இயக்க வரலாறான தன்வரலாறு(217)
ஈழப்போராட்டத் தலைவர்களை நாடுகடத்தியது மனித நேயமற்றச் செயல்!
கி. வீரமணி
1980ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் இருந்துவந்த பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடஒதுக்கீடு அரசாணை 30.7.1985இல் காலாவதி ஆனதைச் சுட்டிக்காட்டி இடஒதுக்கீடு நீடிக்கும் வகையில் புதிய அரசாணை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசினை தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இந்த நிலையில் சென்னை முழுவதும் பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் நிர்ணயிக்கக் கோரி சுவரொட்டிகளை ஒட்டி அரசை மிரட்டி வந்தனர். 14.07.1985 அன்று நடைபெற்ற இடஒதுக்கீடு பாதுகாப்பு _ திராவிடர் கழக மாநில மாநாட்டிலும் இது தனி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இதனை நீட்டிக்கும் வகையில் உச்சநீதி-மன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை 23.07.1985 அன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த தீர்ப்பு வந்தவுடன் எனது கண்டனத்தைத் தெரிவித்து, தமிழ்நாடு அரசு புதிய ஆணை ஒன்றை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். இத்தீர்ப்பு குறித்து செய்தி வெளியிட்ட சென்னைத் தொலைக்காட்சி, உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றிய செய்திகளை வெளியிடும்போதே “புதிய ஆணை வெளியிடப்பட வேண்டும்’’ என்ற திராவிடர் கழகத்தின் கருத்தையும் இணைத்தே கூறியது.
திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்களும், ஜமால் முகமது கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் கொந்தளிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தது திராவிடர் கழகம். தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிட்டது. இதற்காக ஜப்பான் சென்றிருந்த தமிழக முதலமைச்சரைப் பாராட்டி ‘தந்தி’ ஒன்று 01.08.1985 அன்று அனுப்பியிருந்தேன். டோக்கியோவில் உள்ள துணைத் தூதரகத்தின் மூலமாக முதலமைச்சர் எம்.ஜிஆருக்கு இந்தப் பாராட்டுத் தந்தி கொடுத்தேன். அதில் நான் குறிப்பிட்டுள்ள வாசகம், “50 சதவீதம் இடஒதுக்கீடு தொடரும் வகையில் தாங்களும், தங்கள் அரசும் பிறப்பித்துள்ள துணிச்சலான ஆணையை முழு மனதுடன் வரவேற்கிறோம். எங்கள் சார்பாகவும், கோடானுகோடி தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகவும் எங்களது உளப்பூர்வமான ஆழ்ந்த மகிழ்ச்சியையும், நன்றியறிதலையும் தெரிவித்துக்கொள்கிறோம். பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் இடஒதுக்கீட்டுச் சதவீதத்தை உயர்த்துவது பற்றி தாங்கள் அருள்கூர்ந்து சிந்திக்கவும். தங்களுடைய உடல் நலம் பெறுவதற்கும், விரைவில் நாடு திரும்பு-வதற்காகவும் எங்களுடைய நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று குறிப்பிட்டிருந்தேன். 01.08.1985 அன்று முதல் பக்கத்தில் அறிக்கையையும் வெளியிட்டிருந்தேன்.
பெரியார் பெண்கள் மருந்தியல் கல்லூரியின் புதிய கட்டடத் திறப்பு விழா 30.07.1985 அன்று திருச்சியில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் மலேசிய பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோ எஸ்.சாமிவேலு அவர்கள் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். நான், கல்வி வளாகத்திலுள்ள அன்னை மணியம்மையார் மேல்நிலைப்பள்ளி, நாகம்மை யார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெரியார் பார்மெடிகல் சயின்ஸ், அறிவியல் ஆய்வுக் கூடம் உள்ளிட்டவைகளைச் சுற்றிச் காண்பித்தேன்.
அமைச்சர் ‘டத்தோ’ சாமிவேலு அவர்கள் இந்த கல்வி நிறுவனம் மேலும் வளர வேண்டும் என்பதற்காக நான் மலேசியாவிற்கு சென்றவுடன் என்னுடைய சொந்தப் பொறுப்பிலே ரூ.50,000/_ ரூபாயை நண்பர் வீரமணிக்கு அனுப்பி வைப்பேன் என்று கூறினார்கள்.
நான் அவர்களுக்கு பயனாடை அணிவித்துச் சிறப்பித்தேன். புலவர் கோ. இமயவரம்பன், கா.மா.குப்புசாமி, வழக்கறிஞர் சாமிதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
06.08.1985 அன்று செஞ்சியில் நடைபெற்ற காயிதேமில்லத் அவர்களுடைய பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன். கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத் அவர்கள் மறைந்தபோது தந்தை பெரியார் அவர்கள் இறுதி மரியாதையை செலுத்தினார்கள். காயிலேமில்லத் அவர்கள் தன்னுடைய கொள்கையிலே உறுதியோடு வாழ்ந்தவர்கள். அவர்கள் எளிமையோடு உறுதியாகவும் வாழ்ந்தார்கள் என்பதை உருக்கத்தோடு தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.
நாங்கள் கொள்கையிலேகூட மாறுபட்டும் இருக்கலாம், ஒருவரையொருவர் வெறுக்கத் தேவையில்லை. நம்முடைய இன எதிரிகள் இப்படி கேள்வி கேட்டு விஷமத்தனமாக இதை திசைதிருப்பி விடுவார்கள்.
காயிதேமில்லத் அவர்கள் நாடாளு-மன்றத்திலே உரையாற்றும்போது இந்த நாட்டிற்கு ஒரு பொது மொழி வரவேண்டும். பொதுமொழியும் தமிழ் மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். இஸ்லாமிய சமுதாயத்தினருக்கும் மட்டும் தலைவராக விளங்கவில்லை. தமிழ் சமுதாயத்தினுடைய ஒட்டுமொத்தத்திற்கும் அவர் தலைவராக விளங்கினார்.
நாங்கள் பதவிக்கோ பட்டத்திற்கோ விலை போகக் கூடியவர்கள் அல்ல. தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவார்கள் “துறவிக்கு வேந்தன் துரும்பு’’ என்று. துறவிக்கு கூட ஆசை உண்டு என்று அய்யா அவர்கள் சொல்லுவார்கள்.
இஸ்லாம் என்று சொன்னால் இயற்கை-யோடு இணைந்து வாழ்வதற்கு பெயர்தான் இஸ்லாம். சகோதரத்துவத்தோடு வாழ்வதற்குப் பெயர்தான் இஸ்லாம். இஸ்லாம் என்பது மதம் அல்ல; அது ஒரு மார்க்கம் என்று குறிப்பிட்டு உரையாற்றினேன்.
திருச்சி லால்குடியில் கழக மாநாடு 11.08.1985 அன்று நடைபெற்றது. மாநாட்டில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். அதில், தாழ்த்தப்பட்டவனும், பிற்படுத்தப்பட்டவனும் அவனுடைய விழுக்காடு அளவுக்கு வாய்ப்பு பெறவில்லை. எனவே, சமூகநீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற கூறி பார்ப்பன ஆதிக்கத்தையும் அதை ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் விளக்கிப் பேசினேன்.
சிதம்பரத்தில் 20.08.1985 அன்று கீழவீதியில் தமிழ் ஈழ நட்புறவுக் கழகத்தின் சார்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதியளிப்பு விழாப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு தென்னார்க்காடு மாவட்ட தெற்கு பகுதி திராவிடர் கழகத் தலைவர் சிதம்பரம் கு.கிருட்டிணசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஈழத்திலுள்ள தமிழர்களை எல்லாம் வேட்டையாடி வருகின்றார்கள். குட்டிமணி, ஜெகன், தங்கதுரை போன்றவர்களுடைய
கண்களை எல்லாம் தோண்டி நசுக்கி அவர்களைக்
கொன்று குவித்த கொடூரம் நடந்துள்ளது.
நான் சிறப்புரையாற்றும்போது, “ஈழம் என்பது தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள கோடியக்கரையிலிருந்து உற்றுப் பார்த்தால் 30 கல் தொலைவில் காணக்கூடிய பகுதி; ஈழத்திலுள்ள உல்வெட்டிய பகுதியை நாம் பார்க்கலாம். நம்மைக் கடல் பிரித்தாலும், நம்மை எது இணைக்கின்றது என்று சொன்னால் நம்முடைய இனவுணர்வுதான் நம்மை இணைக்கின்றது.
ஈழத்திலுள்ள தமிழர்களை எல்லாம் வேட்டையாடி வருகின்றார்கள். குட்டிமணி, ஜெகன், தங்கதுரை போன்றவர்களுடைய கண்களை எல்லாம் தோண்டி நசுக்கி அவர்களைக் கொன்று குவித்த கொடூரம் நடந்துள்ளது’’ என்று ஈழத்தமிழர்கள் படும் அவலத்தை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறினேன். கூட்டத்தில் விடுதலைப்புலிகள் நிவாரணமாக ரூபாய் பத்தாயிரம் ரூபாயை முதல் தவணையாக என்னிடத்தில் வழங்கினார்கள்.
தமிழ் ஈழ விடுதலை ஆதரவு அமைப்பின் (‘டெசோ’)வின் அவசரக் கூட்டம் 25.08.1985 அன்று கலைஞர் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் என்னுடன், பேராசிரியர் அன்பழகன், ‘முரசொலி’ மாறன் எம்.பி., சி.டி.தண்டபாணி, வை.கோபால்சாமி எம்.பி., செ.கந்தப்பன், டி.ஆர்.பாலு ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். தமிழர் அய்க்கிய முன்னணி பொதுச் செயலாளர் அமிர்தலிங்கமும் இதில் பார்வையாளராகக் கலந்துகொண்டனர். கூட்டத்தின் பின்பு, இலங்கையிலிருந்து வந்து தமிழ்நாட்டில் புகலிடம் தேடி, தமிழ்ப் போராளிகட்கும், தமிழ்ப் பிரதிநிதிகட்கும் தோன்றாத் துணையாக இருந்த டாக்டர் பாலசிங்கத்தையும் தந்தை செல்வாவின் அருமைச் செல்வமும் ஈழத்தின் மனித உரிமை அமைப்பின் தலைவருமான தோழர் சந்திரகாசனையும் டில்லி அரசு, தமிழக அரசின் ஒப்புதலோடு நாடு கடத்தியது கொடுமையிலும் கொடுமையாகும்!
இந்து ஏட்டில் புதுடெல்லி நிருபர் திரு.ஜி.கே.ரெட்டி இந்த நாடு கடத்தல் என்பது மனிதாபிமான முற்றிலும் விரோதமான செயல். இப்படி ஒரு யோசனையைப் பிரதமர் திரு.ராஜீவ்காந்திக்கு எந்த ‘பிரகஸ்பதி’ சொல்லிக் கொடுத்தாரோ? அதன் விளைவு, “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாகிவிட்டதே’’ என்று எழுதினார். இதனைக் சுட்டிக்காட்டி “நாடு கடத்தியது கொடுமை!’’ என்ற தலைப்பில் 28.08.1985 அன்று ‘விடுதலை’யில் வேதனையை வெளிப்படுத்தியிருந்தேன்.
இந்த அறிக்கையை எழுதி முடிக்கும்போது, திரு.சந்திரகாசன் பம்பாய் வந்து விமான நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார் (Detained) என்று செய்தி வந்துவிட்டது. நாடுகடத்தப்பட்ட நாள்முதல் அந்நாள் வரை உணவு உட்கொல்லாமல் உள்ள அவரது உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாகுமோ என்ற கவலை ஏற்பட்டது! இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 30ஆம் தேதி ரயில் ஓடவில்லை என்பதை அமைதி வழியில் டில்லிக்கு உணர்த்திக் கட்டுப்பாட்டுடன் காரியமாற்றுவோம் என்று அந்த அறிக்கையின் மூலமாக கேட்டுக்கொண்டேன்.
30.08.1985 அன்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் உணர்ச்சிபூர்வமாக கழகத் தோழர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு ஏராளமான தோழர்கள் பங்கேற்று சிறை சென்றனர். வட சென்னை மாவட்டச் செயலாளர் சே.ஏழுமலை தமது மகன் திருமணம் அடுத்த 15 நாட்கள் உள்ள நிலையில் கைதாகி சிறை சென்றனர்.
பேரணியின் இறுதியில் தேனாம்பேட்டை “அன்பகத்திற்-கு’’ எதிரே கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இன எழுச்சி முழக்கமிட்டு உரையாற்றினேன். ஈழத்தில் எங்கள் தமிழினம் வெட்டிச் சாய்க்கப்படும் போது, எங்கள் சகோதரிகள் கற்பழிக்கப்படும் போது, சொத்துகள் சூறையாடப்படும்போது மான உணர்ச்சியுள்ள தமிழர்கள் எல்லாம் புலிகளாக மாறினார்கள். அவர்களின் தாகம்தாம் ‘தமிழ் ஈழம்’ என்பதை வரலாறு உணர்த்திக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் தமிழ் ஈழப் போராளிகளின் தலைவர்களை மத்திய அரசு நாடு கடத்தியிருப்பதன் மூலம் மகத்தான ‘கறை’யை ஏற்படுத்திவிட்டது. இந்தக் ‘கறை’ அடுத்த சில நாட்களிலேயே துடைக்கப்பட்டாக வேண்டும் என்பதை இங்கே திரண்டிருக்கும் கூட்டத்தின் சார்பாக மட்டுமல்ல. இங்கே வருவதற்கு இயலாத நிலையில் உணர்ச்சி கொந்தளிப்போடு இருக்கும் லட்சோபலட்சம் தமிழர்களின் சார்பில் நாங்கள் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டேன்.
மத்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டம், 22.09.1985 அன்று நடைபெற்றது. நான் 18ஆம் தேதி முதல் ரயில் பயணம் மேற்கொண்டு 80க்கும் மேற்பட்ட தொடர்வண்டி நிலையங்களில் கழகத் தோழர்களை சந்தித்து போராட்ட வீரர்கள் பட்டியலைப் பெற்றுக்-கொண்டு 21.09.1985 அன்று சென்னை திரும்பினேன்.
22.09.1985 அன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் என் தலைமையில் இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு தார்சட்டி அளித்து பொன்னாடை அணிவித்து பெரியார் திடலிலிருந்து என்னை வழியனுப்பி வைத்தார்.
சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் டாக்டர் மா.நன்னன் தலைமையிலும், திருச்சியில் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி தலைமையிலும், தஞ்சையில் பிரச்சார செயலாளர் செல்வேந்திரன் தலைமையிலும், கோவையில் இளைஞரணி செயலாளர் கு.இராமகிருஷ்ணன் தலைமையிலும், கடலூரில் தொழிலாளர் அணி செயலாளர் வழக்கறிஞர் தி.இராமதாஸ் தலைமையிலும், ஈரோட்டில் அமைப்புச் செயலாளர் நா.சேதுபதி தலைமையிலும், நெல்¬லையில் அமைப்புச் செயலாளர் டி.ஏ.தியாகராசன் தலைமையிலும், திருவாரூரில் விவசாய அணிச் செயலாளர் சு.சாந்தன் தலைமையிலும், மதுரையில் தென் மாவட்டங்கள் பிரச்சார குழு தலைவர் பே.தேவசகாயம் தலைமையிலும், ஜோலார்-பேட்டையில் மகளிர் அணிச் செயலாளர் பார்வதி தலைமையிலும் இந்தி அழிப்புப் போராட்டம் அனைத்து புகைவண்டி நிலையங்களிலும் நடைபெற்றது. கழக துணைப் பொதுச்செயலாளர் கோ.சாமிதுரை அவர்களும், தலைமை நிலையச் செயலாளர் துரைசாமியும் வெளியில் இருந்து கழகப் பணிகளை ஆற்றினர்.
தொடர்வண்டி நிலையங்களில் இந்தி எழுத்துகளை அழித்து நான் எழும்பூரில் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டேன். இந்தியை அழிக்கச் சென்ற கழகத் தோழர்கள் மற்றும் தோழியர்கள் 5000 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தக் கிளர்ச்சியில் 3 தம்பதிகள் சண்முகநாதன் அவரது துணைவியார் இராமலக்குமி, மதுரை மாவட்டத் தலைவர் தேவசகாயம், அவரது துணைவியார் அன்னத் தாயம்மையார், திருப்பத்தூர் ஏ.டி.கோபால் அவரது துணைவியார் சந்திரா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையேகினர்.
கழகம் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஆனந்த விகடன்கள் பொறுமியது! ஆத்திரத்திலும் அவசர கோலத்திலும் தலையங்கத்தில் திராவிடர் கழகத்தின் மீது கண்டனக் கணைகளைப் பாய விட்டிருந்தது!
“இந்தியை எதிர்ப்பதற்கு நியாயமான காரணங்கள் இன்று முளைத்திருந்தாலும்கூட இந்த சமயத்தில் அதற்கான கிளர்ச்சிகளுக்குத் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவு ஒருபோதும் கிடைக்காது’’ என்று கூறிவிட்டு, அடுத்த வரியிலேயே “தமிழகத்தில் இந்தியைக் கட்டாயமாக நுழைப்பதற்கே வழி இல்லை’’ என்றும் எழுதியிருக்கிறது! என்று ஆனந்த விகடன் அன்று எழுதியது.
போராட்டத்தில் ஈடுபட்டு போராட் வீரர்கட்கும் வீராங்கனைகட்கும் நன்றி தெரிவித்து 25.09.1985 அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்-பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட அமைப்பு-களின் சார்பில் 08.09.1985 அன்று எனக்கு சென்னை ‘பாம்குரோவ்’ ஓட்டலில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இடஒதுக்கீட்டு ஆணை நீட்டிப்பிற்கு பாடுபட்டமைக்காக பாராட்டி நடந்த விழாவில், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி மானமிகு டி.ஏ.எஸ்.பிரகாசம் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்தினார்.
நீதிபதி பி.வேணுகோபால் அவர்கள் பாராட்டுரை வழங்கினார்.
“வரவேற்புரை நிகழ்த்திய நண்பர் பிரகாசம் அவர்கள் எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து இந்த தமிழ் சமுதாயத்தை தளபதி வீரமணி அவர்கள் காப்பாற்றியிருக்கிறார்கள். தமிழர் சமுதாயம் இதை உணரவில்லையே என்று நினைத்து வருத்தத்துடன் கூறினார்.
இடஒதுக்கீடு இல்லாமல் போயிருந்தால் அரசு நாற்காலியிலே இன்று வீற்றிருக்-கின்றார்களே பலர் _ அவர்கள் விலாசம் இல்லாமல் போயிருக்கலாம். இடஒதுக்கீட்டின் காரணமாகத்தான் நம்முடைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் டாக்டர்களாகவும், இன்ஜினியர்-களாகவும் இன்று அரசிலே பல பல பெரிய பதவிகள் வகிக்கக்கூடிய வாய்ப்பை இடஒதுக்கீடுதான் ஏற்படுத்தயது. இதை செய்து தந்தவர்கள் பெரியார் அவர்கள்’’
என்று உரையாற்றினார். இதுபோன்று
பல்வேறு கருத்துகளை நீதிபதிகள், பேராசிரியர்கள் எடுத்துக் கூறி பாராட்டுரை நிகழ்த்தினார்கள்.
நினைவுகள் நீளும்…