ஆண்டு 1982இல் இராசபாளையத்தை அடுத்த மம்சாபுரத்திலும், 1985 ஏப்ரலில் சென்னை ராயபுரம் மற்றும் வட சென்னையிலும், 1987 ஆகஸ்டில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டியிலும், தமிழர் தலைவர் வீரமணி அவர்களின்மீது கொடிய தாக்குதல் நடத்தக் காரணம், பெரியாரின் அடிப்படை இலக்கையும், கொள்கையையும் தொடர்ந்து தீவிரமாக அவர் முன்னெடுத்துச் செல்வதை, வேதிய மனுதரு அடிமைகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான்.
பெரியாரிய அடிப்படைக் கோட்பாடுகளை நிலைப்படுத்திப் பரப்புவதோடு அல்லாமல், அவற்றின் செயல்பாட்டிற்குப் போடப்படும் ஒவ்வொரு முட்டுக்கட்டையையும் கூர்ந்து கண்காணித்து முறியடிப்பதும் அவருடைய பெருமைக்குக் காரணம் ஆகும். ஓர் எடுத்துக்காட்டிற்கு வகுப்புரிமைத் திட்டத்தின் செயல்பாட்டைக் கூறலாம். இவர் பொறுப்பிற்கு வந்தபொழுது, இட ஒதுக்கீடு பெறுவோருக்கு வருமான வரம்பு ஆணை பிறந்தது; திறந்த போட்டி (OC-Open Competition) என்பதற்குப் பிற சமுதாயத்தினர் (Other Communities) என விளக்கம் தரப்பட்டது; மண்டல் ஆணையப் பரிந்துரையை நாடாளுமன்றத்தில் வைக்கக்கூட அரசு தயங்கியது; அதைக் கிடப்பில் போட்டது (1980-90); அது நடப்பிற்கு வந்தபொழுது, உச்சநீதிமன்றத் தீர்ப்பால், தமிழ்நாட்டில் 69 விழுக்காடு ஒதுக்கீட்டிற்கு ஆபத்து நிகழ்ந்தது; இவற்றை எல்லாம் அரசமைப்புக்கு உட்பட்ட எல்லா வகையான முறைகளையும் பின்பற்றிப் படிப்படியாக முறியடித்து வெற்றி கண்டதுடன், தொடர்ந்து மேல்நிலை நீதிமன்றங்கள், மத்திய அரசு உயர்கல்விக் கூடங்கள், தனியார் தொழில்நிறுவனங்கள் ஆகியவற்றில் வகுப்புரிமை பெறத் திட்டமிட்டுப் பலருடைய ஒத்துழைப்பைப் பெற்றுத் தொய்வின்றி முயன்று பணியாற்றுகிறார்.
இவ்வகை வினையாற்றலே, பெரியாரின் ஒப்பரிய வாரிசாக இவர் திகழ்வதற்குக் காரணமாகும்.
பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் (தமிழர் தலைவர் ஆசிரியர் பவளவிழா மலர்)
Leave a Reply