அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? – சிகரம்

டிசம்பர் 1-15 2018

மனிதனைப் பிளந்தால் மயிலாக, சேவலாக வருவானா?

சிகரம்

“சூரபதுமன் செலுத்திய பாணங்களை எல்லாம் முருகப் பெருமான் செயலிழக்கச் செய்தார். கோபம் கொண்ட சூரபதுமன் சக்கரவாகப் பறவை வடிவில் பூதப் படைகளைத் தாக்கிக் கொன்றான்.

முருகன் ரதத்தை விட்டு இறங்கி மயில் வடிவில் உள்ள இந்திரன் மீது ஏறிக் கொண்டார்.

நான்கு நாட்கள் சூரபதுமனுக்கும், சுப்பிரமணியனுக்கும் இடையே கடும் போர் நடந்தது. சூரபதுமன் எடுத்த பல உருவங்-களையும் முருகன் அழித்துவிட அவன் மாத்திரமே நின்றான்.

முருகன் சூரனிடம் பல வடிவங்கள் எடுத்து அவனைத் தன்  வடிவங்களைப் பார்க்குமாறு தனது விசுவரூபத்தைக் காட்டினார்.

சூரபதுமனின் உள்ளத்தில் ஞானம் உதயமாக முருகப் பெருமானின் விசுவரூபம் கண்டு மகிழ்ந்தான்.

உடனே முருகன் தன்னுடைய ஞானத்தை அகற்றி பழைய வடிவில் தோன்றினார். சூரனும் பழைய நிலையில் கோபம் கொண்டு முருகனை எதிர்த்திட பல வடிவங்கள் எடுத்தான்.

தேவர்களைக் காக்க முருகன் வேல் கொண்டு வீசினார். சூரபதுமன் மாமரமாக நின்று அனைவருக்கும் தொல்லை கொடுக்க முருகன் மாமரத்தை நெருங்கிட அவன் சுய உருவத்துடன், சக்தியுடன் வெளிப்பட்டான்.

அப்போது முருகன் அவன் மீது வேலை எறிய அது அவன் மார்பைப் பிளந்து அவனை இரு கூறாக்கியது. அவ்விரண்டு கூறும் மயிலும், சேவலுமாக மாறி முருகப் பெருமானை எதிர்த்திட சண்முகன் அவற்றைக் கருணையுடன் நோக்கிட அவை அமைதி அடைந்தன.

சேவலைக் கொடியாக இருக்குமாறு பணித்தார். அதுவரையில் சேவலாக இருந்த அக்கினிக்குப் பதில் சேவல் அங்கே அமர்ந்தது.

மயிலாக இந்த இந்திரனை விட்டு இறங்கி முருகன் சூரனின் மயிலான கூறின் மீது ஏறி அமர்ந்து அதனைத் தன் வாகனம் ஆக்கிக் கொண்டார்.

இவ்வாறு சூரபதுமனை வதம் செய்து அழிக்காமல் கருணை காட்டி சேவலைக் கொடியாகவும், மயிலை வாகனமாகவும் கொண்ட சண்முகநாதனின் அருளை எல்லோரும் போற்றி மகிழ்ந்தனர்.’’ என்கிறது  இந்து மதம். ஒரு மனிதனின் மார்பைப் பிளந்தால் அவன் இதயம் வெட்டுப்பட்டு, இரத்தம் முழுக்க வெளியேறி மனிதன் மரணமடைவான். இதுதான் அறிவியல் உண்மை. ஆனால், மார்பைப் பிளந்தும் மனிதன் மயிலாகவும், சேவலாகவும் வந்தான் என்கிறது இந்துமதம். இப்படி அறிவியலுக்குப் புறம்பான கருத்தைச் சொல்லும் மடமைக்கிடங்கான இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

எருமை மாட்டிற்கு

ஆண் பிள்ளை பிறக்குமா?

“நாரதன் மகிஷாசுரன் வசிக்கும் பெருநகர்க்குச் சென்று, அவனைக் கண்டு வைஷ்ணவி தேவியின் அழகைப் பற்றி விவரித்தார். அதுகேட்ட அசுரன் அவளே தனக்கேற்ற மனைவி என்ற அவன் அவளை மணக்க விரும்புவதாகக் வறி சம்மதம் பெற்றுவர, ஒரு தூதுவனை அனுப்பினான். அவனுடன் ஒரு சேனையையும் அனுப்பிவைத்தான். சேனைத் தலைவன் விரூபாஷன். தேவர்களும் வைஷ்ணவி தேவிக்கு உதவியாக வந்தனர். எனினும், அரக்கனே வென்றான்.

அடுத்து, வித்யுத் பிரமா என்னும் தூதுவன் வைஷ்ணவியிடம் சென்று அரக்கனின் எண்ணத்தைக் கூறினார். அத்துடன் மகிஷாசரன் வரலாற்றையும் எடுத்துரைத்தான்.

பயங்கர அசரன் விப்ரசித்தியின் மகள் மஹிஷ்மதி என்ற அழகி. அவள் ஒரு நாள் ஓர் ஆசிரமத்தைக் கண்டாள். அதைத் தான் பெற எண்ணி அதிலுள்ளவரை வெருளச் செய்து அகற்ற எண்ணி பெண் எருமை வடிவில் அதனுள் நுழைய, உண்மையை அறிந்த முனிவர் அவளை நூறாண்டுகாலம் எருமையாக இருக்கச் சபித்தார்.

மஹிஷ்மதி தன் தவறுக்கு மனம் வருந்தி முனிவரிடம் மன்னிப்பு கேட்டுச் சாபத்தை நீக்கி அருள வேண்டினாள். ஆனால், முனிவர் சாபத்தின் கடுமையைக் குறைத்து அவளுக்க ஓர் ஆண் குழந்தை பிறக்கும் வரையில் பெண் எருமையாக இருக்குமாறு செய்தார்.

இந்தப் பெண் எருமை நர்மதைக் கரையில் வாழ்ந்து வந்தது. சில ஆண்டுகள் கழிய அந்நதி நீர் சிந்துத்தீப முனிவரால் சக்தி வாய்ந்ததாயிற்று. இந்தப் பெண் எருமை அந்நதியின் புண்ணிய நீரில் குளித்தது. அதற்கு ஓர் மகன் பிறந்தான். அவனே மகிஷாசுரன். இந்த மகிஷாசுரனே இப்போது வைஷ்ணவி தேவியை அடைய தூது அனுப்பினான்.

ஆனால், வைஷ்ணவி தேவியோ தானோ, மற்றும் தன் தோழியர்களில் எவருமோ, மஹிஷாசரனை மணக்கும் பேச்சக்க இடமே இல்லை என்றாள். இதனால், வைஷ்ணவி தேவியும் அவள் தோழியரும் அரக்கரின் சேனையை எதிர்க்க மாபெரும் போர் நடந்தது. தேவி பத்து காளிகளும், அவற்றில் ஆயுதங்களும் கொண்டு போரிட்டாள்.

மகிஷாசரன் தானே போரில் போர் புரியவர, நெடு நாட்கள் வரை போர் நிகழ இறதியில் மகிஷாசுரன் தோற்று ஓடலாயினான். அத்தேவியும் அவைனத் தொடர்ந்து சென்ற ஷதஸ்கிருங்க மலையில் அவன் தலையை ஈட்டியால் வெட்டினாள்.’’ என்கிறது இந்து மதம்.

எருமை மாடு, எருமைக்கடாவுடன் புணர்ந்தால் எருமைக் கன்று பிறக்கும். இதுதான் அறிவியல் உண்மை.

ஆனால், எருமை மாடு, நதியில் குளித்ததும் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றது என்கிறது இந்துமதம்.

எருமைக்கு மனித ஆண் பிறக்க முடியாது. அதுவும் நதியில் மூழ்கி எழுந்தது. எருமைக்கு ஆண் குழந்தை பிறந்தது என்றால் நதி நீர் எருமையோடு சேர்ந்து ஆண் பிள்ளையைப் பெற்றது என்றாகிறது.

எருமையோடு நதிநீர் சேர்ந்தால் ஆண் குழந்தை பிறக்குமா?

இதைவிட முட்டாள்தனம், மடமை, அறிவற்ற பிதற்றல் வேற இருக்க முடியுமா? இப்படிப்பட்ட மூடமதமான இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

(சொடுக்குவோம்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *