மேகத்துக்கு ஆணையிட்டால் மழை பொழியுமா?
சிகரம்
நாரத முனிவர் மூலம் நடந்ததை அறிந்த கந்தவேள், வேலாயுதத்தை எடுத்து மோகனாஸ்திரத்தின் சக்தியை ஒழித்து அனைவரையும் எழுப்பி அழைத்து வருமாறு ஆணையிட, அதன்படி வீரபாகுவும், மற்ற படை வீரர்களும் விழித்து எழுந்தாற்போல் எழுந்து பானுகோபன் நகரத்தை அழிக்கப் புறப்பட்டனர்.
பூதப்படையினரைக் கண்ட கோட்டைக் காவலன் வியாக்கிரமுகன் அவர்களைத் தாக்குமாறு தனது படைகளை ஏவினான். போர் கடுமையாக நடந்திட வியாக்கிரமுகன் சூலாயுதத்தைப் பிரயோகிக்க அதனைப் பற்றி வியாக்கிரமுகனைக் கொன்றான் சிம்மன்.
பட்டணம் முழுவதும் தீப்பற்றி எறிந்திட, பூதப்படைகள் உயிர் பெற்ற வந்ததை அறிந்த சூரபதுமன் தீயை அணைக்குமாறு மேகங்களுக்கு ஆணையிட்டான். பெருமழை பொழியத் தொடங்கியது.
அதுகண்டு திகைப்புற்ற வீரபாகுவிடம் நாரதன் வடவாக்கினி அஸ்திரத்தை பிரயோகிக்குமாறு கூற, மேகங்கள் வலிவு இழந்து முருகப் பெருமானிடம் சென்ற வணங்கி மறுபடியும் வலிமை பெற்றுக் கடலில் கலந்தன.
விவரங்களை அறிந்த சூரபதுமன் போருக்குத் தயாரானான். அவ்வமயம் அவனது மற்றொரு மகன் _ பாதாள லோகத்தை பாதுகாப்பவன் இரண்யன் வந்து “சூரனிடம் வந்திருப்பது பரமேசுவரனின் திருக்குமரன் முருகன். முருகனை எதிர்ப்பது ஈசனை எதிர்ப்பதாகும். எனவே, தேவர்களை விடுவித்து முருகனை வணங்கினால் நலமுண்டாகும்’’ என்று கூறினான்.
அதைக் கேட்ட சூரபதுமன், மகன் இரணியனைக் கோபிக்க அவன் அரக்கர் குலத்துக்கு அழிவு காலம் நெருங்கிவிட்டது என்றறிந்து போரில் உயிர் நீத்தலே சிறந்தது என்று முடிவு செய்து தந்தையிடம் ஆசி பெற்று முருகனை எதிர்த்துப் போரிடச் சென்றான்.
தும்பை மாலை அணிந்த சிம்மனுக்கும் வீரபாகுவுக்கும் கடும் போர் நடந்தது. போரில் பூத வீரன் நீலன், இரண்யனின் தேரைத் தூக்கி வானத்தில் எறிய இரணியன் கீழே விழுந்து மூர்ச்சையுற்றான். மூர்ச்சை தெளிந்ததும் அவன் நீலன் மீது அக்கினி அஸ்திரம் ஏவ நீலன் மயக்கமடைந்தான்.
அது கண்டு வெகுண்ட வீரபாகு இரணியனை நிராயுதபாணியாக்கிட, தந்தையின் மரணம் உறுதி என்று அறிந்த இரண்யன் அங்கிருந்து மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று தங்கினான். மனிதன் மீனாக மாற முடியுமா? மேகம் மனிதன் ஆணையை ஏற்று மழை பொழியும் என்பதும், மனிதன் மீனாக மாறினான் என்பதும் அறிவியலுக்கு முரணான கருத்துகள். அப்படியிருக்க இப்படிப்பட்டக் கருத்துகளைக் கூறும் இந்துமதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?
வெட்ட வெட்ட தலை முளைக்குமா?
மூத்த மகன் பானுகோபனின் மரணம் சூரபதுமனைப் பெரிதும் வாட்டியது. அவன் ஒரு வீரனைப் பார்த்து, சிங்கமுகன் இருப்பிடம் சென்ற பானுகோபன் மறைவு பற்றிக் கூறி உடனே அழைத்து வருமாறு ஆணை பிறப்பித்தான்.
செய்தி கேட்டு சிங்கமுகன் தேரேறி வானவீதியில் பறந்து வந்தான். அவனை நோக்கி, சூரபதுமன் உடனே போர்மேல் சென்று எதிரிகளை அழித்து வருமாறு கட்டளை-யிட்டான்.
ஏழ்கடலும் கரைபுரண்டு வந்ததென ஏராளமான படைகளுடன் சிங்கமுகன் தேர் ஏறி போர்க்களம் வந்தடைந்தான். அவனை முருகனே வதைக்க வேண்டும் என்று பிரம்மன் வேண்டினான். அப்படியே என்று கந்தனும் ரதத்தைத் தயார் செய்யக் கூறினார். அவ்வமயம் அங்கு வீரபாகு வந்து சிங்கமுகனுடன் போரிட அனுமதி வேண்டினான். அனுமதி வழங்கிட வீரபாகு பெரும்படையுடன் போர்க்களம் அடைந்திட போர்க்களம் ரணகளமாகிப் பயங்கரப் போர் நடைபெற்றது. சிங்க முகனுடன் அவனது நூறு பிள்ளைகளும் வீரபாகுவை பல ஆயுதங்களால் தாக்கிட வீரபாகு முருகப் பெருமானைத் தியானித்து ஓர் அஸ்திரம் கொண்டு அந்த நூற்றுவரையும் கொன்றான்.
அவ்வாறு மகன்களைக் கொன்றவன் தூதனாக வந்த வீரபாகுவே என அறிந்த சிங்கமுகன் சிங்கநாதம் செய்து கடும் போர் புரியலானான். இருவருக்கும் கடும் போர் நிகழ்ந்தது.
சிங்கமுகன் மாயாஸ்திரத்தை பிரயோகிக்க அது பூதப்படயினரை மூர்ச்சிக்கச் செய்து, வீரபாகுவையும் சேர்த்து உதயகிரியில் தள்ளிவிட்டது.
உடனே சிங்கமுகன் முருகனைத் தேடி அவன் மாளிகைக்குச் சென்றான். இதற்குள் மாயாஸ்திரத்தின் செயல்பற்றி கந்தனுக்கு விவரம் தெரிய, கந்தப் பெருமான் தேரேறி போர்க்களம் அடைந்தார்.
சிங்கமுகன் பூதப்படையினரை வாரி வாயில் திணித்துக் கொள்வதைக் கண்ட முருகன், முறுவலித்தார்.
அதற்குள் சிங்கமுகன் வீரம் காண சூரபதுமன் ஓர் உயர்ந்த கோபுரத்திலேறி போர்க்களத்தைக் காணத் தொடங்கினான்.
சிங்கமுகனுக்கும், முருகப் பெருமானுக்கும் நேரிடையாகப் போர் நடந்தது. போர் மிகவும் கடுமையாக இருந்தது. போர்க்களம் முழுவதும் அரக்கர்களின் பிணக்குவியல் கண்ட சிங்கமுகன் ஆயிரம் பாணங்களை முருகப் பெருமான் மீது எய்தான். அவற்றை ஒரே பாணத்தால் சிதறடிக்கச் செய்தார் முருகப் பெருமான்.
பின்னர் முருகன் சிங்கமுகனின் கைகள், தலைகளை வெட்ட வெட்ட அவை முளைத்தன.
இறுதியில் முருகப் பெருமான் வஜ்ஜிராயுதத்தை எடுத்து சிங்கமுகன் மீது ஏவ அது அவன் மார்பைப் பிளந்து உயிரையும் குடித்தது.
அடுத்து முருகன் வேலாயுதத்தை அனுப்பி உதயகிரியில் தள்ளப்பட்டவர்களை எழுப்பி அழைத்து வரச்செய்து, தன் பரிவாரங்களை புடைசூழ ஏம கூடம் அடைந்தார் என்கிறது இந்துமதம். மரம்தான் வெட்ட வெட்ட துளிர்க்கும். மனிதன் உறுப்புகள் வெட்ட வெட்ட துளிர்க்காது அல்லது மீண்டும் முளைக்காது. இதுதான் அறிவியல் உண்மை. ஆனால், தலையும் கைகளும் வெட்ட வெட்ட முளைத்தன என்று கூறும் இந்துமதம் அறிவியலுக்கு அடிப்படை என்று கூறுவது போன்ற அபத்தமும், அறியாமையும், அறிவற்ற நிலையும் இருக்க முடியுமா?
(சொடுக்குவோம்…)