‘உண்மை’ இதழ் (ஆகஸ்ட் 1 – 15, 2018) பல்வேறு முக்கிய செய்திகளை உள்ளடக்கியதாக இருந்தது. குறிப்பாக அய்யாவின் அடிச்சுவட்டில், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 07.08.1983 முதல் 09.10.1983 வரை நிகழ்ந்த அயல்நாட்டு சுற்றுப் பயணத் தகவல்கள் மற்றும் காணக்கிடைக்காத அரிய ஒளிப்படங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு அரிய சொத்து.
மேலும், மடிப்பாக்கத்தில் பெரியார் மய்யம் திறப்பு விழா, ஈழ விடுதலை வீரர்கள் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை குடும்பத்தினருடன் தமிழர் தலைவர், பழ.நெடுமாறன் அவர்களுக்குப் பாராட்டு, ஆசிரியர் அவர்களும் இலங்கை அமிர்தலிங்கம் அவர்களும் சந்திப்பு, நாத்திகர் சார்லஸ் பிராட்லா சிலை அருகில் ஆசிரியர் புகைப்படம் மற்றும் ஆசிரியர் அவர்களுடன் பிரிட்டிஷ் லேபர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உரையாடல், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசு நகரத்தில் உலகத் தலைவர் தந்தை பெரியார் சிலையை ஆசிரியர் திறந்துவைத்த ஒளிப்பங்கள் கண்களை காந்தமாய்க் கவர்ந்தன.
முத்தாய்ப்பாக, மேலைநாட்டு மக்கள் மத்தியில் உலகத் தலைவர் தந்தை பெரியார் கொள்கைகளை, லட்சியங்களை விதைத்துவிட்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பிய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு கலைஞர் அவர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்கும் ஒளிப்படங்களுடன் செறிவான – நிறைவான கருத்துக்களைத் தாங்கி வெளிவந்த ‘உண்மை’ மாத இதழ் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும், மகளிருக்கும் ‘அறிவுப் பெட்டகமாகத் திகழ்ந்து’ பெரியார் பாதையில் பீடுநடை போட்டு பகுத்தறிவுப் பாதையில் நடைபயில பேருதவியாகத் திகழ்கிறது.
– இல.கீதா, தாம்பரம்
***
‘உண்மை’ (ஜூலை 16 – 31) இதழில் அட்டைப் படம் அருமை! அசத்தலோ அசத்தல்!
“வீணர்களுக்கு பதில் எழுதும் நேரத்தில் பத்து திராவிட மாணவர்களைச் சேருங்கள்!’’ என்ற தலைப்பில், நமது ஆசிரியர் எழுதிய தலையங்கம் அருமை! இதில், “விதைக்காமல் விளையும் கழனியல்ல திராவிடம்! அது ஆரியம்!’’ “உழைக்காமல் பெற்ற வெற்றி அல்ல இது! கடும் உழைப்பின் விளைச்சல் இது திராவிடம்!’’ இந்த இரு சொற்றொடரும் என் நெஞ்சைத் தொட்டன.
குடந்தை மாநாட்டில், “திராவிட மாணவர்களின் சூளுரை!’’ என்ற தலைப்பில் மஞ்சை வசந்தன் தீட்டிய கட்டுரை நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்!
வாசகர்களின் கேள்விக்கு, ஆசிரியர் கூறும் பதில்கள், ஒரு சில அரசியல்வாதிகளுக்கு, அது நெத்தியடி! மூடநம்பிக்கையின் முடைநாற்றத்தில் மூழ்கி நிலைப்போர் பலருக்கு, அவர் தரும் சாட்டை அடி! பதில்களில் இடம்பெறும் ஒவ்வொரு எழுத்தும், தேன் துளிகள்! சுவைத்தேன் பலமுறை!
***
ஆகஸ்ட் 1 – 15, 2018 முன்பக்க அட்டையில், பாலுறவு வன்புணர்ச்சிக்கு பச்சிளங் குழந்தைகளைக் குதறும் மனித மிருகங்களுக்கு அடிக்கின்ற சாவு மணிபோல் அட்டைப் படமும், இதழ்கள் உள்ளே இது குறித்து, மஞ்சை வசந்தன் எழுதிய கட்டுரையும் அற்புதமாக அமைந்திருந்தது.
இவ்விதழில், “அய்யப்பன் பிரம்மச்சாரியா?’’ என்ற துணுக்கினைப் படித்து அதிர்ச்சியுற்றேன். காரணம், நானும் நேற்றுவரை அவனை பிரம்மச்சாரி என்று நினைத்ததுதான்! அட, இன்றுதான் எனக்குத் தெரிந்தது அவருக்கு இரண்டு மனைவிகள் உண்டென்று! யோவ்; அய்யோ… அப்பா சுவாமிகளே! இனி மேலாவது, அவர் பிரமச்சாரி அல்ல அவரும் குடும்பஸ்தர்தான் நம்மைப்போல என்பதையாவது உணருங்கள்!
சுயமரியாதை சுடரொளி புலவர் கோ.இமயவரம்பன் அவர்களின் நினைவு நாளை (ஆக.9) நினைவுபடுத்தும் வகையில், வை.கலையரசன், தீட்டிய கட்டுரையைப் படித்தேன். பிரமித்துப் போனேன்.
– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
Leave a Reply