– சிகரம்
பாதாள லோகம், இந்திரலோகம், எமலோகம் உண்டா?
பூமி பாதாளத்தில் அழுந்திவிட, பூதேவி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டாள். அவள் செய்த துதியே கேசவ துதி எனப்படுகிறது. இதைச் செய்பவர்கள் வறுமை, பாவங்களிலிருந்து விடுபடுவர். புத்திரப் பேறு கிடைக்கும். இறுதியில் விஷ்ணுலோகமும் அடைவர்.
பூமித்தேவியின் முறையீட்டைக் கேட்ட பகவான் விஷ்ணு மிகப்பெரிய வராக (பன்றி) உருவெடுத்தார். இப்படி எடுத்த வராக அவதார பகவான் பூமியைக் காத்திட சமுத்திரத்திற்குள் பிரவேசித்தார்.
பிரஜாபதிகளில் காசியப முனிவரும் ஒருவர். அவருடைய மனைவியரில் ஒருத்தி திதி. அவள் ராக்ஷசர்களின் தாய். ஜயவிஜயர்கள் அவள் வயிற்றில் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்ற இருவர்களாய் உதித்தனர். அவர்களில் இளையவன் ஹிரண்யாக்ஷன்.
அவன் பிரம்மாவைக் குறித்துக் கோர தவம் செய்தான். அதன் வெப்பம் மூன்று லோகங்களையும் தகித்தது. இதனால் அச்சம் கொண்ட தேவர்கள் சத்திய லோகம் சென்று பிரம்மாவைக் கண்டு இரண்யாக்ஷன் தவம் பற்றிக் கூறித் தங்களுக்கு அருள் புரிய வேண்டினர். அப்போது பிரம்மா தான் சென்ற இரணியாக்ஷன் தவத்தை முடிக்கச் செய்வதாகவும், தேவர்களை ரக்ஷிப்பவனாகவும் இருப்பதாகக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார். பூமிக்கடியில் அதலம், விதலம், நிதலம், சுதலம், தலாதலம், ரஸாதலம், பாதாளம் என்று ஏழு உலகங்கள் உள்ளன. இவற்றில் தைத்தியர்கள், தானவர்கள், நாகர்கள் ஆகியோர் வசிக்கின்றனர். இந்தப் பாதாள லோகங்கள் மிகவும் அழகியவை, இங்கு பொன்னும் பொருளும் குவிந்து கிடக்கின்றன. இங்கேயும் காடு, பறவைகள் போன்ற ஜீவராசிகளும் நிறைந்துள்ளன என்று நாரதர் கூறினார். பூமண்டலப் பகுதியாக பல நகரங்கள் அமைந்துள்ளன. இதற்கெல்லாம் தலைவன் எமதர்மராஜன். அவரவர் செய்யும் பாவங்களுக்கு ஏற்ப இங்கு ஜீவன் தண்டிக்கப்படுகிறது. பாவப் பிராயச்சித்தம் செய்தவர்களும் புனிதர்களும் நரகங்களுக்குச் செல்லார். (விஷ்ணு புராணம்)
என்கிறது இந்து மதம். அது என்ன பாதாளம்? பூமியின் கீழே என்ன இருக்கிறது? பூமி அந்தரத்தில் அல்லவா மிதக்கிறது. இதுதானே அறிவியல் உண்மை. அப்படியிருக்க பூமியின் கீழே பாதாள லோகம் என்பது படுமூடத்தனம் அல்லவா? பூமியினுள் சென்றால், தண்ணீர், எண்ணெய், நிலக்கரி, உலோகங்கள் இப்படித்தானே இருக்கும். இன்னும் தோண்டினால் பூமியின் இன்னொரு பக்கம் வந்துவிடும். அப்படியிருக்க பாதாள லோகம் என்பது அறிவியலுக்கு முரண் அல்லவா? மேலும், சத்தியலோகம், இந்திரலோகம், எமலோகம், சொர்க்கலோகம், நரக லோகம் என்கிறதே இந்து மதம். இப்படியெல்லாம் லோகங்கள் ஏதும் இல்லையே! எல்லாவற்றையும் மனிதன் கண்டுபிடித்து விட்டானே?
இப்படி அறிவுக்கும் உண்மைக்கும் மாறான கருத்துகளைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா? அறிவை கொள்ளையடிக்க முடியுமா? இழந்த அறிவு நீரில் மூழ்கினால் வருமா?
ஒரு சமயம் நாரதர் பிரியவிரதனைக் காணச் சென்றார். அவனும் முனிவரை வரவேற்று உபசரித்துப் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தான். அவற்றிற்கெல்லாம் அவர் விடை அளித்த பிறகு சில அபூர்வ, அதிசய நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுங்கள் என்று வேண்டினான். நாரதர் கூறலானார்.
சுவேதத்வீபத்தில் ஓர் ஏரி உள்ளது. நாரதர் அங்குச் சென்றபோது அந்த ஏரி மலர்ந்த கமலங்களுடன் விளங்கியது. மலர்களுக்கு அருகில் ஓர் அழகிய பெண்மணி அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.
அவளை யாரென்று அவர் கேட்டார். அதற்கு அவள் பதிலளிக்காமல் ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பெண்ணின் உடலிலிருந்து மூன்று ஒளி உருவங்கள் தோன்றி மறைந்தன. நாரதர் திகைத்து நின்றார்.
அவள் யாரென்று நாரதர் மறுபடியும் கேட்டார். அதற்கு அவள்தான் சாவித்திரி என்றும், வேதங்களின் தாய் என்றும் கூறினாள். நாரதரால் அவளை அறிய முடியாதென்றும், அவருடைய அறிவை எல்லாம்தான் கொள்ளை அடித்து விட்டதாகவும் கூறினாள். தன்னிலிருந்து வெளியேறிய மூன்று உருவங்களும் மூன்று வேதங்கள் ஆகும். (மூன்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.)
அப்போது நாரதர், தன் அறிவை எப்படி திரும்பப் பெறுவது, சாவித்திரி நாரதரை அந்த ஏரியில் குளிக்குமாறும், அதனால் அறிவைத் திரும்பப் பெறுவது மட்டுமின்றி, முற்பிறவி செய்திகளும் அறிய முடியும் என்றாள். நாரதர் அவ்வாறே அதில் நீராடி இழந்த அறிவையும், முற்பிறவி பற்றியும் அறிந்திட்டார் என்கிறது இந்து மதம். ஒருவன் அறிவை ஒருவர் தன் பார்வையால் கொள்ளையடிக்க முடியுமா? அவ்வாறு கொள்ளைபோனஅறிவு நீரில் மூழ்கினால் மீண்டும் வருமா? வரும் என்கிறது இந்து மதம். இப்படிப்பட்ட முட்டாள்தனமான கருத்துகளைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?
மனிதன் ஆணையிட்டால் நதி விலகுமா?
ஆரூரரும் சேரர்பெருமானும் காவிரித் திருநதியின் தென்கரை வழியிலே சென்று சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக் கோயில்கள் பலவற்றையும் வணங்கிக் கொண்டு திருக்கண்டியூரை அடைந்து இறைவனை அன்புடன் பணிந்து வெளியே வந்தனர் அப்போது காவிரியின் வடகரையில் திருவையாறு எதிர் தோன்றுதலும், உடலும் உள்ளமும் உருக உச்சியின்மேற் கைகளைக் குவித்தருளிக் கடல்போல் பெருகிச் செல்லும் காவிரியாற்றினைக் கடந்து வடகரையில் ஏறிச் சென்று அய்யாற்றுப் பெருமான் திருவடிகளை வணங்குதற்கு நினைவு கொண்டனர். சேரலனார் சுந்தரரை வணங்கி, திருவை யாற்றினை அடைந்து சிவபெருமானுடைய திருவடிகளை வணங்க உள்ளம் பெரிதும் உருகிக் குழைகின்றது; நாம் இந்த ஆற்றினைக் கடந்து சென்று வணங்குவோம்; என்றார். அதனைக்கேட்ட நம்பியாரூரர், அக்காவேரியாறு இருகரையினையும் அழித்து ஓடங்கள் செல்ல முடியாதபடி பெருகுதலைக்கண்டு, இறைவன் திருவடிகளைப் பணிந்து பரவும் பரிசு என்று தொடங்கித் திருப்பாட்டுக்கள் ஒவ்வொன்றன் இறுதி தோறு அய்யாறுடைய அடிகளோ என்று ஆசையுடனே அழைத்துத் திருப்பதிகத்தினைத் தென்கரையில் நின்று பாடியருளினார்.
அப்போது சிவபெருமான், தனது கன்று தடைப்பட்டு எதிர்நின்று கூப்பிட்டு அழைக்க அதனைக் கேட்டுத் தான் கதறிக் கனைக்கும் தாய்ப்பசுபோல, ஒன்றிய உணர்வினாலே சராசரங்கள் எல்லாம் கேட்கும்படி ஓலம் என்று நின்று கூறியருளினார். உடனே காவிரி நதியும் பிரிந்து வழிகாட்டியது.
மிகவும் பெருகி ஓடிய காவிரியாறு மேற்றிசையில் பளிங்கு மலைபோலத் தங்கிநிற்கக் கீழ்த் திசையிலுள்ள நீர்வடிந்த இடையில் நல்ல வழியினை உண்டாக்கி மணவினைப் பரப்பியிடக் கண்ட அடியார்கள் பெருமகிழ்ச்சி கொண்டனர்; கண்களினின்றும் ஆனந்த நீர் சொரியக் கைகளை அஞ்சலியாகக் குவித்து வணங்கினர். என்கிறது இந்து மதம். ஓடுகின்ற நதி மனிதன் பாட்டுப் பாடியதும் வழிவிட்டது என்கிறது இந்துமதம். இது அறிவியலுக்கு ஏற்றதா? இது அறிவியலுக்கு எதிரான கருத்தல்லவா? அப்படியிருக்க இப்படிக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?
(சொடுக்குவோம்)