தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்
கழகப் பொதுச் செயலாளராக கி.வீரமணி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்து, தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், தமது தமிழகம் திங்களிதழில் வரவேற்கிறோம் வாழ்த்துகிறோம் என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கம் வருமாறு:
திராவிடர் கழகத்தின் ஆயுட்காலப் பொதுச் செயலாளராக அருமை நண்பர் திரு. கி.வீரமணி அவர்களை, மறைந்த அன்னை மணியம்மையார் அவர்கள் நியமனம் செய்து அந்த நியமனம் திராவிடர் கழகப் பொதுக் குழுவாலும் ஏற்றுக் கொள்ளப்பெற்றமை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். அன்பர் திரு. வீரமணி ஆண்டில் இளையர்; ஆயினும் பல ஆண்டுகள் தந்தை பெரியாரிடத்தும் அன்னை மணியம்மையாரிடத்தும் இருந்து பணி செய்த வகையில் நிறைந்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறார். இயல்பாக அவருக்கிருக்கும் நுண்ணறிவோடு அனுபவமும் இயைந்து பொலிவுறுகிறது. எதிர்காலக் கணிப்பு பற்றிய அறிவுத் திட்பம் அவருக்கு நிறைய உண்டு. அவரோடு கலந்து பேசிய பொழுதெல்லாம் அவர் எண்ணிக் கோடிட்டுக் காட்டிய எதிர்கால நிகழ்வுகள் அப்படியே நடந்தன. பழகுதற்கினிய பண்பாளர்; இனநலம், இனமானம் காப்பதில் உறுதியான பிடிப்புள்ளவர்; சிறந்த பேச்சாளர்; ஆற்றல்மிக்க எழுத்தாளர்; இயக்கத்தின் நோக்கங்களைத் திட்டமிட்டுச் செயற்படுத்தும் திறனுடையவர்; இனிய நண்பர் வீரமணி அவர்களை, திராவிடர் கழகம் பொதுச் செயலாளராகப் பெற்றுள்ள இந்த ஆண்டு தந்தை பெரியார் நூற்றாண்டு. இந்தத் தலைமுறையின் புதிய வரலாறு படைப்பதில் அவர்கள் வெற்றி பெறுமாறு பாராட்டி வாழ்த்துகின்றோம்.
– குன்றக்குடி அடிகளார், தமிழகம் சித்திரை இதழில் (விடுதலை, 21.4.1978)