சிறுகதை

டிசம்பர் 1-15 2018

இரட்டை

ஆறு. கலைச்செல்வன்

“உள்ளே போகலாமா, வேண்டாமா?’’ என்று சிந்தனை செய்துகொண்டே உடற்பயிற்சிக் கூடமான “பஸ்ட் கிளாஸ் ஜிம்’’ என்று பெயர்ப் பலகைத் தாங்கிய கட்டிடத்திற்கு முன் நின்று கொண்டிருந்தார் ஓய்வு பெற்ற ஆசிரியர் செழியன்.

செழியனுக்கு அறுபத்தைந்து வயதாகி விட்டது. ஓய்வு பெற்று ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவருக்கு ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் -ஏற்பட்டது. இதுவரையிலும் அவர் ஜிம்முக்கு சென்று பயிற்சி பெற்றதில்லை. அங்குள்ள கருவிகள் பற்றியும் அவருக்குத் தெரியாது. அதில் அவருக்கு ஈடுபாடும் இல்லை. கருவிகள் ஏதும் இல்லாமல் உடற்பயிற்சி மேற்கொள்வதையே அவர் எப்போதும் விரும்புவார். ஆனால், தற்போது அவர் அவைகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என விரும்பினார். இருப்பினும் வயதான பின் ஜிம்மில் சேர சற்ற சங்கடமாக இருந்தது. இந்நிலையில் அவர் தனது நினைவலைகளை பல ஆண்டுகள் பின்னோக்கிச் செலுத்தினார்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் அவர் முதன்முதலாக ஆசிரியர் பணியில் சேர்ந்தபோது அவர் மாணவர்களுக்கு பாட அறிவோடு பகுத்தறிவையும் சேர்த்தே ஊட்டினார். உடல்நலம் பேணுவதும் பகுத்தறிவே என்பது செழியனின் எண்ணம். குறிப்பாக பகுத்தறிவு-வாதிகள் உடல்நலம் பேணுவதைக் கடமையாகக் கொண்டு பிறரையும் அதில் ஈடுபட வைத்து நீண்ட காலம் உயிர் வாழ்ந்து பகுத்தறிவை வளர்க்க விரும்பிய அவர் அதை செயலிலும் செய்து காட்டினார். அதற்கு அவர் தேர்ந்-தெடுத்தது தற்காப்புக் கலையான கராத்தே கலை.

அப்போது ‘புருஸ்லீ’ நடித்த திரைப்படங்கள் வெளிவந்த நேரம். கராத்தே பள்ளிகள் ஆங்காங்கே முளைத்துக் கொண்டிருந்தன. அதில் சிறந்த பள்ளியைத் தேர்ந்தெடுத்து செழியன் சேர்ந்தார். இளைஞர்கள் பலரும் ஆர்வமுடன் பயிற்சிகளை மேற்கொண்டனர். பல வகையான  தொழில்நுட்பப் பிரிவுகள் தோன்றி ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு கராத்தே கலையை வளர்த்தன. ஏழை எளிய இளைஞர்களுக்கு இப்பயிற்சி குறைவான செலவில் மிக்க பயனுள்ளதாக அமைந்தது. இப்பயிற்சியினை மேற்கொண்ட இளைஞர்கள் தங்கள் உடல்நலனில் அதிக ஆர்வம் காட்டியதால் தீய பழக்க வழக்கங்கள் அவர்களை அண்டாமல் இருந்தது. செழியன் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் கடுமையாக கராத்தே பயிற்சியினை மேற்கொண்டார்.

அய்ந்து ஆண்டுகளில் அவர் கராத்தே கலையில் கருப்புப் பட்டை பெற்றார். மாணவர்களுக்கு இலவசமாகவே கராத்தே கற்றுக் கொடுக்கும் பணியினை மேற்-கொண்டார்.

நகரின் மய்யத்தில் அவர் பயிற்சி பெற்ற கராத்தே பள்ளி இருந்தது. முக்கிய நபர் ஒருவரின் தோட்டத்தில் நடைபெற்ற அந்த இடம் ஆண், பெண் இருபாலரும் வந்து பயிற்சி பெறுவதற்கு ஏற்ற இடமாக இருந்தது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அதில் பயிற்சி பெற்றனர். ஆனாலும், சில ஆண்டுகளில் இளைஞர்களின் வருகை அறவே நின்று போனது. பள்ளி செல்லும் சிறுவர் சிறுமிகள் மட்டுமே கராத்தே பள்ளியில் சேர ஆர்வம் காட்டினர். அதிலும் பலர் இடையில் நின்றுவிட்டனர். காரணம் கேட்டபோது படிப்பு, டியூஷன் போன்றவை கெடுவதாகக் காரணம் சொன்னார்கள்.

தற்காப்புக் கலையைக் கற்றுக் கொள்வதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டாதது செழியனுக்கு மிகவும் வருத்தமாகப் போய் விட்டது. ஆனால், அதேநேரத்தில் மேட்டுக்குடி மக்களின் விளையாட்£ன கிரிக்கெட் அமோகமான வளர்ச்சியில் இருந்தது. நகரங்களில் மட்டுமல்லாது குக்கிராமங்களிலும் இளைஞர்கள் கடும் வெயிலையும் பொருட்-படுத்தாது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். கிரிக்கெட் போட்டிகளின் போது டிக்கெட் விற்பனை அமோகமாக இருந்தது.

கோடிக்கணக்கில் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் பணம் பெற்றனர். பல ஊழல் புகார்கள் எழுந்தாலும் மக்கள் அவைகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஆண்களும் பெண்களும முண்டியடித்துக்கொண்டு கிரிக்கெட் போட்டிகளைக் காண ஆர்வம் காட்டினர். இதெல்லாம் செழியனுக்கு மிகுந்த மனக் கவலையை அளித்தது.

இந்நிலையில் கராத்தே பள்ளி நடைபெற்ற இடத்தில் அதன் உரிமையாளர் வீடுகட்ட எண்ணினார். இதனால் கராத்தே பள்ளியை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. மாணவர்கள் எண்ணிக்கையும் மிகவும் குறைந்துவிட்டது. பயிற்சி நடத்த வேறு நல்ல இடமும் கிடைக்கவில்லை.

ஆண்டுகள் சில கடந்தன. செழியன் பணியில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார். அவரிடம் பயிற்சி பெற்ற கராத்தே மாணவர்கள் எப்போதாவது அவரைச் சந்திக்க வரும்போது மட்டும் பயிற்சிகள் மேற்கொண்டார். சில நாட்களில் அதுவும் நின்றுபோனது. அவரைத் தேடி யாருமே வரவில்லை. ஆனால், அதே நேரத்தில் அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் சிலர் வெவ்வேறு இடங்களில் கராத்தே பள்ளி நடத்தி வந்தார்கள். இருப்பினும் அவர்களிடமும் இளைஞர்கள் பயிற்சி பெற ஆர்வம் காட்டவில்லை எனத் தெரியவந்தது. பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் மட்டுமே பயிற்சி பெற்றனர். அதுவும் பெற்றோர்களின் விருப்பத்தால் மட்டுமே.

செய்தித்தாள்களில் போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பது பற்றிய செய்திகளை யெல்லாம் படித்தபோது கராத்தே பயிற்சி குறைவதற்கு அதுவே முக்கிய காரணமாக இருக்கலாமென செழியன் நினைத்தார். இந்தப் போதையோடு கிரிக்கெட் போதையும் சேர்ந்துகொண்டு இளைஞர்களை வீணடிப்பது குறித்து மிகவும் கவலை கொண்டார்.

கிராமங்களிலும் கிரிக்கெட் போதை தலைக்கேறிவிட்டது. சில கிராமங்களில் மின்சாரம் தடைப்பட்டாலும்கூட உழவு இயந்திரத்தை இயக்கி அதன்மூலம் மின்சாரம் பெற்று தொலைக்காட்சிப் பெட்டிகளை இயக்கி கிரிக்கெட் போட்டிகளைக் காண சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டினர். இதெல்லாம் செழியனுக்கு வெறுப்பை உண்டாக்கின. பக்தி, மதம், மது இவைகளின் வரிசையில் கிரிக்கெட்டையும் வைத்துப் பார்த்தார் செழியன்.

ஒருமுறை வெளிநாடு ஒன்றிற்கு சுற்றுலா சென்றார் செழியன். அங்கு அவர் கண்ட காட்சிகள் அவரை மிகவும் பாதித்தது. மாலை வேளைகளில் பல இடங்களில் தற்காப்புக் கலைப் பயிற்சிகள் நடப்பதைப் பார்த்தார். அதிலும் கற்றுக் கொடுக்கும் பயிற்சியாளர்கள் பலர் மிகவும் வயதானவர்களாக இருப்பதைக் கண்டு வியந்தார். நம் நாட்டில் தோன்றிய புத்தர் கொள்கைகள் வெளிநாடுகளில் வேரூன்றி யுள்ளதோ அதுபோல் நம் நாட்டில் தோன்றிய தற்காப்புக் கலைகள் வெளிநாடுகளில் சிறப்பாகப் பரவியிருப்பதைக் கண்கூடாகக் கண்டார். அதனால்தான் இந்த நாடு எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது என எண்ணிய அவர் அங்கு பெண்களும் ஆண்களுக்கு நிகரான உடையணிந்து அலங்கார நகைகள் ஏதுமின்றி எல்லா நிறுவனங்களிலும் பணி செய்து கொண்டிருப்பதையும் பார்த்தார். இரவு நேரங்களில் பெண்கள் தனியாகவே சாலைகளில் பயமின்றி நடந்து சென்று கொண்டிருந்தனர்.

“உடல் முழுவதும் தங்க நகைகள் அணிந்து இரவில் தன்னந்தனியாக ஒரு பெண் எப்போது தெருவில் நடந்து செல்கிறாளோ அந்த நாளே உண்மையான விடுதலை நாள்’’ என்ற காந்தியின் கருத்தையும், “பெண்கள் ஆண்களுக்கு அடிமை அல்ல’’ என்ற காந்தியின் கருத்தையும், பெண்கள் ஆண்களுக்கு அடிமை அல்ல என்ற தந்தை பெரியாரின் கருத்தையும் நினைத்துப் பார்த்தார் செழியன்.

அந்நாட்டில் ஒரு நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு சன்னலைத் திறந்து வெளியே பார்த்தார் செழியன். அங்கு நான்கு சாலைகள் சந்திக்கும் குறுக்குச் சாலை இருந்தது. போக்குவரத்து சுத்தமாக இல்லை. அப்போது ஒரு கார் ஒரு பக்கமாக வந்தது. எதிரில் சிவப்பு விளக்கு எரிந்ததால் கார் நின்றுவிட்டது. அதன் ஓட்டுநர் நினைத்திருந்தால் சென்றிருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல் பச்சை விளக்கு எரிந்த பின்பே சென்றார். சட்டம் அந்நாட்டில் எந்த அளவுக்கு மதிக்கப்படுகிறது என்பதை அறிந்தார் செழியன். நாமும் நாடு திரும்பிய பின் தற்காப்புக் கலையை மீண்டும் எப்படியாவது யாருக்காவது கற்றுத்தர வேண்டும், சட்டம் ஒழுங்கை இதுபோல் விளங்கச் செய்ய வேண்டும், உடல்நலம் காப்பதில் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என விரும்பினார். ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்குமா என அய்யத்துடனே “பஸ்ட் கிளாஸ் ஜிம்’’ கட்டிடத்தை ஏறிட்டு நோக்கி மீண்டும் பழைய நிலைக்கு வந்தார்.

படியேறி உள்ளே சென்றார். அங்கிருந்த பயிற்சியாளரை அணுகினார். “பயிற்சியில் சேரவேண்டும்’’ என்றார் செழியன். அந்தப் பயிற்சியாளர் இவரை அதிகம் சட்டை செய்யாமல் கிடுகிடுவென பேசினார்.

“மாதம் ஆயிரம் ரூபாய் பீஸ். மாதம் ஒண்ணாம் தேதி பீஸ் கட்டிவிடணும். ஒரு மணி நேரம் பிராக்டீஸ் செய்யலாம். த்ரெட் மில் யூஸ் பண்ணினா கூடுதலா அய்நூறு ரூபா கட்டணும்’’ என்றார். இவரின் அணுகுமுறையே சரியில்லையே என்ற எண்ணத்துடன், “சரி’’ என்றார் செழியன்.

“அட்வான்ஸ் இப்பவே ஆயிரம் ரூபா கட்டணும்’’ என்றார் பயிற்சியாளர்.

பேசாமல் பணத்தை எடுத்துக் கொடுத்தார் செழியன்.

“காலையா, மாலையா?’’ என்றார் பயிற்சியாளர்.

“காலை பயிற்சியில்’’ என்றார் செழியன்.

“சரி, பேரன் எங்கே?’’ என்றார் பயிற்சியாளர். அதிர்ந்து போனார் செழியன். “நான் யாரென்பது இவருக்குத் தெரியவில்லை. பார்த்துக் கொள்கிறேன்’’ என்று மனதுக்குள் நினைத்துக்-கொண்ட செழியன்.

“நான்தான் பயிற்சியில் சேரப் போகிறேன்’’ என்று பயிற்சியாளரிடம் சொன்னார்.

பயிற்சியாளர் இவரை அப்போதுதான் முழுமையாகப் பார்த்தார். ஏதும பேசாமல் உள்ளே அழைத்துச் சென்றார்.

கருவிகளைக் கண்டு அதன் செயல்பாடுகளை அறிந்து பயிற்சிகளை மேற்கொண்டார். அனைத்துப் பயிற்சிகளையும் எளிதாகச் செய்து அனைவரையும் வியக்க வைத்தார்.

ஓரிரு மாதங்கள் சென்றன. ஒரு நாள் செழியன் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது பயிற்சிக் கூடம் பரபரப்பாகியது.

“எஸ்.பி வருகிறார், எஸ்.பி வருகிறார்’’ என்று அனைவரும் பரபரப்பாக பேசிக் கொண்டனர். அவரை வரவேற்கவும், பார்க்கவும் அனைவரும் பயிற்சியைப் பாதியிலேயே விட்டுவிட்டு வாசலை நோக்கி ஓடினர். ஆனால், செழியன் மட்டும் எவ்வித பரபரப்புமின்றி அமைதியாக பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

“எல்லோரும் பயிற்சியை நிறுத்திவிட்டு, காவல்துறை கண்காணிப்பாளரைக் காணவரும்-போது இவர் மட்டும் எதையும் கண்டு-கொள்ளாமல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாரே’’ என மிகவும் கோபப்-பட்டார் பயிற்சியாளர். எஸ்.பி.யின் திடீர் வருகை அவருக்கும் வியப்பாக இருந்தது. மேலும் எஸ்.பி ஏதேனும் கோபப்படுவாரோ எனவும் பயந்தார்.

அப்போது எஸ்.பி நேராக செழியனை நோக்கி நடந்தார்.

செழியன் பயிற்சி பெறுவதையே உற்றுப் பார்த்தார். அப்போதுதான் செழியனும் அவரை நோக்கினார்.

திடீரென்று யாரும் எதிர்பாராதவண்ணம் மிகவும் குனிந்து செழியனுக்கு வணக்கம் தெரிவித்தார் எ-ஸ்.பி. அழகுராஜ்.

செழியன் அவரை உற்றுப் பார்த்தார்.

“நீ… நீ… நீங்க… ?’’ என்று மகிழ்வுடன் கேட்டார் செழியன்.

“ஆமாம் அய்யா. உங்கள் மாணவன் அழகுராஜ்தான். எனக்கு பாடமும் பகுத்தறிவும் ஊட்டியது நீங்கள்தான் அய்யா.

அதோடு எனக்கு மிகச் சிறப்பாக கராத்தே பயிற்சியும் கொடுத்தீங்க. உடலைப் பாதுகாப்பதும் பகுத்தறிவேன்னு அடிக்கடி சொல்வீங்க. அதுதான் அய்யா என்னை எஸ்.பி. பதவிக்கு உயர்த்தியிருக்கு’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் அழகுராஜ்.

இவர்கள் உரையாடலைக் கேட்ட அனைவரும் வியப்படைந்தனர். செழியனை மிகவும் மரியாதையுடன் பார்த்தனர்.

“அய்யா, நான் இந்த ஜிம்மைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில்தான் திடீரென வந்தேன். இங்கு உங்களைச் சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை. உங்ககிட்ட நான் ஒரு கோரிக்கை வைக்கலாமா?’’ என்றார் எஸ்.பி.

“சொல்லப்பா’’ என்றார் செழியன்.

“காவல்துறையில் புதியதாக சேர்ந்த இருநூறு காவலர்களுக்கு கராத்தே பயிற்சி அளிக்க வேண்டும். அதை நீங்கள் அளித்தால்தான் நன்றாக இருக்கும் அய்யா. நீங்கள் மறுக்காமல் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன் அய்யா’’ என்றார் எஸ்.பி.

செழியன் மிகவும் மகிழ்ந்தார். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் காவலர்களுக்கு பயிற்சி அளிக்க வாய்ப்பு கிடைத்ததை மிகவும் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்.

அறிவும், ஆற்றலும் இணைந்தே இருக்க வேண்டிய இரட்டை. அறிவு பயன்தர ஆற்றல் உள்ள உடல் அவசியம்!

“பகுத்தறிவு நெறி பரப்ப உடல்நலமும் முக்கியம். சட்டம் ஒழுங்கையும் காக்க அதுவே சிறந்த வழி’’ என அவர் வாய் முணுமுணுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *