காவிரி உரிமையில் தமிழகத்திற்கு மத்திய அரசு இழைக்கும் அளவற்ற அநீதி! உச்சநீதிமன்றம் உரிமை காக்க வேண்டும்!

ஏப்ரல் 16-30

– மஞ்சை வசந்தன்

 கர்நாடகத்தில் உள்ள குடகு மலைதான் காவிரிப் பெண்ணின் பிறந்தகம். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1,276 மீட்டர் (4,186 அடி) உயரத்தில் அது புறப்படும் இடத்துக்குத் தலைக்காவிரி என்று பெயர். ஓட்டமும் நடையுமாக கர்நாடகத்தில் 320 கி.மீ., தமிழ்நாட்டில் 416 கி.மீ. பயணிக்கும் காவிரி, பூம்புகாரில் வங்கக் கடலில் கலக்கிறது. இரு மாநில எல்லையில் 64 கி.மீ. என்பதையும் சேர்த்தால், காவிரி ஆற்றின் மொத்த நீளம் கிட்டத்தட்ட 800 கி.மீ.

காவிரிக் கரையில் அமைந்திருக்கும் முக்கிய நகரங்கள் கர்நாடகத்தில் குசால்நகர், மைசூரு, ரங்கப்பட்டணம். தமிழ்நாட்டில் மேட்டூர், ஈரோடு, கரூர், முசிறி, குளித்தலை, திருச்சிராப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார். துணையாறுகள், கிளையாறுகள் உட்பட காவிரியின் வடிநிலம் எனப்படும் மொத்த நீரேந்துப் பரப்பு 81,303 சதுர கி.மீ. தமிழ்நாட்டில் 43,856 ச.கி.மீ., கர்நாடகத்தில் 34,273 ச.கி.மீ., கேரளத்தில் 2,866 ச.கி.மீ., புதுவையில் 160 ச.கி.மீ. காவிரியில் பாயும் சராசரி நீரளவு வினாடிக்கு 23,908 கன அடி.

உடன்படிக்கைகள்-1892, 1924

1892இல் சென்னை மாகாணத்துக்கும் மைசூரு சமஸ்தானத்துக்கும் இடையில் முதல் காவிரி நீர்ப் பகிர்வு உடன்படிக்கை செய்யப்பட்டது. 1924 அங்கே மைசூரு – கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையையும், இங்கே மேட்டூர் அணையையும் அடிப்படையாக வைத்து, இந்திய அரசின் மேற்பார்வையில் சென்னை மாகாணத்துக்கும் மைசூரு சமஸ்தானத்துக்கும்  உடன்படிக்கை செய்யப்பட்டது. 1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் 1924 ஒப்பந்தப்படியே காவிரி நீர்ப் பகிர்வு நடந்துவந்தது.

1956இல் மொழிவழி மாநில மறுசீரமைப்புக்குப் பின், குடகு கர்நாடகத்தின் பகுதி ஆயிற்று. 1954இ-ல் புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப் புலம் (யூனியன் பிரதேசம்) ஆயிற்று. புதுவையின் ஒரு பகுதியான காரைக்கால் காவிரி நீரால் பயனடைந்துவந்தது. கபினியின் பிறப்பிடம் மொழிவழிக் கேரளத்தில் அமைந்திருந்தது. ஆகவே, புதிதாக கேரளமும் புதுவையும் காவிரி நீரில் பங்கு கேட்டன. பேச்சுவார்த்தை 1960-களின் முற்பகுதியில் தொடங்கி, 10 ஆண்டு காலம் நீண்டது.

ஆயக்கட்டு அங்கும் இங்கும்

1970-களில் அமைக்கப்பட்ட காவிரி உண்மை அறியும் குழு கண்டறிந்தபடி, தமிழ்நாட்டின் காவிரி ஆயக்கட்டு (நீர்ப்பாசனப் பரப்பு) 25,80,000 ஏக்கர் என்றும், கர்நாடகத்தின் ஆயக்கட்டு 6,80,000 ஏக்கர் என்றும் தெரியவந்தது. தமிழகம் தன் ஆயக்கட்டைச் சுருங்கவிடக் கூடாது என்றும், கர்நாடகம் தன் ஆயக்கட்டை விரிவாக்க வேண்டும் என்றும் விரும்பியதுதான் உடன்பாடு ஏற்பட முடியாமல் போனதற்குக் காரணம்.

உச்ச நீதிமன்ற வழக்கு

1974இல் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்குத் தொடர்ந்து, பிரதமர் இந்திரா கேட்டுக்கொண்டதால் திரும்பப் பெற்றது.

இந்திய அரசமைப்பில் மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பகிர்வு தொடர்பான உறுப்பு 262 இந்திய அரசின் பொறுப்பைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பூசல் சட்டம், 1956 என்பது தீராத சிக்கலைத் தீர்க்கத் தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) அமைப்பதற்கான வழிவகையைக் கொண்டுள்ளது.

1986இ-ல் தமிழக அரசு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி 1990 ஜூன் 2-ஆம் நாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான இந்திய அரசு, காவிரித் தீர்ப்பாயம் அமைத்தது.

தீர்ப்பாயத்திடம் ஒவ்வொரு மாநிலமும் கேட்ட தண்ணீரின் அளவு (டிஎம்சி): கர்நாடகம்: 465, தமிழகம்: 566, கேரளம்: 99.8, புதுவை: 9.3.

உடனே தண்ணீர் திறக்க ஆணையிடுமாறு தீர்ப்பாயத்திடம் தமிழ்நாடு கோரிக்கை வைத்தது. தீர்ப்பாயம் இதை ஏற்க மறுத்ததால், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றக் கட்டளைப்படி தீர்ப்பாயம் மறுபரிசீலனை செய்து இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.

1980_-81க்கும் 1989_-90க்கும் இடைப்பட்ட 10 ஆண்டு சராசரியைக் கணக்கிட்டு, ஒவ்வொரு நீர்ப்பாசன ஆண்டிலும் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு 205 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்பதே இடைக்காலத் தீர்ப்பு. மாத வாரியாகவும், அந்தந்த மாதமும் வாரவாரியாகவும் கர்நாடகம் திறந்து விட வேண்டிய நீரின் அளவு வரையறுக்கப்பட்டது.

கர்நாடகம் அதன் பாசனப் பரப்பை (ஆயக்கட்டு) அப்போதைய 11,20,000 ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக் கூடாது என்றும் தீர்ப்பாயம் ஆணையிட்டது. இந்த இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. பின்னர், குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டபடி, உச்ச நீதிமன்றம் தலையிட்டு அந்த அவசரச் சட்டத்தை நீக்கியது.

1992, 1993, 1994 ஆண்டுகளில் போதிய மழைப் பொழிவு இருந்ததால், பெரிதாகச் சிக்கல் எழவில்லை. 1995இ-ல் பருவமழை பொய்த்ததால் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்று கர்நாடகம் மறுத்துவிட்டது.

காவிரி ஆணையம்

உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு வழக்குத் தொடர்ந்தது. நீதிமன்றம் அறிவுறுத்தியபடி தமிழ்நாடு தீர்ப்பாயத்தை அணுகியது. தீர்ப்பாயம் 11 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆணையிட்டது. கர்நாடகம் இதை ஏற்க மறுத்ததால், தமிழ்நாடு மீண்டும் நீதிமன்றத்தை அணுகியபோது, பிரதமர் நரசிம்மராவ் இதில் தலையிட நீதிமன்றம் ஆணையிட்டது. பிரதமர் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் 6 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆணையிட்டார்.

1997இ-ல் இந்திய அரசு காவிரி ஆற்று ஆணையம் அமைத்தது. கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த ஆணையம் அதிகாரமற்றதாக மாற்றப்பட்டது. இது பிரதமரையும் நான்கு மாநில முதல்வர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டது. எல்லா உறுப்பினர்களும் கலந்துகொண்டால்தான் இந்த ஆணையம் கூட முடியும். கூடினாலும் ஒருமனதாக மட்டுமே முடிவெடுக்க முடியும். இந்த ஆணையத்தால் ஒரு பயனும் விளையவில்லை.

இறுதித் தீர்ப்பு

2007 பிப்ரவரி 5 அன்று தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. கொள்ளிடம் கீழணை வரைக்கும் காவிரி வடிநிலத்தில் ஓராண்டு காலத்தில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 740 டிஎம்சி. இதில் இறுதித் தீர்ப்பின்படி சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் கடலில் கலப்பதற்கும் 14 டிஎம்சி ஒதுக்கியது போக, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுவைக்கு 7 டிஎம்சி ஒதுக்கப்பெற்றது. தமிழகத்துக்கு உரிய பங்கில் தமிழ்நாட்டுக்குள் கிடைப்பதுபோக, கர்நாடகம் திறந்துவிட வேண்டிய அளவு 192 டிஎம்சிதான்.

கர்நாடகம் காவிரியில் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய நீரின் அளவு (டிஎம்சி) இடைக்காலத் தீர்ப்பில் 205 ஆக இருந்து, இறுதித் தீர்ப்பில் 192 ஆகக் குறைந்துபோனது. அதுவும்கூடக் கிடைக்க வழியில்லாமல் தவிக்கிறது தமிழகம்.

தமிழகமும் கர்நாடகமும் இத்தீர்ப்பில் குறைகண்டு, மீளாய்வு விண்ணப்பங்கள் தாக்கல் செய்தன. இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் மாதவாரியாகத் திறந்துவிட வேண்டிய நீரளவு (டிஎம்சி) பின்வருமாறு அட்டவணையிடப்பட்டது: ஜூன்: 10, ஜூலை: 34, ஆகஸ்ட்: 50, செப்டம்பர்: 40, அக்டோபர்: 22, நவம்பர் 15, டிசம்பர்: 8, ஜனவரி: 3, பிப்ரவரி: 2.5, மார்ச்: 2.5, ஏப்ரல்: 2.5, மே: 2.5.

ஒரு மாதத்தில் தண்ணீர் குறைவாகக் கொடுத்தால், அடுத்தடுத்த மாதங்களில் அந்த நிலுவையைக் கொடுத்துக் கணக்கை நேர் செய்ய வேண்டும். பற்றாக்குறைக் காலத்தில் எவ்வளவு குறைவாகக் கிடைத்தாலும் இதே விகிதப்படி பகிர்ந்துகொள்ள வேண்டும். இதை கர்நாடகம் விடாப்பிடியாக எதிர்த்து நிற்கிறது.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, காவிரி ஆற்று ஆணையத் தலைவர் என்ற முறையில் 2012இ-ல் ஒரு முறை, நாளொன்றுக்கு ஒரு விநாடிக்கு 9,000 கன அடி வீதம் தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்குக் கட்டளையிட்டார். கர்நாடக அரசு இந்தக் கட்டளையை நிறைவேற்ற மறுத்து உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு உள்ளாயிற்று. வேறு வழியின்றி தண்ணீர் திறந்துவிட்ட பின், கர்நாடகத்தில் பரவலான வன்முறைக் கிளர்ச்சி மூண்டது.

தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், இந்திய உச்ச நீதிமன்றம் ஆணையிட்டவாறு 2013 பிப்ரவரி 20 அன்று இந்திய அரசு காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. அந்த நாள் முதல் இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வருகிறது என்று பொருள். மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை இடைக்கால ஏற்பாடாக காவிரி கண்காணிப்புக் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. 1991, 2001, 2012 ஆண்டுகளில் கர்நாடகத்தில் மழைப் பொழிவு குறைவு என்று தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுத்து வன்முறைக் கிளர்ச்சி நடைபெற்றது.  அப்போதிலிருந்து இந்தச் சிக்கல் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில்தான், 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் 10 நாள்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்ற உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடகாவில் பெருங்கலவரம் மூண்டது.

உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு

நான்கு மாநிலங்களால் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளின் இறுதி தீர்ப்பை 2017ஆம் ஆண்டு செப்டம்பர் ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்த இறுதி தீர்ப்பு 16.02.2018 அன்று 10.30 மணிக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமித்தவா ராய், கான்வில்கர் ஆகியோர் கொண்ட அமர்வால் வாசிக்கப்பட்டது. அதில்,  காவிரி தங்களுக்கு தான் சொந்தம் என்று கர்நாடகா கூறி வந்ததற்கு, நதிநீர் தேசிய சொத்து என்பதால் காவிரி ஆற்றின் நீரை எந்தவொரு மாநிலமும் சொந்தம் கொண்டாட உரிமை இல்லை என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

                தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தடையின்றி வழங்க வேண்டும்.

                நடுவர் மன்றம் தீர்மானித்த 192 டிஎம்சி தண்ணீரை விட 14.75 டிஎம்சி குறைவான தண்ணீரே தமிழகத்திற்கு கிடைக்க உள்ளது.

                உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கர்நாடகாவிற்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீருடன் மொத்தம் 284.75 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.

                பெங்களூரின் குடிநீர் தேவை மற்றும் தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவை அதிகரித்ததாலும், கர்நாடகாவிற்கு 14.75 டிஎம்சி தண்ணீரை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

                தமிழகத்தில் நிலத்தடி நீர் 20 டிஎம்சியாக இருப்பதால் நடுவர் மன்றம் அறிவித்த 192 டிஎம்சி தண்ணீரில் 14.75 டிஎம்சி நீரை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

                கேரளாவிற்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என்று கூறிய  காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் எத்தகைய மாற்றமும் இல்லை.

                1892 மற்றும் 1924 ஆகிய ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லு படியாகும். தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணைகள் கட்டக் கூடாது.

                காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு.

                காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் இருந்த ஓரிரு பிழைகள் திருத்தப்பட்டதால் அது இறுதி தீர்ப்பாக செல்லும். நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்று கூறியுள்ளனர்.

                காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படுகிறது. எனவே, இறுதித் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இயலாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவிரி வழக்கில் சர்வ தாமதமாய் இறுதி தீர்ப்பு மேல்முறையீடு அற்ற தீர்ப்பு என்று இன்று வழங்கியுள்ளார்கள். இதில் கர்நாடகம் இதுவரை பலமுறை உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காமல் இருந்ததையும் நினைவில் கொள்ள வேண்டும். வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது , ஒரு நாட்டின் அதிகபட்ச நீதி வழங்கும் இடம் அதன் தீர்ப்பையே மதிக்காமல் பலமுறை நீதிமன்ற அவமதிப்பை செய்துள்ளது கர்நாடகா அரசு. அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சில மாதங்களுக்கு முன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் சொன்ன பின்பும் மத்திய அரசு அமைக்கவில்லை.

பா.ஜ.க.வின் முரண்பட்ட பேச்சுக்கள் :

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மெரீனாவில் போராட்டத்தைத் துவங்கியவர்களை காவல்துறை கைது செய்தனர். அதன்பின் மெரீனாவில் அதிகளவில் போலீஸார் குவிந்துள்ளனர். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் (ஆலோசனைக் கூட்டம் நடத்தியது தவிர) மத்திய அரசு எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறியது போன்று மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. ஆனால், ஆளும் பா.ஜ.க அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை. அதற்கான திட்டத்தை மட்டுமே வகுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிவித்து வந்தது. இதையேதான் கர்நாடகா அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடமாட்டோம். தீர்ப்பில் அவ்வாறு ஏதும் கூறவில்லை என்று முட்டுக்கட்டையாக இருந்தனர். ஆக, கர்நாடகா மற்றும் மத்திய அரசின் எண்ணம் ஒரே போக்கில் இருந்துள்ளது. ஆனால், தற்போது தமிழகத்தின் சார்பில் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இறுதி தீர்ப்பில் கூறியிருப்பது காவிரி மேலாண்மை வாரியமா அல்லது அது எந்த மாதிரியான திட்டம் என்று விளக்கம் கோரியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இறுதித்  தீர்ப்பு வந்து 6 வாரங்கள் ஆகிய நிலையில், தற்போதுதான் விளக்கமே கேட்டுள்ளது மத்திய அரசு. மத்திய அரசின் இத்தகைய மனு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முரண்பட்டதாகும். காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது கர்நாடகாவில் நடக்க உள்ள சட்டசபைத் தேர்தலை கணக்கில் கொண்டு பா.ஜ.க. அரசு தமிழகத்தை வஞ்சிப்பதோடு, தமிழக மக்களுக்கு மாபெரும் துரோகம் செய்து வருகிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டனம்

இதைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வன்மையாகக் கண்டித்து, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுப்பது பச்சை அரசியல்! அரசியல்!! அரசியலே!! என்று  தனது கடும் கண்டனத்தை அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார்கள். மேலும், அ.தி.மு.க. அரசின் இரட்டை வேடத்தையும் ஆசிரியர் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள். அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் மத்திய அரசுக்கு எதிராய் தற்கொலை செய்வோம் என்று கூறுவதும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் உண்ணாவிரதம் இருப்பதும், நாடாளுமன்றத்தை முடக்குவதும், பி.ஜே.பி.யோடு சேர்ந்து நடத்தும் நாடகம் என்றும் தோலுரித்துக் காட்டியுள்ளார்.

ஒருமித்த உணர்வு வேண்டும் ஆசிரியரின் வேண்டுகோள்

மேலும், தமிழர் தலைவர் அவர்கள், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இணைந்து நடத்தும் அந்தப் போராட்டத்தில் தமிழக அரசு வேற்றுமை காட்டாமல் அதில் கலந்துகொள்ள வேண்டும். அப்படி வேற்றுமை காட்டினால், அது எதிரிகளுக்குச் சாதகமாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்கிற தமிழகத்தின் குரலை வெடி வைத்துத் தகர்ப்பதாகவும் அமையும். இப்பொழுது தேவை ஒருமித்த உணர்வு _ ஒருமித்த குரல் _ ஒருமித்த  போராட்டம் என்று தமிழகத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

தேர்தல் ஆதாயத்திற்காக தமிழகத்திற்கு மத்திய அரசு செய்யும் மாபெரும் துரோகம்

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்த தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு மத்திய நீர்வளத்துறை அழைப்பு விடுத்தது. 4 மாநிலங்களின் அரசுப் பிரதிநிதிகளும் மார்ச் 9ஆ-ம் தேதி டெல்லி வரும்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அழைத்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்த்தது நடக்கவில்லை. ஆறுவார கால கெடு கொடுத்தும் கிணற்றில் போட்ட கல்லாக கிடப்பில் போட்டுவிட்டு, கெடு முடியும் நாளில் உச்சநீதிமன்றத்தில் விளக்கமும் வேண்டுகோளும் கொண்ட மனுவை மத்திய அரசு தாக்கல் செய்வது அரசியல் இலாபத்திற்காக இழைக்கும் அநீதி ஆகும்!

ஸ்கீம் என்றால் என்ன என்றும், காவிரி திட்டமாக அல்லது ஏதேனும் புதிய செயல்திட்டத்தை உச்சநீதிமன்றம் கூறுகிறதா என்று விளக்கம் கேட்டும்,

ஸ்கீம் என்றால் மேலாண்மை வாரியம் என தமிழகம், புதுச்சேரி கூறி வருவதாகவும் அது வாரியமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது கேரளா, கர்நாடகா வாதம் எனவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால்,  தீர்ப்பை அமல்படுத்துவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் தீர்ப்பாயத்தின் பரிந்துரைகளை மாற்றி அமைக்க முடியுமா? எனவும் மத்திய அரசு கேள்வியை எழுப்பியுள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமில்லாமல் நிர்வாக அதிகாரிகளையும் உள்ளடக்க முடியுமா? என்றும் மத்திய அரசு  குறிப்பிட்டுள்ளது. இது கர்நாடகத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தை வஞ்சிக்க வேண்டும் என்ற வெறியிலும் மத்திய அரசு செய்யும் வெளிப்படையான அநியாயமாகும்!

மத்திய அரசுதான் அப்படியென்றால் உச்சநீதிமன்றமும் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி மக்களின் அவநம்பிக்கைக்கு ஆளாகியுள்ளது.

உச்சநீதிமன்றம் நம்பகத்தன்மையை ஒரு போதும் இழக்கக் கூடாது!

பல ஆண்டுகளாய் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கும்போது அதற்கான பொறுப்புணர்ச்சி சிறிதும் இன்றி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு உரிய தண்ணீரின் அளவைக் குறைத்தது மட்டுமின்றி, கர்நாடகத்தின் நிலத்தடி நீரைக் கணக்கில் கொள்ளாது, தமிழகத்தின் நிலத்தடி நீரை மட்டும் கணக்கில் கொண்டதும் பாரபட்ச நிலையாகும். இவை உச்சநீதிமன்றத்தின் ஒருதலைச் சாய்வை உறுதி செய்வதாய் அமைந்தன. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து விளக்கம் கேட்கும் அளவிற்கு தெளிவற்ற தீர்ப்பு. விளக்கம் கோரியபின் நாங்கள் மேலாண்மை வாரியம் என்ற பொருளில் தீர்ப்பு வழங்கவில்லையென்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறுவது மிகவும் வேதனைக்குரியது. ஒரு தீர்ப்பு தெள்ளத்தெளிவானதாய் அமைந்திட வேண்டும் என்பதில் உச்சநீதிமன்றத்தின் பொறுப்பற்றத் தன்மையை இது பட்டவர்த்தனமாய்க் காட்டுகிறது.

மத்திய அரசு விளக்கம் கேட்டால் ஓரிரு நாளில் அதற்கு விளக்கம் அளித்துத் தீர்வு காண வேண்டிய உச்சநீதிமன்றம், மே 3ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளதால் கர்நாடகத் தேர்தல் முடியும்வரை இப்பிரச்சினையைக் கிடப்பில் போடும் மத்திய அரசின் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்துழைக்கிறது என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது. இது உச்சநீதிமன்றத்தின் நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இது மக்களாட்சிக்கும், மாநில உரிமைக்கும், அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரான அநீதியாகும். எனவே, உச்சநீதிமன்றமும் மத்திய அரசும் தமிழகத்தின் உரிமையை உடன் பாதுகாக்க வேண்டும்! அதற்கு தமிழகத்தின் உரிமையை உறுதியாக நிலைநாட்ட வேண்டும்! இல்லையேல் இந்திய நாட்டின் ஒருமைப்பாடு  குலையும் நிலையை அது உருவாக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *