போற்றுதற்குரிய முதல் அய்.ஏ.எஸ். மாற்றுத்திறனாளி பெண்!

ஆகஸ்ட் 15-31 2018

பண்பாளன்

உடலளவில் எந்த ஒரு குறையுமில்லாமல், மனதளவில் எதையெதையோ நினைத்து  தாழ்வு மனப்பான்மையில் நித்தமும் உழன்று வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சில மூடர் மனிதர்கள் மத்தியில், இரண்டு வயதில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு அதன் காரணமாய் கண்பார்வை பறிபோன பெண்ணான பிரஞ்ஜால் பட்டீல் என்பவர் மன உறுதியாலும், விடாமுயற்சியாலும் தொடர்ந்து போராடி, கடினமாய் உழைத்து கல்வி என்னும் சிகரம் ஏறி, இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் கலெக்டர் என்ற சாதனையை செய்து காட்டியிருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த பட்டீல்_ஜோதி இணையருக்குப் பிறந்த ஒரே மகள் பிரஞ்ஜால் பட்டீல். சிறு வயதிலேயே பார்வை பறிபோய் காணும் திறனை முற்றிலும் இழந்தபோதும் மகளுக்கு எந்தக் குறையும் தெரியாதவண்ணம் மிகக் கவனமாய் வளர்த்து வந்திருக்கின்றனர் பிரஞ்ஜால் பட்டீலின் பெற்றோர். பெற்றோர் தந்த ஊக்கத்தாலும், உற்சாகத்தாலும் படிப்பில் தீராத தாகம் ஏற்பட்டு தொடுதிரை உதவியோடு பிரஞ்ஜால் பட்டீல் பள்ளிப் படிப்பைத் தொடங்கியிருக்கிறார்.

தொடர்ந்து மும்பை கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்து, டெல்லியில் உள்ள சர்வதேசக் கல்லூரியில் எம்.ஃபில், மற்றும் பி.எச்டி பட்டங்களையும் வென்றிருக்கிறார்.

சிறு வயதிலிருந்தே சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்துடன் பிரஞ்ஜால் பட்டீல் வளர்ந்திருக்கிறார். அதன் காரணமாக கலெக்டர் ஆக வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார். கடந்த 2014இல் தனது கலெக்டர் கனவை நிறைவேற்றிக் கொள்ள அய்.ஏ.எஸ் தேர்வினை எழுதியிருக்கிறார். தேர்வு முடிவில் அவருக்கு 773ஆவது இடம் கிடைத்து இரயில்வே துறையில் கணக்குப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். எனினும் கலெக்டர் ஆகியே தீரவேண்டும் என்ற விடாமுயற்சியுடன் 2017இல் மீண்டும் அய்.ஏ.எஸ். தேர்வை எழுதி 124ஆவது இடத்தைப் பெற்று தனது கலெக்டர் கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

தற்சமயம் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சிக் கலெக்டராகப் பொறுப்பேற்று பணி செய்து வருகிறார்.

கலெக்டர் பொறுப்பேற்றதும் தனக்கு ஊக்கமும் தைரியமும் கொடுத்து தன்னை வாழ்க்கையில் உயர்த்திய தன் தாயை பெருமைப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர வைத்து மகிழ்ந்திருக்கிறார்.

மேலும், கலெக்டர் பொறுப்பேற்றதும் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்த பிரஞ்ஜால் பட்டீல், “சிறு வயது முதலே எனது கனவு அய்.ஏ.எஸ். ஆகவேண்டும் என்பதே. பார்வை இழந்த காரணத்திற்காக என் கனவை விட்டுக்கொடுக்க நான் விரும்பவில்லை. கடுமையாக உழைத்தேன். இன்று எனது கனவு நினைவாகிவிட்டது. உடல்குறைகளைப் பற்றி நாம் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தால் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாது. எதிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் வெற்றி நம் கைகளில்’’ என்று தன்னம்பிக்கையுடன் பேசியிருக்கிறார்.

உடல் ஊனங்கள் ஒரு குறையே அல்ல. உழைப்புதான் வெற்றியைக் கொடுக்கும் என்பதைத் தெளிவாய்ப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு திட்டமிட்டுப் படித்து, இன்று இந்தியாவின் அரசு உயர் பதவிகளில் ஒன்றான அய்.ஏ.எஸ் தேர்வில் வென்று கலெக்டராக உருவாகி இருக்கிறார். பிரிஞ்ஜால் பட்டீல் கலெக்டர் பொறுப்பேற்றிருக்கும் எர்ணாகுளம் மாவட்டத்தில், அல்லல்பட்டுக் கிடக்கும் மக்கள் வாழ்வில் இனி மாற்றம் நிகழும் என்பது உறுதி! பிரிஞ்ஜால் பட்டீல் வாழ்க! அவர்தம் சமூகப்பணி வளர்க!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *