அய்யோ…அப்பா அய்யோ…அப்பா என்று குளிரில் நடுங்கியபடி கார்த்திகை, மார்கழி மாதங்களில் தமிழகத்தின் எல்லாப் பகுதி-களிலும் தூக்கம் கெடுக்கும் குரலைக் கேட்டிருக்கலாம். இந்தக் குரல்களின் உச்சமாக அய்யோ…அப்பா அய்யோ… அப்பா என்று கத்திக் கொண்டு சிலரும், கத்தமுடியாமல் சிலருமாக 115 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒவ்வோராண்டும் மகரஜோதி என்ற பெயரில் லட்சக்கணக்கில் அறிவிழக்கும் கூட்டத்தில் இந்த முறை உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கிறது. இது முதல் முறை அல்ல. 1952களில் அய்யப்பன் கோவில் எரிந்து 66 பேர் பலி; 1999 இல் இதே மகரஜோதி மடமைக்காகக் கூடியவர்களில் 53 பேர் இறந்துபோனார்கள்.
ஊடகங்களும், திரைப்பட நடிகர்களும் கொடுக்கும் விளம்பரத்தாலும், திட்டமிடப்பட்ட பிரச்சாரத்தினாலும், கூட்டம் கூட்டமாக உல்லாசப் பயணம் செல்லும் மனநிலையில் அய்யப்ப சீசன் சாமிகள் கார்த்திகையில் மாலை போட்டு மார்கழித் தொடக்கம் முதலே சபரிமலை செல்லத் தொடங்கினாலும், மகரஜோதி வடிவில் அய்யப்பன் பொன்னம்பல மேட்டில் காட்சி தருகிறார் என்ற புருடாவின் காரணமாக மார்கழி மாதத்தின் இறுதிநாளில் கூடுவது அதிகம். (மகரஜோதி எனப்படும் பித்தலாட்டம் பற்றிய வரலாற்றை விரிவான செய்திகளுடன் பிறிதொரு கட்டுரையில் காண்க.)
அப்படி மகரஜோதியைப் பார்த்துவிட்டு அவசர அவசரமாகத் திரும்புவதற்காக புல்மேடு வனப்பகுதி வழியாக ஆயிரக்கணக்கானோர் முயற்சி செய்து கொண்டிருந்தபோது, ஓடாமல் நின்றுபோன ஒரு ஜீப் வாகனத்தைத் தள்ளி-விட்டு ஓடவைத்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியிருக்கிறது வாகனம். இதைப் பார்த்து பீதியில் என்னமோ, ஏதோ என்று அலறிச் சிதறியோடிய சாமிகள் அங்குமிங்கும் ஓடி, மலையிலிருந்து குதித்து தப்பிக்க நினைத்ததில் மிதிபட்டு, நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
விபத்து நடந்தது இரவு நேரமானதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டு, தமிழக எல்லையில் உள்ள ஊர்களுக்கு மருத்து-வத்திற்காகக் கொண்டு செல்லப்பட்டும் பயனில்லாமல் சிலர் மாண்டிருக்கிறார்கள். இப்படி கேரள அரசு சொல்லும் கணக்குப்படி மட்டும் 115 பேர் இறந்துள்ளனர்.
இந்த விபத்துக்கு யார் காரணம் என்று விவாதங்கள் நடைபெறுகின்றன. இது குறித்து உடனடியாக விசாரிக்க நீதிமன்றங்களும், அரசுகளும் உத்தரவிடுகின்றன. அரசும், தேவஸ்வம் போர்டும் மாறிமாறிக் குற்றம் சாட்டி வருகின்றன.
ஏற்கெனவே 1999 இல் நடைபெற்ற விபத்து குறித்து விசாரித்து சந்திரசேகர மேனன் குழு அளித்த பரிந்துரையின்படி, புல்மேட்டுப்பாதை போக்குவரத்துக்கு ஏற்றதல்ல என்று தடை-செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன் வழியே அனுமதித்தது யார்? அதிலும், வாகனங்களை மேலே ஏற்றியது ஏன்? என்று அரசு சொல்ல, பாதுகாப்புக் குறைப்பாட்டுக்கு அரசே காரணம் என்று அரசைக் குறை-சொல்கிறார்கள் கோயில் நிருவாகத்தினர்.
ஆனால், இத்தனைபேரும் நம்பிப்போன அய்யப்பன், தான் உட்கார்ந்திருக்கும் கழிவறை போஸிலிருந்து கடைசி வரை மாறவேயில்லை! இத்தனைபேர் உயிருக்கும் பொறுப்பாக்கப்பட வேண்டியவர் அய்யப்பன்தானே! அவரை நோக்கி யாரும் கேள்வி கேட்கவில்லையே ஏன்? கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று சொகுசாக புஷ்பேக் வாகனத்தில் சாய்ந்தபடி பாட்டுப்பாடிக்கொண்டு செல்லும் பக்தகே()டி-களுக்கும், அரசுக்கும், கோயில் நிருவாகத்துக்கும் தெரியும் _ இது பொழுதுபோக்குச் சுற்றுலா என்பதும், அய்யப்பனுக்குச் சக்தியில்லை என்பதும்! அதனால்தான் அவர்கள் அய்யப்-பனை விடுத்து மற்றவர்மேல் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஆனால், விபத்துக் குறித்து தொலைக்-காட்சிகளிலும் இதழ்களிலும் வெளிவந்த செய்திகள், விபத்தைப் பார்த்தோரின் கருத்துகள் சொல்லும் செய்தி ஒன்றுதான்! கடவுள் அருள்தேடி மலையேறிய ஆசாமிகள் எவருக்கும் மனிதநேயம் என்பது கிஞ்சித்தும் இருக்கவில்லை என்பதுதான் அது!
சென்னையைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஒருவரும், அவர் மகனும் மகரஜோதியையொட்டி சபரிமலைக்குச் சென்றிருந்தனர். நடந்த விபத்தில் தந்தை உயிரிழந்துவிட்டார். அய்யப்பனின் அருள் பெற்றுவரச் சென்ற மகன், இருந்த அப்பனின் உயிரையும் தொலைத்துவிட்டு அவரது உடலோடு சென்னை வந்து சேர்ந்தார். விபத்து நடந்தவிதம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ஏதோ பிரச்சினைன்னு தெரிஞ்சதும் எல்லோரும் சிதறி ஓட ஆரம்பிச்சாங்க. எல்லாம் அவங்கவங்களைக் காப்பாத்திக்கணும்னு நினைச்சாங்களே தவிர, கீழே பலபேரு விழுந்திருக்காங்களே அவங்களை மிதிச்சிட்டுப் போறோமேன்னு யாருமே கவலைப்படலை. அடுத்தவங்களை இடிச்சுத்-தள்ளி ஏறிமிதிச்சுட்டாவது தப்பிக்கணும்னுதான் ஓடினாங்க. எங்கப்பா அப்படி நெரிசல்ல மாட்டிக்கிட்டாரு என்று கூறினார்.
விபத்தை நேரில் பார்த்துத் தப்பிய மற்றொருவர் தொலைக்காட்சி ஒன்றில் சொன்ன செய்தி, எல்லா சாமியும் தப்பிச்சு ஓடப்-பார்த்துச்சு. இதில தடுமாறிவிழுந்து, அப்புறம் மிதிபட்டு, அடிபட்டுத்தான் நிறைய சாமி செத்தது. அடிபட்ட சில சாமிகளை தேனி, குமுளி பக்கம் ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்க.
இதழ்களில் வெளிவந்த மற்றொரு முக்கியக் குறிப்பு; நெரிசலில் இருந்து தப்பிப்பதற்காக அந்தப் பாதையின் இருபக்கங்களிலும் உள்ள கடைகளில் ஒதுங்கியபோது, கடைக்காரர்கள் அவர்களைப் பிடித்துத் தள்ளிவிட்டனர். அடைக்கலம் தரவோ, ஒதுங்கி நிற்பதற்கோகூட அவர்கள் இடம் தரவில்லை.
இந்தச் செய்திகளைக் கூர்ந்து நோக்கினால், தந்தை பெரியார் இரண்டேவரிகளில் கடவுளை மற; மனிதனை நினை என்று சொன்னது ஏதோ அழக்குக்காகச் சொன்னதோ, அல்லது சினிமா ஹீரோக்கள் சொல்லும் பஞ்ச் டயலாக் போன்றதோ அல்ல. எவ்வளவு ஆழமான கருத்துகளை உள்ளடக்கியது என்பதனை நம்மால் உணரமுடியும்.
பக்தி என்பது மவுசு குறையாத வியாபாரம். இன்று பத்திரிகைகள் ஏதோ பக்தி இப்போதுதான் வியாபாரமயமாகி இருப்பதாகப் பரப்பிவருகின்றன. ஆனால், என்றைக்கு நான் உன்னை வழிபடுகிறேன்; உனக்கு நேர்த்திக் கடன் செலுத்துகிறேன்; உனக்குப் படைக்கிறேன். நீ எனக்கு அருள் தா என்று வணங்கத் தொடங்கினானோ அன்றைக்கே இந்தப் பண்டப்-பரிமாற்ற உணர்வு, வியாபார உணர்வு வந்துவிட்டது.
பாலும் தெளிதேனும் பாகும்பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா என்று பாடியது அப்பட்டமான வியாபார-மன்றி வேறென்ன?
நாடெங்கும் இன்றும் கூட்டம் குறையாமல் அமோகமாக நடக்கும் வியாபாரங்கள் இரண்டு. ஒன்று மது; மற்றொன்று மதம். இரண்டு கடைகளிலும் கூட்டம் குறைவதில்லை; விலையேறிப் போனதாகக் கூக்குரலோ, போராட்டமோ இல்லை. புதிது புதிதாகக் கடைகள் எத்தனை திறந்தாலும் கொள்முதலுக்கு ஆள் இருக்கிறதென்ற காரணத்தினால் தானே கல்லுக் கடவுளைக் காட்டியோ, அல்லது தானே கடவுளென்று காட்டியோ ஆள்சேர்க்க முடிகிறது. கோடிகோடியாய்ச் சுருட்ட முடிகிறது.
இப்படி வழிபாட்டின் தொடக்கம் முதல் இறுதிவரை வியாபாரம்தான் மய்யம் எனும்போது, சபரிமலை சென்று வந்த பக்தர்கள் மட்டும் சுயநலமற்ற மனிதாபிமானிகளாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை!
ஆபத்து என்றால் புலிமீதேறி வருவான் என்று பாட்டுப் பாடும் அய்யப்ப ப(க்)தர்கள், விபத்து நடக்கும்போது ஆம்புலன்சில் ஏறி புல்மேட்டுப் பகுதிக்கு வரவில்லையே என்றோ, குறைந்தபட்சம் ஒரு போக்குவரத்துக் காவலரைப்போல ஒதுக்கிவிடும் பணியைக்கூட அய்யப்பன் செய்யவில்லையே என்றோ யோசிப்பார்களா?
48 நாள் விரதமிருந்து, ஒழுக்க விதிகளைக் கடைப்பிடித்து, மது, மாது போன்றவற்றை விலக்கித்தான் மலைக்குப் போகிறார்கள். இது ஒழுக்கத்தை வளர்ப்பதாகாதா? என்று வாய்கிழியப் பேசுவார்கள். இந்தச் சாமிகளின் யோக்கியதை என்ன என்பதை டாஸ்மாக் கடைகளில் இவர்களுக்கென்று தனி டம்ளர் ஒதுக்கியிருப்பதைச் சென்று பார்த்தால் தெரியும். எத்தனைச் சாமி திருட்டு, கொலை, கொள்ளை வழக்குகளில் பிடிபடுகிறது என்பதை அன்றாடம் வரும் செய்திகளைப் பார்த்தால் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
அப்படி மத போதையுடன், மதுபோதையும் சேர்த்துக் குடித்து குப்பைமேட்டில் தன்னிலை மறந்து மல்லாந்து கிடந்தவரை, உசுப்பித் தெளியவைத்து மனிதநேயத்தோடு ஊருக்கு அனுப்பிவைத்த திராவிடர் கழகத் தோழர்களைப் பற்றிய செய்தி படத்துடன் விடுதலையில் (15.12.2010) வெளிவந்தது. கரூர் மாவட்டம் குளித்தலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திராவிடர் கழகத்தினர், கூட்டம் முடிந்து திரும்பும்போது, மது போதையில் ஆடை அவிழ்ந்ததும் தெரியாமல் கிடந்த அய்யப்ப ப(க்)தரைப் பார்த்துக் கேலி செய்துவிட்டுப் போகவில்லை. அவரை மனிதநேயத்தோடு அணுகினார்கள் என்ற செய்தி ஆழ்ந்து நோக்கத்தக்கது.
இதுதான் பெரியார் தொண்டர்களுக்கும் மத வியாபாரிகளுக்குமுள்ள வேறுபாடு. கடவுளை மறந்து மனிதனை நினைத்த பெரியார் தொண்டர்களின் இந்தச் செயல்பாட்டுக்கும், மனிதனை மறந்து கடவுளை நினைத்துக் கொண்டு கீழே கிடக்கும் மனிதனை ஏறிமிதித்தபடியாவது சிதறி ஓடிய பக்தர்களின் செயல்பாட்டுக்குமான வேறுபாட்டை அறிவுடையோர் நிச்சயம் எண்ணிப் பார்ப்பார்கள்.
இது ஏதோ இந்த ஆண்டு எதிர்பாராமல் நடைபெற்ற விபத்தல்ல. ஒவ்வொரு ஆண்டும் கூட்ட நெரிசலில் மிதிபட்டுச் சாவோர் எண்ணிக்கை கணிசமானது. ஒவ்வொரு நாளும் ஒன்றிரண்டு நடப்பதால் இவற்றை வெளியில் தெரியாமல் தேவஸ்தானபோர்டும், ஊடகங்களும் மறைத்து வந்தன. அடிப்படை வசதிகளும், சுகாதாரமான சூழலும் அறவே இல்லாத நிலைதான் அனைத்துக் கோயில்களிலும் நிலவுகிறது. திருவிழாவென்று ஊரில் கூட்டம் கூடி, ஊரையே கழிவறையாக்கிவிட்டுச் சென்றுவிடும் பக்தர்கள் குறித்து, கோயில் நகரங்களில் கேட்டுப் பார்த்தால் புரியும்.
கோடி கோடியாய்ப் பணத்தைச் சுருட்டும் கோயில்களின் வரிசையில் திருப்பதிக்கு அடுத்த இடம் நிச்சயம் சபரிமலைக்குத்தான்! அது மட்டுமா? 4 கோடி ப(க்)தர்கள் வருவதாக கணக்குச் சொல்கிறது தேவஸ்தான போர்டு. அப்படியெனில் அவர்கள் திரு (!) முடியோடு சுமந்து வருவதாகச் சொல்லப்படும் இருமுடியில் மிகக்குறைந்தது இரண்டு தேங்காய், அரைக்கிலோ அரிசி, அரைலிட்டர் நெய் என்று கணக்கு வைத்தாலே 8 கோடித் தேங்காய்கள், 20000 டன் அரிசி, 2 கோடி லிட்டர் நெய் ஆகிய உணவுப் பொருட்கள் வரி இல்லாமல் கேரளாவுக்குக் கடத்தப்படுகிறதே? சரி இவை அங்கேயாவது உணவுப் பொருள்களாகப் பயன்படுத்தப்படுகிறதா? இல்லை…கொட்டி வீணடிக்கப்படுகிறதா? அப்படியெனில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் நாட்டில் இத்தனை கோடி உணவுப் பொருள்களை வீணடிப்பதை, சட்டம் போட்டுத் தடுக்க வேண்டாமா?
இதில் பெருமளவு சென்று அறிவை இழப்பவர்கள் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகக்காரர்கள். ஆனால் மலையாளிகளுக்கு மட்டும் சலுகை காட்டி, மற்ற மாநிலத்தவரைப் பிரித்துப் பேதம் பார்க்கிறார்கள் என்றும், பட்டியில் அடைக்கப்பட்ட மாடுகளைப்போல நடத்துகிறார்கள் என்றும் விபத்துக்கு முன்பு வரை ப(க்)தர்கள் எல்லாம் ஊடகங்களில் புலம்பினார்களே! சபரிமலை சாஸ்தா சாட்டிலைட் தொலைக்காட்சிகளைப் பார்த்தாவது பக்தர் குறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? அறிவுக்குக் கேடு! உயிருக்குக் கேடு! உணவுக்குக் கேடு! பேதம்! ஒழுக்கக் கேடு! இவை அனைத்துக்கும் வித்திடும் மூடநம்பிக்கை வியாபாரத்தை அரசே முன்னின்று நடத்த-லாமா? அதுவும் மதச்சார்பற்ற அரசு என்று அரசியல் சட்டத்திலும், மார்க்சிய அரசு என்று அரசியல் தளத்திலும் விளம்பரம் பெற்றுள்ள அரசு செய்யலாமா?
தன்னுடைய மாநில நன்மைக்கு, வருவாய்க்கு இந்தக் கேவலத்தை அரங்கேற்றும் கேரள அரசு இவ்வளவு பெரிய உயிரிழப்புக்குப் பிறகாவது தன்னிலை உணர்ந்து உண்மைகளை வெளியிட வேண்டாமா?
இந்துக்களின் உச்சப்பட்ட வேண்டுதலே மோட்சம் பெறுவதுதான். அது அமர்நாத் யாத்திரை, மானசரோவர், சபரிமலை இப்படி எங்கு நடைபெறும் விபத்தானாலும் அங்கு செத்துப்போன இந்துக்கள் எல்லாம் இறையருள் பெற்று மோட்சம் போகிறார்கள் என்றுதான் பொருள். எனவே, இதுகுறித்து மகிழ்ச்சியே என்று மனிதநேயம் கொஞ்சமும் இல்லாமல் கருத்துச் சொல்கிறார் இந்து மக்கள் கட்சியின் சிறீதரன் என்பவர். இவர்கள் சொல்படியே அய்யப்பன்தான் அவர்களுக்கு டிக்கெட் போட்டு 115 பேரையும் மோட்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறார் என்றால், சிறீதரன் உள்பட எஞ்சிய கோடிக் கணக்கான பக்தர்களை அய்யப்பன் கைவிட்டுவிட்டார் என்று பொருளா? அல்லது படிப்படியாக அவர்-களையும் மொத்தமாக மோட்சத்திற்கு அனுப்பு-வார் என்று எடுத்துக்கொள்வதா?
நடைபெற்ற விபத்தைக்கூட மூடத்தனத்தைப் பரப்பும், அதற்குச் சப்பைக்கட்டுகட்டும் வாய்ப்பாகப் பார்க்கும் மதவாதிகளை எந்த முறத்தால் அடிப்பது? இங்கு மட்டுமல்ல, இஸ்லாம் மதத்தைச் சார்ந்தோர் மெக்காவுக்குப் போய் மிதிபட்டுச் செத்தாலும், கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தோர் இயேசு வருகிறார் என்று கூட்டமாகத் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வானாலும் நமது நிலைப்பாடு ஒன்றுதான். நம்முடைய கவலையெல்லாம் இங்கு மனித உயிர்கள் பலியாகியிருக்கின்றன. கோடிக்கணக்-கான மனிதர்களின் அறிவு பலியாகிறது. இந்தப் பலிகளைத் தடுக்க பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள் ஆகியோருடன் சேர்ந்து அனைவரும் பணியாற்ற வேண்டும் என்பதுதான். இனியாவது மலையேறும் அய்யோ அப்பா கோஷங்-களும், மிதிபட்டுச் சாகும் அய்யோ… அப்பா அலறல்களும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான்!
– சமா.இளவரசன்