உலகை ஈர்க்கும் மூலிகை மருந்துகள்
மூலிகையின் மருந்து உடலில் இருப்பு (Bio availability)
மருந்து இரைப்பை, குடல் வழியாகச் சென்று இரத்த நாளத்தை அடைந்து எப்படி நோயைக் குணப்படுத்துகிறது என்பது மூலிகை மருந்துகளினால் நமக்குப் பெரும்பாலும் தெரிவதில்லை. சில மூலிகை விலங்குகளிடம் ஆய்வில் ஒரு வகையாகவும் மனிதர்களிடம் வேறு வகையாகவும் வேலை செய்கிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு சின்னபார் (பாதரச சல்பைட்). மனிதர்களுக்கு இது செரிமான மண்டலத்தில் உறிஞ்சப்படுவதில்லை. ஆனால், விலங்குகளின் குடலில் உறிஞ்சப்படுகிறது. இதையும் மனதில் கொள்வது அவசியம்.
மூலிகை மருந்தின் இன்றைய நிலை
உலகில் ஜெர்மனி, பிரான்ஸ் மருத்துவர்கள் மூலிகை மருந்துகளை 70 விழுக்காடு நோயாளிகளுக்குப் பரிந்துரைக் கின்றனர். மேலும், இந்தியா உள்பட மற்ற நாடுகளிலும் நோயாளிகள் இம்மருத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் எண்ணமும் எண்ணிக்கையும் மிகுதியாகி வருகிறது. அமெரிக்காவில் 4 பில்லியன் மூலிகை மருந்து விற்பனையாகிறது. தற்பொழுது இரண்டு மடங்காகிவிட்டது. இந்தியாவில் 1 பில்லியன் பயன்பாட்டிற்கும், மூலிகைக் கச்சாப் பொருள்கள் 80 மில்லியனுக்கும் ஏற்றுமதியாகிறது. இதன்மூலம் நாம் அறிவது 20, 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை மாறி இம்மருத்துவம் அதிக அளவில் விற்பனையில், பயன்பாட்டில் மிகுதியாகி வருகிறது என்பதும், இதன் பயனை மக்கள் உணர்ந்து வருகிறார்கள் என்பதும் மகிழ்ச்சிகரமான செய்தியாகும்.
மனிதர்களுக்குப் பயன்படுத்த 1997இல் புதிதாக அனுமதி பெற்ற 520 மருந்துகளில் 39 விழுக்காடு இயற்கையில் கிடைக்கும் பொருள்கள் ஆகும். இவைகளில் 60 – 80 விழுக்காடு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளும் புற்றிற்கான மருந்துகளும் ஆகும்.
பெனிசிலின், பூஞ்சனத்திலிருந்தே பெறப்பட்டு பாதரசத்திற்குப் பதில் கிரந்திக்கு மருந்தானது. இதேபோல் ஊமத்தை (பெல்லடோனா) இன்று வரை கண் மருத்துவத்திற்கும் மற்றும் இரைப்பை, குடல் நோய்க்கு நுண்ணுயிர்க் கொல்லியாகவும் பயன்படுகிறது. ராவல்பிய சர்பண்டினா என்ற (நாகதாளி வேரில்) ரிசர்பின் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மன நோய்க்கும், இரத்தக் கொதிப்பிற்கும் மருந்தாகப் பயன்பட்டது. இதுவே தூக்க மருந்தாக இந்தியாவில் பலநூறு ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இன்றைய நிலையில் பல தாவரப் பொருள்கள் இதய நோய், இரத்தக் கொதிப்பு, மனச்சோர்வு, வலி, புற்று, ஈளை நோய், கல்லீரல் நோய் மற்றும் நரம்பு சார்ந்த நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1994 வரை 119 மூலிகையின் உட்பொருள்கள் உலக அளவில் மருத்துவப் பயன்பாட்டில் உள்ளன.
அமெரிக்காவில் பெரும்பான்மையாக விற்கப்படும் மருந்துகள் இயற்கையான பொருள்களிலிருந்தோ அல்லது அதை ஒத்ததாக உள்ள பொருள்களினாலோ தயாரிக்கப்படுகிறது. மேலும், இயற்கைப் பொருள்களில் உள்ள ஆர்வம் மிகுந்து அண்மைக்காலங்களில் கடல்வாழ் உயிரினங்களிடமிருந்தும், செடிகளிலிருந்தும், புதிய வகை மருந்துகள் கண்டுபிடிப்புகள் மிகுதியாகி உள்ளது. கணினியால் தானே இயங்கும் மனித இயந்திர உதவியுடன் மிகச்சிறிய அளவில் கிடைக்கப்பெறும் மூலிகையில் உள்ள மருத்துவப் பொருள்களை எளிதில் ஆய்வு செய்யப்படுவது இதற்கு மிகுந்த உதவியாக உள்ளது. இதற்குமுன் இதுபோன்ற சோதனை சோதனைச்சாலைகளில் பல மாதங்களில் நடைபெற்றன. மேலும், மிகச்சிறந்த மருத்துவப் பொருள்களைப் புது மூலிகையிலிருந்து கண்டுபிடிப்பது எளிதானதல்ல. தமிழ்நாட்டில் பாரம்பரியமாக நாட்டு மருத்துவர்கள், சித்த, யுனானி, ஆயுர்வேத மூலிகைகளின் பலனை அறிந்துள்ளனர். இதற்கான நூல்கள் நம்மிடம் வேண்டுமளவு உள்ளன. ஆனால், இவைகளும் மறைபொருளாகவே தமிழில் செய்யுள் வடிவில் உள்ளது. ஆகவே, பயன்படாத மூலிகைகள் பல காடு, மலைகளில் அழிந்து வருகின்றன. மேலும், 12.5% மருந்து மூலிகைகள் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளன.
இந்தியாவில் சற்றேறக்குறைய 45,000 வகை செடிகள் உள்ளன. அவற்றில் 1,500 வகை மருத்துவ குணம் உள்ளது என்று மருத்துவ ஆய்வு நூல்கள் கருதுகின்றன. இதில் 800 வகை நாட்டு மருத்துவத்தில் பயன்பாட்டில் உள்ளது. ஆனாலும், இந்தியாவில் முக்கியமாக தமிழ்நாடு உலக அளவில் மூலிகையைப் பற்றி அதிகமாக அதன் பயன்பாட்டை அறிந்திருந்தாலும் மூலிகை மருந்து விற்பனையில், பயன்பாட்டில் பின்தங்கி உள்ளது.
நம் நாட்டில் மூலிகை மருந்து பயன்பாட்டிற்கு அல்லது வளர்ச்சியடையாத நிலைக்கு பல காரணங்கள் உண்டு. இந்தியாவில் உள்ள பரிசோதனைக்கூடங்களிடையேயும் மருத்துவர்களிடையேயும் சரியான ஒத்துழைப்பு இல்லை. மேலும், பொதுத்துறை நிறுவனம் கொடுக்கும் உதவியைச் சரிவரப் பெற மருந்து தயாரிப்பாளர்களுக்குச் சரியான வழிவகைகள் தெரிவதில்லை. ஆராய்ச்சி மற்றும் மருத்துவ வளர்ச்சிக்கான (R & D) நிறுவனங்களுக்கும் மூலிகை மருத்துவர்களுக்குமிடையே உள்ள செயலும் எதிர்செயலும் சிறப்பாக இல்லை அல்லது ஒத்துழையாமையும் ஒரு முக்கியக் காரணமாகும். ஆட்சியாளர்களும் மூலிகை மருத்துவத்தைப் பற்றி அவ்வப்போது பேசினாலும் அங்கங்கே சிதறிக் கிடக்கும் மருத்துவர்களை ஒன்றுபடுத்தி மூலிகை மருத்துவத்தை மேம்படுத்த முயற்சிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்பதும் மறைக்க முடியாத உண்மை.
மூலிகை மருத்துவம் தினசரி பயன்பாட்டிற்கு வர எந்தெந்தத் தடைகளைத் தகர்க்க வேண்டும்
மூலிகை மருத்துவத்தின் பலன் மற்றும் தரத்தை நிலைநாட்ட பல தடைகளைக் கடந்தாக வேண்டியவர்களாக உள்ளோம். தற்கால மூலிகை மருத்துவர்கள் தாவர அறிவியல் மருத்துவம் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.
சில பழைமைவாதிகளான மருத்துவர்களுக்கு அதன் சாற்றில் உள்ள தன்மையை நாம் விளக்க வேண்டி அதன் தரத்தில் நம்பிக்கை வைக்க நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். இத்துடன் சில மருத்துவர்கள் மூலிகையைச் சாறு பிழியாது அப்படியே கொடுப்பதுதான் மிகச் சிறந்தது. அதனைச் சாறாக்கிக் கொடுக்கும்போது அதில் பலன் போய்விடுவதாகவும் நினைக்கிறார்கள். சில நாட்டு மருத்துவர்கள் குறுக்கு வழியில் அதிலுள்ள பொருளை அறிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். அப்படித் தெரிந்தாலும் இவர்கள் அதிலுள்ள பொருள்களை மற்றவர்கட்கு வெளிப்படுத்துவதில்லை. இது தேவை எப்படியெனில் பழங்குடி மக்கள், மற்றும் நாட்டுப்புற மருத்துவர்களின் மருத்துவ முறைகளின் ரகசிய உண்மைகளை எளிதில் அறிந்து, அல்லது திருடி உள்நாடு மற்றும் வெளிநாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஏமாற்றிவிடக்கூடும். ஆகவே, இம்மருந்துகளைச் சராசரிப் பயன்பாட்டிற்குப் பெரிய அளவில் கொண்டு வருவது என்பது ஒரு சவால் ஆகும்.
தற்பொழுது, நூல்கள், ஆண்டறிக்கைகள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி குறிப்பாக வலைத்தளங்களில் தவறான முறையற்ற மூலிகை மருத்துவ விளம்பரங்களினால் குணமடையக்கூடும் என்ற நம்பிக்கை ஒன்றை மூலதனமாக வைத்து, ஆனால் உண்மையில்லாது, தவறான செய்திகளைப் பரப்புகின்றனர், விற்பனை செய்கின்றனர். இதில் புட்டிகளின் அட்டைகளில் பல மருந்துகளில் உள்ள பொருள்களும், எப்படிப் பயன்படுத்துவது என்று கூறியிருந்தாலும் சில மருந்துகளிலேயே அதன் தீங்கற்ற தன்மை அல்லது தரம் கூறப்படுகிறது. எ.கா.: எட்டிரின் போன்ற மருந்துகளுக்கு அதன் நச்சுத் தன்மைகளை அறிந்திருந்தாலும் அவைகூட மருந்து விளம்பரங்களில் ஒரு எச்சரிக்கையாகச்கூடச் சொல்வதில்லை.
மற்றொரு பிரச்சினை, ஒரு மூலிகையின் மருந்து இந்த அளவு கொடுத்தால் நல்ல குணப்பாடு கிடைக்கும் என்று மருத்துவ சஞ்சிகைகளில் தெரிவிக்கப்பட்டாலும் அவை இவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை அல்லது அம்முறையைப் பின்பற்றுவதில்லை. இதற்கு மாறாக, சில தவறான, மறுமுறை திரும்பப் பயன்படுத்த முடியாத முடிவுகள் மருந்து சஞ்சிகைகளில் வரும்பொழுது மருத்துவர்களும் அதை நம்பி கலப்படம், மற்றும் சரியாக மூலிகையைக் கண்டறியாதபொழுது கலப்படமான அதனைப் பயன்படுத்தவும் தள்ளப்படுகின்றனர். மற்றும் அவர்கள் சரியான மூலிகையின் அறிவியல் பெயரையும், நோயாளிக்குக் கொடுக்க வேண்டிய சரியான அளவையும் அறிந்திருப்பதில்லை. உலகில் வளரும் நாடுகளில் மூலிகை மருத்துவப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது பொதுமக்களின் விருப்பத்தினாலும் மற்றும் அம்மூலிகைகளின் அறிவியல் செய்திகளைஅறிந்து கொள்வதினாலும் ஆகும். நல்ல மருத்துவர் இனி நோயைக் குணமாக்க மூலிகை மருத்துவத்தை ஒதுக்க முடியாது. ஆகவே, மருத்துவர் இதைப் பற்றிய தேவையான செய்திகளை அறிந்துகொண்டு வரும் நோயாளிகளிடம் மனம் திறந்து பேச வேண்டும்.
அதேபோல் நோயாளிகளும் தாங்கள் சாப்பிட்ட நல்ல மூலிகை மருந்துகளைக் குறித்து மருத்துவரிடமும் கூற, மருத்துவர்கள் அதுபோன்ற நோய்களைத் தீர்க்க அவ்வகை மூலிகை மருத்துவரை நாடிச்செல்ல வழி அமையும். இந்நிலையில் மருத்துவர் நோயாளியின் முழு வரலாறு, உண்ட மருந்தின் பெயர், அளவு ஆகியவற்றை நவீன மருந்துகளுடன் இணைத்து ஆய்வுக்குட்படுத்த முயலலாம். நாள்பட்ட நோய்கள், எ.கா.: எய்ட்ஸ், மற்றும் புற்று போன்ற நோய்களுக்குக் கொடுக்கப்படும் மூலிகை மருந்தினால் சில பக்க விளைவுகள் வரலாம். இதையும் நாம் நோயாளியிடம் எடுத்துக்கூறி அதற்கான சரியான மருத்துவமும் அந்நிலையில் மேற்கொள்ளலாம். கடைசியாக, மருத்துவர் எந்த மருந்துகளைக் கொடுத்தாலும் அவைகளைக் கண்காணித்து அவை பயன்படுகிறதா அல்லது தீங்கிழைக்கிறதா என ஆய்ந்து சரியான முடிவுக்கு வந்த பிறகே மருந்தின் குணப்பாட்டைச் சீர்தூக்க வேண்டும். இப்படிச் செய்தால் மூலிகை மருந்தும் மிகச் சிறந்த முறையாக வருங்காலத்தில் வெற்றிபெற முடியும் என்பது திண்ணம்.