ஆசிரியர் பதில்கள்

செப்டம்பர் 16-30

இனப்பகை வெல்ல ஒரணியில் திரள்வோம்!

கே:       ”இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்’’ என்று தொல்.திருமாவளவன் கூறி இருக்கின்ற நிலையில், “இடஒதுக்கீட்டால் சமுதாயத்தை முன்னேற்ற முடியாது’’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறுவது பற்றி தங்கள் கருத்து என்ன?

                – எம்.ராஜன், தேனி

ப:           முன்னவர் கொள்கைத் தெளிவு உள்ள லட்சியவாதி; பின்னவர் கொள்கைத் தெளிவற்ற குழப்பவாதி. பா.ஜ.க.வுக்கு, “விலைபோனவர் போல உள்ளது அவரது கருத்து.’’ அம்பேத்கரைவிட அதிகம் தெரிந்தவர் போல இடஒதுக்கீடு பற்றிய கருத்து இவருக்கு!

கே:       நாட்டின் சிறந்த புத்தகத்திற்கான விருது இந்தியில் வெளியான கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசத்துக்கு’ வழங்கப்படுவது உள்நோக்கம் உடையதா?

                – ஆர்.சுதா, புதுக்கோட்டை

ப:           எந்த நோக்கம் இருந்தாலும், தகுதிவாய்ந்த ஓர் இலக்கிய நூல் அது. எனவே, முழுத் தகுதியோடு உள்ள ஒருவரின் தகுதிமிக்க நூலுக்குக் கிடைத்த பரிசு. எதிரிகளும்கூட ஏற்க முந்துகிறார்கள் என்றால், “எம்மினத் தமிழருக்கு கிடைத்த பெருமை எமக்கு’’ என்ற மகிழ்ச்சி உண்டு நமக்கு!

கே:       பகட்டுகள் அனைத்தையும் உதறித் தள்ளியிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் எளிமை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

                – எஸ்.ராஜ்குமார், கோவை

ப:           எளிமை எங்கு இருந்தாலும் _ இந்த ஆடம்பர யுகத்தில் _ அது வரவேற்கப்பட வேண்டியதே!

கே:       69 சதவீத இடஒதுக்கீடு 9ஆவது அட்டவனையில் இணைக்கப்பட்ட பிறகும் அதனை ரத்து செய்ய வலியுறுத்தும் வழக்கை விசாரிக்க தடை கோர முடியாதா?

                – பி.கிரிஜா, பண்ருட்டி

ப:           முதலில் அதையேகூட நீதிமன்றங்கள் தவறான வியாக்யானங்கள் மூலம் கபளீகரம் செய்ய முயலுவது உள்ள யதார்த்த நிலையாகும்.

கே:       கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான அடையாளம்தானே?

                – சி.குணசீலன், சிதம்பரம்

ப:           நிச்சயமாக! 2019 பொதுத் தேர்தலின் முடிவுக்கு ஒரு முன்னோட்டம்.

கே:       தொல்.திருமாவளவன் அவர்கள் தனது பிறந்த நாள் பரிசாக 10 லட்சம் பனைமரக் கன்றுகள் நடுகின்ற பணியை மேற்கொண்டிருப்பது அரசு கையில் எடுக்க வேண்டிய பணியல்லவா?

                – சீ. லட்சுமிபதி, தாம்பரம்

ப:           அரசுப் பணிகள் பலவற்றை தமிழ்நாட்டில் மற்றவர்கள்தானே முன்னெடுக்க வேண்டி உள்ளது. என்ன செய்ய….?

கே.       தொலைக்காட்சிகளில் மூடநம்பிக்கையைப் பரப்பும் நாடகங்கள் அதிகம் வருகின்றன. அவற்றைத் தடுக்க அல்லது தகர்க்க என்ன செய்ய வேண்டும்?

– அ.காஜா, விழுப்புரம்

ப:           1. தொலைக்காட்சியை மூடிவிடுவது ஒரு வழி! 2. ஒத்தக் கருத்துள்ளவர்கள் இணைந்து அத்தொலைக்காட்சி நிலையங்கள் முன் அறப்போர் செய்தல்.

கே:       பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி இவ்விருவருள் யாருடைய மேடை சொற்பொழிவு தங்களை முதன்முதலில் கவர்ந்தது?

– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

ப:           கலைஞரையே கவர்ந்தவர் அண்ணாதானே! நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

கே:       தமிழினத்தை வேரறுக்கக் காவிகள் செய்யும் சதிச் செயல்களை முறியடிக்க, தமிழர்கள் எடுக்க வேண்டிய உறுதியான முடிவு?

– நெய்வேலி க.தியாகராசன்,

 கொரநாட்டுக்கருப்பூர்

ப:           ஓர் அணியில் திரள வேண்டும். எது நம்மை இணைக்கிறதோ அதை அகலப்படுத்தி, எது நம்மைப் பிரிக்கிறதோ அதை அலட்சியப்படுத்தி, ஒன்றுபட்டு,  (One point programme) ஓர் அம்சத் திட்டமாக நின்று வென்று காட்ட வேண்டும்.

கே:       அண்ணா போற்றிய “பெரியாரியம்’’ – எம்.ஜி.ஆர் விரும்பிய ‘அண்ணாயிசம்’ என்ன வேறுபாடு?

– கல.சங்கத்தமிழன்,  செங்கை

ப:           அண்ணா போற்றிய ‘பெரியாரியம்’ -_ தெளிவானது, துணிவானது.    எம்.ஜி.ஆரின் ‘அண்ணாயிசம்’ _ குழம்பிய குட்டை, தெளிவற்ற ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *