பறை-3

மார்ச் 01-15

முனைவர் மு.வளர்மதி

பறை – கருப்பொருள்

இசைக்கு இன்றியமையாத _ நெருங்கிய தொடர்பு உடைய பறையினைத் தொல்காப்பியர் கருப்பொருள்களுள் ஒன்றாகக் கொண்டமை பண்டைத் தமிழரின் இசையறிவுக்குச் சிறந்ததொரு சான்றாகும்.

தொல்காப்பியத்தில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற முப்பிரிவில் கருப்பொருள்களுள் ஒன்றாகப் பறை குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது.

“தெய்வம் உணாவே மாமரம் புள்பறை

செய்தி யாழின் பகுதியோடு தொகைஇ

அவ்வகை பிறவும் கருவென மொழிப’’

(தொல்.பொரு.அகத்திணையியல்.18)

என்ற தொல்காப்பியக் கருப்பொருள் நூற்பாவின் வைப்பு முறையில் ‘பறை’ வைக்கப்பட்டுள்ள பான்மை தோற்கருவிகளின் தொன்மைச் சிறப்பினை அறிய உதவுகின்றது. இந்நூற்பாவில்

பறை = கொட்டு, முழவு
செய்தி = செம்மையான தொழில்
யாழ் = பெரும்பண்
யாழ்பகுதி = சிறுகிளைப்பண்

எனச் செய்திக்கு (தொழிலுக்கு) முன்னும் புள்ளுக்குப் பின்னும் இசைக்கருவிகள் தொழிலோடு வைத்து எண்ணப்பட்டுள்ளது. ‘இனக்குழு மக்கள் செய்தொழிலுக்குச் செல்லும் முன் குழு உணர்வைப் பெறப் பறையைப் பயன்படுத்தினர் என்றும் செய்தொழிலுக்குப் பின்னர் உள்ளக் கிளர்ச்சி பெற யாழிசை நுகர்ந்தனர் என்றும் இந்த வைப்பு முறைக்கு விளக்கம் தரலாம் என கோ.கண்ணன் ‘பண்டைத் தமிழரின் ஒலி உணர்வும் இசை உணர்வும்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். பல்வேறு தொழில்களை மேற்கொண்ட தமிழ் மக்கள் அத்தொழில்களில் ஏதாவதொரு வகையில் பறையைப் பயன்படுத்தியுள்ளனர். ஆகையால் தொல்காப்பிய நூற்பாவிலும் இக்கருவியை முன்வைத்துத் குறிப்பிட்டுள்ளனர் என்றும் கருத இடமுண்டு.

நிலவியல் பாகுபாட்டில் தமிழரின் பண்பாட்டை முழக்கும் கருவியாக பறை செயல்பட்டு வந்துள்ளது என்பதை விளக்கும் சூடாமணி நிகண்டு (ப.135) குறிப்பும் இதற்கு ஒரு சான்றாகும்.

அவை பின்வருமாறு:

1.    இடக்கையின் பெயர்-ஆமந்திரிகை

2.    முழவின் பெயர்-குளிர்

3.    படகத்தின் பெயர்-பணவம், திண்டி, ஆனகம்

4.    கடிப்பின் பெயர்-குணில்

5.    ஒரு கட்பறையின் பெயர்-மொந்தை

6.    பேரிகையின் பெயர்-நந்தி

7.    சிறுபறையின் பெயர்-ஆகுளி

8.    திமிலையின் பெயர்-சல்லரி

9.    நிசாளத்தின் பெயர்-தண்ணுமை

10.    பன்றிப்பறையின் பெயர்-குடப்பறை

11.    ஒருகட் பகுவாய்ப் பறையின் பெயர்-பதலை

12.    கரடிப்பறையின் பெயர்-தட்டை

நிலவியல் பாகுபாட்டின்படி பறை, பின்வருமாறு:

1.    குறிஞ்சிப் பறைகளின் பெயர்-தொண்டகம், முருகியம், துடி

2.    முல்லைப் பறைகளின் பெயர்-பம்பை, ஏறங் கோட்பறை

3.    மருதப்பறையின் பெயர்-கிணை

4.    நெய்தற்பறையின் பெயர்-சாப்பறை (பிணப்பறை)

5.    பாலைப்பறையின் பெயர்-துடி
என சூடாமணி நிகண்டு காட்டுகிறது.

ஒரு பறை வகைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதை இக்குறிப்பு காட்டுகிறது. மேலும் சூடாமணி நிகண்டில் முழவின் பெயர் _ குளிர், திமிலையின் பெயர் _ சல்லரி, நிசாளத்தின் பெயர்_ ண்ணுமை, உவகைப் பறையின் பெயர் _ தூரியம், தண்ணுமையின் பெயர்_உடுக்கை எனக் கூறுவது தவறு. பொருத்தமற்றது என தமிழிசை ஆய்வறிஞர் முனைவர் வீ.ப.கா.சுந்தரம் குறிப்பிடுகிறார்-.

பண்டையப் பயன்பாடு

பறை நிலத்தின் அடையாளம் மட்டுமல்லாது அந்நில மக்களின் அடையாளமாக, அவர்கள் செய்யும் தொழிலில் பயன்படும் கருவியாக இருந்து வந்துள்ளது.

“தொல்காப்பியம் குறிக்கும் திணைக் குமுகாயத்திலும் பறையறைந்து செய்தி அனுப்பும் முறை இருந்தது. பறை என்ற சொல்லே இசைக் கருவியையும் செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது. பறையைத் தொல்காப்பியர் ஒரு கருப்பொருளாகக் குறித்துள்ளார். இயற்கைக் கருப்பொருள்கள் செயற்கைக் கருப்பொருள்கள் என்ற இரு வகைகளுள் பின்னவற்றுள் அடங்கும். சமயச் சடங்குகளைத் ‘தெய்வம்’ எனவும், இசையை ‘யாழின் பகுதி’ எனவும் செய்தித் தொடர்பு முறையைப் ‘பறை’ எனவும் குறித்தார். இதன்படி ஒவ்வொரு நிலத்திற்கும் செய்தி தெரிவிக்கும் தனிப்பறை உண்டு.

குறிஞ்சிக்கு : தொண்டகச் சிறுபறை

முல்லைக்குப் : ஏறங்கோட்பறை

மருதத்திற்கு : தண்ணுமை

நெய்தலிற்கு : மீன்கோட்பறை

பாலைக்கு : ஆறெறிபறை

என்ற வரையறை பொருத்தமானதாகும்.

ஆநிரைகளை மேய்த்ததற்கும், ஏறு தழுவுவதற்கும் ஏறங்கோட்பறை பயன்பட்டது. மலையில் விளைந்த பயிரை விலங்குகளினின்று காத்தற்குப் புள்ளோட்டுதற்கும், வெறியாட் டிற்கும் தொண்டகப் பறையும், பாலை நிலத்தில் திரிந்த கள்வர் தம்முள் மறைமுகச் செய்தியைத் தெரிவித்துக் கொள்வதற்கு ஆறெறி பறையும், புனல் செறுப்பதற்கும், கழனி விளைநர்க்குச் செய்தி அறிவித்ததற்கு அரிப்பறையும், கடலில் மீன் பிடித்தற்கும் மரக்கலங்கள் இயக்குதற்கும் மீன்கோட் பறையும் பயன்பட்டன.

பெருகிவரும் புனலை அடைக்க, உழவர் மக்களை அழைக்க, போர்க்கெழுமாறு வீரர்களை அணிதிரட்ட, வெற்றியை தோல்வியை அறிவிக்க, வயல்களில் உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்க, விதைக்க, அறுவடை செய்ய, காடுகளில் விலங்குகளை விரட்ட, மன்னனின் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க, மேலும் இயற்கை வழிபாட்டில், கூத்துகளில், விழாக்களில், இறப்பில், என வாழ்வியல் கூறுகளுடன் இணைந்து இயங்கியுள்ளது ‘பறை’ எனும் தோற்கருவி.

1.    ‘சேம்பு மஞ்சளும் ஒம்பினர் காப்போர் பன்றிப் பறையும்’ (மலைபடு – 344)

2.    ‘கழனி விளைநர்க்கெறிந்த பறை கேட்டு’ (தி.மொ.ஐம்.31:2)

3.    ‘அரிப்பறையாற் புள் ஓப்புந்து’ (புறநா.396:4)

4.    ‘மென்பறையாற்புள் இரியுந்து’ (புறநா. 396:4)

5.    ‘போர்த்தெறிந்த பறையாற் புனல் செறுக்குநரும்’ (பதிற்று. 21:20)

6.    ‘களிற்றின்மேல்… பறையறைந்தான்’ (சீவக. 297:3)

7.    ‘போர்ப்பறை முழங்க’ (சீவக.758:1)

8.    ‘போர்ப்பறை யரவமோ டார்ப்ப’ (பெருங். 217:65)

9.    ‘போர்ப்பறை முழக்கினும்’ (கம்ப. பால. 290:4)

10.    ‘அறைபறை என்றனன் அரசர்கோமான்’ (பெருங்.320:30)

போன்ற 200க்கும் மேற்பட்ட இலக்கியச் சான்றுகள், தமிழர் வாழ்வியலில் ‘பறை’ பெற்றிருந்த முக்கியத்துவத்தை விளக்குவ தாகவும், அதன் சிறப்புகளை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளன.
தமிழ்நாட்டில் பல இடங்களில் முரச மண்டபம் அமைத்து செய்தி அறிவிக்கும் முறை இருந்து வந்துள்ளது. செய்தி அறிவித்தலுக்கு அமைதியான அதிகாலைப் பொழுது அல்லது அந்திப் பொழுது உகந்த வேளையாக இருந்தது. பறையின் ஒலி 5 கி.மீ. முதல் 11 கி.மீட்டர் வரையில் கேட்கும் என்பர். ஒரு பறையன் அறையும் செய்தியைக் கேட்டு மற்றொரு பறையன் அச்செய்தியைக் கேட்டு முழங்க, அச்செய்தி நெடுந்தொலைவிற்கு அனுப்பவியலும்.     

திருச்செந்தூரில் கோயில் பூசை முடிந்ததைப் பறையறைந்து பாஞ்சாலங்குறிச்சி வரைத் தெரிவித்துள்ளனர். அச்செய்தியைக் கேட்ட பின்பே கட்டபொம்மன் உணவு கொண்டி ருக்கிறான். அதுபோன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு பூசைமுடிந்த பின்பே மதுரையில் திருமலைநாயக்கர் செய்தி அறிந்து உணவு கொண்டார் என்ற செய்தி மன்னர்கள் ஆட்சியில் பறையொலி முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதைக் காட்டுவனவாகும்.

– (தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *