சிகரம்
முதலை விழுங்கி இறந்த சிறுவன் மீண்டும் உயிருடன் வரமுடியுமா?
“சுந்தரமூர்த்தி நாயனார் காவிரித் திருநாடாகிய சோழநாட்டிலே இறைவர் மகிழ்ந்து எழுந்தருளும் பதிகள் பலவற்றை நம்பியாரூரர் நினைந்தும் வணங்கியும் நீங்கிச் சென்று முல்லை நிலச் சார்புடைய மேல்கொங்கு நாட்டிலுள்ள ‘திருப்புக் கொளியூரினை வந்தடைந்தார். அங்கு வேதியர்கள் வாழும் மாடவீதியின் அருகே அணைவாராகிய சுந்தரமுர்த்தி நாயனார் அவ்வீதியில் மிகுந்த செல்வத்துடன் ஒன்றுக்கொன்று எதிராயமைந்த இரண்டு மனைகளில் ஒரு மனையில் மங்கல ஒலியும், மற்றொன்றில் அழுகை ஒலியும் வந்து எழுதலும் அவற்றைக் கேட்டு அங்கு உறைகின்ற வேதியர்களை நோக்கி, “இவ்விரண்டொலியும் ஒருங்கு நிகழ்வதற்கு என்ன காரணம்?’’ என்று வினவினார். அதுகேட்ட அந்தணர்கள் நம்பிகளை வணங்கி, “அய்ந்து வயதுடைய இரண்டு சிறுவர்கள் ஒரு மடுவில் சென்று குளித்தபொழுது ஒரு பிள்ளையை முதலை விழுங்கிற்று; தப்பிப் பிழைத்துவந்த பிள்ளைக்கு இந்த வீட்டில் பூணூல் அணியும் கலியாணமாகிய உபநயனம் நடைபெறும் மங்கல ஒலி; எதிர் வீட்டிலோ பிள்ளையை இழந்தாரது அழுகை ஒலி’’ என்று விடை கூறினார்கள்.
சுந்தரரும் மகனை இழந்த பெற்றோரும்
அத்தன்மையினைக் கேட்டுத் திருவுளம் இரங்கி நின்ற வன்றொண்டரது வரவு அறிந்து, தரிசித்து வணங்க வேண்டும் என்று முன்னமே மனம் வைத்திருந்த புதல்வனை இழந்த மறையவரும் அவரது மனைவியும் கண்டு, தமது மகவை இழந்த சோகத்தையும் அறியாராய் ஓடிவந்து அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். “இன்ப மகனை இழந்தவர்கள் நீங்களோ?’’ என்று வினவினார். அவர்கள் பின்னும் வணங்கி, “ஆம். அது முன்னே நடந்தது; “தற்போது தங்கள் வருகை எங்களது பாக்கியம்’’ என்றார்கள். “மகனை இழந்த துன்பத்தையும் மறந்து நாம் வந்ததற்காக இவர்கள் மனம் மகிழ்கின்றார்கள். ஆதலால் நான் இவர்கள் புதல்வனை அம்முதலை வாயினின்றும் அழைத்துக் கொடுத்த பின்னரே, அவிநாசிப் பெருமானது திருவடிகளைச் சென்று பணிவேன்’’ என்று அருளிச்செய்து அவர்களுடைய துயரைக் களைய முற்பட்டார்.
முதலையுண்ட சிறுவனை அழைத்தல்
பிறகு வன்றொண்டர், “இவர்களது புதல்வனைக் கொடிய முதலை விழுங்கிய மடு எங்கே உள்ளது?’’ என்று கேட்டு அறிந்து, அம்மடுவின் கரையில் எழுந்தருளி, அம்முதலை முன்னாளில் விழுங்கிய சிறுவனை மீளக் கொண்டு வரும்பொருட்டு “எற்றான் மறக்கேன்’’ என்று தொடங்கும் திருப்பதிகம் எடுத்தருளினார். அதில்,
“உரைப்பா ருரையுகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்!
அரைக்காடரவா! ஆதியும் அந்தமும் ஆயினாய்!
புரைக்காடு சோலைப் புக்கொளி யூர்அவி நாசியே!
கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே’’
எனவரும் நான்காவது திருப்பாட்டு முடியுமுன்னே இயமன் அச்சிறுவனுடைய உயிரைக் கொண்டுவந்து மடுவின் நீரிலுள்ள முதலையின் வயிற்றிலே நிலத்தில் இருந்து வளர்ந்ததுபோலக் கழிந்த (இரண்டு) ஆண்டுகளின் வளர்ச்சியும் உடையதாகத் தோற்றுவித்து அதன்வாயில் வரச்செய்தான். உடனே பெருவாய் முதலை ஒன்று பிள்ளையைக் கரையில் கொண்டுவந்து உமிழ்ந்தது. அப்பொழுது அன்பு மேலீட்டினால் மனமுருகிய தாய், ஓடிச்சென்று அப்புதல்வனை எடுத்துக் கொண்டுவந்து உயிரினை மீளக் கொடுத்தருளிய நம்பியாரூரரது திருவடிகளில் தன் கணவனோடும் வீழ்ந்து வணங்கினாள்’’ என்கிறது இந்துமதம். முதலையால் விழுங்கப்பட்ட சிறுவனை இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த முதலை வெளியில் உழ்ந்தது என்பது அறிவியலுக்கு ஏற்றதா? அடிமுட்டாள்தனம் அல்லவா? அப்படியிருக்க இப்படிப்பட்ட இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?
இசை கேட்டு கடல் அலையும் மேகங்களும் அசையாது நிற்குமா?
திருமங்கலத்தில் நீடிய பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் (இடையர்) குலத்தில் குலவிளக்குப்போல ஆனாயர் என்னும் பெரியார் ஒருவர் அவதரித்தார். அவர் ஒளி நிறைந்த தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் ஈடுபட்டவர்; மன மொழி மெய் என்ற முக்கரணங்களாலும் சிவபெருமானுடைய திருவடிகளையன்றி வேறொன்றினையும் விரும்பாதவர்; தமது குலத் தொழிலாகிய பசுமந்தைகளைப் புல்வெளிகளுக்கு ஓட்டிச் சென்று மேய்ப்பார்; புலி முதலிய கொடிய மிருகங்களாலும் நோய்களாலும் அவற்றிற்குத் துன்பம் ஏற்படாதவாறு பாதுகாப்பார்; அவை விரும்பிய நல்ல புல்லும் தூய நீரும் ஊட்டி அளவில்லாமல் பெருகும்படி காத்து வருவார்.
மாடுகளை மேய்ப்பதோடு ஆனாயர் புல்லாங்குழலும் ஊதிவந்தார்; இசை நூல்களில் கூறியவண்ணம் அமைக்கப்பெற்ற தம் வேய்ங்குழலில், எம்பெருமானுக்குரிய அய்ந்தெழுத்தினையும் உள்ளுறையாக ஏழிசையின் சுருதிபெற அமைத்து வாசித்து இசை பரப்புவார். அவருடைய குழலிசையைக் கேட்ட சராசரங்களெல்லாம் தம் வசமிழந்து உருகி நிற்கும்.
அய்ந்தெழுத்து இசை
ஒருநாள் ஆனாயர் தமது குடுமியில் கண்ணி மாலையைச் செருகி, நறுவிலிப் பூவினைப் புனைந்து, செங்காந்தட் பூவினைக் காதில் அணிந்து, நெற்றியில் திருநீற்றினை நிறையப் பூசி, முல்லை மாலையணிந்து, இடையில் மரவுரியும், அதன்மேல் பூம்பட்டும் கட்டி, திருவடியில் செருப்புப்பூண்டு, கையினில் வெண்கோலும் வேய்ங்குழலும் கொண்டு இடையர்களும் பசுக் கூட்டமும் சூழக் காடு நோக்கிச் சென்றார். அப்போது கார்காலம் ஆதலால், செல்லும் வழியில் மாலைபோன்ற பூங்கொத்துக்கள் நிறைந்ததொரு கொன்றை மரத்தைக் கண்டார். அக்கொன்றை மரம் அவருக்குச் சடையினில் கொன்றை மாலையை அணிந்த சிவபெருமானைப் போலக் காட்சி அளித்தது. ஆனாயர் அதனைப் பார்த்து மனமுருகி நின்றார். அவருடைய அன்பு கரைபுரண்டு ஓடியது.
இசைகேட்டு, மரங்களில் மலர்களையுடைய கிளைகள் அசையவில்லை. அருவிகளும் ஆறுகளும் தம்மோசையை மறந்தன. மேகக் கூட்டங்கள் இடம்விட்டுப் பெயரவில்லை; மழை பொழியவில்லை; கடல்கள் அலைவீசுதலை அடக்கின என்கிறது இந்து மதம். இசையைக் கேட்டு மனிதன், விலங்கு, பறவை வேண்டுமானால் அசையாது நிற்கலாம். கடல் அலையும், மேகமும், அசையும் மரமும், வீழும் அருவியும் நிலையாக நின்றன என்பது அறிவியலுக்குப் பொருந்துமா? இவை அறிவியலுக்கு முரணானது அல்லவா?
கை மூட்டைத் தேய்த்தால் சந்தனம் கிடைக்குமா?
பாண்டிய நாட்டிற்குத் தலைநகர் மதுரை மாநகர் ஆகும். சிவராசதானி என்று புகழப்பெற்ற மதுரையம்பதியில் வணிகர் குலத்தில் செல்வமும் சிறப்புமுடைய பழங்குடியினர் செய்த தவத்தின் பயனாக மூர்த்தியார் என்பவர் அவதரித்தார்.
மூர்த்தியார் நாடோறும் திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும், சோமசுந்தரக் கடவுளுக்குச் சந்தனக் காப்பு அணிவிக்கும் தொண்டு புரிந்து வந்தார்.அந்நாளில் வடுகச் சாதியைச் சேர்ந்த கருநாடதேசத்து அரசன் ஒருவன் வலிமையினால் நிலத்தைக் கைப்பற்றும் ஆசையோடு தேர்களும், யானைகளும், குதிரைகளும், போர் வீரர்களும் கொண்ட கடல்போன்ற நால்வகைச் சேனைகள் புடைசூழத் தென்னாடு நோக்கி வந்தான். அவனுடைய சேனைகள் பாண்டிய நாடு முழுவதிலும் நிறைந்தன. வடுக மன்னன் செந்தமிழ் நாட்டை ஆளும் பாண்டிய மன்னனது வீரம் குன்றும்படி போர்புரிந்து வெற்றிபெற்றுப் பாண்டி நாட்டின் அரசாட்சியைக் கவர்ந்தான். பின்பு, மதுரை மாநகரைத் தனது தலைநகராகக் கொண்டு காவல் புரிந்தான். அக்கொடியோன் அவருக்குச் சந்தனக் கட்டைகள் கிடைக்காதவாறு செய்துவிட்டான்.
மூர்த்தியார் மனத்தளர்ச்சியோடு சொக்கலிங்கப் பெருமான் வீற்றிருக்கும் திருக்கோயிலை வந்தடைந்தார்; “இன்று இறைவரது மெய்ப்பூச்சுக்குத் தேய்த்துக் கொடுக்கும் சந்தனக் கட்டைக்கு முட்டு நேர்ந்தால்தான் என்ன? அக்கட்டைபோலத் தேய்க்கத் தக்க என் கைக்கு ஒரு முட்டும் இல்லையே’’ என்று கருதி, வட்டமாக விளங்கும் ஒரு சந்தனக் கல்லில் தமது முழங்கையை வைத்துத் தேய்த்தனர். இரத்தம் வெள்ளம்போல் பெருகியது; தோலும், தசையும், நரம்பும், எலும்பும் தேய்ந்தன; எலும்பு திறந்து மூளை ஒழுகி வெளியே வந்தது. அதுகண்டு சிவபெருமான் தரித்திலர், “ஐயனே! மெய்யன்பின் துணிவால் இச்செயல் செய்யாதே! உனக்குத் தீங்கு விளைவித்த கொடுங்கோலனின் அரசு முழுமையும் நீயே கைக்கொண்டு முன்பு வந்த துன்பங்களையெல்லாம் போக்கி, உலகத்தைக் காத்து உனது திருப்பணியாகிய சந்தனக் காப்பணி செய்து, முடிவில் நம்முடைய சிவலோகத்தை அடைமதி’’ என்று அன்றிரவே இறைவரது அசரீரியாகிய திருவாக்கு எழுந்தது. மூர்த்தியார் அதனைக் கேட்டு அஞ்சிக் கை தேய்த்தலை நிறுத்தினார் என்கிறது இந்துமதம்.
சந்தனக் கட்டையைத் தேய்த்தால் சந்தனம் கிடைக்கும். மாறாக, கையின் முட்டியைக் கல்லில் தேய்த்து சந்தனம் பெற முயலும் இந்து மதம் எப்படிப்பட்ட மூடமதம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அப்படிப்பட்ட மதந்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
(சொடுக்குவோம்)