– ஆறு.கலைச்செல்வன்
ஏழு அல்லது எட்டாம் வகுப்பில் படித்தபோது எனது வரலாறு பாடப் புத்தகத்தில் உலக அதிசயங்களைக் குறிப்பிட்டு அதில் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் எனக் குறிக்கப்பட்டு அதன் படமும் வரைந்த நிலையில் அச்சிடப்பட்டிருந்தது இன்றும் என் நினைவில் உள்ளது.
அந்தப் பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு எனது 64ஆவது வயதில் கிடைத்தது.
2017ஆம் ஆண்டு ஜூலை 27, 28 தேதிகளில் ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை பன்னாட்டு மாநாட்டில் கலந்துகொண்டேன். அதற்குப் பிறகு சுவிஸ், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் நண்பர்களுடன் மேற்கொண்டேன்.
ரோம் நகரிலிருந்து பைசா நகரத்திற்கு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி காலை 9 மணிக்கு எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.
பைசா நகரம் ரோம் நகரிலிருந்து 355 கி.மீ. தொலைவில் உள்ளது. பேருந்து கிளம்பியதும் வழக்கம் போல் எல்லாத் திசைகளிலும் கண்களை சுழல விட்டேன். வழியெங்கும் அடர்ந்த மரங்கள்; மலைத் தொடர்கள். எதிரெதிரே உள்ள கிராமங்களை இணைக்க மேம்பாலங்கள். சாலை ஓரமாக நெடுகிலும் கம்பி வேலி விடப்பட்டிருந்தது. மலைத் தொடர்களை அடுத்து சமவெளிகளில் விவசாயம் தழைத்திருந்தது. ஒரு சென்ட் நிலம்கூட தரிசாகக் கிடக்கவில்லை. மலைச் சரிவுகளில் பல இடங்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சூரியகாந்தி பயிரிடப்பட்டிருந்தது. பல வயல்களில் கோதுமை அறுவடை செய்யப்பட்டிருந்தது. அதன் வைக்கோல்களை அழகாக சுருட்டி வைத்திருந்தனர்.
காலை 11 மணிக்கெல்லாம் நல்ல வெயில் அடித்தது. வெப்ப நிலை 35 டிகிரி செல்சியசாக இருந்தது. வழியில் பல கிராமங்கள் காணப்பட்டன. வீடுகள் எளிமையாக ஒரே நிறத்தில் காணப்பட்டன. பல மாடிக் கட்டிடங்கள் இல்லை. எல்லாமே ஓட்டு வீடுகள்தான். வயல்களில் பல இடங்களில் சிதிலமடைந்த பழமையான வீடுகள் காணப்பட்டன.
பைசா நகரத்து பேருந்து நிலையத்தில் மதியம் சுமார் 1.30 மணியளவில் பேருந்து நின்றது. பிறகு சாலையில் செல்லத்தக்க வகையில் இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்ட டிராக்டர் போன்ற இயந்திரம் கொண்ட காரில் எங்களை கோபுரம் உள்ள இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பேருந்துகள் அங்கு செல்ல அனுமதி இல்லை. அந்தக் காரில் சென்றது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
கார் ஓரிடத்தில் நின்றது. நின்ற இடத்தைச் சுற்றிலும் மிகப் பெரிய சுவர் காணப்பட்டது. அதன் நடுவில் வளைவுடன் கூடிய வழி காணப்பட்டது. அதன் வழியே உள்ளே நுழைந்தேன். எதிரே பார்த்தபோது அப்படியே அசந்துபோய் நின்று விட்டேன். ஆம்! எதிரே நான் சிறுவயதில் வரலாறு பாடப் புத்தகத்தில் பார்த்த அந்த பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் வெண்ணிறத்தில் பளிச்சென காணப்பட்டது. உலக அதிசயங்களில் ஒன்றான அந்த சாய்ந்த கோபுரம் முற்றிலும் பளிங்குக் கற்களால் ஆனது.
உண்மையில் அது ஒரு மணிக்கோபுரம்தான் (ஙிமீறீறீ ஜிஷீஷ்மீக்ஷீ). பைசா நகரில் ஒரு கதீட்ரல் கட்டப்பட்டது. அதற்குப் பக்கத்தில் கி.பி.1173ஆம் ஆண்டு ஒரு மணிக்கோபுரம் கட்டப்பட்டது. ஆனால், அதன் மூன்றாவது மாடி கட்டப்பட்டபோது அது சாயத் தொடங்கியது. பக்கத்தில் இருந்த மண் உறுதியாக இல்லாததே அதற்குக் காரணம், உடனே கட்டிட வேலை நிறுத்தப்பட்டது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆயிரக்கணக்கான கட்டிட வல்லுநர்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் எட்டு மாடிவரை கட்ட முடிவெடுத்தார்கள். கி.பி.1174 முதல் கி.பி.1370ஆம் ஆண்டு வரையில் பல கட்டங்களாக இது கட்டி முடிக்கப் பட்டதாம். இதன் உயரம் அஸ்திவாரத்திலிருந்து 58.36 மீட்டரும், தரைப் பகுதியிலிருந்து 55 மீட்டரும் ஆகும். இதன் எடை 14,500 டன்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது கட்டி முடிக்கப்பட்ட பின் ஒவ்வோர் ஆண்டும் அங்குலம் அங்குலமாக சாய்ந்துகொண்டே வந்தது. ஆனால், பத்தாண்டுகளுக்குமுன் இது சாயாமல் இருக்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் விளைவாக 800 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சாய்வது நின்றுவிட்டது. 1934இல் இத்தாலியை ஆண்ட முசோலினி இதை ஒரு தேசிய அவமானமாகக் கருதினாராம்.
கோபுரத்தின் மேல்தளத்தில் ஏழு மணிகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், கட்டிடத்தின் பாதுகாப்பு கருதி அவைகள் ஒலிக்கப் படுவதில்லை. இதன்மேல் ஏறுவதற்கு 294 படிக்கட்டுகள் உள்ளன.
பைசா நகருக்கு மற்றொரு மிகப் பெரிய பெருமையும் உண்டு. வானவியல் அறிஞர் கலிலியோ கலிலி (15.2.1564 _ 8.1.1642) அவர்களின் பிறந்த ஊர் பைசா நகரமாகும். அவர் பைசா கோபுரம் மேலேறி புவிஈர்ப்பு விசையை ஆய்வு செய்துள்ளாராம்.
இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலியில் பல ஊர்களும் கட்டடங்களும் எதிரிப் படைகளால் தரைமட்டமாக்கப்பட்ட போது அதிலிருந்து பைசா கோபுரம் தப்பிவிட்டது.
இந்த அழகிய கோபுரத்திற்கு முன் குடியாத்தம் மானமிகு சடகோபன் திடீரென உடற்பயிற்சிகளும் யோகாசனங்களும் செய்தார். அதை வெளிநாட்டினர் அனைவரும் கைதட்டி உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
கத்தீட்ரலை அடுத்து செயின்ட்ஜான் திருமுழுக்கு எனப்படும் ஞானஸ்தானம் செய்யுமிடம் (ஜிலீமீ றிவீணீ தீணீஜீவீமீக்ஷீஹ் ஷீயீ ஷி.யிஷீலீஸீ) வட்ட வடிவில் அழகிய கட்டிடமாக அமைந்துள்ளது. இது கி.பி.1152ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்து கி.பி.1363ஆம் ஆண்டு முடிவுற்றதாம். அதன் உள்ளே உள்ள தூண்களும் குவிமாடமும் பளிச்சிடும் பளிங்குக் கற்களும் பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளன.
பைசா கோபுரத்தின் மேலேறி பார்க்க ஒரு நபருக்கு கட்டணம் 18 ஈரோக்களும் (நமது பணத்தில் ரூபாய் 1375) திருமுழுக்கு கட்டிடம் செல்ல 8 ஈரோக்களும் (ரூபாய் 610) நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் சில அரங்குகளுக்குச் செல்லவும் கட்டணம் உண்டு.
இவ்வாறு இந்தக் கட்டடங்கள் அரசுக்கு மாதத்திற்கு பல கோடிக்கணக்கான ரூபாய்களை வருவாயாக ஈட்டித் தருகிறது. வெளிநாட்டுப் பயணிகள் பலர் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து பார்க்கின்றனர். அவர்களுக்கு கோபுரத்தின் முன்புறமாக உள்ள ஒரு தூணில் ஒரு கருங்கல் சிலையிலிருந்து குளிர்ந்த நீர் இலவசமாக எப்போதும் கிடைக்கும்வண்ணம் ஊற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. கழிவறை வசதி உள்ளது. சுற்றிலும் புல்தரை. எந்த இடத்திலும் காலணிகளை அணிந்தே செல்லலாம். சட்டையை கழற்று, காலணிகளை கழற்று என்றெல்லாம் கட்டுப்பாடுகள் கிடையாது. நுழைவுச் சீட்டு பணம் முழுவதும் அரசுக்கே சேர்கிறது. தனி மனிதக் கொள்ளை இல்லை. புனிதம், ஆகம விதிகள் என்றெல்லாம் கூறி மக்களை ஏமாற்றும் நம் நாட்டு நிலை முறியடிக்கப்பட வேண்டும்.