மேகாலயா நீதிபதி கூறியது என்ன?

ஜனவரி 1-15 2019

ராணுவ சேர்ப்புக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர்.சென் தீர்ப்பு வழங்கும் முன் விவரித்து பேசுகையில், நாடு பிரிவினை அடைந்த போது, இலட்சக்கணக்கான சீக்கியர்கள், இந்துக்கள் கொல்லப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்கள், தன்னுடைய சொந்த நிலத்தில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். இவை அனைத்தும் மறுக்க முடியாத உண்மை. பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக் கொண்டது.
மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டதால், இந்தியாவும் இந்து நாடாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்னும் மதச்சார்பின்மை நாடாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும், இந்தியா தன்னுடைய சுதந்திரத்தை ரத்தம் சிந்தி அடைந்தது. இந்துக்களும், சீக்கியர்களும் மோசமான பாதிப்பை சந்தித்தனர். அவர்கள் தாங்கள் பிறந்த இடத்தை விட்டு கண்ணீருடன், பயத்துடன் வெளியேற வேண்டியிருந்தது. இதனை நம்மால் மறக்கவே முடியாது. இந்தியாவிற்குள் வந்த சீக்கியர்களுக்கு இங்குள்ள அரசு மறுவாழ்வு அமைத்துக் கொடுத்தது. ஆனால், பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு அப்படி செய்யப்படவில்லை. அதனால், அகிம்சை முறையில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்பது சரியான கருத்து
அல்ல. இலட்சக்கணக்கான இந்துக்கள், சீக்கியர்களின் உயிர் தியாகத்தால், உடமை இழப்பால் உருவானது.
இன்றளவும் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் வாழும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், பார்சிகள் உள்ளிட்டோர் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு செல்வதற்கு வேறு இடமில்லை. பிரிவினையின் போது இந்தியாவிற்குள் வந்த இந்துக்கள் இன்னும் வெளிநாட்டவர் போல் பார்க்கப்படுகிறார்கள். என்னுடைய இந்தப் புரிதல் இயற்கைச் சட்டங்களின் விதிகளுக்கு எதிரானதாகவும், சட்டவிரோதமாகவும் இருக்கலாம். மக்களுக்காகத்தான் சட்டங்கள் இயற்றப்படுகின்றன, சட்டங்களுக்காக மக்கள் உருவாக்கப்படுவதில்லை.
உண்மையான நிலவரத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால்தான் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுப் பேசினார். அதோடு, இந்தியா மற்றொரு பாகிஸ்தான் நாடாக மாறாமல் பாதுகாக்க பிரதமர் மோடியின் அரசால் முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அந்த நீதிபதி கூறியுள்ளார்.

-‘விடுதலை’,
தலையங்கம், 22.12.2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *