இது பெரியார் மண்! எதிரிகளுக்கு உணர்த்திய இனத்தின் எழுச்சி!

மார்ச் 16-31

 

 

– மஞ்சை வசந்தன்

 

இந்தியாவின் பல மாநிலங்களில் என்னென்னவோ வித்தைகளையெல்லாம் காட்டி, ஆட்சியைப் பிடிக்கும் பா.ஜ.க.வும் அதன் அதிகார பீடமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், தமிழகத்திலும் அதைச் சாதிக்க எல்லா முயற்சிகளையும் எடுத்துப் பார்த்து இறுதியில் தோற்றுக் களைத்து சோர்ந்த நேரத்தில், செல்வி ஜெயலலிதா அவர்களின் மரணத்தைப் பயன்படுத்தி, அ.தி.மு.க. தலைவர்களை தங்கள் அதிகாரப் பலத்தைக் காட்டி, விரட்டி, தங்களின் விருப்பப்படியாவது ஆட்சியை நடத்திவிட வேண்டும் என்ற கடைசி ஆசையில் காய்களை நகர்த்தி வருகின்றனர்.

என்றாலும், தமிழ்நாடு மட்டும் தனித் தீவாக, தன்மானத்தோடு, தலைநிமிர்ந்து நிற்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

இதற்கு என்ன காரணம் என்று அவர்கள் ஆராய்ந்து அறிய வேண்டிய அவசியமே இல்லாமல், பி.ஜே.பி.யைத் தவிர அனைத்துக் கட்சியினரும், சமூக அமைப்புகளும், இது பெரியார் மண்! இங்கு மதவாத சக்திகள் காலூன்ற முடியாது! என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கவே, பெரியாரைக் கொச்சைப்படுத்தி, பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் அவரை மக்கள் வெறுக்கும்படி செய்துவிட வேண்டும் என்று தொடர்ந்து முயன்று அதிலும் தோற்றவர்கள்,

பெரியார் ஒரு நாத்திகர்!

பெரியார் பிள்ளையாரை உடைத்தவர்!

பெரியார் தமிழைப் பழித்தவர்!

என்று பல அவதூறுகளை அள்ளி வீசிப் பார்த்தனர்.

பெரியார் நாத்திகராயினும் அவர் பக்தர்களின் உரிமைக்காகப் போராடியவர்.

பெரியார் தமிழ் மேன்மையுற அதன் குறைகளைச் சொன்னாரே தவிர, தமிழை அவர் இழிவுபடுத்தவில்லை. தமிழுக்காக அவர் ஆற்றிய பணிகள், திருக்குறளைப் பரப்ப அவர் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் திராவிடர் கழகத்தாலும், பெரியார் தொண்டர்களாலும் ஆதாரபூர்வமாக எடுத்து விளக்கப்பட்டதால், ஆரிய பார்ப்பனர்களின் அவதூறு முயற்சிகள் எடுபடாமல் போயின.

பக்தர்களாலும் நேசிக்கப்படுபவர் பெரியார்! தமிழரின் மேம்பாட்டிற்குத் தன்னையே அர்ப்பணித்தவர்! சமூகநீதி காத்து ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்திக் காட்டியவர்; இன இழிவை நீக்கி மேன்மையுறச் செய்தவர், சாதி உணர்வை ஒழித்து சாதனைப் படைத்தவர், பெண்ணுரிமை காத்து பெண்களை உயரச் செய்தவர் என்று எல்லாத் தொண்டுகளையும் தமிழர் ஒவ்வொருவரும் தன் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து, பெரியாரை தங்கள் உணர்வில் கலக்கவிட்டு, அதை உயிரோட்டமாய்க் காத்து வருபவர்கள்! அதனால்தான் தமிழர்கள் தமிழ்நாட்டைப் பெரியார் மண் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கின்றார்கள்!

அப்படிப்பட்ட தமிழர்களிடம், அப்படிப்பட்ட தமிழ்நாட்டில், பெரியார் சிலையை உடைப்போம், அகற்றுவோம் என்று மதவெறிக் காலிகள் முழங்கினால் அதைத் தமிழர்கள் பொறுப்பார்களா?

பார்ப்பன பா.ஜ.க. தேசியச் செயலாளர் பதிவிட்ட அடுத்த கணமே தமிழகம் சூடேறியது. கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தமிழர்களும் ஆவேசத்துடன் போர்க்கோலம் பூண்டனர்.

பதிவிட்ட ஆள் பயந்து நடுங்கி பதிவை விலக்கி, மன்னிப்பு கோரினாலும், தமிழர்கள் ஆவேசம் அடங்கவில்லை! மத்திய ஆட்சியாளர்கள், பிரதமர் மோடி, அமித்ஷா உட்பட பி.ஜே.பி. முக்கிய தலைவர்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர்.

இந்திய நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. நாடு முழுவதும் மதச் சார்பற்ற, சமூகநீதி பிடிப்புள்ள தலைவர்கள் கண்டனக் குரல் எழுப்பினர். தமிழகத்தில் அரசியல் தலைவர் களும், சமூக அமைப்பைச் சார்ந்தவர்களும், மாணவர்களும், பொதுமக்களும் வீதியில் இறங்கி ஆவேசமாய் தங்கள் எதிர்ப்பை ஆத்திரம் பொங்கக் காட்டினர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்

யாரையும் நாத் துடுக்கோடும், வாய்க் கொழுப்பு வழிந்தோடும் வண்ணமும் கொச்சையாக, தரக்குறைவாக எழுதும், பேசும் துணிச்சல் ஒரு நபருக்குத் தமிழ்நாட்டில் வந்ததற்குக் காரணம், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது என்பதாலா? அல்லது தமிழ் நாட்டில் உள்ள அரசு தங்களுக்குத் தலையாட்டும் என்ற துணிச்சலாலா?

சட்டம் ஒழுங்கு இதன்மூலம் கெடுவதோடு, வன்முறையும், கலவரங்களும் ஏற்படுவதற்கு பா.ஜ.க. வித்திடுகிறது. அமைதிப் பூங்காவாகிய தமிழ்நாட்டை அமளிக்காடாக்கிட இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகள், கருத்துகள் ஓங்கி, கலவரங்கள் வெடிக்கக் கூடும் என்று தெரிவித்தோம். அது கண்கூடாகி விட்டது இன்று.

கண்டனக் கணைகளை பாய விட்டனர்

கடந்த 24 மணிநேரம் தமிழ்நாடே – கட்சி, ஜாதி, மத, அரசியல் கட்சிகள், அமைப்புகள் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல், பிராமணர் சங்கம் என்ற அமைப்பு உள்பட, அத்துணை அரசியல் கட்சியினர், மாணவர், இளைஞர்கள், கலைஞர்கள், மகளிர் என்ற எவ்வித பேதமும் இன்றி, கொதித்தெழுந்து, எச்.ராஜாவின்மீது ஏகோபித்த கண்டனக் கணைகளைப் பாய விட்டனர்!

காற்றை விதைத்து புயலை அறுவடை செய்த  கதையைப்போல,

மின்சாரத்தில் கை வைத்தவர்கள் பெற்ற மின் அதிர்ச்சியைப்போல, இங்குள்ள பா.ஜ.க.,  மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய பா.ஜ.க. தலைவர் அமித்ஷா உள்பட பலர் உடனடியாக இதைக் கண்டிக்கவேண்டிய அளவுக்கு எழுந்த கண்டனங்களும், ஆவேச உணர்வுப் பொங்கி வழிந்த செய்திகள் நடுங்க வைத்திருக்கும் நிலையை உருவாக்கியதோடு, இனி தமிழ்நாட்டை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதே என்று அஞ்சியே நாட்டிலுள்ள தலைவர்கள் சிலையைப் பாதுகாக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தலைச் செய்துள்ள தோடு, தமிழ்நாட்டின் ராஜாவின் வன்முறைத் தூண்டலுக்குப் பலியாகி, பெரியார் சிலையை சேதப்படுத்திட முயன்ற ஒரு பா.ஜ.க. நகரப் பொறுப்பாளரும், அவருடன் சென்ற ஒரு உறவினரும் பொதுமக்களால் பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதோடு, உடனடியாக ஊர் மக்களே திரண்டுவிட்டவுடன், அவ்வூர் காவல்துறை கைது செய்து, பெரியார் சிலைக்கு மட்டுமல்ல, அவருக்கும் பாதுகாப்பு வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில், தானே எழுந்துள்ள இந்த இன எழுச்சி எரிமலை இப்போது நெருப்பைக் கக்க ஆரம்பித்துள்ளது!

தந்தை பெரியாரை, ஜாதி வெறியர் என்ற அந்தப் பார்ப்பன சனாதன மனுவின் மைத்துனர் கூறுகிறார்! இந்தப் பூணூல் புழுதியாளருக்கு, தந்தை பெரியார் ஒரு தேசியத் தலைவர். 1924 ஆம் ஆண்டு முதலே வைக்கத்தில் ஜாதி – தீண்டாமைக்கு எதிராகப் போராடிய வைக்கம் வீரர் என்று கூறி, ஆர்.எஸ்.எஸ். – ஜனசங்கங்கள் பங்கேற்ற, மொரார்ஜி தேசாய் தலைமையிலான, வாஜ்பேயி, அத்வானி முதலிய மூத்த ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜன சங்கத்தினர் – காவிகள் – பங்கு வகித்த விழாவில் மத்திய அரசு -_ நூற்றாண்டு அஞ்சல் தலை வெளியிட்டு பெருமைப்பட்டதே! அந்தச் செய்தி தெரியுமா?

அதுமட்டுமா! அதற்குப் பிறகு, 25 ஆண்டுகள் கழித்து, பிரதமர் வாஜ்பேயி ஆண்ட பா.ஜ.க. ஆட்சியில், 125 ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாளையொட்டி, அவரது தொண்டினைப் பாராட்டி, வியந்து போற்றி, சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டு, அதில் எழுதிய வாசகங்கள் என்னவென்று இவருக்குத் தெரியுமா?  வன்முறையைத் தூண்டி, அதற்குக் காரணமான எச்.ராஜாமீது அல்லவா ஒழுங்கு நடவடிக்கை, தேசிய கட்சித் தலைவரால் எடுக்கப்பட்டிருக்கவேண்டும்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

தந்தை பெரியார் அவர்களின் சிலையை தொட்டுப் பார்க்கும் அளவுக்கு எவருக்கும் தகுதி கிடையாது. பி.ஜே.பி.யின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா தொடர்ந்து வன்முறையை தூண்டக்கூடிய வகையில், அடிக்கடி இதுபோன்ற கருத்துகளை பேசி வருகிறார். நியாயமாக, அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை!

ஜாதிகளை எதிர்த்து போராடிய பெரியாரை ஜாதி வெறியன் என்று அகங்காரத்தோடு கூறியிருக்கிறார். பெரியாரின் சிலையை இரவு நேரத்தில் கள்ளத்தனமாக வந்து உடைக்க வேண்டாம். இந்திய ராணுவம், தமிழக காவல் துறையினர் உதவியோடு எந்த நாளில் எந்த இடத்தில் சிலையை உடைப்பது என்பதை அறிவித்து விட்டு வரவேண்டும். அந்த இடத்திற்கு நானே நேரில் வருகின்றேன். உடைக்க வருபவர்களின் கையை உடைத்து தூள் தூளாக்குவோம். ம.தி.மு.க.வுக்கு வன்முறை மீது நம்பிக்கை கிடையாது. இது தன்மானத்திற்கு விடுக்கப்பட்ட சவால். சிலை அருகில் வருவதற்குள் இல்லாமல் போய்விடுவீர்கள். எனவே பெரியாரை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகம் பெரியாரின் கோட்டை. அந்தக் கோட்டையின் காவலர்களாக நாங்கள் இருக்கிறோம். இதுபோல பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ராஜாவை எச்சரிக்கிறேன்.

தொல்.திருமாவளவன், தலைவர், வி.சி.க.

பெரியாரின் சிலையை அகற்ற எச்.ராஜாவின் முப்பாட்டனாலும் முடியாது.

 

சு.திருநாவுக்கரசர், தலைவர், காங்கிரஸ்

பெரியார் பற்றி ராஜா பேசியதை தமிழ்நாட்டில் யாரும் ஏற்கவோ, ரசிக்கவோ மாட்டார்கள். ராஜா இதுபோன்ற தரமற்ற பேச்சுக்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் அவருக்கும், அவருடைய கட்சிக்கும் நல்லது. ராஜாவின் பேச்சுக்கு தமிழக காங்கிரசு சார்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

பெரியார் சிலையை உடைப்போம் என்கிறார், தைரியம் இருந்தால் பெரியார் சிலையை உடைத்துப் பாருங்கள். ஆட்சிக்கு வரும் வரை ஏன் காத்திருக்க வேண்டும், பெரியார் சிலைகளை உடைக்கச் செய்யுங்கள். வன்முறை தான் தீர்வு என்று ராஜா முடிவு செய்துவிட்டால் அதனை சந்திக்க தமிழகம் தயாராக இருக்கிறது. வழக்கு பதிவு செய்ய வேண்டும் அட்டூழியம், பாசிசத்தை எச்.ராஜா அவிழ்த்து விடுகிறார். பெரியாரை போற்றாத கட்சிகளும், ஏற்காத ஆட்சியும் இல்லை. உடனடியாக எச்.ராஜா மீது குற்றவழக்கு பதிவு செய்யவேண்டும்.

இரா.முத்தரசன் (சி.பி.அய்.)

எச்.ராஜாவின் வன்மம் நிறைந்த, மோதல் உருவாக்கி, பகை வளர்க்கும் வெறி பேச்சு, தமிழ்நாட்டை கலவர பூமியாக்கும் தீய நோக்கம் கொண்டது. பொது அமைதியை சீர்குலைத்து வரும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யாமல் மவுன சாட்சியாக தமிழக அரசு செயலாற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது.

கே.பாலகிருஷ்ணன் (சி.பி.எம்.) கண்டனம்

பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம். கடந்த காலத்திலும் இப்படிப்பட்ட வெறிப்பேச்சுக்கள் தடுக்கப்படாததால் எச்.ராஜாவின் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன என்பதை சுட்டிக் காட்டுகிறோம். பா.ஜ.கவினரின் இந்த வன்முறை அராஜகத்தைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் உடனடியாகக் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டு மென கட்சி அணிகளை மாநில செயற்குழு அறை கூவி அழைக்கிறது. ஜனநாயகம் காக்கிற இந்தப் போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும், அரசியல் கட்சிகள், பிரமுகர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டு உரத்த குரலில் கண்டன முழக்கம் எழுப்புமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

கவிஞர் வைரமுத்து

பெரியார் சிலை உடைக்கப்பட வேண்டும் என்ற எண்ணமே உடைக்கப்பட வேண்டும். பெரியார் சிலையில் கைவைத்தால் தேனீக்கூட்டில் கைவைத்த கதையாகி விடும் என்றார்.

இனமுரசு  சத்தியராஜ்

நாளை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று கூறிய எச்.ராஜா மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பெரியார் என்பது ஒரு சிலை அல்ல. ஒரு பெயர் அல்ல. ஒரு உருவம் அல்ல. ரத்தமும் சதையும் எலும்பும் சேர்ந்த ஒரு மனிதப்பிறவி மட்டுமல்ல. பெரியார் என்பது ஒரு தத்துவம். உழைக்கும் மக்களின் விடுதலைக்காக, பெண்களின் விடுதலைக்காக, மண்டிக்கிடக்கும் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சித்தாந்தம். அவர் சிலையாக மட்டும் வாழவில்லை. எங்களைப் போன்றவர்களின் உள்ளத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

எந்தப் பதவியை வைத்தும், எந்தச் சக்தியை வைத்தும், எந்த இராணுவத்தை வைத்தும் எங்கள் உள்ளத்தில் இருக்கும் பெரியாரை அகற்ற முடியாது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ம.க தலைவர் மருத்துவர் ச.இராமதாசு கண்டனம்

இது கண்டிக்கத் தக்கது. அநாகரீக விமர்சனங்களை ராஜா முன்வைப்பது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் இதே போல் பலமுறை பேசியும் அதற்காக அவர் மீது ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவே இதுபோன்று பேசும் துணிச்சல் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. எச்.ராஜாவின் இத்தகைய அநாகரிகமான செயலை இனியும் அனுமதிக்கக் கூடாது; பெரியாரால் சுயமரியாதை பெற்றவர்கள் இனி அனுமதிக்க மாட்டார்கள்.

பெரியாரின் சிலையை எச்.ராஜா போன்றவர்களால் நெருங்கக்கூட முடியாது என்பதே உண்மை.

இத்தகைய வலிமை மிக்க அடையாளத்தை அழிக்க கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. இனியும் எந்தக் கொம்பனாலும் தந்தை பெரியாரின் சிலையை அகற்றுவது அல்ல…. அசைக்கக்கூட முடியாது.

சீமான், ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

பரபரப்புக்கு ஆளாக வேண்டும் என்று தான் அவர் (எச்.ராஜா) இவ்வாறு பேசி வருகிறார். பெரியார் சிலையை அகற்றுவது என்பது அவருடைய கனவிலும் நடக்காது. பெரியார் சிலையை தொட்டால் அதன்பின் தெரியும் அவருக்கு என்ன நடக்கும் என்று.

விஜயகாந்த், தலைவர், தே.மு.தி.க

பெரியார் பற்றி கருத்துக் கூற எச்.ராஜாவுக்கு தகுதி கிடையாது. ஹெச்.ராஜா என்பவர் தனது பேஸ்புக்கில் பதிவு செய்ததை தே.மு.தி.க சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழகத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஒரு சரித்திரம் படைத்த யுகநாயகன், அவருடைய புரட்சிகரமான கருத்துக்களைப் போல் தமிழகத்தில் யாரும் கூறியது கிடையாது. அவரைப்பற்றி கருத்துக்கள் கூற எந்தத் தலைவருக்கும் தகுதிகள் கிடையாது. எனவே ஹெச்.ராஜா தனது பேஸ்புக்கில் பதிவிட்டதும் தவறு, கடுமையான எதிர்ப்பு வந்தவுடன் வருத்தம் அடைகிறேன் என தெரிவிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழக முதல்வர் பழனிசாமி கண்டனம்

பெரியார், தமிழகத்துக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பெற்றுத் தருவதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். அப்படிப்பட்ட தலைவரின் சிலையை அகற்ற வேண்டும் என்று சொல்வது கண்டனத்துக்குரியது.

தலைவர்களை அவமதிக்கும் விதத்தில் நடப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

பெரியார் குறித்து எச்.ராஜா சொன்ன கருத்து கண்டன த்துக்குரியது. உதவியாளர்தான் ட்விட்டரில் பதிவேற்றம் செய்தார் என்று கூறுவது அபத்தமானது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, ராஜா பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். அவரே பல்டியடித்து, நான் பதிவு செய்யவில்லை என்று வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை இருக்கிறது என்பதை தெரிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கருநாடக மாநில முதல்வர் சித்தராமையா கண்டனம்

பெரியாரின் சிலையை உடைத்த பா.ஜ.க.வினரின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். ஏன் பா.ஜ.க.வினர் புரட்சிகர சமூக சீர்திருத்தவாதி பெரியாரைக் கண்டு அஞ்சுகிறார்கள்? ஜாதி முறைகளால் அல்லலுற்ற பொதுமக்களுக்கு சுயமரியாதை வழங்கியவர் பெரியார். பா.ஜ.க.வின் வகுப்புவாத பிரிவினைகளை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நாட்டில் இனக்கலவரத்தை தூண்டி பா.ஜ.க ஆதாயம் தேட முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலதாமதம் செய்வதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீரவ் மோடி விவகாரத்தை திசைதிருப்பவே கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை

பெரியாரை இழிவுபடுத்தும் செயலை ஒருபோதும் ஏற்கமுடியாது. பெரியார் சிலை மீது கை வைத்தால் தமிழகம் துடித்து எழும். சிலை உடைப்பில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பெரியார் சிலை உடைப்பு : தமிழகத்தை அவமதிப்பது மட்டும் கிடையாது, தேசத்தையே அவமதிப்பது : மல்லிகார்ஜுன கார்கே

சமூக நீதிக்காக பணியாற்றிய பெரியாரின் சிலை உடைப்பு என்பது தமிழகத்தை அவமதிப்பது கிடையாது, மொத்த தேசத்தையே அவமதிப்பது. இதற்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம். பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் சின்னங்கள் மீதான இதுபோன்ற தாக்குதல்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.

எச்.ராஜா சிறைக்குப் போவது நிச்சயம் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழை அவமதித்து, தமிழை கேவலப்படுத்துகிற எந்தச் செயலையும் எந்த நிலையிலும் அரசு ஏற்றுக் கொள்ளாது. அது யாராக இருந்தாலும், எவராக இருந்தாலும் சரி, உள்ளே பிடித்துப் போட வேண்டிய ஆள்தான் அவர்.

 

கே.பி.முனுசாமி – அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர்

எச்.ராஜா நாவடக்கத்துடன் பேச வேண்டும். இல்லையென்றால் எதிர்விளைவை சந்திக்க நேரும்.

 

டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.

பொறுப்பற்ற வகையிலும், முதிர்ச்சியற்ற தன்மையோடும் கருத்து சொல்லும் எச்.ராஜா, தனது போக்கை இத்தோடு மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி, வன்முறையை தூண்டும் வகையில், இனி யார் கருத்து சொன்னாலும் அவர்களை சட்டரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக்க வேண்டும்.

பேராசிரியர் ஜவாஹிருல்லா

ராஜாவின் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை. நாட்டின் அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் வகையில் கருத்துக்களை தெரிவித்தும், வெறுப்பை உமிழும் பயங்கரவாதப் பிரச்சாரத்தை செய்து வன்முறைக்கும், மோதலுக்கும் தொடர்ந்து வழிவகுக்கும் எச்.ராஜாவை உடனே கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். எஸ்.டி.பி.அய். கண்டனம்

தமிழகத்தின் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும், வன்முறை அரசியலை தூண்டும் வகையிலும் தொடர்ந்து நச்சுக்கருத்துகளை பரப்பிவரும் பா.ஜ.கவின் தேசிய செயலாளராக இருக்கக்கூடிய எச்.ராஜா, திட்டமிட்டே தமிழகத்தின் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொள்ளும் எச்.ராஜா மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கமலஹாசன், மக்கள் நீதி மய்யம்.

எச்.ராஜா வருத்தம் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல, யாரோ ஒருவர் தனக்காக முகநூலில் பதிவு செய்து இருப்பதாக எச்.ராஜா சொல்லியிருப்பது நொண்டிச் சாக்கு.

எச்.ராஜாவை கட்சியை விட்டு நீக்குவீர்களா? மோடிக்கு சவால் விடும் குஷ்பு!

எச்.ராஜாவின் கருத்துகள் அவரது சொந்தக் கருத்துகள் என்றால், பா.ஜ.க.விற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றால், மோடிக்கும் அமித்ஷாவிற்கும் நான் சவால் விடுகிறேன். ராஜாவை உங்களால் கட்சியிலிருந்து நீக்க முடியுமா? பெயருக்கு தற்காலிகமாக இடைநீக்கம் செய்யக்கூடாது. கட்சியை விட்டே நீக்க வேண்டும். உங்களால் முடியுமா?

சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சி.

தமிழகத்தில் பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் என்ற தேவையற்ற கருத்தை எச்.ராஜா கூறியுள்ளார். தொடர்ந்து காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்தி, இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிராகப் பேசி வரும் அவரை பா.ஜ.க. தலைமை கண்டிக்காததும் மிகுந்த கண்டனத்திற்கு உரியதாகும்.

ஜி.வி.பிரகாஷ் கண்டனம்

பெண்ணடிமையை ஜாதியை மூடநம்பிக்கைகளை உடைத்த இரும்பு மனிதர் பெரியார்! அவரின் சிலைகள் அப்புறப்படுத்தப்படும் என்று சொன்னது வன்மையான கண்டனத்துக்குரியது!

ரஜினிகாந்த் கடும் கண்டனம்

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று சொன்னதும், பெரியார் சிலையை உடைத்ததும் காட்டு மிராண்டித்தனமான செயல். அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இப்படி அனைத்து அமைப்பைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

எதிரிகளின் எதிர்ப்பை எருவாக்கி வளர்வோம் !

காவிரி உரிமையை நிலைநாட்ட தமிழர்கள் முழு முனைப்போடு உணர்வுப்பூர்வமாக ஒருங்கிணைத்துள்ள நிலையில் அதைத் திசைதிருப்பவும், தமிழர்கள் சூடு சொரணையைச் சோதித்துப் பார்க்கவும், இதுபோன்ற சூழ்ச்சி வேலைகளைப் பார்ப்பனர்கள் திட்டமிட்டு செய்கின்றனர். தமிழர்கள், மூலம் அறிந்து போரிடக் கூடியவர்கள். அவர்களின் உணர்வோடு விளையாடினால் அவர்களின் அழிவை அவர்களே ஏற்படுத்திக் கொண்டதாக ஆகும்.

எனவே, ஆதிக்க வேட்கையை விட்டொழித்து, சமதர்மம் சமூக நீதி இவற்றை மதித்து, மத இணக்கத்தை ஏற்று நடந்து கொள்வதுதான் அவர்களுக்கும் நல்லது தமிழ்நாட்டின் அமைதிக்கும் நல்லது என்று கூறி எச்சரிக்க விரும்புகிறோம்!

அதிகார போதையில் ஆட்டம் போட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதை இப்போது எழுந்துள்ள மக்கள் எழுச்சி, உணர்த்த வேண்டியவர்களுக்கு உறுதியாக உணர்த்தியுள்ளது!

தமிழர்களின் தன்மான உணர்வை, ஒற்றுமையை உலகும் அறிந்துகொண்டு விட்டது! கேட்டிலும் நல்ல விளைவுகள் உண்டு. இந்நிகழ்வு அதற்குச் சரியான சான்று! எதிரிகள் எதிர்ப்பை எருவாக்கி வளர்வோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *