இனியன்
உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 17.3.2018 அன்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சி தொடக்கத்தில் திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன் அறிமுக உரையாற்றினார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விழாவுக்கு தலைமையேற்று மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் படத்தைத் திறந்துவைத்து சிறப்பு செய்தார். ‘சட்டக்கதிர்’ ஆசிரியர் வி.ஆர்.எஸ்.சம்பத், மாநில குற்றவியல் தலைமை வழக்குரைஞர் துரைசாமி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், “நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் அவர்களை நினைவுகூர்ந்து உணர்ச்சி பொங்க உரையைத் தொடங்கி, நீதிபதி அவர்களை முதலில் சந்தித்த நிகழ்ச்சி, அவர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் தான் பேசிய அனுபவம், பிறகு கூட்டம் முடிந்ததும் தனது வீட்டுக்கே தன்னை காரில் அழைத்துவந்து விட்டுவிட்டுச் சென்றது, சட்டக் கல்லூரியில் படிக்க ஆலோசனை வழங்கியது, படிப்பு முடிந்ததும் தன்னை ஜூனியராக சேர்த்துக்கொண்டது, அவர் முன்னிலையில் திருமணம் நடத்தி வைத்தது, தன்னை அரசியலுக்குக் கொண்டுவந்தது’’ என சுமார் ஒரு மணி நேரத்திற்குமேல் சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரையிலிருந்து…
“நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் மறைவு என்பது அவர்தம் குடும்பத்துக்கு மட்டும் இழப்பு அல்ல, சமுதாயத்துக்கே பெரிய இழப்பு. அவரால் பலனடைந்தவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் ஆற்றிய சமூகநீதிப்பணி மகத்தானது. “அரசியல் கட்சிக்காரர்களை நீதிபதியாக நியமித்தால் சரியாக பணியாற்றுவார்களா? என்ற என் தவறான கருத்தையே மாற்றியவர் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்கள்’’ என்று நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் அவர்களே சொல்லும் அளவுக்கு நீதித்துறை பணிகளில் சிறப்பாக செயல்பட்டவர் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்கள். மண்டல் கமிஷன் வழக்கில் தீர்ப்பு அளித்த ஒன்பது நீதிபதிகளில் ஒருவரான ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் அவ்வழக்கில் தனித்த தீர்ப்பை அளித்தவர் ஆவார். தன்னுடைய தீர்ப்பில் பெரியாரைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வாறு செய்து பெரியாருக்குப் பெருமை செய்தார்.
சம்பளக் கமிஷனிலும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷனிலும் சமூகநீதிக் கண்ணோட்டத்துடன் செயல்பட்டார். சமூக நீதிக்காக எந்த இடத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதை சிறப்பாக செய்தவர். நீதித்தராசை எந்தப் பக்கமும் சாயாமல் உயர்த்திப் பிடித்தவர். தலைசிறந்த மனிதாபிமானி. நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்களுக்கு வீரவணக்கம்!’’ இவ்வாறு ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் நீதித்துறையைச் சார்ந்த சான்றோர்கள், பல்துறை அறிஞர் பெருமக்கள் திராவிடர் கழகத் தோழர்கள், நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். விழா நிறைவில் பொறியாளர் ர.கந்தசாமி நன்றி கூற விழா இரவு 8.30 மணியளவில் நிறைவுற்றது.