ஈழத் தந்தை செல்வா

மார்ச் 16-31

ஈழத் தந்தை செல்வா

 

இருள்படிந்த ஈழத்து அரசியல் வானில் இளஞாயிறு எனத் தோன்றியவர் தந்தை செல்வநாயகம்.

விடுதலை தவறி, பாழ்பட்டுக் கிடந்த ஈழத் தமிழ் மக்களையெல்லாம் ஒற்றுமைப்படுத்தி ஒளி பொருந்திய வாழ்வு நமக்கு உண்டு; தன்னம்பிக்கையுடன் வாழ்; தன்மானத்துடன் வாழ் என்று புது வழிகாட்டி, புத்துணர்வு ஊட்டி வழிநடத்திச் சென்றவர் அவர். வெள்ளையர் வெளியேற அந்த இடத்தில் சிங்களர் ஆதிக்கம் தலை தூக்கியதே இலங்கை வரலாற்றில் நாம் கண்ட கசப்பான உண்மையாகும். இந்தச் சிங்கள வல்லாண்மையை உலகம் வியக்கின்ற முறையில் எதிர்த்து, ஓங்கிக் குரல் எழுப்பி, தொலைநோக்குச் சிந்தனையுடன் பணியாற்றிய பெருந்தகைதான் தந்தை செல்வா.

அவர் தலைமையில் ஈழத்து மக்கள் வீரதீரச் செயல்களில் ஈடுபட்டபோதும், தம் எல்லைப் பரப்பும் எண்ணிக்கையும் குறைந்த நிலையில், தமிழகத்தின் அரவணைப்பையே அவர் நாடி நின்றார். எனவேதான் 1972இல் தந்தை செல்வா தலைமையில் ஒரு குழு தமிழகம் வந்து தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் ஆகிய பல தலைவர்களைச் சந்தித்து ஆற்றிய பணி இங்கு நினைவு கொள்ளத்தக்கது. 1977இல் தடுமாறி விழுந்தபோது தலையில் காயமுற்று தந்தை செல்வா மருத்துவ விடுதியில் சேர்க்கப்பட்டபோது இப்பெருமகனைக் காப்பாற்ற கலைஞர் ஆற்றிய பணி மறக்க முடியாது. தமது இறுதி மூச்சுவரை, கொள்கைப் பிடிப்பில் எவ்வித தளர்ச்சியையோ ஊசலாட்டத்தையோ காட்டாது ஈழ விடுதலைக்கு  உறுதியோடு விளங்கினார்.   



 

  அறிவுத்திரு ஜி.டி.நாயுடு

 

 

இருபதாம் நூற்றாண்டில் ஈடு இணையில்லாத புகழ்மிக்க ஒரு அறிவியல் பேரறிஞர் – விஞ்ஞானி தமிழகத்தில் தோன்றினார். அவர்தான் கோவைப் பெற்றெடுத்த கொங்குநாட்டுத் தங்கம் ஜி.டி.நாயுடு அவர்கள். திண்ணைப் பள்ளிவரைதான் படித்தவர் என்றாலும் தாமாகவே ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டு பல்துறை தமிழ் நூல்களைப் படித்து, தன்னை வளப்படுத்திக் கொண்டார். நாள் பூராவும் நிலத்துச் சகதியில் இறங்கி மன்றாடும் ஆண்களுக்கு மூன்றரை அணாவும், பெண்களுக்கு இரண்டரை அணாவும் குறைந்த ஊதியமாக்கப்பட்டதை தைரியமாய் நிலச் சொந்தக்காரரிடம் பேசி, விவசாயக் கூலிகளுக்கு அதிகச் சம்பளம் பெறும் முயற்சியில் வெற்றியும் பெற்றார். 1921இல் ஒரு பேருந்து வாங்கி, அதன் ஓட்டுநர், நடத்துநர், சுத்தம் செய்பவர், உரிமையாளர் அனைவராகவும் அவரே செயல்பட்டு ஒரு நாளைக்கு 18 மணிநேரம் கடுமையாக உழைத்தார். 1922இல் இரண்டு, 1924இல் இருபத்தி மூன்று, 1933இல் இருநூற்று அய்ம்பதைத் தாண்டி, இந்தியாவிலேயே பேருந்து நிர்வாகத்தில் ஒரு முன்னோடியாய்த் திகழ்ந்தார். தொழிற்துறையில் மட்டுமல்லாது விவசாயத் துறை, மருத்துவத் துறை என அவரது புதிய கண்டுபிடிப்புகள், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின. 1945க்குப் பிறகு வருமானவரிப் பிரிவினருடன் ஏற்பட்ட முரண்பாடு, நாயுடு அவர்களின் முயற்சிகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் தடையாக இருந்தன. வருமானவரித் துறையில் பணியாற்றிய பிராமணர்களால் அறிவுத்திரு.நாயுடுவின் வளர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதே இதன் அடிப்படைக் காரணம். அறிவுத்திரு நாயுடு அவர்கள் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருடன் நெருங்கிய நட்பு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நாயுடு அவர்கள் பயணம் செய்யாத நாடுகள் இல்லை. அவர்தம் காலடி படாத தொழிலகங்கள் உலகினில் இல்லை. நாயுடு அவர்கள் கண்டுபிடிப்பாளர்; ஆய்வாளர்; இன்வென்டர்; வணிகத்துறையில் வெற்றி கண்டவர், நாட்டுப் பற்றாளர். அவரது நூலகத்தில் விஞ்ஞானம் பற்றி மட்டும் 18,000 நூல்கள் வைத்திருந்தார் என்றால், அவரது நூலறிவுத் திறனை தெளிவாக நாம் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *