பறை – 4

மார்ச் 16-31

– முனைவர் ப.வளர்மதி

பறையில் செய்தி கூறிய முறை

பறையில் செய்தியைத் தெரிவிப்பதற்குக் குறிப்பிட்ட இசைப்பு முறையை கையாண்டிருக்க வேண்டும். இன்றும் பறை அடிக்கும் இசைப்பைக் கொண்டு தொலைவில் உள்ள மக்கள் இறப்பு, திருமணம், திருவிழா, பிற கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அறிந்து கொள்கின்றனர். சிலப்பதிகாரத்தில் இடம் பெறும் வஞ்சிக் காண்டத்து காட்சிக் காதையில் நீண்ட பறை செய்தியை அறிவித்துள்ளனர். சேரன் செங்குட்டுவனின் ஆட்சியின்போது சேரநாட்டுத் தலைநகரான வஞ்சியில் பிறநாட்டு ஒற்றர் இருந்தனர் என்றும், அவர் தம் அரசர்க்கு மறைமுகமாகச் செய்தியைப் பறையறைந்து அறிவிக்க வல்லவர் என்றும், பறைமுறையுடன் திருமுகம் வழிச் செய்தி அறிவிக்கும் முறையும் இருந்தது எனவும், செங்குட்டுவனின் அரச யானையின் பிடரியில் பறையை ஏற்றி வள்ளுவர் சமூகத்தினர் செய்தியைத் தெரிவித்தனர் என்றும், அவர்கள் அறிவித்த செய்தி இன்னது என்றும், வஞ்சிக் காண்டத்துக் காட்சிக் காதை குறிக்கின்றது.

வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை

ஊழிதொறூழி யுலகங் காக்கென

விற்றவைக் கொண்ட வியன்பே ரிமயத்தோர்

கற்கொண்டு பெயருமெங் காவலன் ஆதலின்

வடதிசை மருங்கின் மன்ன ரெல்லாம்

இடுதிறை கொடுவந் தெதிரீ ராயின்

கடற்கடம் பெறிந்த கடும்போர் வார்த்தையும்

கேட்டு வாழுமின் கேளீராயின்

தோட்டுணை துறக்கும் அறிவொரு வாழுமின்

தாழ்கழல் மன்னன் தன்திரு மேனி

வாழ்க சேனாமுகம்

இத்தகைய நீண்ட செய்தியை எவ்வாறு பறை கொண்டு அறிவித்தனர்? இச்செய்தியை இசைப்பாக மாற்றியே அறிவிக்க இயலுமாதலால், தமிழில் அக்காலத்தில் இசைப்பு ஓர் அழுத்தமான பண்பாக இருந்திருத்தல் வேண்டும். அதாவது இசைப்பு வேறுபாட்டால் பொருள் வேறுபட்டிருத்தல் வேண்டும் என முனைவர் நிர்மல் செல்வமணி தொல்காப்பிய இசைமரபும் பிறநாட்டு இசைமரபும் என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்திற்குச் சான்றாக பின்வருமாறு எடுத்துக்காட்டியுள்ளார்.

சீன மொழியில் மா என்ற சொல் நால்வகை ஒலிப்பால் நான்கு வெவ்வேறு பொருள்களைத் தரும். ஒவ்வொன்றிற்கும் வேறுவேறு இசைப்பு இருந்திருத்தல் வேண்டும். இசைப்பினால் எப்பொருள் உணர்த்தப்படுகின்றது என்பதைக் கேட்போர் தெரிந்து கொள்ளவும் இயலும். இது ஒரே சொல்லிற்கு எவ்வாறு பல பொருள்களை வழங்க நேர்ந்தது என்ற கேள்விக்கு ஏற்ற விடையும் ஆகும். அவ்வாறே ஒரே சொல்லின் இருவேறு எதிர்மறைப் பொருள்களை வேறுபடுத்திக் காணவும் உதவும். எடுத்துக் காட்டாக பெருகு, சுருங்கு என்ற இருவேறு பொருள்களையும் உடைய, நந்து என்ற சொல்லிற்கு இருவேறு இசைப்பினால் குறித்த பொருளை உணர்த்த இயலும் என முனைவர் நிர்மல் செல்வமணி ஆய்வு செய்து குறிப்பிட்டுள்ளார்.

பறை கருவியின் அமைப்பு

பறை விலங்கின் தோலால் போர்த்தப்பட்ட ஒரு கருவி. பொதுவாகத் தமிழர்கள் தோற்கருவிகளுக்குப் பல விலங்கினங்களின் தோலினைப் பயன்படுத்தி வந்துள்ளனர். விலங்கின் தோலால் பரப்பி மூடிப் போர்த்தப்பட்டு தோல் வார்களால் இறுக வலித்துக் கட்டப்பட்டது. மேற்புறப் பரப்பின் ஓரங்களில் துளையிட்டுத் தோல் போர்த்து, தோலின் வாரால் இறுக வலித்துக் கட்டினால் இதற்குப் பறை என்று பெயர். பறையின் அமைப்பு இதுவேயாகும். விசித்து வாங்கு பறை என்று அகநானூறு (231:3) குறிப்பும் இதன் அமைப்பை விளக்குகிறது.

விசி = கட்டு

வாங்கு = வளைந்த

தோலால் இழுத்துக் கட்டுவதால் தோல் பாளங்கள் வட்டத்தின் சுற்றளவு முழுவதும் ஒரே சீராக இழுக்கப்படுகின்றன.

போர்த்தப்படும் தோல்

பண்டைத் தமிழர்கள் தோற்கருவிகளுக்கு இறந்த பசுவின் தோல், காளையின் தோல், மான்தோல், உடும்புத்தோல் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். இத்தோலை மயிர் சீவாமல் போர்த்தியுள்ளனர். சிறந்த பசுவின் தோல், இறந்த இளங்கன்றுப் பசுத்தோலையும், புலியைப் போரிட்டு வென்ற காளையின் தோலையும், மென்மை ஒலி எழுப்பும் கருவிகளுக்கு மட்டும் மான்தோலையும் பயன்படுத்தியுள்ளனர்.

மான்தோற் சிறுபறை கறங்கக் கல்லென (மலைபடுகடாம்: 321) என்ற பாடல் வரி இதற்குச் சான்றாகும்.

கன்னியிளம் பசுவின் காயாப் புறந்தோலாம்

பின்னுமதலு ரிதகையாம் – பன்னிய

பக்கத்தோல் வார்கொள்ளப் பார்க்கி லதன் கொம்பு

மிக்க குடுப்பாகு மென்

(பஞ்சமரபு பா. எண்.115)

கன்னி இளம் வயதிலே உள்ள சூடுபடாதே செத்த பசுவின், காயாப் புறந்தோலை, வன்மை முழவிற்கும் இப்பசுவின் உதிரத்தைப் போர்த்துக் கிடந்தத் தோலை மென்மை முழவிற்கும் பயன்படுத்துதல் வேண்டும் எனக் குறிப்பிடுகிறது பஞ்சமரபு. ஆவினுடைய வஞ்சித்தோல் _ உத்தமான ஆவின்தோல் ஈனாத நாகான (இள) வயதிலே சூடுபடாத செத்த பசுவின் தோல் _ சீவியேறிடுவது (இத்தகைய தோல்வன்மை முழவுக்குக் கொள்ளப்பட்டது). மேற்கூறியவாறு பசுவின் உதிரத்தைப் போர்த்துக்கிடந்த தோலையும் (இத்தகைய தோல் மென்மை முழவுக்குக் கொள்ளப்பட்டது) மான்தோலையும் பயன்படுத்தினர் (மலைப்படு கடாம். 321)

பொதுவாகப் பறைகளுக்கு பசுவின் தோலைப் பயன்படுத்தியுள்ளனர். நீளுதலும் சுருகுதலும் ஆகிய நெகிழ்வுத் தன்மை உடையது என்பதால் பறை கருவிகளுக்குப் பசுவின் தோல் பயன்படுத்தப்பட்டது. ஆவஞ்சி என்ற சொல்லின் பொருள் இதை விளக்குவதாக அமைகிறது.

பறைகட்குத் தோற் போர்வை மூடுங்கால், விலங்குகளின் வயிற்றுத் தோலையே இட்டு மூடுவார்கள். பெண் விலங்கின் அடிவயிற்றுத் தோல் நீண்டு கொடுப்பது (நெகிழ்வு தருவது). ஆவின் வஞ்சித் தோலால் போர்த்தப்பட்ட பறை ஆவஞ்சியாகும் என்றார் அடியார்க்கு நல்லார். ஆவஞ்சி எனினும், குடுக்கை எனினும், இடக்கை எனினும் ஒக்கும். ஆவினுடைய வஞ்சித்தோலைப் போர்த்தலால் ஆவஞ்சி என்று பெயராயிற்று. குடுக்கையாகச் செய்து அடைத்தலால் குடுக்கை என்று பெயராயிற்று; வினைக் கிரியைகள் இடக்கையால் செய்தலின் இடக்கை என்று பெயராயிற்று (சிலப். 3.26 அடியார்க்).   பசுவின் அடிவயிற்றுத் தோலானது நீளுதலும், சுருங்குதலும் பெறுவதுடன் சற்றுத் தண்ணீர்ப் பதம் ஏற்று நீண்டு மென்மையாகி நெகிழ்ந்து கொடுக்கும். தாழ்ந்து ஒலிக்கும். கஞ்சிராவின் உட்பகுதியில் தண்ணீர்பதம் இடுவது தாழ்குரல் தருவதற்குச் செய்வதாகும். வெப்பம் ஏற்றத் தோலின் சுருதி ஏறி ஒலிக்கும்.  தோற்கருவிகளுக்குப் போர்த்தப்பட்ட விலங்கின் தோல் கூட வீரம் மிக்கதாய் இருக்க வேண்டும் என்று எண்ணியுள்ளனர் தமிழர்.

மண்ணைக் குத்திக்கொள்வதால் வரிவரியாகக் கீறப்பட்ட,

மிக்க கூரிய கோட்டினையுடைய பெருமை பொருந்திய நல்ல

ஆனேறு இரண்டினைத் தம்முள் போர் செய்ய விடுத்து, வெற்றி

பெற்ற தோலை மயிர்சீவாது போர்த்தினர்

(புறநா: 288)

புலியோடு போரிட்டுப் புறங்கொடாது வென்ற அழகிய காளையினது தோலால் போர்த்தப்பட்டது.

(அகநா : 334)

புலியைப் பொருது கொன்று நின்று சிலைத்துக் கோட்டு மண்

கொண்ட ஏறு இறந்துழி அதன் உரிவையை மயிர்சீவாமல் போர்த்தினர்.

(சிலப் : 5:88 அடியார், உரை)

மாறுபாட்டை ஏற்றுக் கோறற்றொழிலையுடைய ஏற்றினது செவ்வித்தோலை மயிர்சீவாமல் போர்த்துவதுண்டு

(மதுரைக்காஞ்சி : 732)

சீவக சிந்தாமணியின் உரையில் நச்சினார்க்கினியர் தோற்கருவியைப் பற்றிய இலக்கணத்தை வழங்கியுள்ளார். தோற்பொலி முழவும் யாழுந் துளைபயில் குழலுமோங்க

என்ற பாடல் வரிக்கு

மார்ச்சனை முதலியவுமுளதாய் இடக்கண் இளியாய் வலக்கண்

குரலாய் நடப்பது தோலியற் கருவியாகும்

(சீவக. 675)

என விளக்கமளித்துள்ளார்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *