– மு.வி.சோமசுந்தரம்
இருட்டறையில் உள்ளதடா உலகம் என்று பாவேந்தர் கூறிச் சென்றார். இருட்டு என்றால் மருட்சி. ஒளியின் பகை. ஆனால், இருட்டில் ஒளியைக் காண விஞ்ஞானிகள் ஆர்வம் மிகுந்தது. இது வினோதமாகத் தோன்றும். வினோதத்தை உலகுக்கு அறிமுகப்படுத்துவதுதானே அறிவியல் வேலை. இத்தாலிய நாட்டு விஞ்ஞானிகள் பூமியின் வயிற்றைக் கிழிப்பது போல், நிலத்தைத் தோண்டி, கப்பியிருக்கும் இருட்டில் மறைந் திருக்கும் ஒளியைக் காண முயற்சித்துள்ளனர். அவர்கள் மேலும் பல கேள்விகளுக்கு விடைகாண முனைந்துள்ளனர். அவர்களின் மூளையைக் குடைந்து கொண்டுள்ள கேள்விகள்: கோழிகள் ஏன் இருட்டுப் பகுதியில் அதிக முட்டைகளிடுகின்றன? ஏன் சேவல்கள், காலைக் கதிரவன் ஒளியைப் பார்க்காமலேயே, இருட்டுக் குகையிலிருந்து கூவுகின்றன? ஏன் பசு, திறந்த வெளியில் கொடுக்கும் பாலைவிட, இருட்டுப் பகுதியில் இருந்தால் அதிக பாலைக் கொடுக்கிறது? ஒரு மனிதன் எவ்வளவு நேரம் இருட்டில் இருந்தால், வண்ணங்களின் வேறுபாட்டை அறியமுடியாமல் போகும்?
அணுகுண்டு வெடிப்பினால் ஏற்படும் கதிர்வீச்சிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, ஒருவர் தரையில் எவ்வளவு ஆழமான குழியில் பதுங்க வேண்டும்? விஞ்ஞானிகள் கோழி, ஆடு, மாடுகளை எடுத்துச் சென்று அவைகளுடன் 30 நாட்கள் தங்கத் திட்டமிட்டுள்ளனர். இருட்டில் உள்ள மர்மத்தை அறிய விஞ்ஞானிகள் எடுக்கும் முயற்சிகளின் மர்மத்தை, கண்டுபிடிப்பை உலகம் அறிய ஆவலுடன் உள்ளது.
வெளிச்சத்தைக் காண முயலும் வேளையில், இருளின் பொருள் என்ன என்று காண வேண்டும் என்று விரும்புகின்றனர். இருட்டுக் குகையில் வாழ்ந்த கற்கால மனிதன் இருட்டிலிருந்து வெளிவந்து, வெளிச்சத்தில் வாழத் துவங்கிய காலம், நாகரிகம் தோன்றிய காலம் ஆகும். இந்த நாகரிக வளர்ச்சி தேய்பிறையாகிவிடும் அச்சம் தோன்றுகிறது. அணுசக்தி ஆயுத வளர்ச்சியால், மனித இனம் அச்சத்தினால், இருள் சூழ்ந்த புதைகுழிகள், குகைகளில் ஒதுங்க வேண்டி யுள்ளது. இது அடுத்த இருண்ட காலத்துக்கு மனித இனம் நகர்ந்து செல்வதாக உள்ளது. இருளில் எப்படி வாழலாம் என்று கற்றுக்கொடுக்க ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள், வர இருக்கும் புதிய இருண்ட காலத்துக்கு நம்மைத் தயார்செய்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
– (நன்றி: தி இந்து, 11.08.2011)