட்டுக் கொண்டு சொல்ல வைத்தார். அதைப் பார்த்தால் நமக்கே வாயில் எச்சி ஊறும்படி இருக்கும். குழந்தைகளும் விரும்பி உண்ணும் வகையில் இருக்கும். அப்படியே அந்த உணவு வகைகள் உடல் நலத்திற்கு எப்படி முக்கியம், தேவை என்பதையும் சொல்லும் போது அது நன்றாகப் புரியும். நமது தொலைக்காட்சிகளிலும் பலவித உணவுத் தயாரிப்புகள் காண்பிக்கப்படுகின்றன. சிலர் அதைப் பார்த்தும் செய்கின்றார்கள். ஆனால், அதுவே ஓப்ரா போன்றவர், பலதரப்பட்ட புகழ் மிக்க உணவு தயாரிப்பவர்கள் செய்து காட்டினால் அதன் விளைவுகள் எப்படியிருக்கும் ? இதனால் மக்களும் பயன் பெறுகின்றனர். ஓப்ராவின் காட்சியைப் பார்ப்போரின் எண்ணிக்கையும் பெருகியுள்ளது. கீரை வகைகள் மிகவும் முக்கியம் என்பது நம்மில் பெரும்பாலோருக்குத் தெரிந்ததுதான்.
ஆனால், அந்தக் கீரை வகைகளின் சுவை கெடாமல் விரும்பத்தக்க முறையிலே எப்படியெல்லாம் செய்ய முடியும் என்பதையே ஒரு போட்டி போல வைத்து ஓப்ராவின் விளம்பரத்துடன் தகுதியுள்ளவர் படைக்கும் போது அது வெறும் கீரையல்ல, மிகவும் விரும்பி உண்ணக் கூடிய ஏதோ புதிய உணவாகத் தெரிகின்றது ! குழந்தைகளிடம் சண்டை போட்டுக் கீரையைச் “சாப்பிட வைக்க” வேண்டாம். விரும்பி உண்ணும் கீரைக் கொழுக்கட்டை, கீரை உருண்டை, கீரை வடை என்று பல உருவங்களில் அவர்கள் விரும்பிச் சாப்பிடும் பொருளாகிவிடுகின்றது. இந்த மாதிரி உணவெல்லாம் செல்வந்தர்களுக்குத்தான் சரியாக வரும். ஏழைகள் என்ன செய்வது என்பது பெரிய கேள்வி. இந்த உணவு மாற்றமே அனைவருக்கும் என்றாலும், முக்கியமாக ஏழைகளுக்குத்தான் மிகவும் தேவை. முன்பெல்லாம் பணக்கார நோய்களாகக் கருதப்பட்ட நீரிழிவு, ரத்த அழுத்தம் எல்லாம் ஏழைகளையும் தாக்குவது நம் கண் முன்னே தெரிகின்றது. செல்வந்தர்களாவது மருத்துவம் செய்து கொள்ள வசதியுண்டு. ஒரு ஏழைக் குடும்பத்தை, அதிலும் வேலைக்குச் சென்று சம்பாதிப்பவரைத் தாக்கினால் அந்தக் குடும்பமே பாழாகிவிடும். இது பணக்கார நாடான அமெரிக்காவிலும் கண்கூடாகக் காணக்கூடியது. கருப்பின அமெரிக்கர்கள் பலர் இந்த வேதனையில் வாடியுள்ளதைப் பார்த்தார் ஓப்ரா. ஆகவே, அவர்களுக்காகவே பல வகைகளில் இந்தச் செய்தியை அவர்கள் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளாகச் செய்துள்ளார்.
அமெரிக்காவில் ஏழைக் குடும்பங்களுக்காக அரசு மாதம் ஒருவருக்கு 260 டாலர் போல உணவிற்காகக் கொடுக்கிறது. ஆனால், அதில் நல்ல உணவு வாங்கிட முடியுமா என்று ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியரை ஆராய்ச்சி செய்யச் சொன்னார். அவரும் நன்றாக விரும்பி உண்ணக்கூடிய உணவுகளாக எப்படி வாங்கி மகிழ்ச்சியாக ஆனால் உடல் நலத்துடன் இருக்கலாம் என்று காட்டினார்.
முக்கியமான உணவு வகைகள் அவகாடோ, பீட்ரூட், முள்ளங்கி வகைகள், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, முட்டைக்கோசு வகை, வெங்காயம், வெள்ளைப் பூண்டு, மஞ்சள், மிளகாய், பட்டை, இஞ்சி, மிளகு, மீன் இவையெல்லாம் சில உணவு வகைகள். இதிலே பல ஆன்டி ஆக்சிடண்ட் எனப்படும் உடலுக்குக் கெடுதலானவற்றைத் தடுக்கும் பொருள்கள். பல வைட்டமின், உடல் பாதுகாப்பைத் தூண்டுவன. இவற்றையெல்லாம் பல விதங்களில் குழந்தைகளும் விரும்பும் வகையில் தயாரிக்கலாம். சோயா உணவு வகை இப்போதெல்லாம் மிகவும் பயன் படுத்தப்படுகின்றன. இதிலே பலரும் விதம் விதமாகத் தயாரிப்பது எப்படியென்று போட்டி போட்டுக் கொண்டு செய்து காட்டுவார்கள். ஃபைபர் எனப்படும் உமி உடலுக்கும், குடலுக்கும் முக்கியத் தேவை. காய்கறிகள், புழுங்கலரிசி, முழுக் கோதுமை இவற்றில் உள்ளன. தயிர், மோர் மிகவும் முக்கியமான உணவு குடலில் நல்ல கிருமிகள் இருப்பதற்கு முக்கியம்.
முக்கியமாகக் கவனிக்க வேண்டியது “கலோரி” எனப்படும் எரிப்பு அளவு. நம்மில் பலருக்கு ஒரு நாளைக்கு 1,800 முதல் 2,500 கலோரி உணவு தேவை. மிகுதியாக உண்டால் அது உடலில் கொழுப்பாகச் சேமிக்கப்படுகின்றது. சில உணவுகள் கலோரி மிகுதியாக உள்ளவை. ஒரு தேக்கரண்டி எண்ணெயில் 100 கலோரிகள் உள்ளன. அதை எரிக்க நாம் ஒரு மைல் நடக்க வேண்டும்! இட்டிலிப் பொடியைவிட அதில் சேர்க்கும் எண்ணெயில் எவ்வளவு என்று பாருங்கள். தினம் எவ்வளவு கலோரி சாப்பிடுகின்றோம் என்பது முக்கிய வரவு செலவுக் கணக்காகிவிடுகின்றது!
இன்றைய தமிழகத்திலே மாறிவரும் சூழ் நிலைகளில் குழந்தைகளைக் குறை சொல்லாது அவர்கள் விரும்பும்படி உணவுகளைப் புது மாதிரியாகத் தராவிட்டால் அவர்களின் உணவுகளே பின்னாட்களில் அவர்களின் நோய்களுக்குக் காரணமாகிவிடும் என்பதை உணர வேண்டும். நீரிழிவு இல்லாதவர்களே இல்லை என்பதைத் தடுக்க வேண்டும். இன்று அமெரிக்காவிலே மக்டோனால்ட் போன்றவர்களே பச்சைக் கீரைகள், காய்கள் சாப்பிடும்படி விற்க ஆரம்பித்து விட்டார்கள். மாட்டிறைச்சி, கொழுப்பு குறைத்து உண்ணுவதே நல்லது என்பது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்துவிட்டது. இந்தச் செய்தியைப் பல சமையலறைகளில் புகுத்தியதில் “ஓ”வின் பங்கு முக்கியம். அது தொடர்கின்றது.. உண்போம் உயிருக்காக, ஆனால், உடல் நலம் பேணிக் காத்து நல்லதை உண்போம். நோய் வராமல் தடுப்பதில் உணவு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து நல்லதை உண்போம்.
– (தொடரும்)