வாசகர் கடிதம்

மார்ச் 16-31

 

தியாகத்தின் மறு உருவம் மணியம்மையார்

 

உண்மை (மார்ச் 1 – 15, 2018) மாதமிருமுறை இதழில் தந்தை பெரியாரையும், இயக்கத்தையும் காத்தளித்த விந்தைமிகு வீரத்தாய்! அன்னை மணியம்மையார் அவர்களின் ஒளிப்படம் அட்டையை அலங்கரித்துள்ளது அருமை.

அன்னை மணியம்மையார்  தம் இளமையையே தியாகம் செய்து அய்யாவுக்குச் செவிலியராக இருந்து தியாக வாழ்வை மேற்கொண்டதற்காக பல்வேறு இன்னல்களையும் ஏச்சுகளையும், வசவுகளையும், அவமானத்தையும், அவதூறுகளையும், கேலி கிண்டல்களையும், ஏளனத்தையும் ஏற்றுக்கொண்டு தந்தை பெரியார் அவர்கள் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து சமுதாயத் தொண்டாற்ற வேண்டும் என்பதற்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு, கருப்பு மெழுகுவர்த்தியாக தியாகத்தின் மறு உருவமாக விளங்கியவர்.

மேலும், 1974ஆம் ஆண்டு சென்னை பெரியார் திடலில் இராவண லீலா நடத்திக் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதும், உலகையே உற்றுநோக்க வைத்ததும் அம்மா கண்ட களங்களுக்குச் சரியான சான்றுகளாகும். ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கட்டுரையின் இறுதியில், என் சொந்த அன்னையை அறியாத நான், அய்யாவை அறிவுத் தந்தையாக ஏற்றுக்கொண்ட அந்த அன்னையை என் அறிவு அன்னையாக ஏற்றுக்கொண்டேன் என்று குறிப்பிட்டிருப்பதை படித்தபோது என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் வழிந்தது.

வாழ்க தந்தை பெரியார்!

வாழ்க அன்னை மணியம்மையார்!

– இல.சீதாலட்சுமி, மேற்கு தாம்பரம், சென்னை-45 உண்மை பிப்ரவரி 1-15 இதழில் முகப்பு அட்டையில் பெரியார் விருது –  2018 பற்றிய வண்ணப்படம் அருமையோ அருமை. பெரியார் விருது வழங்கும் விழா, தமிழ்ப் புத்தாண்டு, திராவிடர் திருநாள் காட்சியும் மாட்சியும் என்ற மஞ்சை வசந்தனின் முகப்புக் கட்டுரை மிகச் சிறப்பு. அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? என்ற சிகரம் அவர்களின் கட்டுரை புராண இதிகாசப் புளுகுகளை தோலுரித்துக் காட்டியது. ஆறு.கலைச்செல்வனின் பல்லி!, சிறுகதை மூடநம்பிக்கையின் அவலத்தை படம் பிடித்துக் காட்டியது. நேயன் அவர்களின் தமிழை உயர்த்திப் பிடித்த தந்தை பெரியார் என்ற கட்டுரை எத்தர்களின் உச்சி மண்டையில் ஓங்கிக் குட்டியதாய் அமைந்தது. அய்யாவின் அடிச்சுவட்டில்.. கருத்துக் கருவூலமாய் ஜொலித்தது. இத்தனைக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஜாதி பற்றிய உச்சநீதிமன்ற இரண்டு தீர்ப்புகளும் கழகத்தின் நிலைப்பாடும் என்ற தலைப்பில் அமைந்த தலையங்கம் என்னிடமிருந்த சில அறியாமைகளை நீக்கியது. மொத்தத்தில் இந்த இதழில் அமைந்த அத்துணை கட்டுரைகளும், பெட்டிச் செய்திகளும் ரத்தினமாய் ஒளி வீசியது. இதேபோன்று ஒவ்வொரு இதழும் தமிழர்களிடம் சென்றடைய வேண்டும் என்று ஆவல் கொள்கிறேன். அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன்.

– வி.பி.மாணிக்கம், நெல்லித்தோப்பு, புதுச்சேரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *