செந்தமிழ் சரவணன்
இறந்து போன பிறகு உடலைச் சுற்றியிருக்கும் அணுக் கருக்களில் உள்ள புரோட்டான்கள் செயல்பட்டுக் கொண்டே இருக்கும் என்று ரஜினியை வைத்துச் சொல்ல வைக்கும்
போதே படத்தின் நம்பகத் தன்மை பறிபோகிறது. அதுவும் இது மெய்ப்பிக்கப்பட்ட அறிவியில் உண்மை என்று ரஜினி கூறுவது மூடநம்பிக்கையின் உச்சகட்டத்தையும் தாண்டும் செயல் என்று எளிதில் புரிகிறது.
அக்சய் குமார் இறந்த பிறகு அவருடன் இறந்து போன குருவிகளின் ஆவிகளும் சேர்ந்து கொண்டன என்று சொல்வது எப்படி அறிவியில் புனைவுக் கதையாகும்? பேய்படம் தயாரிக்க 600 கோடியைச் செலவிட்ட இந்தப் புத்திசாலிகள் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்கள் என்று எல்லா ஊடகங்களும் பாராட்டிக் கொண்டிருக்கின்றன.
இந்தப் படத்தின் கதைக்கரு -_ பறவைகள் பாதுகாப்பு என்பதே! பறவைகள் பாதுகாப்பு குறித்துப் படம் எடுப்பவர் நிச்சயமாகப் பழங்குடியின மக்களிடம் சென்று கதை கேட்டிருக்க வேண்டும்.
இந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல என்று ரஜினி படுக்கையிலிருந்து பேசும் 10 நொடி வசனம் என்பது நிச்சயம் வெறும் எழுத்துக்களாலோ கணினி வரைகலை நுட்பங்களாலோ சொல்லப்பட வேண்டிய கருத்தல்ல. இதற்காக பல லட்சம் பேர் சோறு தண்ணீர் இழந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
பறவைகள் அழிவு என்பது செல்லிடப்பேசி கோபுரங்களால் மட்டும் நிகழ்வது அல்ல. வனங்கள் அழிப்பில் தொடங்கும் இந்த நிகழ்வு இன்று நகரங்கள் அழிப்பு வரை தொடர்கிறது. பறவைகள் விலங்குகள் உள்ளிட்ட வனங்களின் கருவைக் காப்பாற்றுகிற பழங்குடியின மக்களின் வாழ்விடத்தைப் பிடுங்கும்போதே இயற்கை வளங்கள் நாசமாக்கப்படுகின்றன. வேதியியல் உரங்களும் பூச்சிக் கொல்லிகளும் பறவைகள் அழிவிற்குக் காரணமாகின்றன.
இந்த உண்மைகளைப் புறந்தள்ளிவிட்டுச் செல்லிடப் பேசி வியாபாரிகள், செல்லிடப்-பேசித் தொழில் முதலாளிகள், அதைப் பயன்படுத்தும் பொதுமக்களை வில்லன்-களாக்கும் முயற்சி என்பது ஷங்கரின் அறியாமை என்று சொல்வதை விட திட்டமிட்ட திசைதிருப்பல் என்றே தெரிகிறது.
பறவைகளைக் காப்பாற்றும் எண்ணம் உள்ள ஒருவரைக் கொடூரமான வில்லனாகச் சித்தரிக்க வைக்க ஷங்கர் முயற்சி செய்திருப்பதற்கான காரணமும் புரியவில்லை. ஆனால் மக்கள் இந்தக் காட்சிகளை ஏற்க மறுத்துவிட்டனர் என்பதைத்தான் திரையரங்குகளின் காலி இருக்கைகள் காண்பிக்கின்றன.
பறவைகள் விலங்குகள் உள்ளிட்ட வனங்களின் கருவைக் காப்பாற்றுகிற பழங்குடியின மக்களின் வாழ்விடத்தைப் பிடுங்கும்போதே இயற்கை வளங்கள் நாசமாக்கப்படுகின்றன. வேதியியல் உரங்களும் பூச்சிக் கொல்லிகளும் பறவைகள் அழிவிற்குக் காரணமாகின்றன.
அக்சய் குமாரின் கடந்த கால வரலாறைப் பேசும் 10 நிமிடங்கள் மட்டும் இல்லாவிட்டால் இந்தப் படம் இன்னும் படுதோல்வியைச் சந்தித்திருக்கும். அக்சய் குமாரின் கடந்த காலத்தில் தொடங்கும் நல்ல கதைக்கருவைத் தொடர் கதையாக்குவதில் ஷங்கர் வழக்கம்போல் பிரமாண்ட மேக்அப்-_பில்டப் போட்டு மெழுகியிருக்கிறார்.
பறவைகள் இயல் அறிஞர் எப்போதும் அசைவ உணவிற்கு எதிரானவர் அல்லர். சைவம் அசைவம் என்பது அறிவியல் படி ஏற்புடையதல்ல என்பதே அவரின் கருதுகோள். பறவைகளை உண்பதற்கும் பறவைகளைக் காப்பதற்கும் தொடர்பே இல்லை. இந்த உலகம் உணவுச் சங்கிலியை அடிப்படையாகக் கொண்டது. தாவரமோ விலங்கோ இன்னொரு உயிரிடம் தான் தன்னுடைய உணவைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒவ்வொரு உயிரினத்திற்கும் வாழ்நாள் முடிவு உண்டு. அந்த வாழ்வின் முடிவு என்பது இன்னொரு உயிரின் உணவாகிப் போவது இயற்கை. மனிதனும் விலங்குதான் என்பதை மறுத்துவிட முடியாதே. இந்நிலையில் பறவைகளை உண்பதை ஷங்கர் தப்பென்று சொல்வது திட்டமிட்ட பார்ப்பனியக் கருத்துத் திணிப்பே.
ஜாதிச்சங்கத் தலைவர்களிடம் போய் பரியேறும் பெருமாள் மாதிரி ஒரு படம் எடுங்கள் என்று சொன்னால் எடுப்பார்களா? அப்படித்தான் இயற்கைப் பாதுகாப்பு தொடர்பான படத்தை ஷங்கர் குழுவினரும் எடுத்திருக்கின்றனர்.
ஆன்மீக நம்பிக்கை கதையை ரஜினி தன்னுடைய பாபா திரைப்பபடத்தில் சொன்னபோது மக்கள் புறக்கணித்ததைப் போலவே இந்தப் படமும் மக்களின் வரவேற்பைப் பெறவில்லை என்கிறார்கள்.
இயற்கையைக் காக்கச் செய்ய வேண்டியவை ஏராளம் இருக்கின்றன. அறிவியலைப் பேச, பரப்ப ஆயிரம் அறிவியல் புனைகதைகள் இருக்கின்றன. அறநூறு கோடியைப் போட்டு, ‘ஆரா’ என்று ஆன்மா புளுகுக்கு புதிய புணுகு பூசும் வேலை செய்திருக்கிறார்கள். பப்பு வேகவில்லை.