– தமிழோவியன்
சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நீட்: அடுத்த கட்ட நகர்வு என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் திராவிடர் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு 27.2.2018 அன்று மாலை சிறப்புடன் நடந்தேறியது.
இந்தச் சிறப்புக் கருத்தரங்கத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்க திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்று தொடக்க உரையாற்றினார். மேனாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டாக்டர் ஏ.கே.ராஜன், அரிபரந்தாமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
நூல் வெளியீடு:
நிகழ்ச்சியில், தந்தை பெரியார் எழுதிய புதியதோர் உலகு செய்வோம், தமிழர் தலைவர் அவர்கள் எழுதிய பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி, ந.சி.கந்தையாப்பிள்ளை எழுதிய, திராவிட இந்தியா ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.
தமிழர் தலைவர் எழுச்சியுரை:
நீட் விஷயத்தில் சட்ட முறையையே மாற்றி, ஒழுங்கு முறைக்குக் கேடாக, ஒரு முடிவை முன்னாலேயே எடுத்து வைத்துக்கொண்டு, அதற்கேற்ப வழங்கப்பட்டத் தீர்ப்புதான் _ அதன்மூலம்தான் நீட் தேர்வுக்கே உயிர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆக்டோபஸ் போன்று, நீட் கரங்களும் நீளுகிறது. வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்றாலும், நீட் தேர்வு எழுதிவிட்டுத்தான் செல்ல வேண்டும். சித்த வைத்தியர்கள்கூட நீட் தேர்வு எழுதியாக வேண்டும் என்று சொல்கிறார்கள்.
நம்முடைய ஊடகங்களுக்கு இதைப்பற்றி யெல்லாம் கவலைஇல்லை. நடிகையினுடைய உடல் வந்துவிட்டதா? இல்லையா? நடிகர்கள் எப்பொழுது அரசியலுக்கு வருவார்கள்? என்ற கவலை இருக்கிறதே தவிர காவிரிப் பிரச்சினை, நீட் தேர்வு பிரச்சினையைப் பற்றி அக்கறை இல்லை.
எனவேதான் வீதிமன்ற போராட்டங்கள், மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பியாக வேண்டும். விடாமல் போராடினால், நிச்சயமாக விடியும்.
தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட இரண்டு மசோதாக்கள் அப்படியே கிடப்பில் கிடக்கின்றன. ஆகவேதான், அடுத்து நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறுகின்ற பொழுது தமிழக எம்.பி.க்கள் 50 பேரையும் அழைக்க இருக்கிறோம்.
எல்லாக் கட்சி மாணவர்கள், கட்சித் தலைவர்கள், கட்சி எம்.பி.க்கள் அனைவரையும் அழைத்து ஏப்ரல் 3ஆம் தேதி நாடாளுமன்றம் நடைபெறுகின்றபொழுது, நீட் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அன்று மாலை 5 மணிக்கு நீட் தேர்வில் இருக்கின்ற சட்ட நுணுக்கங்கள், சட்டவிரோதமாக ஏற்கெனவே எடுத்த முடிவுகள், போக்குகள், இவை பற்றிய கருத்தரங்குகள் அறிஞர் பெருமக்களைக் கொண்டு மிகச் சிறப்பாக நடத்தப்படும். இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சியுடன் உரையாற்றினார்.