வரலாற்றுச் சுவடுகள்

ஜனவரி 1-15 2019

 மறக்கமுடியாத ஜனவரி 6

வை.கலையரசன்

தந்தை பெரியார் என்னும் பகுத்தறிவுப் பகலவன் மறைந்த நிலையில், உலகத் தமிழர்களே துன்பியல் இருட்டில் குமுறிக் கொண்டிருந்த கால கட்டம் அது. சமூக நீதியாளர்கள் திகைத்துக் கிடந்த பொழுது அது. விடிவெள்ளி மறைந்ததே என்று அனைத்துத் தரப்பினரும் அதிர்ச்சியின் விளிம்பில் உறைந்து கிடந்த சூழ்நிலை. சாதாரண மக்கள் மட்டுமல்ல தலைவர்களே கூட, – விற்பன்னர்கள் கூட, வாய் விட்டுக் கதறிய அசாதாரண நிலைமை! இவ்வளவுக்கும் தந்தை பெரியார் குறைந்த வயதில் தன் பயணத்தை முடித்துக் கொண்டவரல்லர். இந்திய மக்களின் சராசரி வயதைவிட ஒன்றரை மடங்குக்கும் அதிகமாக வாழ்ந்து காட்டிய அரிமா அவர்! என்றாலும் அவர் மரணத்தை யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. அப்படி நினைப்பதுகூட ஒரு நெஞ்சுரமாக நினைக்கப்பட்டது.

காரிருள் சூழ்ந்த அந்தக்கால கட்டத்தில்தான் இதே நாளில் (6.-1.-1974) திருச்சியில் திராவிடர் கழகத்தின் பொதுக்குழு கூடியது.

6.1.1974 காலை 10.30 மணிக்கு நடைபெறவிருந்த திராவிடர் கழக மத்திய நிர்வாகக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள விரைந்தார்கள்.

அறிவித்தபடி 6.1.1974 ஞாயிறு அன்று காலை திருச்சி பெரியார் மாளிகையில் கழக வரலாற்றில் முதல் முறையாக தந்தை பெரியார் அவர்கள், ‘கலந்துகொள்ளாத’ திராவிடர் கழக கலந்துரையாடல்  நடந்தது!

துவக்கத்தில் பொதுச்செயலாளர் என்ற முறையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய பின், கூட்டத்திற்கு அய்யா நம்முடன் இல்லாத நிலையில் அய்யாவால் அடையாளம் காட்டப்பெற்ற நம் அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமை ஏற்று நடத்தித் தரவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

அதனை வழிமொழிந்து கழகத்தின் மூத்த மாவட்டத் தலைவர்களில் ஒருவரான முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தர்மபுரி மாவட்ட தி.க. தலைவர் எம்.என்.நஞ்சய்யா, மதுரை மாநகரத் தலைவர் ஓ.வீ.கே. நீர்க்காத்தலிங்கம் ஆகியோர், “அம்மா அவர்கள் இந்தக் கூட்டத்திற்கு மட்டுமல்ல, கழகத்திற்கே தலைமை ஏற்று நடத்த வேண்டும்’’ என்று வழிமொழிந்து உரையாற்றினார்கள்.

அவர்களைப் பின்பற்றி மாவட்டத் தலைவர்கள், கழக முக்கிய செயல்வீரர்கள் என்று 27 பேர்கள் உரையாற்றினர். பின்னர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கூட்டத்தில் பின்வரும் ஏழு (7) தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இதில் இரண்டு இரங்கல் தீர்மானங்கள் ஆகும். மூன்றாவது தீர்மானம், “வணக்கத்திற்-குரிய தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு, திராவிடர் கழகத் தலைமைப் பொறுப்பிற்கு அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களை இக்கூட்டம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கிறது’’ என்பதாகும்.

அந்தக் கூட்டத்தில் அன்னை மணியம்மையார் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

“திராவிடர் கழகத்தவராகிய நாங்கள் தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணியை, அவர் போட்டுத் தந்த பாதையில் எவ்வித சபலங்-களுக்கும் ஆளாகாமல் வென்று முடிப்போம்’’ என்று சூளுரை மேற்கொள்ளப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பொதுக்குழுவில் அன்னை மணியம்மையார் பேசினார். “இன்றைய தினம் நம் இயக்கத்துக்கு என்னைத் தலைவர் ஆக்கியிருக்கிறீர்கள். இதை நான் உங்கள் வற்புறுத்தலால்தான் ஏற்றுக் கொள்கிறேன். அதை வெற்றிகரமாக முடித்து விடுவேனா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. உங்களின் அரிய ஒத்துழைப்போடு, இயன்றவரை நான் பாடுபடக் காத்திருக்கிறேன்’’ என்று பேசினார். அய்யாவிடம் பயின்ற அடக்கத்தின் இலக்கணமாக அமைந்திருந்தது அன்னையாரின் உரை.

தந்தை பெரியார் ஒப்புக்கொண்டு, மரணத்தின் காரணமாகக் கூட்டத்தில் கலந்து-கொள்ள முடியாமற்போன அந்தத் திருவண்ணாமலையிலிருந்தே அன்னை மணியம்மையார் அவர்களும், கழகப் பொதுச் செயலாளர் வீரமணி அவர்களும் சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்தனர். அதற்கு உறுதிநாள் பொதுக் கூட்டம் என்று மகுடம் சூட்டப்பட்டது. 16.-1.-1974இல் தொடங்கி 4.-2.-1974 வரை உறுதிநாள் பொதுக் கூட்டங்கள் நடை பெற்றன. இயன்றவரை பணியாற்று-வேன் என்று சொன்ன அன்னையார் அவர்கள் இயன்ற என்பதையும் கடந்து பணியாற்றினார்கள். அய்யாவைக் கவனித்துக் கொண்ட அம்மா தனது உடலைக் கவனித்துக் கொள்ளவில்லையே – என் செய்வது! அய்யா அமைத்த அடித்தளம் உறுதியானது. அதன் அடையாளம்தான் நம்முடைய தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள். கடைசி மூடன் இருக்கும் வரை, கடைசி சுரண்டல்வாதி ஆட்டம் போடும் வரை, சமத்துவ சமநிலை மலரும் வரை – பேதங்கள் எந்த வடிவத்திலும் நிழலைக் கூடக் காட்டாத காலகட்டம் வரை – தந்தை பெரியார் பணிகள் தொடரும் – இயக்கம் வலிமையாகவே இருக்கும் என்பதில் அய்யமில்லை.

வாழ்க பெரியார்!

வாழ்க அன்னை மணியம்மையார்!

வாழ்க தமிழர் தலைவர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *