நேர்காணல்: உடுமலை வடிவேலு
“வீட்டைத் தாண்டி வெளியே செல்லக் கூடாது’’ என்று வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணின் கால்கள், உலக வரைபடத்தில் குறுக்கும் நெடுக்குமாக தடம் பதித்த அனுபவம் இது. 50 நாடுகளுக்கு மேல் பயணம் செய்திருக்கிற கவிஞர் சல்மா, 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு எழுத வந்த பெண்களில் இவர் சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர். இலக்கியத்தோடு மட்டுமல்லாது பஞ்சாயத்துத் தலைவி, சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர், வாரியத் தலைவர், மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனர், மற்றும் அரசியல் எனப் பல்துறைப் பயணம் செய்து வருபவர்.
திராவிடர் கழகத்தால் இலக்கிய சாதனைக்காக 2018ஆம் ஆண்டிற்கான ‘பெரியார் விருதை’ப் பெற்ற கவிஞர் சல்மாவை ‘மகளிர் தின’ சிறப்பு நேர்காணலுக்காக அவரது இல்லத்தில் சந்தித்தோம். இன்முகத்தோடு வரவேற்று எங்களின் கேள்விகளுக்கு எளிமையாகவும் வலிமையாகவும் பதிலளித்தார். அவற்றிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ‘உண்மை’ வாசகர்களுக்குத் தருகிறோம்.
கேள்வி: சல்மா என்றால் யார்?
சல்மா: இப்போது இருக்கும் சல்மா வேறு. இளம் பருவத்தில் இருந்த சல்மா வேறு. ஆரம்பத்தில் முற்றிலும் தனிமைப்படுத்தப் பட்ட சல்மாவாகத்தான் இருந்திருக்கிறேன். ஆனால், இப்போது உலகத்தோடு மிக நெருக்கமான, மக்களோடு மிகச் சுதந்திரமாய் பழகக்கூடிய ஒரு சல்மாவாக இன்று நானிருக்கிறேன்.
கேள்வி: இஸ்லாமியப் பெண்கள் பொதுவெளியில் அதிகம் காணப்படு வதில்லை. அதற்கு என்ன தடை என்று கருதுகிறீர்கள்?
சல்மா: தடை என்று எதுவும் கிடையாது. தடையாக நான் பார்க்க விரும்பவில்லை. இஸ்லாமிய மதத்தில் அப்படிப்பட்ட தடை சொல்லப்படவில்லை. குறிப்பாக இஸ்லாமியர்கள் பொதுவெளியில் புழங்குவது குறித்து அவர்களிடத்தில் குறுகிய மனநிலை இருக்கிறது. அது ஏன் என்று தெரியவில்லை. இன்றைய வரையில் பார்த்தோம் என்றால், அவர்கள் தங்களுக்கான உலகத்தை தனியாக அமைத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். பொதுவாக இன்று உலகம் இருக்கக்கூடிய சூழ்நிலையில் பொதுவெளியில் தங்களை, உறவுகளை வலுப்படுத்த வேண்டும் மற்றும் வெளியுலகிலும் தங்களின் இருப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்பது ஒரு மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஏன் என்றால் இன்றைய உலகம் போட்டிகளால் நிறைந்தது. கல்வி, வேலைவாய்ப்பு, பொது அறிவு மற்றும் பொது இடங்களில் புழங்காமல் தங்களைத் தாங்களே குறுக்கிக்கொண்டு எந்த விஷயத்திற்குள்ளும் போகமலிருப்பது அவர்களுக்கு மிகப் பெரிய இழப்பாகும். தங்களிடம் உள்ள பிரச்சினை என்ன? ஏன் நாம் இப்படி இருக்கிறோம்? ஏன் நாம் பிறரோடு போட்டிப் போடக் கூடாது? என்பதைப் புரிந்துகொண்டு ஒத்துக் கொள்ள வேண்டும். இத்தடைகளை உடைப்பதற்கான வேலைகளைத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த விஷயத்தில் இஸ்லாமிய அமைப்புகள் மிகப் பெரிய பங்கு வகிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அமைப்புகளினால் தான் முடியும். அரசு மூலமாக முடியுமென்று நான் நினைக்கவில்லை. 33% இடஒதுக்கீடு அரசு கொடுத்தால்கூட அதை பயன்படுத்துவதற்கான மனநிலை இவர்களிடம் இல்லை. வேலைவாய்ப்பு களில்கூட இஸ்லாமியர்களுக்கு இருக்கக் கூடிய வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளாத நிலையைத் தான் நாம் பார்க்கிறோம்.
கேள்வி: திராவிட இயக்கத்தில் நாகம்மையார், மணியம்மையார், முத்துலட்சுமி ரெட்டி போன்ற பெண் போராளிகளை எப்படி பார்க்கின்றீர்கள்? அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டது என்ன?
சல்மா: நாம் இன்றைக்கு பெண்ணுரிமை பற்றியும், பெண் விடுதலை பற்றியும், பெண் இலக்கு பற்றியும் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இதைப்பற்றி வலிமையாய்ப் பேசி இருக்கிறார்கள். இவர்களை யாரும் மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது. இவர்கள் மிகவும் அற்புதமான பெண்கள். இன்றும் இவர்களைப் பற்றி நினைக்கையில், பேசுகையில் உடல் புல்லரிக்கிறது. அந்த அளவிற்கு அவர்கள் பெருமையுடை யவர்கள். என்னுடைய போராட்ட குணங்களுக்கு அவர்களுடைய பங்கு நிறையவே இருக்கின்றது. அவர்களை நிறைய வாசித்ததன் மூலமாக எனக்குள் போராட்ட குணங்கள் ஏற்பட்டன.
கேள்வி: 20 ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் இருந்த உங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது? அதிலிருந்து விடுதலை பெறுவதற்கான துணிச்சல், உந்துதல் எங்கிருந்து கிடைத்தது?
தடைகளையெல்லாம் தகர்த்தவர் பெரியார்:
சல்மா: வீட்டுச் சிறை என்பது இஸ்லாமியப் பெண்களை தனிமைப்படுத்தி வைப்பதே ஆகும். பொதுவெளியில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டி ருக்கிறோம். பெண்களுக்கு ஒரு இறுக்கமான சூழ்நிலையை இந்தச் சமூகம் இன்றுவரை ஏற்படுத்தி வைத்திருக்கிறது மதத்தின் பெயரால். மதம் அனுமதித்த விஷயங்களைக் கூட அவர்கள் அனுமதிப் பதில்லை. கல்வியை மதம் அனுமதித் திருக்கிறது. பொதுவெளியில் பெண்கள் வேலைக்குச் செல்வதையோ பொருளீட்டு வதையோ எந்த இடத்திலும் மதம் மறுக்கவே இல்லை. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலும்கூட மதம் அனுமதிக்க வில்லை என்று ஒரு பொய்யான பிரமையை உருவாக்கி இஸ்லாமியப் பெண்களை இன்றுவரை வீட்டிற்குள் தான் பல இடங்களில் வைத்திருக்கி றார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழல்தான் எனக்கு வாய்த்தது. ஆனால், என்னைப் பொருத்தவரையில் மதம் சொன்ன விஷயத்தைவிட இதற்கு எதிராக இன்னொரு விஷயத்தையும் நான் என்னுடைய வாசிப்பின் மூலமாக என்னுடைய தேடுதல் மூலமாக கண்டடைந்தேன் என்றால் தந்தை பெரியாருடைய புத்தகங்கள்தான். ஏன் என்றால் அவர்தான் இந்த பிரமைகள் எல்லாவற்றையும் உடைக்கிறார். பெண் என்றால் சில பிம்பங்கள் இருக்கின்றன அல்லவா? இந்த சமூகம் பெண் எப்படி இருக்க வேண்டும்? பெண் என்றால் எப்படி என்று பல்வேறுவிதமான விஷயங்களை உருவாக்கி வைத்திருக்கிறது. இந்த பிம்பங்களை உடைப்பதற்கு பெரியார் மிகப்பெரிய சிந்தனையைக் கொடுத்தார். பார்வை மாறும்பொழுது போராட்ட குணம் எனக்குள் வருகிறது.
பெரியாருடைய புத்தகங்கள் எனக்கு பெரிய தூண்டுதலாக இருந்தன. அப்போதெல்லாம் பெண்களை அழகு என்று சொல்லி ஒரு கூட்டுக்குள்ளே வைப்பது என்பது ஒரு பெரிய மாயை. அழகு என்று சொல்லிப் பெண்களை பெருமைப்படச் செய்வதோ பூரிப்படையச் செய்வதோ, அழகுதான் அவர்களுடைய அடையாளம் என்று சொல்வதோ சரியல்ல. பெண்கள் தன் அழகுக்காவும் தோற்றத்திற்காகவும் நிறைய நேரம் செலவு செய்ய வேண்டியுள்ளது. இது எல்லா வற்றிற்கும் பின்னணியில் பெண்ணடி மைத்தனம்தான் இருக்கிறது. இதுகுறித்து தந்தை பெரியார் சொல்வதெல்லாம் ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது. ஆண்களைப் போன்று பெண்கள் முடியை வெட்டிக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். நான் பார்த்த உலகிலிருந்து பெரியார் தனித்துவமாகத் தெரிகிறார். சமூகம் சொன்ன கவர்ச்சியைவிட பெரியார் சொன்ன, விடுதலை எனக்கு பெரிதாகப் படுகிறது. அப்போதுதான் அதை நான் பின்பற்ற ஆரம்பிக்கிறேன். வெளிவரத் துடிக்கிறேன், போராடுகிறேன்.
கேள்வி: ‘பெரியார் விருது’ பெரும் நிகழ்ச்சியில் நீங்கள், “நான் மார்க்சையும், பெரியாரையும் வாசிக்கும் பொழுது வீட்டில் உள்ளவர்கள், “நீ நாசமாகத்தான் போவாய் என்று சொன்னார்கள்’’ என்று சொன்னீர்கள். இப்போது அவர்கள் பார்வை மாறியுள்ளதா?
சல்மா: தன்னுடைய வாழ்நாள் முழுக்க ஒரு சமூகத்திற்காக இனத்திற்காக உயிருள்ள வரைக்கும் போராடிய மாபெரும் ஒரு பழுத்த தலைவராகத்தான் நான் இன்றுவரை பெரியாரைப் பார்க்கிறேன். ஆனால், அப்படிப்பட்ட ஒருவரைத்தான் இந்தச் சமூகம் மிகப்பெரிய அளவிற்கு ஒரு எதிரியாகவும் மத நம்பிக்கையுள்ளவர்கள் அவரைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள், விமர்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் என் குடும்பத்தாரும் என் ஊரில் உள்ளவர்களின் மனநிலையும் அப்படித் தான் உள்ளது. இன்றைக்கு என்னுடைய குடும்பம் என் வளர்ச்சியையோ, அங்கீகா ரத்தையோ ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால், அது நிச்சயமாக வேறு சில காரணங்களால்தான் இருக்குமே தவிர அவர்கள் தந்தை பெரியாரைப் புரிந்து கொண்டார்கள், ஏற்றுக் கொண்டார்கள் என்று நான் சொல்ல முடியாது. அவர்கள் இன்றுவரை பெரியாரை வாசிக்க முடியாத மனிதர்கள் தான். அவரை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் குறைவாக உள்ளவர்கள் தான். ஆனால், என்னை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
கேள்வி: எழுத்துத் துறையில் மிகப் பெரிய ஆளுமையாக தற்பொழுது நீங்கள் உள்ளீர்கள். இதன் தொடக்கம் எங்கிருந்து வந்தது?
சல்மா: பாரதி, பாரதிதாசன் போன்றோர் கவிதைகள் எனக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தின. அதன் பிறகு பல்வேறு புத்தகங்கள், கவிஞர்கள் எனக்கு மிகவும் நெருக்கமாய் இருந்திருக்கின்றனர். ரஷ்யக் கவிஞர்கள் கூட என்னை பாதித்திருக்கிறார்கள். அதில் முக்கியமான ஒரு கவிஞர் அன்னா அக்மத் தோவா. இவரை நான் தொடர்ந்து வாசித்து இருக்கிறேன். அவருடைய கவிதைகள் அடக்குமுறைக்கு எதிரானதாக, தனிமையின் கொடுமை குறித்த கவிதைகளாக இருக்கின்றன. அவருக்கும் மிகப் பெரிய சிக்கல்கள் இருந்தன அரசுரீதியாக. அதிலிருந்து மீள்வதற்காக எதிர்த்துப் போராடியதால் தான் அவர் நிறைய கவிதை எழுத ஆரம்பித்துள்ளார். மாயா கோஸ் கவிதைகள் படித்திருக்கிறேன். தமிழில் நிறையக் கவிஞர்கள் ப்ரமிள், மணி, ஆத்மநாபனை விட்டுவிட்டு நான் கவிதையைப் பற்றி பேச முடியாது. இப்படி நிறைய பேருடைய பாதிப்புகள் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
கேள்வி: தமிழ், ஆங்கிலம் என இரு மொழியிலும் உங்கள் படைப்பு வெளிவந்திருக்கிறது. அதைப் பற்றிச் சொல்லுங்கள்?
உலக அங்கீகாரம் பெற்ற எனது முதல் நாவல்:
சல்மா: என்னுடைய முதல் நாவல் தமிழில் வந்தவுடன் நிறைய விமர்சனங்கள்தான் வந்தன. ஒரு பக்கம் பாராட்டு கிடைத் தாலும்கூட ஆணாதிக்கவாதிகளிட மிருந்து மிகப் பெரிய ஒரு எதிர்ப்பும் விமர்சனமும் கிடைத்தது. மிக மோசமான விமர்சனம் அவையெல்லாம். அப்போது எனக்கு மிகப்பெரிய ஒரு மனச்சோர்வு ஏற்பட்டது. முதல் நாவலுக்கே இத்தனை எதிர்ப்பா? என்று ஒரு பதற்றம் இருந்தது. ஆனால், காலப்போக்கில் அது ஆங்கிலத்தில் வந்ததற்குப் பிறகுதான் அதன் உண்மையான மதிப்பு, அங்கீகாரம் கிடைத்தது. குறிப்பாக வோடாஃபோன் கிராஸ் அவார்ட் தேர்வானதும். ஆசியாவிலேயே உயர்ந்த டிஎஸ்சி அவார்டுக்கு தேர்வு பெற்றது. உலகின் குறிப்பிட்ட நாவல்களில் ஒன்றாக அதை அடையாளப் படுத்தப்பட்ட போதுதான் எனக்கு நிறைய எழுதவேண்டும் என்று தோன்றியது. அந்த நாவல் பல மொழிகளில் வெளிவந்திருக்கிறது.
கேள்வி: படைப்பாளிகளில் பாலியல் பேதம் இருக்கிறதா?-
சல்மா: படைப்புகளில் ஆண், பெண் என்ற பேதம் எப்போதிருந்தோ இருக்கிறது. என்னைப் பொருத்த மட்டில் ஒரு படைப்பு படைப்பாக மட்டுமே பார்க்க வேண்டும். அதில் ஆண், பெண் பேதம் கூடாது.
கேள்வி: பெண்ணுரிமையைப் பற்றி பெரியார் பேசும்பொழுது ஆணுக்கு என்னென்ன உரிமைகள் இருக்க வேண்டுமோ அதுவெல்லாம் பெண்ணுக்கும் இருக்க வேண்டும் என்று சொல்லுவார். உங்கள் பார்வையில் பெண்ணுரிமை பற்றி?
சல்மா: தந்தை பெரியாருடைய கூற்றிலிருந்து பெரிய அளவுக்கு நான் மாறுபடவில்லை. ஆண் என்பதால் சில சலுகைகள். பெண் என்பதால் சில அடக்கு முறைகளும் சமூகத்தில் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆண் என்பதால் கிடைக்கும் சில சலுகைகள் கூடாது. பெண் என்பதால் ஒடுக்கு முறைகளும் கூடாது. இரண்டு பேரும் மனிதர்கள்தான். இருவருக்குமே உணர்வுகள் ஒன்றுதான். சம உரிமை வேண்டும். அதுவே சரி!
கேள்வி: நீங்கள் பல நாடுகளுக்குச் சென்று வந்துள்ளீர்கள். வெளிநாடுகளில் இருக்கின்ற பெண்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளக் கூடியது, அவர்களைப் பற்றி எழுதக்கூடியது என்று எதையாவது நீங்கள் நினைத்தது உண்டா?
சல்மா: ஆண், பெண் அதிக இடைவெளி இல்லாத சமூகம் வெளிநாடுகளில் இருப்பதை நாம் பார்க்கிறோம். இங்கு பள்ளி, கல்லூரி செல்வதற்கு, வேலைக்குச் செல்வதற்கு, திருமண சம்பந்தமாகவோ, காதலாகவோ எல்லாவற்றிலும் ஆணுக் கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி இருந்து கொண்டே இருக்கிறது. இதை நான் பெரிய அளவில் வெளிநாடுகளில் கண்டது இல்லை. அதை மிக முக்கியமான விஷயமாகப் பார்க்கிறேன். அங்கும் சில பாகுபாடுகள் இருக்கின்றன. அதை நாம் மறுக்க முடியாது. பெண்ணுக்கு எதிராக வன்முறை நடந்துகொண்டுதான் இருக்கிறது. 0.1 சதவீதம், 0.2 சதவீதம் என்று குறைவாகவே பார்க்கலாம். அதைப்போலத்தான் நமது நாட்டிலும் வரவேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு இன்னும் எவ்வளவோ காலம் பிடிக்கும் என்று தெரியவில்லை. காதல் திருமணம் என்பது அங்கு வழக்கத்தில் இருக்கிறது. காதல் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. அங்கு காதல் சகஜமான ஒரு விஷயம்.
கேள்வி: நீங்கள் ஜீரோவில் இருந்து ஒவ்வொரு கட்டமாக முன்னேறி இப்பொழுது உச்சம் அடைந்திருக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு எப்படிப்பட்ட சூழல் இருந்தது? அவர்கள் உங்கள் கருத்தை எப்படி ஏற்றுக் கொண்டார்கள். (உங்கள் அப்பா அம்மாவைத் தவிர்த்து)
சல்மா: என்னை ஏற்றுக் கொண்டார்கள் என்பதாலேயே என் கருத்துகளை ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்லவில்லை. என் கருத்துகளை எப்பொழுதுமே அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களுடைய நம்பிக்கை வேறு. என்னுடைய நம்பிக்கை வேறு. நம்பிக்கையைச் சார்ந்ததுதான் வாழ்க்கை. அவர்கள் நம்பிக்கையில் நான் குறுக்கிட முடியாது. என் நம்பிக்கையில் அவர்கள் குறுக்கிட முடியாது. வேறு வழி இல்லாமல் சகித்துக் கொண்டார்கள். பெண் வளர்ச்சியை முதலில் சமூகம் தடுக்கப் பார்க்கும். குறுக்கிடப் பார்க்கும் அதுவும் முடியவில்லை என்றால் சகித்துக் கொள்ளும் அதற்கு மேல் ஒன்றும் பண்ண முடியாது.
(தொடரும்…)