Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வாசகர் மடல்!

நான் திருப்பூர் மாநகரத் தலைவர் மானமிகு இல.பால கிருஷ்ணன் அவர்களின் மகள் என்பதை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். நாங்கள் ஏழு மாணவிகள் திராவிடர் மாணவர் அமைப்பில் உள்ளோம். இன்னும் நிறைய மாணவர்களை அணுகி இயக்கத்தைப் பலப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் மகளிர் தின கவியரங்கில் நான் படித்த கவிதை.

பெண்ணியம்

ஓ பெண்ணினமே! நீ விழித்தெழு!

மானம் தடுப்பாரை, மதியைக் கெடுப்பாரை

உடைத்தெறியும் கடப்பாரை…

நம் தாத்தா

பெரியாரின் கைப்பிடித்து,

பாரதிதாசன் கவியெடுத்து

பாரதியின் மிடுக்கோடு…

குருட்டுப் பூனைகளை இருட்டு வீட்டுக்குள்
விரட்டி அடிப்போம் வாருங்கள்…

ஓ சமுதாயமே!

ஓநாய்கள் ஓலமிடும் சமூகச் சந்தையிலே

உன் அடக்க முடியாத அழுகைக்கூட

அடங்கிப் போகுமம்மா!

அனைத்துலகமும் சிவனென்றால்..

அவன் உடல் பாதி பெண்தானே?

அனுதினமும் தரிசிக்கும் நீ!

அதை ஏனோ மறந்தாயே!

அழிந்து போனதா சமூக நீதி?

ஓ… மனித குலமே!

என் தாயின் கருவறையில்

பயந்து பயந்து வளர்ந்து வந்தேன்

காரணம், என் தாய்

“பக்கத்து வீட்டுப் பாட்டியிடம்

இந்த முறையும் பெண்ணானால்

கள்ளிப்பால் கொடுத்துவிடு’’

எனச் சொல்லிய சொல் கேட்டு

அடங்கிப் போனேன் அமைதியாய்’’

அங்கேதான் ஆரம்பம்

என் முதல் அடிமைத்தனம்

நெஞ்சம் கொதிக்கிறது

வஞ்சம் எனும் வார்த்தைக்கு

வடிவம் கொடுக்கப் பார்க்கிறாயே..

ஓ… மனிதகுலமே!

நான் அழிந்து போனால்

உனக்கேது அடுத்த சந்ததி?

பள்ளிப் பருவத்திலும் சிறுமிகளே பலாத்காரம்

பருவம் வந்த வயதிலும் பாலியல் தொல்லைகள்

‘பசி’ ஷோபா முதல்

‘பதினாறு வயதினிலே’ மயிலு வரை

மாண்டவர் அனைவரும் பெண்தானே

அடப்பாவமே! மருத்துவ ‘நீட்’ தேர்விலும்

மாண்டவர் பெண்தானே!

அனைவருக்கும் தெரியும்

அனிதா யாரென்று!

 

ஓ.. பெண்ணினமே!

ஊதாரிக் கணவனிடம்

உழைத்துக் கொட்டும் பெண்ணினமே!

தினமும் வாழ்வாதாரப் போராட்டங்கள்

வருடமெல்லாம் நிகழ்ந்தாலும்

வாய்திறக்க யாருமில்லை

வருந்தக் கூட நாதியில்லை

நாவடக்கம் தேவைதான் – அது

நல்லவைக்கு மட்டுமே!

நாமடங்க மறுத்துவிட்டால்

நடுநிலையை தேர்ந்தெடுத்தால்

“கிழக்கு வானம் வெளுக்கலாம்

உலுப்பி உலகை உடைக்கலாம்”

வாருங்கள்! பெண்கள் உலகம் படைக்கலாம்!

 

ஓ.. சமூகமே!

பாலினப் பாகுபாடு பார்ப்பதில்லை மிருகங்கள்

பாழாய்ப்போன மனிதர்கள் மட்டும்

வாழாவெட்டிகள் என்ற பெயரை

வைத்துவிட்டார்கள் எங்களுக்கு – அன்று

பாண்டவர்கள் பகடைக்குப்

பயன்படுத்திய பாஞ்சாலியல்ல நாங்கள்!

– ப.திவ்யபாரதி பி.ஏ., எல்.எல்.பி,

கன்னங்குறிச்சி, சேலம் -8