மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதி இம்பிச்மெண்ட் – பதவிநீக்கம் செய்க!

ஜனவரி 1-15 2019

இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாகப் பொறுப்பேற்று, நீதி பரிபாலனம் செய்வோர் அனைவரும் பதவியேற்பதற்கு முன், “இந்திய அரசியல் சட்டத்தின் மூன்றாவது அட்டவணையின்படி சட்டத்தினைக் காப்போம்; அதன் படியே செயல்படுவோம்’’ என்று உறுதி எடுப்பதோடு, “விருப்பு, வெறுப்பற்ற முறையில்  தம் கடமைகளைச் செய்வோம்’’ என்றும் அதில் கூறுகின்றனர்.

ஆனால், இதற்கு நேர்முரணாக மேகாலயாவில் உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள  S.R.சென் சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கில் அளித்த தீர்ப்பும், அப்போது அவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளும் மிகவும் அதிர்ச்சியளிக்கத்தக்கவையாக உள்ளன.

இந்தியாவில் ஹிந்துக்களே பெரும்பான்மையாக உள்ளதால் இதை ‘ஹிந்து நாடு’ என்று மத்திய அரசு பாராளுமன்றம் அறிவிக்க வேண்டும் என்று சற்றும் பொறுப்பின்றி, அரசியல் சட்டத்தின் பீடிகையில் உள்ள Sovereign, Secular, Socialist, Democratic Republic என்ற, இறையாண்மையை, மதச்சார்பின்மை. சமதர்மக் கொள்கைகளைக் கொண்ட குடியரசு என்பதையே புரட்டிப் போட்டு, ஹிந்து ராஷ்டிரா _- இது ‘ஹிந்து நாடு’ என்று பிரகடனப்படுத்த வேண்டுமென்று தீர்ப்பில் தனது மனம் போன போக்கில் பேசியிருப்பது தவறானது மட்டுமல்ல; அரசியல் சட்டத்திற்கு மாறான, அதன் அடிப்படை கோட்பாட்டையே உடைத்து சுக்கல் நூறாக்கும் வரம்பு மீறிய செயல் ஆகும்!

மாண்பமை நீதிபதி அரசியல்வாதி ஆகலாமா? ஹிந்துத்துவா கருத்தில் ஈடுபாடு அவருக்கு அளவுக்கு மீறி இருக்குமானால், அவர் உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிறகு தெருவில் நின்றுகூட கூவலாம்.

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானத்தையே (Basic structure of the  Indian Constitution) தகர்த்தெறியக் கூடிய கிறுக்குத்தனமான பேச்சு _- கருத்து இது.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக மூன்று ஆண்டுகளுக்கு முன் குஜராத் நீதிபதி ஜே.பி.பர்திவாலா உளறி, நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக 58 உறுப்பினர்கள் ‘இம்பிச்மெண்ட்’ பதவி விலகக் கோரும் குற்றப் பத்திரிகைத் தீர்மானத்தைக் கொடுத்தவுடன் ஆடிப்போய், தான் கூறிய கருத்தை தானே திரும்பப் பெற்று வருத்தம் தெரிவித்தார்.

அதைவிட அப்பட்டமான அரசியல் சட்ட விரோதப் பேச்சு மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியின் பேச்சு.

உடனடியாக நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சியினர் அனைவரும் ஓரணியில் நின்று இத்தகைய தவறான கருத்தைக் கூறிய, ஆர்.எஸ்.எஸ் போல் பேசும் நீதிபதியை பதவியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றினால், தடம் புரண்டவர்கள் தகாத வழிக்குப் போவதிலிருந்து தப்பி வருவார்கள். அதனை அனைத்து முற்போக்கு எம்.பி.க்களும் கொண்டு வந்து, அரசியல் சட்டத்தை இப்படி வேலியே பயிரை மேயும் விரும்பத்தகாத பேச்சுகளைத் தடுத்து நிறுத்தி, ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்த நீதிபதிகள் மத்தியில் நிலைநிறுத்த முடியும்.

_ கி.வீரமணி,

ஆசிரியர், உண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *