தந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி தந்த சிறப்புக் கூட்டம்

ஏப்ரல் 01-15

 தமிழோவியன்

“தந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி’’ எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் திராவிடர் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 20.03.2018 அன்று மாலை மிக எழுச்சியுடன் நடைபெற்றது.

மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வரவேற்புரையாற்றினார்.

இரங்கல்

சிறப்புக் கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ் உணர்வாளரும், இன உணர்வாளருமாகிய ‘புதிய பார்வை’ இதழாசிரியர் ம.நடராசன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைவரும் எழுந்து நின்று அமைதிகாத்து மரியாதை செலுத்தினார்கள்.

நூல் வெளியீடு:

திராவிடர் கழக நிகழ்ச்சி என்றாலே நூல் வெளியீடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும். அந்த வகையில் இந்நிகழ்ச்சியிலும் அய்ந்து நூல்கள் வெளியிடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தந்தை பெரியாருக்கு எதிராக பார்ப்பனர்களால் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்ற பல்வேறு அவதூறுகளை எடுத்துக்காட்டி, அவற்றுக்குத் தக்க ஆதாரங்களுடன் சிறப்புக் கூட்டத்தில் பதிலடி தரப்பட்டது.

எழுத்தாளர் மஞ்சை வசந்தன்

பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி செயலாளர் மஞ்சை வசந்தன் அவர்கள், இன்றைய நிகழ்ச்சியை தோழர்கள் சமூக ஊடகங்களில் மிக அதிகமாய்ப் பரப்ப வேண்டும் என்ற கோரிக்கையோடு, “தமிழை தந்தை பெரியார் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு போகக் கூடாது என்றார் பெரியார். ஆங்கிலத்தை உயர்த்திப் பிடித்து தமிழை தாழ்த்திப் பேசினார் பெரியார்’’ என்று பார்ப்பனர்கள் அள்ளி வீசுகின்ற அவதூறுகளுக்கெல்லாம் ‘குடிஅரசு’, ‘விடுதலை’ போன்ற ஏடுகளை ஆதாரமாகக்  காட்டி தக்க பதிலடி தந்தார்.

மேலும், “தந்தை பெரியார் ஒருபோதும் தமிழையும் தமிழரையும் தாழ்த்திப் பேசியதே இல்லை. தமிழ் உணர்வு தமிழ்நாட்டில் மேலோங்கி இருக்கிறது. தமிழை பெரியார் தாழ்த்திப் பேசினார் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தால் தமிழர்கள் பெரியாரை வெறுப்பார்கள் என்ற தீய எண்ணத்துடனே இவ்வாறு எதிரிகள் அவதூறுகளை பரப்புகின்றனர். பெரியார் தமிழ் மொழியை சீர்திருத்த வேண்டும் என்று உழைத்தாரே தவிர சீர்கெடுக்க அல்ல’’ என்று மிக நேர்த்தியாய் ஆணித்தரமாய் ஆதாரங்களோடு பார்ப்பன பதர்களுக்குப் பதிலடிக் கொடுத்தார்.

பெரியார் அவர்கள் தமிழுக்கு செய்த தொண்டு பற்றியும், அவருடைய தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றியும் மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பெரியாரை வானளாவிப் புகழ்ந்ததைப் பற்றியும் மிக அழகாக எடுத்துக் கூறி உரையாற்றினார்.

கவிஞர் கலி.பூங்குன்றன்

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், “தாழ்த்தப்பட்ட வர்களுக்கு எதிரானவர் பெரியார், கீழவெண்மணியில் தாழ்த்தப்பட்டவர்கள் எரிக்கப்பட்டபொழுது அவர்களுக்காக குரல் கொடுக்காதவர் பெரியார்’’ என்பது போன்ற ஆரிய கும்பல்களின் அவதூறுகளுக்கு ஆணித்தரமான ஆதாரங்களோடு மறுப்பு தெரிவித்தார். மேலும், “எனக்கு பிள்ளையிருந்தால் அதுவும் பெண் பிள்ளையாக இருந்தால் தாழ்த்தப்பட்ட குடும்பத்திலேயே பெண் கொடுத்திருப்பேன்’’ என்று, பெரியார் கூறியதையும், விலைவாசி உயர்வுக்கு பறைச்சிகளெல்லாம் ரவிக்கைத் துணி போடுவதுதான் காரணம் என்று தந்தை பெரியார் கூறியதாக பார்ப்பனர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து அவதூறு பரப்பியதை ஆதாரத்தோடு மறுத்தும், நீடாமங்கலத்தில் தாழ்த்தப்பட்ட தோழர்கள் சமபந்தியில் அமர்ந்து சாப்பிட்டபோது அவர்கள் மொட்டையடிக்கப்பட்டு வாயில் சாணிப்பால்    ஊற்றப்பட்டதையும் அவர்களுக்காக பெரியார் போராடியதையும், அவர்களை அழைத்து ஈரோட்டில் ஆதரவு கொடுத்ததையும் அதில் சிலருக்கு அரசுப் பணி கிடைக்க ஏற்பாடு செய்ததையும் எடுத்துக் கூறினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
ஆசிரியர் அவர்கள் உரையிலிருந்து…

“மிகக் குறுகிய காலகட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இந்த அரங்கத்திற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே பரப்ப வேண்டும், பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டதே இந்த நிகழ்ச்சி.

நாம் 2018இல் நடத்திய உலக நாத்திகர் மாநாட்டை மரியாதைக்குரிய ஆ.ராசா தொடங்கி வைத்ததையே கிறித்துவ மதத்தைச் சார்ந்த பேராசிரியர் எஸ்றா சற்குணம் தொடங்கி வைத்ததாக பொய்பேசி திரிந்தவர் காரைக்குடி ஷர்மா. எஸ்றா சற்குணம் அவர்கள் இதை மறுத்தும் மீண்டும் மீண்டும் அந்தப் பொய்யை உச்சரித்ததுதான் இதில் வேடிக்கை.

தமிழ் எழுத்துகளை சீர்திருத்தியவர் தந்தை பெரியார். அவர் செய்த சீர்திருத்தத்தைத்தான் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களும் சிங்கப்பூர் அரசும் மற்றும் உலகத் தமிழர்களும் ஏற்றுக் கொண்டனர். தந்தை பெரியார் தமிழுக்காக நடத்திய போராட்டங்களும், மாநாடுகளும் எண்ணற்றவை. இந்துக்களை மட்டுமே விமர்சனம் செய்கிறோம் என்றும், கிறித்துவர்கள், முசுலீம்களை விமர்சனம் செய்வதில்லை என்றும் சொல்கிறார்கள். நாங்கள் இந்துக்களை மட்டும் எதிர்க்கவில்லை. மூடபழக்கங்களும் அடிமைத் தனங்களும் எங்கு நடந்தாலும் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். புண் எங்கு இருக்கிறதோ அங்குதானே மருந்து தடவ முடியும்? கற்பு என்பது இரு பாலருக்கும் இருக்க வேண்டும். ஆண்கள் இரண்டு வைப்பாட்டிகள் வைத்துக் கொண்டால் பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும். அப்பொழுதுதான் நிலைமை சரியாகும், தவறும் தடுக்கப்படும் என்று பெரியார் சொன்னதை ஆழமாகச் சிந்தித்து புரிந்துகொண்டால் அதன் அர்த்தம் புரியும்.

கீழவெண்மணி நிகழ்வு, நீடாமங்கல கொடுமை ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டோருக்காக பெரியார் ஆதரவாய் இருந்தார். எங்களிடம் இவை எல்லாவற்றிற்கும் ஆதாரங்கள் உள்ளன. ஆதாரம் இல்லாமல் நாங்கள் பொதுக்கூட்டங்களில் கூட பேசுவது கிடையாது. ஆகவே, எங்களிடம் அவதூறு பரப்புபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எங்கள் இடத்தில் இந்த விளையாட்டெல்லாம் கூடாது. உண்மைக்கு மாறாகவும், திரிபு வாதங்களையும் பெரியாரைப் பற்றி அவதூறுகளையும் பரப்பி பெரியாரின் பிம்பத்தை உடைக்கலாமென்று நினைத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். பிள்ளையார் சிலைகளை நாங்கள் நாள், தேதி குறிப்பிட்டு தைரியமாய் வீதி வந்து உடைத்தோம். ஆனால், நீங்களோ பெரியார் சிலையை திருட்டுப் பயல்களைப் போல் இருட்டில் வந்து உடைத்திருக்கிறீர்கள்! இது பெரியார் மண். இங்கு பெரியாரை மறுக்க முடியாது, மறைக்க முடியாது, திசைதிருப்பிவிட முடியாது. பெரியார் வாழும்போதும் எதிர் நீச்சலடித்தார். இப்போதும் எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறார். பெரியார் வெல்வார். பெரியார் எப்போதும் தேவை. பெரியார் கலங்கரை விளக்கம்.’’ இவ்வாறு தமிழர் தலைவர் எழுச்சியுரையாற்றினார்.

விழா நிறைவு

மிக அதிரடியாய் நடைபெற்ற இந்தச் சிறப்புக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகள், சமூக அமைப்புகள், மதப் பெரியோர்கள் அறிஞர் பெருமக்கள், திராவிட இயக்கத் தோழர்கள், பொதுமக்கள் என அரங்கம் நிறைந்து காணப்பட்டனர். இரவு 9.30 மணியளவில் நிகழ்ச்சி மிகச் சிறப்புடன் நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *