தாழ்த்தபட்டோர் தலைவர்களை தந்தை பெரியார் ஒளித்தாரா?

நவம்பர் 16-30

2. சுவாமி சகஜானந்தா

தாழ்த்தப்பட்டோர் தலைவர்களுள் சாமி சகஜானந்தா மிக முதன்மையானவர். அவரையும், அவரது கருத்துகளையும் தந்தை பெரியார் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பரப்பினார்.
1932இல் காந்தி உண்ணாவிரதம் இருந்த-போது, சிதம்பரத்தில் 18.9.1932 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் சகஜானந்தம் எம்.எல்.சி. பேசிய பேச்சை 25.9.1932 தேதியிட்ட குடிஅரசு முழுமையாக வெளியிட்டுள்ளது.
நாங்கள் தனித் தொகுதியை விட்டுத்தர முடியாது என்று தலைப்பிட்டுள்ளது. தனித் தொகுதியை ஆதரித்து சகஜானந்தர் பேசியதை வெளியிட்ட குடிஅரசு மிக முக்கியமான ஒரு பகுதியை நீக்கம் செய்துவிடாமல் வெளியிட்டுள்ளது. பெரியார் யாருக்ககான பெரியார், பிற்பட்ட ஜாதியினருக்கா, ஆதி திராவிடர்களுக்கா என்பதை சகஜானந்தர் பேச்சை வெளியிட்டதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

சகஜானந்தரின் பேச்சு:


….பொதுத் தொகுதியின் பெயரால் எஙகள் சமூகத்தார் எந்த ஸ்தாபனங்களையாகிலும் எட்டிப் பார்க்க முடியுமா? பொது ஸ்தாபனங்கட்கு வருவது பின் இருக்கட்டும். முதலாவது அவர்களையும் மனிதர்கள்தான் என்று கருதப்படுவார்களா?
இன்று நம்மவர்கள் உயர்ஜாதி இந்துக்களிடம் படும் கஷ்டத்தை எவர் அறிகின்றார்? பொது ரோடுகளில் நடக்கும் உரிமை, பள்ளிக் கூடங்களில் படிக்கும் உரிமையும் குளத்து நீரை எடுத்துக் குடிக்கும் உரிமையும் தடுக்கப்பட்டு வரும் கொடுமையை எவரால் மறுக்க முடியும்? மற்றும் தேவகோட்டை, திருவாடானை, கூத்தூர், மதுராந்தகம் முதலிய இடங்களில் உயர் ஜாதிக்காரர்களால் சகிக்க முடியவில்லையே. இக்கஷ்டங்களையெல்லாம் பின்னர் தானாகவே ஒழிந்துவிடும். நாளடைவில் தீண்டாமையும் போய்விடும் இன்று நீங்கள் கூட்டுத் தொகுதியை ஆதரியுங்கள் என்று கூறுவது எவ்வளவு நீதியானது என்பதை நீங்களே யோசியுங்கள்…

இந்நாட்டு மக்கள் தீண்டாமையொழிந்து சுயமரியாதை கொடுத்து பொது ஸ்தாபனங்-களிலும் பிற முன்னேற்றங்களிலும் எங்களுடன் அன்புடன் கலந்து பழகும் நாள் என்றோ அன்று வேண்டுமானால் நமக்கும் உயர் ஜாதிக்காரர்-களிடம் நம்பிக்கையும் உண்மையான அன்பும் ஏற்பட்டால் அப்போது காந்தியின் பொதுத் தொகுதியைப் பின்பற்றலாம்…

நாம் நமது உரிமையை இழந்து உயர் ஜாதிக்காரர்களிடம் இன்னும் அடிமையாகவும் மனிதத் தன்மையற்ற இருகால் மிருகங்களாகவும் இருக்க முடியாது. காந்தியார் வேண்டுமானால், உயர் ஜாதிக்காரர்களிடம் தீண்டாமையை ஒழிக்குமாறு கேட்டுக்கொண்டு உண்ணாவிரத மிருக்கட்டும். உயிரை விடப்போவதாகவும் கூறட்டும். அது எல்லோராலும் போற்றத்தக்கதாகும். நாமும் போற்றுவோம்…. (குடிஅரசு, 25.9.1932)

காங்கிரஸ்காரர்கள் ஹிட்லர் ராஜ்யம் என்ற தலைப்பில் சாமி சகஜானந்தம் எழுதியதாக 23.5.1937 குடிஅரசு இதழில் ஒரு கட்டுரை உள்ளது. சிதம்பரம் நந்தனார் கல்விக் கழகத்துக்கு காங்கிரஸ்காரர்கள் கொடுக்கும் தொல்லைகள் அதில் உள்ளது. நந்தனார் கல்விக் கழகத்துக்கு கொடுத்துவந்த 4 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை கடலூர் போர்டு தலைவர் லட்சுமி நாராயண செட்டியார் 29.4.1937 அன்று நிறுத்திவிடுவிறார். 01.05.1937 அன்று விடுதியை மூடியதாகவும், அரசு செய்துள்ள உதவிகளைக் குறைத்து விட்டார்கள் என்றும் அச்செய்தி கூறுகிறது. காங்கிரஸ்காரர்கள் ஹரிஜனங்களுக்குச் செய்துவரும் அக்கிரமங்களைக் கண்டித்து காங்கிரஸ்காரரிடத்தில் நம்பிக்கையில்லை என்றும், கனம் எம்.–சி.ராஜா அவர்களிடத்தில் ஹரிஜனங்களுக்கு நம்பிக்கை உண்டென்றும்…. (அச்செயதியில், இந்த வரிகள் மட்டும் தடித்த எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது).

உணர்வையும், உணவையும் தடுத்ததைத் கேட்ட ஒவ்வொரு ஹரிஜனன் ரத்தமும் கொதிக்கிறது.
என்று அச்செய்தி முடிகிறது. (23.5.1937 குடிஅரசு)
சகஜானந்தர் மறைவுச் செய்தியை 2.5.1959 விடுதலையில் சகஜானந்தர் மரணம் என்ற தலைப்பில் வெளியிட்டது. தாழ்த்தப்பட்டோருக்காக மிகத் தீவிரமாக உழைத்தவரும், தாழ்த்தப்பட்டோர் மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பொருட்டு நந்தனார் உயர்நிலைப் பள்ளியை நிறுவியவருமான திரு.ஏ.எஸ்.சகஜானந்தா அவர்கள் தம் 69ஆம் வயதில் மாரடைப்பினால் காலமானார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

திரு. சகஜானந்தா அவர்கள் திருமண-மாகாதவர். இவர் தமிழ்மொழி வல்லுநர். வடமொழியையும் கற்றவர். இவர் சென்னை சட்டசபைக்கு காங்கிரசு சார்பில் தேர்ந்-தெடுக்கப்பட்டவர். அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட்டின் உறுப்பினருமாவார். (விடுதலை, 2.5.1959)
திரு. சகஜானந்தா மறைவுக்கு இறுதி மரியாதை என்ற தலைப்பில் இன்னொரு செய்தியையும் விடுதலை வெளியிட்டது.

பெரியார் அவர்களின் சமூகத் தொண்டைப் பின்பற்றி ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்தையே முக்கிய நோக்கமாகக் கொண்டு பணியாற்றியவரும் நந்தனார் கல்விக் கழகம் என்ற பெயரில் ஆண்களுக்கு ஒரு பள்ளியையும் பெண்களுக்கு ஒரு பள்ளியையும் (உயர்நிலைப் பள்ளிகள்) வைத்து நடத்தி வந்தவரும் சிதம்பரம் வட்டத்தின் சென்னை சட்டசபை உறுப்பினருமான திரு.ஏ.எஸ்.சகஜானந்தர் அவர்கள் 68ஆவது வயதில், 1.5.1959 வெள்ளி காலை 10 மணிக்கு இயற்கை எய்தினார். அன்னாருக்கு சிதம்பரத்தில் உள்ள முக்கியஸ்தர்களும் ஏராளமான ஆதிதிராவிடர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

தென்னார்க்காடு மாவட்ட திராவிர் கழகத் தலைவர் கு.கிருஷ்ணசாமி அவர்களும் மற்றைய கழகத் தோழர்களும் இதில் கலந்துகொண்டனர். மவுன ஊர்வலத்தில் 10,000 பேர் கலந்துகொண்டனர். (விடுதலை 8.5.1959) என்பதே அச்செய்தி.

சுவாமி சகஜானந்தா எழுத்தும் பேச்சம் என்ற தலைப்பில் அவரது எழுத்தையும் பேச்சையும் தொகுத்த பூவிழியன், பெரியார் குறிப்பிட்டதாக பின்னிணைப்பில் ஒரு செய்தியைத் தருகிறார். அரசினர் நந்தனார் கல்வி நிறுவனங்களின் பொன்விழா மலர் 1969இல் இடம் பெற்றுள்ளதாக இருக்க வேண்டும்.

இதோ சகஜானந்தர் பற்றி பெரியார் சொல்கிறார்:

சிதம்பரம் சாமி சகஜானந்தா அவர்க-ளுக்கு சிதம்பரம் அரசினர் நந்தனார் கல்வி நிறுவனங்களின் சார்பில் சிலை வைப்பது என்பது மிகவும் பொருத்தமானதும், செய்து தர வேண்டியதுமான ஒரு நற்பணியாகும். தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் சமுதாயத்திற்காக சாமி சகஜானந்தா அவர்கள் அரும்பெரும் தொண்டாற்றி இருக்கிறார்கள். எந்தவிதமான எல்லையும் இல்லாமல் நல்ல வண்ணம் முன்னேறி இருக்கின்றது.
பொதுவாக சொல்லப்போனால், நம் நாட்டில் சகஜானந்தா அவர்களைப் போல் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்குத் தொண்டாற்றியவர்கள் யாரும் இல்லையென்றே சொல்லலாம்.
இதுவரையில் அவர் இருந்திருப்பாரேயானால், அந்த சமுதாயத்திற்கென்றே ஒரு தனிக் கல்லூரி ஏற்படுத்தி இருப்பார் என்று கருதுகின்றேன். சட்டசபையிலும் மற்றும் அரசியல் துறையிலேயும் உள்ள குறைகளை எடுத்துச் சொல்லி மிகத் தைரியமாகக் கண்டித்தவராவார். அவருக்குப் பிறகு அந்த இடத்திற்கு வேறு யாரும் வரவில்லையென்றே சொல்லலாம்.
(பூவிழியன் நூல்: பக்கம்: 161)

ஆன்மிக உள்ளம் கொண்டவர் சகஜானந்தர். அவரது ஆன்மிக செயல்பாடுகளை பெரியாரே கண்டித்து எழுதியுமிருக்கிறார். ஆனால், சமூக சீர்திருத்த விவகாரங்களில் சகஜானந்தரை முழுமையாக ஆதரித்து நின்றவர் பெரியார்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பேரறிஞர் அண்ணா, சகஜானந்தா போட்டியிடும் வரை அவரது தொகுதியில் தி.மு.க. போட்டியிடாதென முடிவெடுத்துள்ளது என்று அப்போது அறிவிப்பு செய்தததாக ஒரு செய்தி உண்டு என்று பூவிழியன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். பெரியாரும், அண்ணாவும் சகஜானந்தரை எந்தளவுக்கு மதித்தார்கள் என்பதை நமக்கு உணர்த்துகின்றது.
(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *