உளவியலும் வாழ்வியலும்

டிசம்பர் 1-15 2018

மதுரை ஜெ.வெண்ணிலா

நிறைய பத்திரிக்கைகளில் பார்க்கிறோம். நமது பக்கத்து வீடுகளில் பார்க்கிறோம் தேர்வுக் காலமாக இருந்தால் ஒரு சில குழந்தைகள் மட்டும் தேர்வுக்குப் போக மாட்டேனென்று அடம் பிடிப்பதைப் பார்க்கிறோம். ஒரு வீட்டில் சிலர் மட்டும் வேலைக்குப் போகாமல் இருக்கிறார்கள்; சிலருக்கு மட்டும் மனநிலைக் கோளாறு வருகிறது. சில குழந்தைகள் மட்டும் தோல்வியடைந்தவுடன் தற்கொலை முடிவைத் தேடுகின்றனர். சில பெண்கள் மட்டும் மணமுறிவு போன்ற குடும்ப பிரச்சனைகள் வரும் பொழுது தற்கொலை எண்ணத்திற்கு செல்கின்றனர். கடன் பட்டவர்கள் சிலர் ஊரை விட்டு ஓடி விடுகின்றாரகள்; சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

தற்கொலை செய்து கொள்பவர்கள், ஓடிப் போகின்றவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் உள்ளது. ஆனால் அதே சமூகத்தில் வேறு நபர்கள் அதே காரணத்தின் காரணமாக வரும் பிரச்சனையை வேறு விதமாக சமாளித்துக் கொண்டிருப்-பார்கள். அப்படிப் பார்க்கும் பொழுது ஒரு பிரச்சனையை ஏன் ஒரு  சிலரால் மட்டும் சமாளிக்க முடியவில்லை என அதை ஆராய்ந்து பார்க்கிறோம். உளவியல் அடிப்படையில் பார்க்கின்றபொழுது பத்து பேருக்கு ஒரே விதமான பிரச்சனைகள் வருகிறது என்று சொன்னால் ஆறு பேர் அதனை எளிதாக சமாளித்து விடுகின்றார்கள். 4 பேர் அதில் தடுமாடுகின்றார்கள், வேறு விதமான முடிவுகளுக்குப் போகின்றார்கள்.

தற்கொலை செய்து கொள்கிறவர்கள் ஓடிப் போகிறவர்கள் போன்றவர்களது ஆளுமைத் திறனை ஆராய்ந்து பார்க்கும் போது அவர்களிடம் முக்கியமான விஷயம் ஒன்று இல்லாமல் உள்ளது. அது… ‘மீட்டெழுச்சி’ ஆங்கிலத்தில் ‘ரெசிலியன்ஸ்’ என்று சொல்வார்கள். அது ஒரு திறன். அந்தத் திறன் யாரிடம் குறைவாக உள்ளதோ அவர்கள் ஒரு சாதாரணப் பிரச்சனையாக இருந்தால்கூட அதிலிருந்து மீள முடியாமல் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவது, சோர்வடைவது, மனநிலைக் கோளாறுகளுக்கு ஆட்படுவது போன்ற நிலைகளுக்கு ஆளாகிறார்கள். சில நேரம் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றார்கள். ஏனெனில் போதையில் இருக்கும்போது அவர்கள் நிஜ உலகில் (ரியாலிட்டி) இருக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை.

அதனால் உளவியலில் இந்த மீட்டெழுச்சியை, ரெசிலியன்ஸ் திறனிற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இதனை எப்படி வளர்த்துக் கொள்வது? இந்தத் திறன் யாருக்கெல்லாம் இருக்கும்? இந்தத் திறன் குறைவதால் மனிதர்கள் பாதிப்பிற்கு அல்லது வன்முறைக்கு ஆளாகாமல் இருப்பது எப்படி? ரெசிலன்ஸ் பவர் கூடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தால் தடுப்புக் காரணிகள் (புரொடக்டிவ் பேக்டர்ஸ்) நமக்கு இருக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள். அப்படிப்பட்ட தடுப்புக் காரணிகள் என்ன என்று பார்க்கும்பொழுது முதல் காரணி ஒவ்வொருவருடைய தனிப்பட்ட திறன், அந்தத் திறன் அவர்களுக்கு நன்றாக இருந்தால் அது ஒரு சொத்து மாதிரி, அந்தத் திறனில் முதன்மையாகச் சொல்வது நேர்மறை அணுகுமுறை (பாஸிடிவ் திங்கிங்க்). இரண்டாவது காரணி உறவுகள். அது குடும்ப உறவாக இருக்கலாம், நட்பு வட்டமாக இருக்கலாம். ஏதாவது ஒரு பொதுக்காரியத்தில் ஈடுபடும் குழுவில் உறுப்பினராக இருப்பதாக இருக்கலாம். இப்படிப்பட்ட திறன்கள் இருக்கும்போது, அவர்களுக்கு துன்பம் வருகின்ற பொழுது அவர்கள் மீட்டெழுகின்றார்கள். இப்படிப்பட்ட மீட்டெழுகின்ற திறன் இல்லாத நபரோ, குடும்பமோ அதீத துன்பம் வருகின்ற-போது இனிமேல் நம்மால் வாழ முடியாது என்ற நிலை எடுத்து தற்கொலை முடிவினை எடுக்கின்றார்கள்.

இந்தத் திறனை, மீட்டெழும் திறனை பற்றிப் பேசுகின்றபோது பலர் மிக சாதாரணமாகப் பேசுவார்கள். உதாரணமாக குடும்ப உறவு என்று எடுத்துக்கொண்டால், இது தெரியாதா? இத்தனை வருடமாக குடும்பம் நடத்து-கின்றோம் நாம் அறியாததா? எனச் சொல்வார்கள். இதற்கெல்லாம் ஒரு பயிற்சிக்கு போகணுமா என்று கேட்பார்கள். நேர்மறை அணுகுமுறை வளர்க்க வேண்டும் என்று சொன்னால் இது நமக்குத் தெரியாதா? என்பார்கள். நிறைய ஆளுமை வளர்ச்சி குறித்துப் பேசும் பேச்சாளர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் நேர்மறை அணுகுமுறையோடு இருங்கள், குடும்ப உறவுகளைப் பேணுங்கள் என்று பேசுவதோடு நிறுத்திக் கொள்வார்கள். இந்த மாதிரியான பேச்சுகளைக் கேட்கும்போது ஒரு உற்சாகம் வரும். நமக்குத் தெரிந்த விசயம்தானே என்று நினைப்பார்கள். ஆனால் செயல்பாடு என்று வரும்பொழுது நினைப்போடு நின்று விடுவார்கள்.

எனவே நமக்குத் தெரிந்த விசயத்திற்கும் அதனை செயல்படுத்துவதற்கும் இடையில் ஒரு இடைவெளி (கேப்) இருக்கிறது. இதற்குப் பெயர்தான் மனப்பான்மை. அந்த இடை-வெளியைக் குறைத்து திறனை வளர்க்க வந்துள்ள புத்தகங்கள் என்று பார்க்கும்பொழுது தான், நமது அய்யா அவர்கள் எழுதியுள்ள ‘வாழ்வியல் சிந்தனைகள்’ தொகுப்புகள் வருகின்றன. அந்தப் புத்தகங்களைப் பார்த்தோமென்றால் நமக்குத் தெரிந்த விசயங்கள்-தான். குடும்பங்களை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும், குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், உறவுகளைப் பலப்படுத்த வேண்டும் என்பதெல்லாம் நமக்குத் தெரிந்த விசயங்கள். ஆனால் தெரிந்த விசயத்திற்கும், செயல்படுத்து-வதற்கும் உள்ள அந்த இடைவெளியை (கேப்) சரி செய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தும் இந்த வாழ்வியல் சிந்தனைகள் புத்தகங்களில் இருக்கின்றன. உண்மையிலேயே இந்தப் புத்தகங்களைப் பார்க்கின்றபொழுது மிகப்பெரிய பிரமிப்பாக இருக்கின்றது. ‘தன்முன்னேற்றப் புத்தகங்கள்’ நிறைய இருக்கின்றன. அவைகளில் நிறைய இருக்கின்றன. ஆனால் தெரிந்த விசயத்திற்கும், செயல்பாட்டிற்கும் இடையில் இருக்கும் அந்த இடைவெளியை சரி செய்வது எப்படி என்பது பற்றி அந்தப் புத்தகங்களில் எதுவும்  இருக்காது. ஆனால் வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்பு-களில் அதிகமாக இருக்கின்றது.

உதாரணமாக ஒருவருக்கு இரண்டு நேரம், காலையும் இரவும் பல் துலக்கினால் நல்லது என்று தெரியும். ஆனால் நாம் யாருமே இரண்டாவது வேளை பல் துலக்குவது என்பதனை பெரிதாக யாரும் செய்வதில்லை. ஆனால் மருத்துவர்கள், ஆலோசனை கொடுப்பவர்கள் இரண்டு வேளையும் பல் துலக்குவது நல்லது என்று தெரிந்தாலும் செய்வதில்லை. ஏனென்றால் நமக்கெல்லாம் ஒரு நம்பிக்கை இருக்கிறது. எனக்கு ஒன்றும் வராது, என்பது அது. இது ஒருவகையான மூட நம்பிக்கை. இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் பல விசயங்களில் நமக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட எண்ணங்கள், நம்பிக்கைகள் மூலமாகத்தான் நமக்குத் தெரிந்த விசயங்களைக் கூட செயல்படுத்தத் தவறிவிடுகின்றோம். நேர நிர்வாகம் மிக முக்கியம் என்று தெரியும். ஆனால் நாம் செயல்படுத்துவதில்லை.

இந்த மாதிரியான நம்பிக்கைகளை எப்படி உடைப்பது என்றால் அதற்கான ஆதாரங்-களைக் கொடுக்க வேண்டும். நிகழ்வுகளைச் சொல்ல வேண்டும். அதன் மூலமாக மீட்டெழுச்சி திறன் குறைவாக இருக்கிறது. அதனைச் சரி செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தால்தான் செயல்பாட்டிற்கு கொண்டு வரமுடியும். இந்த விசயத்தை வாழ்வியல் சிந்தனைகள் புத்தகம் மிக அருமையாகச் செய்திருக்கிறது. மிக அருமையாக அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொடுத்திருக்-கின்றார்கள்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல குடும்ப உறவு, நட்பு போன்ற விசயங்களைப் பற்றி அய்யா அவர்கள் தணிக்கையாளர் மனோகரன் என்பவரை உதாரணமாக வைத்துச் சொல்கின்றார். “மூன்று கண்ணாடிப் பந்துகள், ஒரு ரப்பர் பந்து’’ என்னும் கட்டுரை அருமையான கட்டுரை. உழைப்பு, பணி, வேலை போன்றவை  ரப்பர் பந்து. குடும்ப உறவு, நட்பு போன்றவை கண்ணாடி பந்துகள். ரப்பர் பந்து எவ்வளவு முக்கியமானது என்று சொல்வதன் மூலம் அருமையாக உளவியலை விவரிக்-கின்றார். அதனைப் போல “மனிதர்களை நேசிக்க வேண்டும், பொருள்களைப் பயன்படுத்திடல் வேண்டும்” என வாழ்வியல் சிந்தனைகள் 5ஆ-ம் பாகத்தில் சொல்கின்றார். இது ஒரு பழமொழிதான் என்று சொல்கின்றார். ஆனால் மிகப் புதுமையாக அய்யா ஆசிரியர் அவர்கள் இதனைக் கையாண்டிருக்கின்றார். இந்த விசயம் புரிந்தால் நமது மன உடல் நலம் (மெண்டல் ஹெல்த்) மிக நன்றாக இருக்கும்.

“மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?’’ என்று சொல்கின்றார். சிலர் பணம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என நினைக்-கின்றார்கள். சிலர் முழு நேரமும் பொழுது-போக்கு களியாட்டங்கள் (எண்டெயர்ன்-மெண்ட்) இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைக்கின்றார்கள். தவறு என்பதனை ஆசிரியர் சொல்கின்றார். உலகத்திலேயே மகிழ்ச்சியான நாடு எது ? எனும் கேள்வி கேட்டு பதிலையும் கூறி 1) சமூக ஆதரவு, 2) நண்பர்கள் குழு, 3) குடும்ப உறவு… இவைகள் நன்றாக இருக்கும் சமூகத்தைக் கொண்ட நாடுதான் உலகத்திலேயே மகிழ்ச்சியான நாடு என்பதனைச் சொல்கின்றார். உலகத்தில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நாம் எந்த இடத்தில் இருக்கின்றோம்? ஏன்? நாம் மகிழ்ச்சியாக இருந்தால், இயல்பாகவே புதிய விசயங்களைத் தேடுவோம். உழைப்பு எவ்வளவு மகிழ்ச்சி தரும், அது நமது மீட்டெழும் திறனை வளர்க்க உதவும் மிகப் பெரிய காரணி….

குடும்ப உறவுகளைப் பற்றி வாழ்வியல் சிந்தனைகளில் நிறைய அய்யா சொல்கின்றார். அதிலும் குழந்தை வளர்ப்பு பற்றி நிறைய. இப்போது குடும்பம் என்பதே குழந்தைகளைச் சுற்றித்தான் ஓடிக் கொண்டிருக்கின்றது. குடும்பம், குழந்தை என்றால் நாம் அடுத்து பள்ளி என்று சொல்வோம். ஆனால் ஆசிரியர் குடும்பம், குழந்தை, மனம், பள்ளி என்று சொல்கின்றார். குழந்தை மோசமாக நடந்து கொண்டால், அந்தச் செயலைத் திருத்துவதற்கு முயற்சி செய்யுங்கள், செயலைத் தண்டியுங்கள். ஆனால் குழந்தைகளைத் தண்டிக்காதீர்கள் என்று சொல்கின்றார். மிக அருமையான கட்டுரை. குழந்தைகளுக்கு குடும்ப உறவுகள் மேல் நம்பிக்கை வருவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு. குடும்ப நம்பிக்கை, குடும்ப உறவு போன்ற திறனை வளர்க்க மிகவும் உதவியாக இருக்கும்.

பாஸிட்டிவ் டிரெயினிங்க் என்பதைப் பற்றி உளவியலில் நிறையப் பேசுகின்றோம். ஒரு இடத்தில் தண்டனை கொடுப்பதைவிட அந்தப் பிரச்சனையிலிருந்து மீள்வது எப்படி என்பதனை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என ஆசிரியர் சொல்கின்றார் “தேர்வு முடிவுகளும் பெற்றோர் கடமையும்” என்னும் தலைப்பில்….

வாழ்வியல் சிந்தனைகளில் ஒவ்வொரு தலைப்புமே நாம் என்னவெல்லாம் தவறான நம்பிக்கைகள் வைத்திருக்கின்றோமோ, அதனையெல்லாம் உடைத்து, நமக்கான மீட்டெழுச்சித் திறனை எப்படி வளர்த்துக் கொள்வது, செயல்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலமாக நமது மீட்டெழுச்சித் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி என்பதனைப் பற்றிதான் இருக்கிறது. தனிமை எவ்வளவு கொடுமையானது என்பதனைச் சொல்கின்றார். ஆனால் நம்மை நாமே உள் நோக்கிப் பார்க்க சில நிமிடங்கள் தனிமையில் இருக்க வேண்டும் எனச் சொல்கின்றார்.

தற்காப்புக் காரணிகள் (புரோடக்டிவ் பேக்டர்) அப்படியே கொட்டிக் கிடக்கிறது வாழ்வியல் சிந்தனைகளில். நான் ஏன் அதனை மிகப் பெரிதாகச் சொல்கிறேன் என்றால் மனப்பான்மைதான் மிக முக்கியமானது உளவியலில். நம்மிடம் நிறைய மூட நம்பிக்கைகள் இருக்கின்றது. எனக்கு வராது, எங்க பரம்பரையிலே யாருக்குமே வராது. இப்படியெல்லாம் சொல்லிக் கொள்கின்றோம். ஆனால் நாம் பிழைக்க வேண்டும். வாழ வேண்டும். வாழ்வதற்கு ரெசிலன்ஸ் எனப்படும் மீட்டெழும் திறன் வேண்டும். அதனை வளர்ப்பதற்கு மிகப்பெரிய வாய்ப்பு வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்புகள். நாம் படிக்க வேண்டும். நமது குழந்தைகள், குடும்பத்தினர் அனைவரையும் படிக்கச்சொல்ல வேண்டும். அதன் மூலம் நாமும், நம் சமூகமும் நன்றாக வாழ வேண்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *