குன்றக்குடி அடிகளார்

மார்ச் 16-31

“இன்று கோயிலுக்கும், ஹோட்டல்களுக்கும் வித்தியாசமின்றி வியாபார ஸ்தலமாக ஆக்கி விட்டார்கள். காப்பிக் கடையில் விற்கப்படும் பலகாரங்களின் விலை ஒவ்வொன்றும் என்ன என்ன என்று வரிசையாய் பலகையில் விலை போட்டு இருப்பது போல, கோயிலிலும் இறைவனை வழிபடுவதற்கும் இன்ன இன்ன ரேட் (விகிதம்) என்று ஆக்கிவைத்து விட்டார்கள்’’ (‘விடுதலை’ – 6.12.1960 பக்கம் 3) இவ்வாறு பேசியவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.

கருஞ்சட்டைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கருத்தை காவி உடையில் சொன்னவர்தான் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.  தவத்திரு அடிகளார் அவர்களைக் கருப்புச்சட்டை சாமியார் என்று பொதுமக்கள் வருணிக்கும் அளவுக்கு நிலைமை இருந்ததை, யார்தான் மறுக்க முடியும்? “தமிழர்களின் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகைபோல் ‘விடுதலை’ தமிழரது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும்.’’ என்றாரே – என்னே இனநலம் – தமிழ்நலம்!  ஆதாரம் : ‘விடுதலை’ 2.11.1965  
நினைவு நாள்: ஏப்ரல் 15 (1995)   

பி.பி. மண்டல்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் ஆளுநருமான பி.பி. மண்டல் அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் 340 ஆவது பிரிவின்படி மத்திய அரசால் அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நலன்கள் பற்றி ஆராயும் இரண்டாவது குழுவின் தலைவர் ஆவார்.

இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து 405 மாவட்டங்களில் நேரில் சென்று ஆய்வு செய்து இரண்டாண்டு 9 திங்கள் இக்குழு முழு அறிக்கையை குடியரசுத் தலைவர் நீலம்

சஞ்சீவி ரெட்டி அவர்களிடம் அளித்தது (31.12.1980).  இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஒரு குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைப்பதற்காகக் கூட திராவிடர் கழகம்தான் போராட வேண்டியிருந்தது. பி.பி. மண்டல் அவர்களும், அவர்தம் குழுவினரும் சென்னைப் பெரியார் திடலுக்கு அழைக்கப்பட்டு நல் வரவேற்பும் அளிக்கப்பட்டதுண்டு (30.6.1979). “நாங்கள் அறிக்கையைத் தயாரித்து அதனை அரசிடம் கொடுக்க முடியும். அதனை செயல்பட வைக்கும் ஆற்றல் தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணில், திராவிடர் கழகத்திடமும், அதன் தலைவர் வீரமணி அவர்களிடத்திலும்தான் இருக்கிறது’’ என்று மனந்திறந்து பேசினார் மண்டல்.
நினைவு நாள்: ஏப்ரல் 13 (1982)

ஏ.வி.பி. ஆசைத்தம்பி

சுயமரியாதைச் சுடரொளி ஏ.வி.பி.ஆசைத்தம்பி மாணவப் பருவத்திலேயே சுயமரியாதை இயக்கக் கருத்துகளிலே ஈடுபாடு கொண்டு – தந்தை பெரியாரைச் சுற்றியே தம் சிந்தனைகளை வளப்படுத்திக் கொண்டவர். இவரின் தந்தையார் பழனியப்பனார் சுயமரியாதைச் சுடரொளியாவார்! ‘காந்தியார் சாந்தி அடைய’ என்ற அவரின் நூல் அன்றைய காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது; அவரும் சிறை பிடிக்கப்பட்டார்; சிறையில் மொட்டையும் அடிக்கப்பட்டார்! தனித்தன்மை வாய்ந்த எழுத்தாளர்! ‘தனியரசு’ எனும் இதழை நடத்தினார். திரைப்படங்களுக்கும் உரையாடல் எழுதி இருக்கிறார். அன்னை மணியம்மையார் அவர்களால் 1974 டிசம்பரில் அய்யா நினைவு நாளையொட்டி நடத்தப்பட்ட ‘இராவண லீலா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கர்ச்சனை செய்தார். நெருக்கடி நிலை காலத்தில் மிசா கைதியாகச் சென்னை சிறையில் இருந்த நேரத்தில் பெரும்பாலும் திராவிடர் கழகத் தோழர்களுடனேயே நேரத்தைக் கழித்தார். அரசியலுக்குச் சென்றதால் பகுத்தறிவுக் கருத்துகளை இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் சொல்லும் கடமையிலிருந்து தவறிவிட்டோம் என்று வெளிப்படையாகக் கூறியவர்.

நினைவு நாள்: ஏப்ரல் 7 (1979)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *