உயிர்க்குமிழ்

ஏப்ரல் 01-15

ப.ஜீவகாருண்யன்

மதுரையைத் தலைநகராகக் கொண்டு, மக்களை ஆட்சி செய்யும் பாண்டிய நாட்டின் கொற்கை துறைமுகத்தில், முத்துக் குளிப்பது என்பது காலங்காலமாக பங்குனி, சித்திரை ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் ஏறக்குறைய (காலை ஒன்பது மணியளவிலிருந்து மாலை நான்கு மணி வரை) நடத்துகின்ற சிரமம் கூடிய தொழில்.

மூச்சையடக்கி முத்துக் குளிப்பது என்பது ஒவ்வொரு மனிதனும் தனது ஈடு இணை யில்லாத இன்னுயிரைப் பணயம் வைத்து ‘துணிந்த வனுக்குத் துக்கமில்லை’ என்றிறங்கும் துயரம் கூடிய செயல்.

இப்படிப்பட்ட துயரம் கூடிய விளைவாகத்தான் கடந்த பதினைந்து தினங்களுக்கு முன் இந்தக் கடற்கரையில், ‘முத்துக் குளிப்பதில் முகுந்தனைப் போல் ஒருவன் இனிமேல் பிறந்தால்தான்!’ என்று புகழ் பெற்றிருந்த மூக்கையனின் தம்பி முகுந்தனின் மரணம் அனைவரும் பதறித் துடிக்க அநியாயமாக நேர்ந்துவிட்டது.

பதினைந்து தினங்களுக்கு முன்பான தொரு காலை வேளையில் மூக்கையனும், முகுந் தனும் ஆளுக்கொரு கயிற்றுச் சுருளைத் தோள்களில் சுமந்து வழக்கமான முறையில் கடற்கரைக்கு வந்தனர். முத்துக் குளிப்பவர்கள் கடற்கரைக்கு வருவதற்கு முன்னரே அரசன் சுந்தர பாண்டியனுக்கு, முத்துக் குளிப்பவர்களிடமிருந்து பத்துக்கு ஒன்றாகக் கப்பம் வசூலிக்கின்ற நான்கு காவலர்களும், ஆழ்கடலில் மூழ்கி அரிய முத்துச் சிப்பிகளைத் தேடுபவர்கள் பெரிய மீன்கள், சுறாக்கள் போன்ற ஆபத்தான கடல்வாழ் உயிரினங்களின் பிடியில் அகப்படாமல் பத்திரமாகக் கரை திரும்புவதற்கு உதவுகின்ற மந்திரத்தைச் சொல்லுகின்ற ‘அமியமன்’ பார்ப்பனர்கள் பத்திருபது பேரும், ‘ஈஸ்வரா, இருபதுக்கு ஒன்றாக இன்றைய வருமானம் ஏகபோகமாக இருக்க வேண்டும்!’ என்னும் வேண்டுதலுடன் அங்கே கூடியிருந்தனர்.

பத்தில் ஒரு முத்து அரசன் பாண்டியனுக்கு என்னும் தொடர்ச்சியில், ‘இருபதில் ஒரு முத்து ‘அமியமன்’ பார்ப்பனர் எங்களுக்கு!’ என்று எழுதாத விதியொன்றைத் தங்களுக்குத் தாங்களே வகுத்துக் கொண்டு கொற்கைத் துறைமுகத்தைக் குத்தகை எடுத்துக் கொண்டார்கள் பார்ப்பனர்கள்.

இருபது பேர் அடங்கிய அந்த பார்ப்பனக் குழு, முத்துக் குளிப்பவர்கள் அனைவரையும் தனது கட்டுக்குள் அடக்கிக் கொண்டது.

கடலுக்குள் இறங்கிய படகு சிறியதும் பெரியதுமாக சீறும் அலைகளை எதிர்த்து நிலைத்து நிற்கிறது என்பது நிச்சயமான நொடியில் இறுக்கமாகக் கயிற்றை இடுப்பில் பிணைத்து அண்ணன் மூக்கையனிடம் மறு முனையைக் கொடுத்து சிறிய சிறிய இடைவெளிப் பொழுதுகளில் மூன்று முறை படகிலிருந்து கடலுக்குள் பாய்ந்து எழுபது சிப்பிகளைப் படகில் கொண்டுவந்து சேர்த்த முகுந்தன், நான்காவது முறை மூழ்கிய பிறகு வழக்கமாக வரவேண்டிய நேரத்திற்குப் படகை வந்தடையவில்லை.

பிடித்த கயிறை விடாமல் விறைத்த நிலையில் மூக்கையன் பலமாகப் பிடித்துக் கொண்டு, அய்யோ! ஆபத்து! ஆபத்து! என்று பதற என்னவோ நேர்ந்து விட்டதைப் புரிந்துகொண்ட படகோட்டிகள் அலைகடல் பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அலையாடிக் கொண்டிருந்த தமது படகுகளை மூக்கையனின் படகு நோக்கி விரைந்தோட்டி வந்தனர். ஆபத்துக் காலங்களில் கடலுக்குள் இறங்குகின்ற அனுபவஸ்தர்கள் அய்ந்து பேர் தாமதிக்காமல் அதிரடியாகக் கடலுக்குள் குதித்தனர். மூச்சு முட்டி இறந்த முகுந்தனின் உடலை அய்வரும் சிரமத்துடன் மேலே கொண்டு வந்து சேர்த்தனர்.

ஒட்டுமொத்த கடற்கரையும் கதிகலங்கி நின்றது. எட்டு, பத்து வயதுகளில் மகன், மகளைக் கொண்டிருந்த முகுந்தனின் மனைவியை யாராலும் ஆறுதல் செய்ய இயலவில்லை. முகுந்தனின் மனைவிக்கும் மேலாக மூக்கையனுக்கு அருமைத் தம்பியின் மரணத்தில் அளவிடமுடியாத பேரிழப்பு ஏற்பட்டுவிட்டது; கூடவே நான்கும் பெண்ணாகப் பெற்றிருந்த அவனுக்கு முகுந்தனின் மனைவி மற்றும் குழந்தைகளைப் பாதுகாத்துப் பராமரிப்பு செய்ய வேண்டிய கடமையும் சேர்ந்து கொண்டது. தம்பி இறந்த துக்கத்தில் தொழிலுக்குச் செல்லாமல் பல நாள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான் மூக்கையன்.தம்பியின் மரணத்தில் தன்னிலை இழந்து கிடந்த மூக்கையனை, “போய் விட்டவனையே நினைத்து புலம்பிக் கொண்டிருந்தால் பிழைப்பு எப்படி?’’ என்று பாடம் சொல்வது போல பல விதங்களில் ஆறுதல் சொல்லித்தான் இன்று கடலினுள் அழைத்து வந்திருக்கிறான் மூக்கையனின் மைத்துனன் முத்துவீரன்.

சரி, சரி, பேசிப் பேசியே பொழுதை வீணாக்கிவிடக் கூடாது. என் இடுப்பு முடிச்சு சரியாக இருக்கிறதா பார்த்துக் கொள்! உன் கைப்பிடி கயிறைக் கவனமாக பிடித்துக் கொள்!’’ என்றவன் தாமதிக்காமல் கடலுக்குள் குதித்தான். முத்துவீரனை அடியொற்றியவர்களாக மிச்சமிருந்தவர்கள் ஒவ்வொருவராகக் கடலுக்குள் மூழ்கினர்.

கடற்கரை மணற்பரப்பில் தான் தோன்றியாய் வளர்ந்திருந்த புன்னை மரங்களின் நிழலில் தனியாகவும், சேர்ந்தவர்களாகவும் சம்மணமிட்டு அமர்ந்திருந்த பார்ப்பனர்கள் தத்தமக்குரிய முத்துக் குளிப்பவர்களின் உயிர்ப் பாதுகாப்புக்காக தங்களுக்கே கூட சில வார்த்தைகளுக்குப் பொருள் விளங்காத சமஸ்கிருத மொழியில் மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினர்.

“அறுபது சிப்பிகள் கிடைத்திருந்த நிலையில், மூக்கையன் – தன் மைத்துனனிடம், “முத்து, இன்று நீ மூழ்கியது இத்துடன் போதும். இரண்டு முழுக்கு நான் போட்டுப் பார்க்கிறேன்!’’ என்று சம்மதம் கேட்டுப் பார்த்தான். மாமனின் விருப்பத்திற்கு மைத்துனன் சம்மதிக்கவில்லை. “இன்று தம்பியைப் பறிகொடுத்துவிட்டு தொழிலுக்கு வந்த முதல் நாள் உனக்கு. நீ முழுக்குப் போட வேண்டாம். நாளையிலிருந்து எத்தனை முறையும் உன் விருப்பம் போல மூழ்கி எழு!’’ என்றான். மாமன், மைத்துனனை மறுத்துப் பேச சக்தியற்றவனாக மவுனத்தில் ஆழ்ந்து விட்டான். முத்து வீரன், “இந்த முழுக்குதான் கடைசி!’’ என்றபடி எட்டாவது முறையாகக் கடலுக்குள் குதித்தான்.

பொழுது சாய நான்கு நாழிகை இருக்கும் நேரத்தில் என்றும் போன்ற வழக்கத்தில், ‘இன்னும் கொஞ்சம் கிடைத்தால்…’ என்னும் ஆசையுடன் முத்துக்கு முயன்றவர்கள் அனைவரும் ஒரு சேர கரையேறித் தங்கள் உழைப்பின் பயனை எண்ணத் தொடங்கினர். அன்றைய தினத்தில் முத்து வீரனின் ஆழ்கடல்  சேகரம் எண்பத்தைந்து சிப்பிகள் என்னும் அளவில் முடிந்திருந்தது. பாண்டியனின் காவலர்கள் தாங்கள் சேகரித்த சிப்பிகளை எண்ணி முடித்தவர்களிடம் பத்தில் ஒரு பங்கு கேட்டுப் பெற்றுக் கொண்டிருந்தனர். எட்டு சிப்பிகளைக் காவலர்களிடம் முத்துவீரன் எண்ணிக் கொடுப்பதைப் புன்னை மர நிழலில் அமர்ந்து கண்கொத்திப் பாம்பாகக் கவனித்துக் கொண்டிருந்த இளைய பார்ப்பனன் தனது கனத்த சரீரத்தைக் காற்று வெளியில் நிலைப்படுத்தி அசைந்தசைந்து சிறியதொரு ஆனைக்குட்டியைப் போல முத்துவீரனை நெருங்கினான். நெருங்கியவன் முத்துவீரனிடம், “எனக்குரிய சிப்பிகளை எடுத்துக் கொடு!’’ என்று அதிகாரமாகக் கேட்டான்.

‘என்றும் இப்படி இல்லை!’ என்னும் தன்மையில் கோபம் கிளர்ந்தது முத்துவீரனுக்குள்.

“அய்யரே, நாங்கள் கஷ்டப்பட்டு கடலில் மூழ்கி சேகரித்த சிப்பிகளில் பொழுதெல்லாம் வெறுமையாய் புன்னை மர நிழலில் உட்கார்ந்திருந்த உனக்கு நாங்கள் ஏன் பங்கு கொடுக்க வேண்டும்?’’ ‘அமியமன்’ பார்ப்பானை ஆவேசமாகக் கேள்வியால் துளைக்கும் முத்துவீரனின் செயலில் அதிர்ந்து போன மூக்கையன் அவனிடம் பார்ப்பானுக்கு ஆதரவாகக் குறுக்கிட்டான்.

“முத்து, வீணாக எதற்கு அய்யருடன் வம்பு? வழக்கமான முறைக்குக் கடற்கரைக்கு வந்து காத்திருந்து மந்திரம் ஓதிய கடமைக்கு அவருக்குச் சேர வேண்டியதைக் கொடு!’’

முத்துவீரன், மூக்கையனைக் கோபமாக முறைத்தான்.  “அய்யரே, உன்னுடன் சண்டையிட எனக்கு விருப்பமில்லை. முகுந்தன் முத்துக் குளிக்க மூழ்கி பிணமாகக் கரைக்கு வருவதற்கு முன்பு வரை நாங்கள் உனக்கு இருபதுக்கு ஒரு பங்கு கொடுத்து வந்தது எவ்வளவு பெரிய தவறு என்பது இப்பொழுதுதான் எங்களுக்குப் புரிகிறது. ‘மந்திரம் ஓதுகிறேன். உயிரைப் பாதுகாக்கிறேன்’ என்று இத்தனை நாட்களாக எங்களிடமிருந்து முத்துகளை ஏமாற்றிப் பறித்துக் கொண்டிருந்த உனக்கு இனிமேல் பங்கு முத்து கிடையாது!’’ “என்னது, இத்தனை நாட்களாக மந்திரம் ஓதுகிறேன் என்று ஏமாற்றிக் கொண்டிருந்தேனா?’’

“ஆமாம், ஏமாற்றிக் கொண்டுதான் இருந்தாய்! உன் பாதுகாப்பு மந்திரம் ஏமாற்று என்னும் காரணத்தால்தான் பதினைந்து தினங்களுக்கு முன் முகுந்தன் உயிரில்லாதவனாகக் கரையேறினான்?’’

“ஓ! அதுவா? அதைப் பற்றி – முகுந்தன் சாவு பற்றி, ‘கடவுள் சித்தம்! விதி முடிந்துவிட்டது!’ என்று அன்றே சொன்னேனே!’’ “அப்படியென்றால் உன் மந்திரத்துக்குக் கடலில் முத்துக்குளிப்பவர்கள் சாவைக் கட்டுப்படுத்தும் சக்தி இல்லை என்பதுதானே அர்த்தம்?’’

“ஏ, முத்து! வீணாக பகைத்துக் கொள்ளாதே! இப்பொழுது எனக்குரிய பங்கு முத்தைக் கொடுக்க முடியுமா _ முடியாதா?’’
“முடியாது!’’

“முத்து, இந்தப் பிரச்சினையை நான் இப்படியே விட்டுவிட மாட்டேன். நான் பாண்டியனிடம் செல்வேன்.’’ “பாண்டியனிடம் போ! இல்லை பரமேஸ்வரனிடம் போ! இனிமேல் எங்களிடமிருந்து முத்தை எதிர்பார்க்காதே! நாளையிலிருந்து ‘உங்களுக்காக மந்திரம் சொல்கிறேன்’ என்று கடற்கரைக்கு வராதே!’’

முத்துவீரனின் மூர்க்க விளக்கத்தில் நாடி நரம்புகள் நடுங்க பொறுமையிழந்து போன இளைய பார்ப்பான் காவலர்களையும், மற்ற பார்ப்பனர்களையும் தனக்கு ஆதரவாகக் கூப்பிட்டான். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்த பார்ப்பனர்களும் அவர்களுக்குப் பின்னால் வந்த காவலர்களும், ‘இளைய பார்ப்பானுக்குரிய முத்தைக் கொடுத்துத் தீர வேண்டும்!’ என்று ஒன்றாகக் குரலுயர்த்தினார்கள்.

‘முத்துவீரனால் கடற்கரையில் என்னவோ பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது’ என்பதைப் புரிந்து ஒன்று கூடிய முத்துக்குளிப்பவர்களில் பெரும்பான்மையோர், “உயிர்ப் பாதுகாப்புக்கு உதவும் வகையில் மந்திரம் சொல்லும் பிராமணர்களுக்கு பங்க கொடுப்பதில் தவறில்லை!’’ என்று பார்ப்பனர்களை ஆதரித்தார்கள். எண்ணிக்கையில் குறைந்தவர்கள், ‘என்ன ஆனாலும் ஆகட்டும்!’ என்னும் எண்ணத்துடன் முத்துவீரனுக்கு துணை வந்தார்கள்.

“முத்துவீரன் சொல்வது நியாயம். ஆறு பாதம்-ஏழு பாதம் ஆழத்துக்குக் கடலில் மூழ்கி உயிர்மூச்சு திணறத் திணற, விழி பிதுங்க மூச்சடக்கிக் கஷ்டப்பட்டு நாமெடுக்கும் சிப்பிகளில் இணுக்கும் எடுக்காமல் பொழுதிற்கும் புன்னைமர நிழலில் உட்கார்ந்திருக்கும் பார்ப்பனர்களுக்கு நாம் எதற்கு பங்கு கொடுக்க வேண்டும்?

பிரச்சினையில் பொதிந்துள்ள நியாயத்தைப் புரிந்துகொண்ட பாண்டியனின் காவலர்கள், ‘அநியாயத்துக்கு ஆதரவாகப் போக வேண்டாம்!’ என்னும் நல்லெண்ணத்துடன், ‘இரு தரப்பாரும் தாங்களாகவே தீர்வு கண்டு கொள்ளட்டும்!’ என்பது போல பட்டும் படாதவர்களாகக் கூட்டத்திலிருந்து விலகி நின்றார்கள். பார்ப்பனர்கள் முத்துவீரனுக்கு ஆதரவாக நின்றவர்களைப் பாண்டியனின் பேரைச் சொல்லிப் பயமுறுத்திப் பார்த்தார்கள்.

“எங்களுக்குரிய பங்கு முத்துக்களை எண்ணி வைக்கவில்லையென்றால் வைக்காதவர்கள் பாண்டியனிடம் பதில் சொல்ல வேண்டி வரும்!’’

“பாண்டியனை நேரில் பார்க்க எங்களுக்கும் நெடு நாள் ஆசை. சரி, உங்கள் புண்ணியத்தில் பாண்டியனைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கட்டும்! எப்பொழுது போகலாம் சொல்லுங்கள்!’’ என்று கோபம் நிறைந்தொலித்த முத்துவீரனின் ஆதரவாளர்கள் குரலில் மிரண்டு போன பார்ப்பனர்கள், ‘மேற்கொண்டு என்ன செய்யலாம்?’ என்னும் யோசனையுடன் குழுவாக ஒன்று கூடித் தங்களுக்குள் குசுகுசுக்க ஆரம்பித்தார்கள்.

படகுகளைக் கடற்கரையில் இழுத்துக் கட்டிய பிறகு காலையிலிருந்து இத்தனை நேரமும் கடல் நீரில் ஊறிக்கிடந்த கயிறுகளைச் சுருட்டி தோள்களில் ஏற்றிக் கொண்டு முத்துக் குளிப்பவர்கள், ‘பாண்டியனுக்குரிய பங்கைக் கணக்காகக் காவலர்களிடம் கொடுத்துவிட்டோமா?’ என்னும் கேள்வியுடன் தத்தமது வீடு நோக்கித் தளர்வுடன் நடந்தனர்.

என்றும் போன்ற சிவப்புதான் என்றாலும் என்ன காரணமோ தெரியவில்லை. அன்றைய அந்திச் சூரியனின் சிவப்பில் அடர்த்தி அதிகமாகத் தெரிந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *