- ஜெயலலிதா மன மாற்றம் அடைந்துவிட்டார் எனச் சொல்பவர்கள் அப்பாவிகள். அடிப்படை இந்துத் தீவிரவாதியாக விளங்கும் அவர் ஒருபோதும் ஈழம் என்கிற வார்த்தையை ஏற்றுக்கொள்ள மாட்டார். புலிகள் தீவிரமாகப் போராடிய காலங்களில் தொடர்ந்து அவர்களுக்கு எதிராகப் பழி பரப்பியும் தடை விதித்தும் ஜெயலலிதா நிகழ்த்திய கொடுமைகள் கொஞ்சநஞ்சமா? புலிகள் முற்றாக வீழ்த்தப்பட்டது தெரிந்து, இப்போது திடீர்க் கருணை காட்டுகிறார். மூன்று பேரைக் காப்பாற்றியதாகப் பெருமை பாராட்டும் அவர்தானே ஏழு பேரை பரமக்குடியில் சுட்டுக் கொன்றார்? பிணத்துக்குப் பொன்னாடை போர்த்தும் அவருடைய நாடகத்துக்குப் பெயர்தான் மன மாற்றமா?
தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
- பின்தங்கிய மாவட்டங்களில் பட்டினி, சத்துக்குறைவால் சாவது என்பது தொடர்கதையாக உள்ளது. இனிமேலும் இந்த நிலை தொடரக்கூடாது. அங்கு பட்டினி, சத்துக்குறைவால் ஒருவர்கூட சாகவில்லை என்ற நிலையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். ஏழைகளுக்கு உணவு அளிப்பது அரசின் கடமை. இதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்.
தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா, நீதிபதிகள், உச்சநீதிமன்றம்
- இலங்கை கடலோரப் பகுதிகளான முல்லைத் தீவு மற்றும் வடமராச்சி என பல பகுதிகளுமே மாறிக்கொண்டிருக்கின்றன. போர் முடிந்ததும் அய்க்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலருக்கு ராஜபக்ஷே அரசு ஒரு வாக்குறுதியை அளித்தது. பேச்சு வார்த்தையைத் துவக்கி, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற அந்த வாக்குறுதி குறித்த எந்தவொரு அறிகுறியும் இதுவரை தென்படவில்லை. தமிழர் பிரதிநிதிகள் பேச்சு வார்த்தைக்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், அரசாங்கம் பேச்சு வார்த்தைக்குத் தயாராக இல்லை.
சம்பந்தம், தலைவர், (ஈழ)தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
- இளைஞர்கள் ஜனநாயகம் கோரி போராடும்போது உலக நாடுகள் அவர்களை ஆதரிக்க வேண்டும். அக்டோபர் மாத இறுதியில் மக்கள் தொகை 7 பில்லியனைத் தொடவுள்ளது. ஏழ்மை, பெண்களுக்கு எதிரான வன்முறை, சமத்துவமின்மை போன்ற பல்வேறு சவால்களுக்கு எதிராகப் போராட இந்த நிகழ்வையே அரசுகளும் குடிமக்களும் காரணமாகக் கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதன் மூலம் இந்தப் போராட்டத்தை நாம் தொடங்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான சமச்சீர் கல்வியை அளிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். மனித வளத்துக்காக நாம் செய்யும் முதலீடு நல்ல எதிர்காலப் பயனைக் கொடுக்கும்.
பான் கீ மூன், பொதுச்செயலர், அய்.நா.அவை
- பத்மநாப சுவாமி கோவிலில் பல ஆண்டுகளாகக் கடைபிடித்து வரும் பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் தற்போதுள்ள நிலையிலேயே பாதுகாக்கப்படும். ஆனால், அதற்காக மூடநம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே.பட்நாயக், நீதிபதிகள், உச்ச நீதிமன்றம்