ஆறு.கலைச்செல்வன்
“உங்களின் நிலைக்காக வருந்துகிறேன். நம் தமிழ்நாட்டில் தான் அறுபத்தொன்பது சதவீத இடஒதுக்கீடு கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்படுகிறது. அந்த நினைவுதான் வரவேண்டும். அதைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை வரவேண்டும். கிராமப்புறத்தைச் சேர்ந்த எனக்கு இடஒதுக்கீட்டால் தான் வேலை கிடைத்தது.
தனது மோட்டார் சைக்கிளை இயக்க ஆரம்பித்தார் செல்வமணி. நான்கு உதை உதைத்தபின்பே இயந்திரம் இயங்க ஆரம்பித்தது.
“பட்டனை அழுத்தினா ஸ்டார்ட் ஆகிற வண்டியெல்லாம் வந்து போச்சு. இந்த நவநாகரிக உலகில் இன்னும் பழைய மாதிரி உதைச்சிகிட்டு இருக்கீங்களே’’ என்று வீட்டிற்குள்ளேயிருந்து வாட்டத்துடன் குரல் கொடுத்தார் செல்வமணியின் துணைவியார்.
“கொஞ்சமாவது உடல் உழைப்பு வேண்டாமா?’’ என்று கூறியபடியே வண்டியைக் கிளப்பினார் செல்வமணி.
ஆடிக்காற்று பலமாக வீசியது. காற்றைக் கிழித்துக் கொண்டு செல்வமணி வண்டி மஞ்சளூர் கிராமத்தை நோக்கி விரைந்தது.
மஞ்சளூர் கிராமத்தில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணி ஏற்கத்தான் விரைந்து சென்றார் செல்வமணி. பல ஆண்டுகள் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய அவருக்கு தனது அய்ம்பதாவது வயதில்தான் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு கிடைத்தது. தலைமை ஆசிரியராக வேண்டும் என்ற அவரது ஆசையும் நிறைவேறியது.
சிறிய குக்கிராமத்தில் அமைந்துள்ள சிறிய பள்ளி அது. குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர். பள்ளிக்கு அருகிலேயே ஒரு அய்யனார் கோயிலும் இருந்தது. மணியரசன் என்ற அந்தக் கோயிலின் பூசாரி நாள்தோறும் அங்கு வந்து பூசைகள் செய்வது வழக்கம்.
பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த செல்வமணி தனது வண்டியை ஒரு மரத்தடியில் நிறுத்திவிட்டு பள்ளிக்குள் நுழைந்தார். பள்ளிப் பிள்ளைகள் பலரும் வகுப்பறைகளிலிருந்து அவரை எட்டி எட்டிப் பார்த்தனர்.
“புதுசா ஹெட் மாஸ்டர் வந்திருக்காரு’’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
சில ஆசிரியர்கள் ஓடிவந்து செல்வமணியை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தனர்.
அன்று மாலை ஆசிரியர்கள் கூட்டம் கூட்டி தனது நிலையை செல்வமணி தெளிவாக எடுத்துரைத்தார்.
“இங்கே எல்லா ஆசிரியர்களும் இளைஞர்களா இருக்கீங்க. கணக்கு வாத்தியார் மாணிக்கம் மட்டும்தான் சர்வீஸ் ஆனவர். அவரும் சீக்கிரமா தலைமை ஆசிரியரா ஆயிடுவார். எனது லட்சியம் இந்தப் பகுதியில் கல்வியை வளர்க்கணும். நல்ல பிள்ளைகளை உருவாக்கணும். அவர்கள் உயர் பதவிகளை அடையணும். அதற்கு நாம் பாடுபட வேணும். இந்த ஊரைப் பத்தி ஏற்கனவே நான் கேள்விப் பட்டிருக்கேன். பிரச்சினைக்குரிய ஊர்தான். இதை சரி செய்ய விரும்பியே இந்த ஊருக்கு வந்திருக்கேன். இதை நான் ஒரு சவாலாக எடுத்துக்க விரும்புறேன்’’ என்று நீண்ட நேரம் பேசினார் செல்வமணி.
அவர் பேசியபோது நடுநடுவே சில ஆசிரியர்கள் கண் சிமிட்டியபடி தங்களுக்குள் கிண்டலாக மெதுவான குரலில் பேசிக் கொண்டனர்.
“புதுசா இப்பத்தானே புரமோஷன் ஆயி வந்திருக்காரு. இப்படித்தான் பேசுவார். போகப் போக சரியாயிடும்’’ என்று உள்ளூர் ஆசிரியர் ஒருவர் கமெண்ட் அடித்தார்.
இதையெல்லாம் கூர்மையாக, ஆனால் தெரியாததுபோல் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வமணி. எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது.
அப்போது ஒரு ஆசிரியர் தனது செல்போனில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தார்.
இதனால் சற்றே கோபமடைந்த செல்வமணி கோபத்தை அடக்கிக் கொண்டு செயற்கையாக சிரிப்பை வரவழைத்தவாரே ஆனந்தன் என்ற அந்த ஆசிரியரை நோக்கி,
“என்னதான் பார்க்கிறீங்க செல்போனில்’’ என்று கேட்டார்.
அதற்கு ஆனந்தன்,
“ஒன்றுமில்லை சார். சார்ஜ் எத்தனை பர்சென்டேஜ் இருக்குன்னு பார்த்தேன்’’ என்று சற்று சலிப்புடன் கூறினான்.
“எவ்வளவு சதவீதம் இருக்கு?’’ எனக் கேட்டார் செல்வமணி.
இதையெல்லாம் ஏன் கேட்கிறார் என்ற கடுப்புடன் ஆனந்தன்,
“அறுபத்தொன்பது சதவீதம் இருக்கு சார்’’ என்றான்.
செல்வமணி அவரை ஏற இறங்கப் பார்த்து விட்டு எல்லா ஆசிரியர்களையும் நோக்கி,
“இந்த அறுபத்தொன்பது சதவீதம் என்றவுடனே நமக்கு என்ன நினைவு வரவேண்டும் தெரியுமா?’’ எனக் கேட்டார்.
ஆசிரியர்கள் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால், யாரும் பதில் சொல்லவில்லை.
“உங்களின் நிலைக்காக வருந்துகிறேன். நம் தமிழ்நாட்டில்தான் அறுபத்தொன்பது சதவீத இடஒதுக்கீடு கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்படுகிறது. அந்த நினைவுதான் வரவேண்டும். அதைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை வரவேண்டும். கிராமப்புறத்தைச் சேர்ந்த எனக்கு இடஒதுக் கீட்டால்தான் வேலை கிடைத்தது. அதைச் சொல்லிக் கொள்ள நான் பெருமைப்படுகிறேன். நீங்களும் இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்திருப்பீர்கள். நம்மைப் போல் நம் சந்ததிகளும் வேலைக்குச் செல்ல வேண்டும். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்’’ என்று கூறி முடித்தார் செல்வமணி.
இதைக் கேட்ட அனைத்து ஆசிரியர்களும் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தனர். தலைமை ஆசிரியர் சரியாகத்தான் சொன்னார் என்பதை உணர்ந்து மவுனமாயினர்.
அதோடு மட்டுமல்லாமல் கூட்டம் முடிந்ததும் அவரிடம் வந்து வணங்கி முழு ஒத்துழைப்புத் தருவதாக உறுதி அளித்து கலைந்து சென்றனர்.
செல்வமணியின் உறுதியான நடவடிக்கை களால் மாணவர்களின் கல்வித் தரம் மட்டுமின்றி ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனும் வளர்ந்தது.
நிர்வாகச் சீர்திருத்தங்கள் பலவற்றைச் செய்தார். காலை நடைபெறும் நிகழ்வை இறை வணக்கக் கூட்டம் என்று சொல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தினார். ஆயுத பூசை, சரஸ்வதி பூசை போன்ற மத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் அந்தப் பள்ளியில் ஆண்டாண்டுக் காலமாக நடைபெற்று வந்தன. அதை இந்த ஆண்டு பள்ளியில் நடக்க விடாமல் தடுத்து விட்டார். அதற்கான காரணத்தையும் மாணவர்களிடம் விளக்கிக் கூறினார்.
“அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் மேலைநாட்டவர்கள் செய்தது. அதுபோல் நாமும் அறிவியல் மனப்பான்மையோடு புதிய கண்டுபிடிப்புகளைச் செய்ய வேண்டுமே ஒழிய பூசைபோடுவதால் பயன் இல்லை’’ என்று மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.
இரஷ்யா, கனடா, ஜப்பான், இஸ்ரேல், அமெரிக்கா, தென்கொரியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பின்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் படித்தோர் அதிகமுள்ள முதல் பத்து நாடுகள் ஆகும். இந்தப் பட்டியலில் நமது நாடு இல்லை. இந்தக் குறையை நீக்குவது உங்கள் கைகளில்தான் உள்ளது. இந்த லட்சணத்தில் சரஸ்வதி நம் நாட்டில் இருப்பதாக சொல்லிக் கொள்வது வெட்கக்கேடு என்றார்.
இதையெல்லாம் கேள்விப்பட்ட அய்யனார் கோயில் பூசாரி மணியரசன் செல்வமணி மீது கடும் கோபம் கொண்டான். அந்தப் பூசாரி நெடுஞ்சாலையிலிருந்து பள்ளிக்கு வரும் அய்நூறு மீட்டர் நீளமுள்ள சாலையின் இருபுறமும் வரப்பை வெட்டி ஆக்கிரமித்து அருகில் இருந்த தன் வயலோடு இணைத்துக் கொண்டான். இதனால் பள்ளிக்கு வரும் பாதை குறுகலாகி தாராளமாக நடக்க முடியாமல் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதற்கிடையில் ஒரு நாள் செல்வமணி பூசாரியை அழைத்து ஆக்கிரமிப்பை சரி செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். இதனால், ஏற்கனவே கோபத்தில் இருந்த மணியரசன் அவரது பேச்சைக் கேட்டு மேலும் ஆத்திரமடைந்தான்.
கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் தெரிவித்து அவரை இடமாற்றம் செய்ய வேண்டுமெனத் திட்டமிட்டான். அதற்கான வேலைகளிலும் இறங்கினான்.
இந்நிலையில் அய்யனார் சாமியைத் தூக்கிக் கொண்டு திருவிழா நடத்த வேண்டுமென கிராம மக்களை மணியரசன் உசுப்பி விட்டான். கிராமத்தினரும் அவன் பேச்சைக் கேட்டு திருவிழா நடத்த வசூலிலும் இறங்கினர்.
ஒரு நாள் பள்ளி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மணியரசன் ஊர் மக்கள் சிலருடன் பள்ளிக்கு வந்தான். செல்வமணி அவர்களைப் பார்த்து, “என்ன சேதி?’’ என வினவினார்.
“அடுத்த வாரம் அய்யனார் கோயில் திருவிழா. அதுக்காக பள்ளிக்கு மூணு நாள் லீவு விடணும். அதோட திருவிழா செலவுக்கு அய்யாயிரம் ரூபா நீங்க நன்கொடையா தரணும்’’ என்றான் மணியரசன்.
“பள்ளி மாணவர்களுக்குத் தொல்லை யில்லாமல் நீங்க விழா நடத்திக்கீங்க. ஆனா, லீவு எல்லாம் விடமுடியாது. அதோடு நான் கோயில் விழாவுக்கெல்லாம் பணம் தருவதில்லை’’ என்றார் செல்வமணி.
“எங்க ஊரில் வேலை செய்ஞ்சிகிட்டு எங்க சாமியையே அவமானப்படுத்துறீங்களா! நாங்க நெனைச்சா எதுவும் செய்வோம். நீங்க இங்கே வேலை செய்யாம ஆக்கிடுவோம்’’ என்று மிரட்டும் தொனியில் சொன்னான் மணியரசன்.
“அதுபற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், இந்தப் பள்ளியை சரிசெய்து விட்டுத்தான் செல்வேன்’’ என்று பதிலளித்தார் செல்வமணி.
“இங்கு என்ன நடந்துபோச்சு? எதை சரி செய்யப் போகிறீர்?’’ எனக் கேட்டான் மணியரசன்.
“நெடுஞ்சாலையிலிருந்து பள்ளிக்கு வரும் சாலையை இருபுறமும் வெட்டி உங்கள் வயலோடு இணைத்துக் கொண்டீர்கள். ஆடுமாடுகளையும் வழியிலேயே கட்டி வைத்துக் கொள்கிறீர்கள். மாணவ, மாணவிகள் நெருக்கி அடித்துக்கொண்டு வரவேண்டியுள்ளது. கார்கள் பள்ளிக்கு வந்து செல்ல முடியாத நிலையும் உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பள்ளிக் கூடத்தின் இடத்தையும் ஆக்கிரமித்து அய்யனார் கோயிலை விரிவுபடுத்துகிறீர்கள். பள்ளி வளர்ச்சிக்கு இது நல்லதல்ல. இது சம்பந்தமாக நான் மாவட்ட ஆட்சியரிடமும், கல்வி அலுவலர்களிடமும் புகார் அளித்து விட்டேன்’’ என்று சற்று கோபமாகவே பேசினார் செல்வமணி.
“அய்யய்யோ, பாருங்கைய்யா! கோவில் கட்டுவதை இவர் எதிர்க்கிறார். சும்மா இருக்கீங்களே! நறுக்கா நாலு கேள்வி கேளுங்கையய்யா!’’ என்று உடன் வந்தவர்களை உசுப்பி விட்டான் மணியரசன்.
ஆனால் யாரும் எதுவும் கேட்காததால் அங்கிருந்து அகன்றான் பூசாரி.
—மறுவாரம் கோயில் திருவிழா தொடங்கியது. ஒலிபெருக்கி, மேள தாளம் என ஒரே ரகளையாக பள்ளி வளாகம் காணப்பட்டது. ஆசிரியர்களால் பாடம் நடத்தவே முடியவில்லை. மூன்றாம் நாள் இரவு சாமி ஊர்வலம் தொடங்கியது. பெரிய வண்டியில் சிலைகளை வைத்து பள்ளிச்சாலை வழியாக ஊருக்குள் செல்ல முற்பட்டனர். கூட்டமும் அதிகமாக இருந்தது. பாதை மிகவும் குறுகலாகி விட்டதால் ஒரு கட்டத்தில் வண்டி குடை சாய்ந்துவிட்டது. வண்டியின் அடியில் சிக்கி பொதுமக்கள் பலரும் பலத்த காயமடைந்தனர். மாணவர்கள் சிலரும் அதில் அடங்குவர். எங்கும் ஒரே அழுகை ஒலி. ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அடுத்த சில நாட்களில் மாவட்ட ஆட்சியரும், கல்வி அலுவலர்களும் நேரில் வந்து விசாரணை செய்தனர். ஆக்கிரமிப்பால் பாதை குறுகலானதால் விபத்து நடந்ததை உறுதி செய்தனர்.
பாதையின் ஆக்கிரமிப்பை அகற்றி, பாதையை விரிவுபடுத்தி மாணவ மாணவிகள் தாராளமாக வந்து செல்ல உடன் ஆணை பிறப்பிக்கப்பட்டது. பள்ளி இடத்தை ஆக்கிரமித்து கோயிலை விரிவுபடுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர்.
ஆக்கிரமிப்பிலிருந்து பள்ளியை மீட்ட மகிழ்வில் தன் கல்விப் பணியினை உற்சாகத்துடன் தொடரலானார் செல்வமணி!