பயந்தரும் பப்பாளி

ஜனவரி 1-15 2019

பப்பாளி, விதைகள், இலைகள், காய்கள், கனிகள் என்ற அனைத்திலும் மருத்துவக் குணங்கள் கொண்டது பப்பாளி. எளிதில் வளரும் தாவரம் இது.

பப்பாளியில் இல்லாத சத்துக்களே இல்லை எனலாம். விட்டமின்கள் ஏ, சி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், காப்பர், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்துக்களும் இருக்கின்றன. அதன் காய்களிலிருந்து பப்பைன் என்ற என்சைம் எடுக்கப்படுகிறது. தவிர, மாலிக் அமிலம், தையமின், ரைபோஃப்ளேவின் போன்ற ரசாயனப் பொருட்களும் பிரித்தெடுக்கப் படுகின்றன.

செரிமானக் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட பப்பாளி, மலச்சிக்கலுக்கும் மருந்தாகிறது. கல்லீரல், மண்ணிரல் இவற்றில் உண்டாகும் நோய்களுக்கும் உபாதைகளுக்கும் பப்பாளி மிகச் சிறந்த உணவாகும்.

ரத்தத்தில் உள்ள அமிலத் தன்மையை நீக்கும். ரத்த சோகையைத் தடுக்கும். உடலில் காயம் ஏற்பட்டால் வெளியேறும் ரத்தம் உறைவதற்குத் தேவையான என்சைம்கள் பப்பாளிப் பழத்தில் இருக்கின்றன.

ஆன்டி ஆக்சிடென்ட் சத்தான பீட்டா கரோடின் பப்பாளியில் இருப்பதால் புற்றுநோயைத் தடுக்க வல்லது. பப்பாளிக் காயைச் சாறு அரைத்துக் குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வயிற்றுப் போக்கு, வாய்வு, நெஞ்சு எரிச்சல், அல்சர் போன்ற வயிற்றுக் கோளாறுகளுக்குப் பப்பாளி சிறந்த மருந்து.

பப்பாளியில் காணப்படும் ஒருவகை ஆன்டி ஆக்ஸிடென்ட், சியாக்ஸன்தின் (Zeaxanthin) வயதானால் எற்படும் கண்பார்வைக் கோளாறுகளைப் பெருமளவில் கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள நார்ச் சத்துக்கள், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

தலைமுடி உலர்ந்து போகாமல் ஈரப்பசையோடு வைத்திருக்க உதவும் சீபம் என்ற வேதிப் பொருளை உற்பத்தி செய்யத் தூண்டும் விட்டமின் ஏ, பப்பாளியில் நிறையவே இருக்கிறது.

சாப்பாட்டிற்குப் பின் பப்பாளியை உண்பதால், உடலின் தேவையற்ற சதைகள் குறையும். குழந்தைகளுக்குப்  பப்பாளி கொடுத்து வந்தால், உடல் வளர்ச்சிக்கும் பல், எலும்பு வலுவடைவதற்கும் உதவும்.

இதன் சிறப்பான குணங்களில் ஒன்று, காயம் ஏற்பட்ட இடத்தில் பப்பாளியின் பாலைத் தடவினால் விரைவில் குணமடைவதைக் காணலாம்.

சிறுநீர்ப் பையில் ஏற்படும் கற்களைக் கரைக்க பப்பாளி நல்ல மருந்து. ஞாபகச் சக்தியை அதிகரிக்கவும் பப்பாளி உதவும்.

பப்பாளியை மற்ற காய்கனிகளுடன் சாலட் செய்து உண்ணலாம். பப்பாளிக் காய்க் கூட்டு செய்தாலும் ருசியாக இருக்கும்.

பப்பாளி மலச்சிக்கலைத் தவிர்க்கும். இருந்தால் நீக்கும்.

பப்பாளி இலைச்சாறு டெங்கு காய்ச்சலுக்குச் சிறந்த மருந்து. பிளேட்லெட்ஸ் எண்ணிக்கை குறைந்து ஏற்படும் உயிரிழப்பை இது தடுக்கிறது. பிளேட்லெட்ஸ் எண்ணிக்கையை உயர்தி உயிர் காக்கும் உன்னதப் பணியை இது செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *