(இயக்க வரலாறான தன்வரலாறு – 199)

ஏப்ரல் 01-15

பெரியாரை நெருங்குவது
நெருப்பை நெருங்குவதைப் போன்றது !

– கி.வீரமணி

16.10.1982 இல் வடசேரியில் எழுச்சியுடன் நடைபெற்ற கழக பயிற்சி முகாமில் நான் கலந்துகொண்டு “மண்டல் கமிஷன் அறிக்கை’ பற்றி வகுப்பில் விளக்கி உரையாற்றினேன். வடசேரி முழுவதும் நமது கழக கொடிகளாலும் வரவேற்பு தோரணங்களாலும் அலங்கரிக்கப் பட்டு மாநாடு நடப்பதுபோல காட்சியளித்தது.

நான் மண்டல் கமிஷன் அறிக்கையைப் பற்றி விளக்கி உரையாற்றினேன். இந்தியாவிலுள்ள பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் எவ்வாறெல்லாம் மேல்சாதியினரால் கொடுமை செய்யப்பட்டார்கள் என்பதையும் இப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள எஸ்.சி., எஸ்.டி,   ஓ.சி.யினர் சதவீதங்களையும் இதில் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆளும் மேற்கு வங்காளத்தின் நிலையையும் படம் பிடித்துக் காட்டினேன்.

பேராசிரியர் வீரபாண்டியன் அவர்கள் நம் நாட்டில் உள்ள பொதுவுடமைக் கட்சியின் நிலைமையை விளக்கினார்.

இந்தியாவில் பார்ப்பனர்கள் கம்யூனிஸ்ட்டு தலைமைப் பொறுப்பில் இருப்பதால் இங்கு அது வெற்றியடையவில்லை என்பதை ஆதாரங்களுடன் எடுத்துக்கூறினார்கள். வழக்கறிஞர் ராமதாஸ், பேராசிரியர் அ.இறையன் உள்ளிட்டோர் வகுப்புகளை எடுத்தனர். இளைஞர் அணிச் செயலாளர் அழகிரி நன்றிகூற முகாம்கள் சிறப்புடன் முடிவடைந்தன.

17.10.1982 அன்று மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். அதனைக் குறித்து “நான் போய் வருகிறேன்’’ என்ற தலைப்பில் முக்கிய அறிக்கையை வெளியிட்டு அதில் சிங்கப்பூர், மலேசியா திராவிடர் கழகத் தோழர்கள், பெரியார் பெருந்தொண்டர்கள், சுயமரியாதை இயக்கக் குடும்பத்தினர் தம் வற்புறுத்தலுக்கும், காட்டும் அளவற்ற அன்புக்கும் இணங்கவே இந்த ‘திடீர்’ சுற்றுப் பயண நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன! நமது கழகத்தின் பால் மக்களுக்குள்ள நல்ல நம்பிக்கை கடல் கடந்தும் பெருகியுள்ளதை இது காட்டியது.

என்னுடன் துணைவியார் மோகனா அம்மையாரும் வந்தார்கள். நள்ளிரவு விமானம் புறப்பட்டாலும் அதனைப் பொருட்படுத்தாமல் ஏராளமான கழக குடும்பத்தினர் கழகக் கொடி ஏந்தி வந்து மலர் மாலைகளை மலைமலையாகக் குவித்து வழியனுப்பி வைத்தனர்.

18.10.1982 காலை 8:05 மணிக்கு சிங்கை சென்றடைந்தேன். கழகத்தவர் திரண்டு வரவேற்றனர். திரு.சந்திரன் அவர்கள் இல்லத்தில் தங்கினேன். கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து நலம் விசாரித்தனர். தொடர்ந்து அடர்த்தியான நிகழ்வுகள்.

அக். 19_ திரு.நாகரத்தினம் அவர்கள் இல்லத்தில் பத்திரிகையாளர்களான சிங்கை ‘தமிழ் முரசு’ திரு.நாகராசன் என்னை சந்தித்து பேட்டி எடுத்தார்.

அந்தப் பேட்டியை 22.10.1982 ‘தமிழ் முரசு’ நாளேடு ஒரு முழுப் பக்கத்திற்கு வெளியிட்டு சிறப்பித்து இருந்தது. அதிலிருந்து சில பகுதிகளைத் தருகின்றேன்.

“கட்டுப்கோப்புடன் செயல்படும் ஆட்சியுரிமை கொண்ட நாடு சிங்கப்பூர் சுறுசுறுப்புடன் செயல்படும் மக்கள் நிறைந்து இருக்கிறார்கள். இயற்கை வளமில்லை எனினும் செயற்கை வளத்தால் வளர்ச்சி முன் மாதிரியாகத் திகழும் நாடு; சாதனைபுரியும் நாடு அனைத்துக்கும் மேலாக மதிநுட்பமும் பரந்த நோக்கமும் கொண்ட பிரதமரைப் பெற்றிருக்கின்ற சிறப்பு சிங்கப்பூருக்குண்டு என்று பேட்டியின்போது குறிப்பிட்டேன்.’’

சமுதாய விழிப்புணர்வில் மறைந்த பெரியார் (அய்யா) இல்லாதது ஒரு தொய்வு நிலைமை நிலவுவதாக பரவலாக கருத்து நிலவுகிறதே என வினவியபோது அய்யா விட்டுச்சென்ற பணியில் எந்தவிதத் தொய்வும் ஏற்படாவண்ணம் இயன்ற அளவு தாமும் திராவிடர் கழகமும் செயல்பட்டு வருவதாக பதில் அளித்தேன்.

சமுதாய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முன்னைக் காட்டிலும் அதிதீவிரமாக செயல்படுத்தி வருகிறோம். எங்களின் பிரச்சாரப் பலனின் எதிரொலி தென்மாநிலங்களில் மட்டுமல்லாது. வடமாநில மக்களிடமும் புத்துணர்வை ஏற்படுத்தி வருகிறது என்பதை அண்மையில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாடு புலப்படுத்தியது. இதனைப் பத்திரிகை வாயிலாக நீங்கள் அறிந்திருக்க முடியும். அண்மைக் காலங்களில் அய்யாவின் கருத்துக்களடங்கிய, அய்யாவின் படத்தோடு கூடிய சுவரொட்டிகளை டில்லிபோன்ற நகரங்களில் காணமுடிகிறது என்றால் சமுதாய விழிப்புணர்ச்சித் தொண்டில் தொய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது நன்கு புலனாகும் என்று அந்தப் பேட்டியில் கூறியிருந்தேன்.

அக். 22_ மாலை: திரு.தெ.சு.மூர்த்தி அவர்கள் தாயார் நீத்தார் நினைவு நாள் _ படத்திறப்பு நிகழ்ச்சி _ பி.கோவிந்தசாமி (பிள்ளை) மண்டபத்தில் உரையாற்றினேன்.

அக். 23_ சிங்கையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு மலேசியத் துலைநகரான கோலாலம்பூர் சென்றேன்.

பெர்டேக்காவில் இரவு 10 மணிக்கு பிடோர் தோழர் திரு.ஜெயராமன் அவர்கள் அளித்த விருந்தில் கலந்துகொண்டு, அன்று இரவே காரில் ஈப்போ சென்றடைந்தேன். மாலை மறுநாள் 6 மணிக்கு தந்தை பெரியார் 104ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன். மேலும் திரு.செனட்டர் க.குமரன், மலேசிய தேசியத் தலைவர் திரு.கே.ஆர்.இராமசாமி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

அக்டோபர் 20 அன்று இரவு 7 மணி தமிழின விரோதிகளின் எதிர்ப்புக்களையும் மீறி நடைபெற்ற தந்தை பெரியார் 104ஆவது பிறந்த நாள் விழாவில் (கடும் மழையிலும்) கலந்துகொண்டேன்.

நவ. 2_ மாலை 4 மணிக்கு டிங்கில் கிளை நடத்திய வரவேற்புப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

நவ.4_ சிங்கை பாலிடெக்னிக்கை பார்வையிட்டேன்.

நவ. 6_ இரவு 7 மணிக்கு சிங்கைத் தமிழர்கள் நடத்திய வரவேற்புக் கூட்டத்தில் பங்கேற்று கலந்துகொண்டு உரையாற்றினேன்.

நவ. 10_ இரவு 8 மணிக்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் சென்றடைந்தேன். ஏராளமான குடும்பத்தினரிடமிருந்து இரவு 10 மணிக்கு சிங்கையிலிருந்து பிரியாவிடை பெற்றேன்.

தந்தை பெரியாரின் கொள்கைப் பிரச்சாரத்தைப் பெரும் சிறப்போடு “மலேசியா, சிங்கப்பூர்’’ நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்துக் கொண்டு 10.11.1982 அன்று இரவு 3 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தேன். என்னை வரவேற்க கழகத்தின் சார்பில் மிகப் பிரம்மாண்டமான வரவேற்பு கொடுத்து சென்னையில் உள்ள தோழர்கள் மட்டுமல்ல வெளிமாவட்ட தோழர்களும் கழகத் தோழர்களும், மகளிரணியினரும் தொழிலாளர் அணியினரும், இளைஞரணி யினரும், பகுத்தறிவாளர்கள் கழகத் தோழர்களும், ஆசிரியரணியினரும், இனநல உணர்வுகொண்டு பொதுமக்களும், மிகத் திரளாகத் திரண்டு மிக பிரமாண்ட முறையில் வரவேற்பு கொடுத்த காட்சி நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

மிகத் திரளாகக் கூடியிருந்த கழகக் குடும்பத்தினரிடையே எனது சுற்றுப் பயணம் குறித்தும், மலேசியா திராவிடர் கழகத் தலைவர் ‘திருச்சுடர்’ கே.ஆர்.ராமசாமி அவர்கள் அரிய முயற்சி எடுத்து மிகச் சிறப்பாக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ‘தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ என்று ‘யுனெஸ்கோ’ நிறுவனம் தந்தை பெரியார் அவர்களுக்கு விருது அளித்தது. அந்தக் கருத்தைக் கடல் கடந்து வாழும் தமிழர்கள் உணர்ந்து ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு உரையாற்றினேன்.

இதனைத் தொடர்ந்து 13.11.1982 அன்று ‘விடுதலை’யில் முதல் பக்கத்தில் ‘தெற்காசிய நாடுகளில் பெரியார் குரல்’ என்ற தலைப்பில் எனது சுற்றுப் பயணம் குறித்தும் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளிலும் 18.10.1982 முதல் 10.11.1982 வரை சுற்றுப்பயணம் செய்து நமது அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களது தத்துவங்களை விளக்கிட அரியதோர் வாய்ப்பு கிடைத்தது குறித்தும் விளக்கி எழுதியிருந்தேன். அதிலிருந்து சில பகுதிகளை  இங்கே தருகிறேன்.

தந்தை பெரியார் அவர்களது சமுதாயப் புரட்சிக் கொள்கைகளை அந்த நாடுகளின் சூழ்நிலைக்கேற்ப, தேவைக்கேற்ப சொல்லக் கூடிய வாய்ப்புகள் பெரிதும் இந்த குறுகிய காலச் சுற்றுப் பயணத்தில் அமைந்தது.

“மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் நமது நாட்டில் எப்படி சுயமரியாதைக் கொள்கைகளை குடும்ப வாழ்க்கை நெறிமுறையாக ஏற்றுக் கொண்டுள்ளனரோ அதுபோலவே பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. இளைய தலைமுறையினருக்கு எட்டாக்கனியாக இருந்த நமது பிரச்சாரம் இதுபோன்ற சுற்றுப் பயணங்கள் மூலம் பெரிதும் அவர்களிடம் சென்றதோடு அவர்களை வெகுவாக ஈர்க்கவும் செய்தது!

ஒரே நாளில் இரண்டு நாடுகளில் சுற்றுப் பயணம்; எட்டு நாள்களில் ஓரிரு நாள்கள் தவிர, சிங்கப்பூரில் நண்பர்கள் நாகரத்தினம், ஜெகதீசன், மூர்த்தி, சந்திரன், நாதன், முருகு.சீனிவாசன், கோவிந்தராசு போன்றவர்களது பெருமுயற்சி காரணமாக வரவேற்று விருந்து என்ற பெயரில் முக்கியத் தமிழ்ப் பிரமுகர்களைப் சந்திக்க அரிய வாய்ப்பு கிடைத்தது.

நமது ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியேந்திரன் அவர்களது செல்வனும் சீரிய சுயமரியாதை வீரருமான திரு.ராஜசேகரன் எம்.பி.ஏ., (பின்னாட்களில் தஞ்சை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர்) அவர்கள் அப்பொழுது சிங்கையில் அவர் ஒரு இத்தாலிய நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர். இரண்டு நாள்வரை விடுப்புகள் எடுத்துக் கொண்டு எங்களுக்கு உறுதுணையாக உடன் எல்லா சுற்றுப் பயணத்திலும் நிருபர், புகைப்பட நிபுணர், செயலாளர், உதவிடும் நண்பர் ஆகிய பல்வகைப் பணிகளின் கொள்கலனாகத் திகழ்ந்து உதவினார்.

மேலும் சிங்கப்பூர் வணிகப் பெருமக்கள், திரு.அனீபா, கோமளவிலாஸ் உரிமையாளர் திரு.ராஜி, பிரபல வணிகர் திரு.நமச்சிவாயம், கத்தே அண்ணாமலை, கண்ணப்பன், பழனியப்பன் போன்ற பலர் பேராசிரியர்கள், பண்பாட்டுத் துறை அதிகாரி திருநாவுக்கரசு, தமிழாசிரியர் பாவாடைசாமி, எனக்கு பேராசிரியராக இருந்து இப்போது சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிடும் டாக்டர் அனந்தராமன் மற்றும் பலரும் அதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தபோது தமிழர்கள் என்னிடம் இடைவிடாது கேட்ட ஒரு கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் சங்கடத்தோடு திரும்பினேன். இன உணர்வு என்பது தமிழ்நாட்டிலே இவ்வளவுதானா? என்று கேட்டார்கள்.

தமிழர்கள் ஒவ்வொரு துறை சம்பந்தப்பட்டவர்களும் யாராக இருந்தாலும் என்னை இந்தக் கேள்வியைக் கேட்டார்கள். உங்களை எல்லாம் இப்படித் தாக்கி இருக்கிறார்களே (மம்சாபுரத்தில் என் மீது தாக்குதல் குறித்து கேட்டது) இப்படி நடத்தி யிருக்கிறார்களே என்று உணர்ச்சிபூர்வமாகக் கேட்டார்கள். இப்படி பல்வேறு சம்பவங்களைப் பார்க்கவும், இன உணர்வைப் பெறவும், தமிழ் இனத்திற்கு தமிழ் நாட்டிலே தமிழ், பண்பாடு, இலக்கியங்கள் பற்றி எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்புள்ள உணர்வுள்ள அமைப்புகள் தேவை. உலகத் தமிழர்கள் எல்லாம் ஒன்றுசேர வேண்டும் என்று சொல்ல வேண்டிய அந்த உணர்வுகளை உண்டாக்க வேண்டும்.

அந்த உணர்வுகளைத்தான் வெளிநாடு களிலும் தமிழர்கள் எண்ணி ஏங்குகிறார்கள். தமிழ்நாடு சரியாக இருந்தால்தான் எங்களுடைய நிலை சரியாக இருக்கும் என்று அவர்கள் மனந்திறந்து சொல்லுகிறார்கள் என்று குறிப்பிட்டு எடுத்துரைத்தேன்.

13.11.1982 அன்று புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மீனாட்சி கல்யாண மண்டபத்தில் எனக்கு புரசைவாக்கம் திராவிடர் கழகத்தின் சார்பில் வரவேற்புப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில்நான் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

வரவேற்பு விழாவில் தி.மு.க. பொதுச்செயலாளர் திரு.க.அன்பழகன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது ‘நண்பர் வீரமணி அவர்களுக்கு வெளிநாடுகளிலே எல்லாம் வரவேற்பு மட்டும்தான் இருந்திருக்கும் திருவில்லிபுத்தூர் இருந்திருக்காது. (ஆளுங்கட்சி கல்லெறிந்து கலவரம் செய்த நிகழ்ச்சி) ஆனால், தமிழ்நாட்டிலேதான் திருவில்லிபுத்தூரும் நடைபெறும். இல்லையானால் வேறு பல நிகழ்ச்சிகளையும் நாம் இங்கேதான் சந்திக்கலாம்.

இன்னும் தெளிவாகச் சொன்னால் இங்கேதான் எதிரிகள் உண்டே தவிர வேறு இடங்களிலே எதிரிகள் இருக்க மாட்டார்கள். இருக்கத் தேவையில்லை. அப்படிப்பட்ட எதிர்ப்புகளுக்கு இடையிலேதான் பணியாற்று கின்ற பொறுப்பை வீரமணி அவர்கள் _ தந்தை பெரியார் அவர்கள் அவரிடத்திலே ஒப்படைத்த அந்தப் பொறுப்பைத் தொடர்ந்து மேற்கொண்டிருக்கிறார். இது தமிழர்கள் எனத் தங்களை உணர்ந்தவர்கள் அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழகத் தலைவர் கே.ஏ.அப்துல் சமது எம்.பி. அவர்கள் பாராட்டுரை வழங்கியபோது, வீரமணி அவர்களை இளமை முதலாகப் பார்த்து வருகிறேன். அவரைப் பற்றி அறிந்துகொள்கிற வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். தொடர்ந்து அவர் பெரியார் அவர்களுடைய அரவணைப்பைப் பெற்ற நாளிலே இருந்து கொள்கையிலே இம்மியளவும் தவறாமல் உறுதியோடு செயல்பட்டு வருகிறார்கள் என்று குறிப்பிட்டார்கள்.

விழாவில் என்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். சுந்தரேசன் குடந்தை கோவிந்தராஜ், எம்ரோஸ் இ.பக்தவத்சலம், வெங்கடேசன், திருமதிகள் தங்கமணி, ஹேமலதா« தவி, பார்வதி, மூதாட்டி பட்டு பாவலர், நெடுஞ்செழியன், ரெங்கநாதன், சிங்காரவேலு, குணசீலன், ஏழுமலை, வழக்கறிஞர் இராமதாஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தமிழகத் தலைவர் ஏ.கே.ஏ.அப்துல் சமது எம்.பி., டாக்டர் கலாநிதி எம்.பி., இலங்கை குடிபெயர்ந்தோர் சங்கத் தலைவர் மணவைத்தம்பி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும், தோழியர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

நான், மலேசியா _ சிங்கப்பூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது சிங்கப்பூரின் பிரபல தமிழ்நாளேடு ‘தமிழ் முரசு’ இதழ், என்னைப் பாராட்டி ‘பெரியாரின் வாரிசு வீரமணியின் சாதுரியம்’ என்ற தலைப்பில் அற்புதமான சிறப்புக் கட்டுரையை 07.11.1982 அன்று வெளியிட்டிருந்தது. அதனை ‘விடுதலை’ நாளிதழில் 15.11.1982 மற்றும் 16.11.1982 அன்று இரு நாட்களும் வெளியிட்டிருந்தோம். அந்த சிறப்பான கட்டுரையிலிருந்து சில பகுதிகள்…

பெரியாரின் வாரிசு வீரமணியின் சாதுரியம்!

“திராவிடர் இயக்கத்தின் மூலாதாரக் கொள்கையான சமூகநீதி நல்லவேளையாக இப்போதைக்கு தப்பித்துக் கொண்டது! வீரமணி இப்பொழுது சிங்கப்பூர் மலேசியாவில் சுற்றுப் பயணம் செய்து வந்தபோதிலும், தமிழ்ச் சமுதாயத்தின் உயிர் மூச்சுக்கு ஒப்பான இக்கொள்கையின் தலைவிதி டில்லியிலுள்ள சப்ரீம் கோர்ட்டின் முடிவைப் பொறுத்திருப்பதால், இப்பிரச்சினையில் எதிர்பாராத வகையில் எதுவும் ஏற்பட்டுவிட இடமளிக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் பலத்த ஏற்பாடுகளை செய்துவிட்டு வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வந்தார். அவர் இங்கு இல்லாத நேரத்தில் இப்பிரச்சினையின் மீது சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த ஆணையால் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

1950இல் சமூகநீதிக்கு எதிராக இந்து சமூகத்தின் மேல்சாதி வட்டாரம் கொடுத்த மிகப்பெரிய போருக்குப் பிறகு இரண்டாவது தடவையாக இக்கொள்கை மீது இந்தியாவின் உச்சநீதிமன்றமாகிய சுப்ரீம் கோர்ட்டிலேயே கருத்துப் போரை பிரம்மாண்ட வியூகம் வளைத்து தொடுத்திருக்கிறது.

தமிழ்நாடும் தமிழினமும்

சமூகநீதி _ தமிழ் மண்ணில் முளைவிட்டு எழுந்து ஆல்போல் படர்ந்து அருகுபோல் வேரோடி நிலைபெற்றுள்ள கொள்கை! தமிழ்நாட்டில் கட்சி கடந்த கொள்கை இது. வடநாட்டிலோ, இதன் வாடைகூடக் கிடையாது.

தமிழர் செந்நெறியில் சமயத்துக்கும் சாதி முறைக்கும் சம்பந்தமில்லை. ஏன் சாதி முறையை மெய்யான சைவச் சமயம் ஏற்பதில்லை. ஏன் சமீப காலம்வரை வாழ்ந்த சைவப் பேரறிஞர் மறைமலை அடிகளும்கூட சாதி முறையை ஏற்பது சைவம் அல்ல என்று பறை அறைந்து வந்தார். குன்றக்குடியாரும் அதே குரலைத்தான் இப்பொழுது எழுப்பி வருகிறார். வடநாட்டில் அந்த மண்ணில் இந்த நிலையே எழ முடியாது!

சமூகநீதி

எனவேதான், எழுபது ஆண்டுக்கு முன்பே தமிழ் மண்ணில் சமூகநீதி கோரி மாபெரும் இயக்கமே தோன்றியது. வகுப்புகளும் _ சாதிகளும் இருப்பதுவரை எல்லா வகுப்புகளுக்கும் அரசின் நிர்வாகத்திலும் _ சமுதாயத்தின் பல்வேறு துறைகளிலும் உரிய பங்கு இருப்பது அவசியம். ஒரு குறிப்பிட்ட சமூகமே சாக்குபோக்குகளை _ தகுதி, திறமை _ கூப்பாடுகளை எழுப்பி, அதன்மூலம் ஏகபோகம் செலுத்துவது அனுமதிக்க முடியாத ஒன்று.

காலங்காலமாக சாதிமுறையின் காரணமாக பிற்பட்டுக் கிடக்கும் வகுப்புகளுக்கும் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சமுதாயத்தில் இவர்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதாச்சாரப்படி பங்கு தர வேண்டும் – என்பது திராவிடர் இயக்கத்தின் தாய் ஸ்தாபனமான நீதிக்கட்சியின் உயிரான கொள்கை.

இந்தச் சமூகநீதியே பெரியாருக்கும் _ ராஜாஜிக்குமிடையே சுமார் அரைநூற்றாண்டுக் காலம் நடைபெற்ற கருத்துப் போராட்டமே இந்தச் சமூகநீதிக் கொள்கையை மய்யமாக வைத்துத்தான். பெரியார் _ முதலிடம் _ முக்கிய இடம் தந்து வந்ததும் இந்தக் கொள்கைக்கே தமிழ் இனத்தோரின் அச்சாணியாக இக்கொள்கையைப் பெரியார் மதித்தார்.

பெரியாரின் நீண்ட பொது வாழ்வில் அவருடைய நோக்கையும் போக்கையும் நிர்ணயித்தது சமூக நீதிக் கொள்கையே.

சாதியே அடிப்படை, வருமானமல்ல!

சாதியினால் பின்தங்கிய மக்களுக்கு அந்தச் சாதியை வைத்தே சலுகை காட்ட வேண்டும். பொருளாதார நிலையையும் ஒரு நிபந்தனையாக்குவது _ பிரச்சினையின் அடிப்படையையே சிதைத்து திரிப்பது. ஆனால், அ.தி.மு.க. அரசு விதித்த ரூ.9000 நிபந்தனை அது நல்ல எண்ணத்துடனேயே எந்த உள்நோக்கும் இல்லாமல் _ விதிக்கப்பட்டிருந்தபோதிலும், அதனுடைய விளைவு சமூகநீதியின் அடித்தளத்தையே உருக்குலைக்கக்கூடிய அளவுக்கு இருந்தது. அதனால் இந்த ரூ.9000 ஆணைக்கு எதிராக பெரிய கிளர்ச்சியை வீரமணி முன்னின்று நடத்தினார்.

அரசும், இறுதியில் இந்தப் பிரச்சினையில் பிராமணரல்லாத சமூகங்கள் ஓரணியில் திரள்வதைக் கண்டபிறகு சர்வகட்சிக் கூட்டத்தை நடத்தி அதன் மூலம் இந்த ஆணையையே கைவிட்டது. அது மட்டுமல்ல அதற்கு முன்பெல்லாம் பிற்பட்டோருக்கு 39 சதவிகித இடங்களே ஒதுக்கப்பட்டுவந்தன. இந்த அளவை 50 சதவிகிதமாக உயர்த்தி தமிழர்களின் பாராட்டுதலைத் தேடிக்கொண்டது. எந்த ஆட்சியிலும், இந்த அளவுக்குப் பிற்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டதில்லை.

வழக்கு

“எம்.ஜி.ஆர் அரசின் இந்த தாராள மனப்பான்மையை மேல் ஜாதிக்காரர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 1981 பிப்ரவரியில் அரசு ஆணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் வேணுகோபால், கி.எஸ்.வைத்யநாதன் போன்ற பிரபல வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். தமிழக அரசு இதில் அசிரத்தை காட்டாமல் இந்தியாவின் புகழ்பெற்ற இரு வழக்கறிஞர்களை  அமர்த்தியது. இந்த வழக்கு விசாரணையில் எத்தகைய இக்கட்டான கட்டங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து மிகுந்த முன் ஜாக்கிரதையோடு அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்து முடித்த வீரமணியின் சாதுரியத்தை பிற்பட்ட வகுப்புகளின் தலைவர்கள் போற்றிப் புகழுகிறார்கள். அவர் தமிழ்நாட்டில் இல்லாத நேரத்திலும்கூட சமூகநீதிக் கொள்கைக்கு வந்திருக்கக்கூடிய ஆபத்தை முன்யோசனையான ஏற்பாட்டின் மூலம் தகர்த்தெறிந்திருக்கிறார்.

அறிவார்ந்த கருத்து

கழகச் சார்பில் இந்த இரு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்திருந்தால் வழக்கு விசாரணையே திசைதிரும்பி இருக்கக்கூடும்.

கவனத்தை எல்லாம் ஈர்த்தது

ஜாதி காரணமாகப் பின் தங்கிவிட்ட மக்களுக்கு ஜாதி அடிப்படையிலேயே சலுகைகளை வழங்குவதுதான் நியாயம் _ என்று வாதாடியதன் மூலம் டில்லியிலுள்ள சட்ட இயல் அறிஞர்களின் கவனத்தை எல்லாம் ஈர்த்திருக்கிறார்கள். ஏற்கெனவே, வடநாட்டு பிற்பட்ட வகுப்பு மக்களின் மாநாடுகளில் பெரியாரின் படம் அலங்கரிக்கிறது. இப்பொழுது அவருடைய குரல் சுப்ரீம் கோர்ட்டிலேயே ஒலித்திருக்கிறது! வீரமணி பெரியாரையே பேச வைத்திருக்கிறார் _ தனது முன் ஜாக்கிரமையின் மூலம்.

இணையற்ற தலைவரின் இணையற்ற வாரிசு

பெரியாருக்கு இணையான ஒப்பான தலைவர் இந்திய மண்ணில் காந்தியாரைத் தவிர _ வேறு எவருமே தோன்றியதில்லை என்று கருதக்கூடிய அறிஞர்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள். இந்த அபிப்பிராயத்தை அழுத்தமாகக் கொண்டிருந்தவர் அண்ணா. இந்தக் கொள்கைப் பிடிப்பே, அவரை பேரறிஞர் அண்ணா ஆக்கியது.

அண்ணா _ பெரியார் சகாப்தத்தில் ஓர் ஒளிமிக்க அத்தியாயம். அண்ணா _ திருப்பு முனை அல்ல _ பெரியாராகிய திருப்புமுனையை விட்டு வேறு திசையில் தனது முகத்தை _ நினைவை திருப்பிக் கொள்ளாது பொது வாழ்வை நடத்தியவர்.

அஞ்சிய காலம்

பெரியார் தலைமை _ தமிழகத்தை மாற்றியது; எந்த அளவுக்கு? அகில இந்திய வெள்ளம் தமிழ் மண்ணில் புகமுடியாத அளவுக்கு இந்தியா முழுவதுமே தமிழ்நாட்டை நினைத்து உள்ளூர அஞ்சிய காலம்கூட ஒன்று இருந்தது. பெரியார் தலைமையில் பொதுவாழ்வில் தொண்டராக இருந்து பயிற்சி பெற்றவர்கள் பின்னாளில் பெரிய தலைவர்களாகவே ஆகி இருக்கிறார்கள். தலைவர்கள் பலரைத் தோற்றுவித்த தனித் தலைவர் அவர்.

முடங்கியவர்கள்

பெரியாரை விட்டுப் பிரிந்தவர்களில் சிலர், பொறாமையாலும் ஏமாற்றத்தாலும் பெரியாரைப் பழிக்கும் அளவுக்குச் சென்று, பழிதேடிக் கொண்டு முடங்கி விட்டவர்களும் உண்டு. அண்ணா ஒருவர்தான் பெரியாரை விட்டுப் பிரிந்துவந்து திராவிடர் கழகத்தின் சாயலிலேயே கொள்கைகளை அமைத்து ஓர் அரசியல் கட்சியை நிறுவி அதை வளர்த்து ஆட்சியையும் _ பிடித்து, அந்த ஆட்சியையும் பெரியாருக்குக் காணிக்கை ஆக்கி, தனது நன்றிக் கடனைச் செலுத்தி, தன்னை அடையாளம் காட்டியவர்; இது பெரியாரின் உள்ளத்தையே நெகிழ வைத்தது உண்மையே ஆயினும் அவரும் ஒரு காலகட்டத்தில் பெரியாரை விட்டுப் பிரிய நேர்ந்தது என்பதும் ஓர் அரசியல் உண்மை.

பத்தியச் சாப்பாட்டை விருந்தாகவும், அடக்கத்தையே ஆபரணமாகவும் பெரியாரின் எண்ணம் எந்தப் பக்கத்தில் நிற்கிறதோ அதன் பின் குழந்தைபோல் நிற்கின்ற முனைப்பு இல்லாத சுபாவத்தையே தனது இயல்பாகவும் கொண்டவர்கள் எத்தனை பேர் இருக்க முடியும்?

சபலமே இல்லாதவர்கள் மட்டுமே பெரியாரின் தளபதியாக இறுதிவரை நீடிக்க முடியும். அதைவிட அவருடைய முழு நம்பிக்கையையும் பெறுவது என்பது முடியாத காரியம். அவருடைய நம்பிக்கையைப் பெற்றாலும் பிரச்சினைகளுக்கு ஏற்ப அதனதன் தராதரத்தை உணர்ந்து அதற்கேற்ற வகையில் கழகத்தின் போக்கை நிர்ணயிப்பதும் சிரமம். இவை அத்தனையையும் பெற்று இருப்பவர் இப்போது வீரமணியே.

பால்யப் பருவத்தில்இவர் தி.க. மேடைகளில் ஏறினார். வக்கீல் படிப்பை முடித்துவிட்டு, வழக்கறிஞர் தொழிலைமேற்கொண்டபோது பெரியார் இவரை அழைத்து ‘விடுதலை’ ஆசிரியராக்கினார்.

வீரமணியின் கொள்கைப் பிடிப்பையும் அதைவிட தன்னிடம் அவருக்குள்ள முழு விசுவாசத்தையும் பாராட்டி தனது கைப்பட தலையங்கமே எழுதினார் பெரியார். பெரியாரிடம் இறுதிவரை நிலைத்து நின்ற ஒரே ஒரு தளபதி வீரமணிதான்.
பெரியாரிடம் எவராவது மிக நெருங்கினால் நெருப்பை நெருங்குவதாகவே அர்த்தம். கந்தையாய் _ கூளமாய் இருந்தால் பொசுங்கிவிடும். பொன்னாக இருந்தால் தீயில் சுடச்சுட மாற்று கூடும்.

அவரிடம் நெருக்கமாகப் பழகி சோதனைகளில் தேறி, அவருடைய வாரிசாக வருவதென்றால் அது சாதாரண விஷயம் அல்ல. தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாத – எதுவும் தேடாத பவித்திர நெஞ்சு இருந்தால் மட்டுமே பெரியாரின் நம்பிக்கையைப் பெற முடியும்.

இது வீரமணியிடம் இயல்பாகவே அமைந்திருந்ததால் சிரமம் இல்லாமல் பெரியாரின் வாரிசாக முடிந்தது. முதலில் வயது வித்தியாசம் வீரமணிக்கு பெரிய பலம். பெரியாரின் பேரப்பிள்ளைபோல – வயதில் வீரமணி அப்பொழுதும் அவரை அண்ணாந்து பார்க்கவே வைத்தது.

பெரியாரையும் _ தன்னையும் ஒப்பிட்டுப் பேசுவதைக் கேட்டால் பதறக்கூடியவர். தஞ்சையில் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பெரியார் நூற்றாண்டு விழாவில் ஓர் இளங்கவிஞர் வீரமணியை ‘இளம் பெரியார்’ என்று கூற அதைக் கேட்டவுடனே குதித்து எழுந்து, “இப்படி இனிமேல் கூறக் கூடாது; பெரியார் ஒருவரே, ஒரே ஒருவர்தான். இன்னொருவர் இருக்க முடியாது’’ என்று ஆத்திரத்துடன் கூறியவர் வீரமணி.

பெரியாரின் வைர நெஞ்சு – தடைபடாத சிந்தனை, மூத்த நரைத்த சிவந்த கம்பீரமான பழைய கூட்டை உதறிவிட்டு குள்ளமான – மாநிறம் கொண்ட சிறிய இளம் கூட்டுக்குள் புகுந்துகொண்டதோ என்று சிலர் நினைத்தாலும் இதில் தவறு இல்லை. ஏனெனில், மேடையின் மீது வீரமணி பேசும்பொழுது, அதே பெரியார் சிந்தனை – அதே சொற்கள் – அதே காரம்! “பெரியார் தந்த புத்தி போதும் – சொந்த புத்தி வேண்டாம்!’’ என்று வீரமணி பட்டவர்த்தமாக கூறும்பொழுது, அவருடைய பலத்தின் அந்தரங்க இரகசியம் புரிகிறது.

‘தமிழ்முரசு’ (சிங்கப்பூர்) 7.11.1982
(நினைவுகள் நீளும்…)

புரசை திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற வரவேற்பு கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *