ஆசிரியர் பதில்கள்

ஏப்ரல் 01-15

கே:    ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு 16 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய பி.ஜே.பி அரசுக்கு அழுத்தம் தருகிறார். ஆனால், தமிழ்நாட்டின் நிலை தலைகீழாக உள்ளதே?
                        –               -மல்லிகா, மாங்காடு
ப:    அவர்கள் சுதந்திரமானவர்கள். இங்கே டெல்லியின் ஆணைப்படி ஆளும் அ.தி.மு.க.
(சு)தந்திரமானவர்கள்? ஏ தாழ்ந்த தமிழகமே!

 

கே:    ஒருபுறம் சமூகநீதிக்கு வேட்டு வைத்துக்கொண்டு, மறுபுறம் சமூகநீதியே நமது குறிக்கோள் என்று பிரதமர் மோடி கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?    
 – ரா.நல்லசிவம், தேனி
ப:    அவரது ஆர்.எஸ்.எஸ்.க்கு கைவந்த கலை -_ இரட்டை வேடம்; கபட நாடகம்!

 

கே:    ‘தென்னிந்தியாவை தனி நாடாக்கப் போராட வேண்டியதின் தேவை இருக்கும்’ என்று தெலுங்குதேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முரளிமோகன் பேசி இருப்பதைத் தாங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
    –         -எம்.லட்சுமி, திருத்தணி
ப:    கன்னடத்தில் அந்நிலை அரும்புகிறது. கேரளாவில் ஹிந்தி எதிர்ப்பு, திராவிடப் பண்பாடு _ மாவலி _ ஓணம் கதை மூலம்; ஆந்திராவிலும் பூக்கிறது! எதிர்காலத்தில் நமக்குப் பதிலாக அவர்கள் ‘திராவிட நாடு’ கேட்பார்கள் போலும்!

 

கே:    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் மீது, ராகுல்காந்தி கருணை காட்டுவதைக்கூட, பா.ஜ.க. சு.சுவாமி சந்தேகிக்கிறாரே?    
  ——-தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
ப:    அரசியல் புரோக்கர்களுக்கு எல்லாமே சந்தேகங்கள்தான்!

 

கே:    மதங்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், ரஜினியின் ஆன்மீக அரசியலில் தனக்கு நம்பிக்கை இல்லை’ என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறியிருப்பது குழப்பத்தின் உச்சம் என்று எடுத்துக்கொள்ளலாமா?
               –     -பா.ஆறுமுகம், கோவை
ப:    அவரது ஆழ்ந்த கருத்து _ நம்மைப் போன்ற சிற்றறிவு உள்ளவர்களுக்குப் பல நேரங்களில் புரிவதே இல்லை! என்ன செய்ய?

 

கே:    தமிழகத்தின் நலனை, தேசிய கட்சிகள் எண்ணிப் பாராமலே இருப்பது எதனைக் காட்டுகிறது?
    – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப:    தேசீயக் கட்சிகள் என்ற தேய்மானங்களைப் பற்றி ஏன் அதிகம் கவலைப்படுகிறீர்கள்? இங்கே இருப்பவர்கள் உள்ளூர் தலைவருக்கு இருமல் வந்தால்கூட கேட்டுத்தானே இரும்ப வேண்டிய நிலை!

 

கே:    ‘உலகம் கடவுளால் படைக்கப்படவில்லை’ என்ற நாத்திக முற்போக்குக் கருத்துக்களைச் சொன்ன ஸ்டீஃபன் ஹாக்கிங் நூல்களை தமிழில் வெளியிடுவீர்களா?
    –         -இல.சங்கத்தமிழன், செங்கை
ப:    யோசனைக்கு நன்றி! நிச்சயம் செய்வோம்.

 

கே:    மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெறுவதால், வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்த வேண்டும் என்று பலதரப்பினரும் வலியுறுத்துவது பற்றி தங்கள் கருத்து?
              – -காசிநாதன், தெற்கிருப்பு, கடலூர்
ப:    வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தும் கோரிக்கை பலராலும் வற்புறுத்தப்படுவதால் அதை ஏற்கலாம் என்பதே நம் கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *